இறைவனை மட்டும் வழிபட்டால் போதாதா ? ஒருவர் சமுதாய தொண்டும் செய்ய வேண்டுமா ?
ஒவ்வொரு உயிரும், தானே ‘தான் யார்’ என்று உணரவும், இறைவனை உணர்ந்து வழிபடவும் விழைந்தால், அந்த உண்மையினை உணர பல காலம், பிறவிகளாகும். அதற்காகக் தான் இறைவன், குருவாக உபதேசம் செய்கிறான், இன்னொருவர் மூலமாக நமக்கு தன்னை உணர்த்துகிறான், அருளாளர்களை நமக்கு அனுப்பி வைக்கிறான். அருளாளர்கள் நமக்கு வாழ்வின் வழிகாட்டியாக இருந்து நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். இவையனைத்தும் இறையனார் அருளினால் ஆனது. அப்படியானால், இந்த சமுதாயமே நமக்கு இறைவனைக் காட்டுகிறது. இந்த சமுதாயமே பல கோவில்களைக் கட்டிக் கொடுத்துள்ளது. இன்று நாம் அதன் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்.
சற்றே சிந்தித்துப் பாருங்கள். மயிலாப்பூரில் இருக்கும் கபாலீசுவரர் கோவிலை எத்தனை கைகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ? எந்தக் காலத்தில் இவை உழைத்து உருவாக்கியது ? இன்று நாம் அந்த கோவிலில் அமர்ந்து அதன் இறையனுபவத்தை உட்கிரகித்து உய்வடைகிறோம். அந்த தூண்களை செதுக்கிய கைகள் இப்போது நமக்கு முன்னர் வந்தால், அந்த கைகளை நாம் கும்பிட மாட்டோமா ? அந்த கோவில்களை கட்டிக் கொடுத்தவர்களின் திருவடியை வணங்க மாட்டோமா ? என்றோ எவரோ செய்த சமுதாய தொண்டினால் நாம் இன்று சிவானுபவத்தை அனுபவிக்கிறோம். உலகில் இருக்கும் ஒவ்வொரு கோவிலையும் சற்றே சிந்தித்துப் பாருங்கள். எத்தனை கைகள், எத்தனை கால்கள், எத்தனை மூளை எப்படி வேலை செய்து நமக்காக உருவாக்கிக் கொடுத்துச் சென்றுள்ளது ? நாம் பதிலுக்குக் கைமாறாக என்ன செய்யப் போகிறோம் ?
யான் பெற்ற இன்பமே போதும் என்று கருதி, மிக சுயநலவாதியாக திருமூலர் பெருமான் அன்று சிவானந்தத்தை அவர் மட்டுமே அனுபவித்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று தன்னுடைய சிவ அனுபவங்களையும், சிவாகமத்தையும் நமக்கு மெனக்கிட்டு செய்யுள்களாக, மந்திரமாக உருவாக்கிக் கொடுத்து சென்றுள்ளார். அவர் சுயநலவாதியாக அன்று இருந்திருந்தால், இத்தனை காலம் எத்தனை உயிர்கள் அதே சிவத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவித்திருக்க முடியும் ?
நாம் ஒவ்வொருவரும் இறைவனை உணர்ந்து நம் உயிரை மேம்படுத்த வேண்டும். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த இறைவனையும், கோவில்களையும் மற்றும் பலவாறு நன்மைகள் நமக்குப் புரிந்த இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் ?
தன்னமில்லாமல் இந்த சமுதாயத்திற்கு தொண்டு செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப் பட்டிருக்கிறோம். வாழ்வில் சில காலமாவது நாம் அனைவரும் சமுதாயம் மேம்பட நாம் எதையும் எதிர்பார்க்காமல் தொண்டு செய்ய வேண்டும். இது நம்மை இறைவனுக்கு மிக அருகில் நம்மைக் கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்றது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகளில் நாம் பயணித்தாலும், நம் சக உயிர்களுக்கு அதே வழியில் பயணிக்க ஊக்குவிப்பது, உதவி செய்வதும், நம் கடமையாகும். ஒவ்வொரு உயிரின் உள்ளும் சிவம் குடி கொண்டிருக்கிறது. நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் அது எப்போதும் அறிந்து கொண்டே இருக்கிறது. ஆகேவ, தன்னலமற்ற சமய தொண்டினை நம் சமுதாயத்திற்கு நாம் முழு மனத்தோடு செய்ய வேண்டும். நிச்சயம் திருவருள் கைகூடும். திருநாவுக்கரசு பெருமானின் உழவாரப்பணியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
திருச்சிற்றம்பலம்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.