சைவ சமயத்தின் உண்மை விளக்கம்

உண்மை விளக்கம் – கேள்வியும் பதிலும் 4.5/5 (6)

 

உண்மை விளக்கம் – கேள்வியும் பதிலும்

உண்மை விளக்கம் பற்றி சைவ சித்தாந்த வகுப்பு ஆசிரியர் 51 கேள்விகள் கொடுத்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த அதன் விடைகளை இங்கு தொகுத்துள்ளேன். நான் இதற்கு விடை அளித்தாலும், நீங்கள் உண்மை விளக்கம் புத்தகத்தை படித்து. 54 செய்யுள்களையும் அனுபவித்து நாம் கூறும் பதிலும் சரிதானா என்று பார்த்துக் கொள்ளுங்கள். தவறு இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். வேறு கருத்துக்கள் இருந்தாலும் கூறுங்கள்.

  1. உண்மை விளக்கம் என்பதில் உண்மை என்பதன் பொருள் என்ன ?

பதில்: சைவ சமயம் என்றும் அழியாப் பொருள்களாக மூன்று பொருள்களைக் கொள்ளும். இறை, உயிர், தளை என்பதே அந்த மூன்று பொருள்கள். இவற்றை பதி, பசு, பாசம் எனவும் கூறுவர். இந்த மூன்றுமே அநாதியானது. உண்மை என்பது வடமொழியில் தத்துவம் எனப்படும். எப்பொருளையும் இரு வகையாக அறியலாம். ஒன்று அதன் பொதுத் தன்மையை உணர்வது. மற்றொன்று, அதன் உண்மை தன்மையை உணர்வது. முப்பொருளின் உண்மையை விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. ஆகவே, உண்மை என்பது முப்பொருளின் உண்மை தன்மையை குறிக்கிறது.

  1. இந்நூலின் ஆசிரியர் யார் ? அவருடைய ஆசிரியர் யார் ?

உண்மை விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் மணவாசகங்கடந்தார் என்பவர். அவருடைய ஆசிரியர், சந்தான குரவர்களில் முதற்குரவராகிய மெய்கண்டார் அல்லது மெய்கண்ட தேவ நாயனார். இவர் வரலாறு தெரியவில்லை. அவரது ஊர் திருவதிகை என்பது மட்டும் குறிப்பு உள்ளது.

  1. இந்த நூலின் தனிச் சிறப்பு என்ன ?

முப்பொருளின் இயல்புகளை ஏனைய சாத்திர நூல்களும் விளக்குகின்றன. இருப்பினும் உண்மை விளக்கம் நூலின் தனிச்சிறப்பாவது, அம்பலவாணர் ஆடும் அருட்கூத்தின் உண்மையை விரிவாக விளக்கிக் காட்டுகிறது. இது ஏனைய நூல்களில் விளக்கப்படாதது. இதுவே இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

  1. இந்த நூல் எதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது ?

“வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா உண்மைவிளக்கம் உரை செய்ய”  என்பதன் மூலம், சிவாகமங்கள் கூறும் உண்மைகளை வழுவாமல் அப்படியே உரைக்கப் புகும் நூல் உண்மை விளக்கமாகும். உபநிடதங்களின் தெளிபொருளை விளக்குவது சிவ ஆகமங்கள். அந்த சிவாகமங்களில் உணர்த்தப்படும் முப்பொருள் உண்மையை வழுவாமல் அப்படியே உணர்த்த முற்படுவது இந்த நூல்.

  1. விநாயகரை “அந்தி நிறத்தன்” என்று கூறுவதன் பொருள் என்ன ?

செவ்வானம் போன்ற சிவந்த ஒளியை உடையவர் விநாயகர் என்பது பொருள்.

  1. தம் ஞானாசிரியரின் தன்மைகளாக இந்நூலாசிரியர் கூறுவது யாது ?

இந்த உலகம், உடம்பு, முப்பத்தாறு தத்துவமுமே மெய் என்று எண்ணுவது உயிரின் இயல்பு. ஆனால், அவை உண்மையன்று. அவை பொய். அந்த பொய்யை பொய் என்று நமக்கு உணர்த்த வல்லவர் தமது ஞானாசிரியன். நிலையில்லாத அந்த பொய்யான தோற்றங்களைக் கடந்த இறைவனே மெய். பொய்யை அகற்றினால் மெய் வெளிப்படும். அந்த மெய் மிகுந்த ஆனந்தப் பொருளாம். அந்த பொய்யை அகற்றி மெய்யை உணர்த்த வல்லவர் தமது ஞானாசிரியன். இவையே தமது ஞானாசிரியரின் தன்மைகளாக நூலாசிரியர் கூறுகிறார்.

  1. சுத்தவினா என்பதன் பொருள் என்ன ?

முழுவதுமாக அறியாமை இருளில் அழுந்தியிருக்கும் போது உயிர்கள் கேவல நிலையில் உள்ளன. அவ்வாறு உள்ள உயிர்கள் இறைவன் கருணையினால் மாயையின் உதவியோடு மயக்கம் சிறிது நீங்கி, இயக்கம் பெற்று சகல நிலையை அடைகிறது. இந்த நிலையில் உலகியல் இன்ப துன்பங்கள் அனுபவிக்கிறது. இவ்வாறு சகல நிலையில் உள்ள உயிர்கள் இறைவன் திருவருளை அறிந்துணர்ந்து மலங்கள் யாவும் நீங்கப் பெற்று இறைவன் திருவருளோடு கூடியிருக்கும் நிலை சுத்த நிலை. அவ்வாறான சுத்தநிலையை எய்தும் விருப்பத்தால் ஆசிரியரிடம் வினாக்களை எழுப்பி பதில் பெற்று அந்நிலையை எய்த விளைவதனால், அவை சுத்தவினா எனப்பட்டது.

  1. ஆறாறு தத்துவங்கள் எதனுடைய காரியப்பாடு ?

மாயை. கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் மாயை. அது இறைவனின் வைப்பு சக்தியாகும். இந்த மாயையிலிருந்து தோன்றியவை தான் முப்பத்தாறு தத்துவங்களும். ஆகவே, முப்பத்தாறு தத்துவங்கள் மாயையின் காரியப்பாடு ஆகும்.

  1. தம் ஞானாசிரியரிடம் கேள்விகள் கேட்கும் போது ஆன்மாவைப் பற்றி என்ன குறிப்பிடுகிறார் ? அதன் பொருள் என்ன ?

ஆசிரியர் “தன்னை” ஆன்மா என்று உணர்ந்து அந்த ஆன்மாவின் தன்மையை விளக்க கேட்கும் போது, “நான் ஏது” என்கிறார். நான் என்பது ஆன்மாவைக் குறிக்கிறது. இவ்வாறு ஆன்மாவின் தன்மையை விளக்குமாறு கேட்கிறார். இந்த ஆன்மாவானது ஆணவம் கன்மம் ஆகிய பாசத்தோடு வேறாகாமல் பிணைந்து இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார்.

  1. தான் ஏது என்பதன் பொருள் என்ன ?

தான் என்பது முக்தியைக் குறிக்கிறது. முக்தியின் இயல்புகளை விளக்குமாறு ஆசிரியர் தன் ஞானாசிரியரிடம் வினவுகிறார்.

  1. இந்திரியங்கள், உறுப்புகள் இரண்டும் ஒன்றா ? வெவ்வேறா ? விளக்குக.

இந்திரியங்கள் வேறு. உறுப்புகள் வேறு. உடலில் புறத்தே இருப்பவை உறுப்புகள் எனப்படும். உதாரணம், செவி, தோல், கண், நாக்கு, மூக்கு. செவி கேட்கும் தொழிலைச் செய்யும். கண் பார்க்கும் தொழிலைச் செய்யும். இந்திரியங்கள் என்பது இந்த உறுப்புகளில் நின்று அப்புலன்களின் அறிவனவாகிய ஆற்றல்களேயாகும்.  செவியாகிய உறுப்பில் நின்று ஓசை என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே செவியிந்திரியம் ஆகும். கண் ஆகிய உறுப்பில் நின்று ஒளி என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே கண்ணிந்திரியம் ஆகும். இந்திரியங்களே அந்த உறுப்பின் ஆற்றலை உயிருக்கு அறிவிக்கச் செய்யும். ஒரு சிறு உதாரணத்தின் மூலம் இந்த இரண்டையும் எளிதாக உணரலாம்: உயிர் இல்லாத பிணத்தில் உறுப்புகள் இருக்கும், ஆனால், இந்திரியங்கள் இருக்காது. பிணத்தில் கண் இருக்கும். ஆனால் ஒளியை உயிருக்கு அறிவிக்கும் கண்ணிந்திரியம் இருக்காது.

  1. பஞ்ச (தூல) பூதங்களின் குணம், தொழில் யாவை ?
  2. ஆகாயம் – ஓசை
  3. காற்று – ஊறு, ஓசை
  4. நெருப்பு – ஒளி, ஊறு, ஓசை
  5. நீர் – சுவை, ஒளி, ஊறு, ஓசை
  6. நிலம் – நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசைபூதங்கள் குணம் தொழில்
    மண்    திண்மை    பொருளைத் தாங்குதல்
    நீர்    குளிர்ச்சி    பொருளை மென்மைப்படுத்துதல்
    தீ    வெம்மை    பொருளை நீறாக்கி ஒன்றுபடுத்துதல்
    காற்று    அசைவு    பொருளைத் திரட்டுதல்
    வான்    வெளியாதல்    பொருளில் ஊடுருவி நிறைந்து நிற்றல்
  1. தன்மாத்திரை என்றால் என்ன ? அவற்றின் பெயர்களைக் கூறுக.

பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்காக முதலில் சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்ற அந்தக்கரணங்கள் தோன்றுகின்றன. இதில் அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும்: சாத்துவிக குணக்கூறு, இராசத குணகூறு மற்றும் தாமத குணக்கூறு. இதில் பூதாதி அகங்காகரம் எனப் பெயர் பெறும் தாமத குணக்கூறிலிருந்து தன்மாத்திரைகள் தோன்றும்.  அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. இந்த ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து பின்னர் ஐந்து பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் பூதங்கள் பருமையானவை.

தன்மாத்திரை என்ற சொல்லுக்கு *அதனளவில் நிற்பது* என்று பொருள். உதாரணமாக, சுவையை சுவை என்று நேரடியாக அறிய முடியாது. மாறாக, தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்று ஏதாவது ஒரு வடிவில் தான் அறிய முடியும். அதே போல, ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது, வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு போன்ற சிறப்பு தன்மையினாலே உணரப் பெறும். இவ்வாறு நிற்கும் பொது நிலையிலேயே அவை தன்மாத்திரைகள் எனப்படுகின்றன.

  1. ஐம்புலன்கள் என்றால் என்ன ? அவற்றின் பெயர்களைக் கூறுக.பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்காக முதலில் சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்ற அந்தக்கரணங்கள் தோன்றுகின்றன. இதில் அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும்: சாத்துவிக குணக்கூறு, இராசத குணகூறு மற்றும் தாமத குணக்கூறு. இதில், தைசத அகங்காரமாகிய சாத்துவிக குணக்கூறிலிருந்து மனம் தோன்றும். அதன் பின்னர் புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் தோன்றும். செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன ஞானேந்திரியங்களாகும். இவை, ஐம்புலன்கள் அல்லது, ஐம்பொறிகள் அல்லது அறிகருவிகள் என்றும் பெயர் பெறும்.
  2. ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் யாவை ?

ஞானேந்திரியங்கள் தோற்றம் பற்றி மேலே பார்த்தோம். செவி, தோல், கண், நாக்கு, மூக்கு ஆகியன ஞானேந்திரியங்கள். இவை உயிர்க்கு அறிகின்ற ஆற்றலைக் கொடுப்பதனால் ஞானேந்திரியங்கள் என்ற பெயர் பெற்றன. வைகாரிக அகங்காரமாகிய இராசத குணகூறிலிருந்து தோன்றுவது கன்மேந்திரியங்கள். அவை, வாய், கால், கை, கருவாய், எருவாய் என்பன. இவற்றை தொழிற் கருவிகள், செயற்கருவிகள் எனவும் கூறுவர். இவற்றால் நிகழும் தொழில்கள் முறையே பேசுதல், நடத்தல், இடுதல் ஏற்றல், கழித்தல், இன்புறல் என்பன.

  1. இந்திரியங்கள் புலன்களை நுகர்வதால் நமக்கு என்ன பயன் ?

பிரகிருதி மாயையிலிருந்து உயிர்களுக்கு உதவுவதற்க்காக முதலில் அகக் கருவிகள் தோன்றும். அவை சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் அந்தக்கரணங்கள். அகங்காரத்தின் சாத்துவிக குண கூறிலிருந்து மனம் தோன்றும். பின்னர் ஞானேந்திரியங்கள் தோன்றும். மனம் அகக்கருவி. ஞானேந்திரியங்கள் புறக்கருவி. மனமாகிய அகக்கருவி, இந்திரியங்களாகிய புறக்கருவிகளை பற்றி நிற்கிறது. இந்திரியங்கள் புலன்களை நுகர்ந்து அதன் மூலம் பெறும் அறிவாற்றலை மனம் பெறுகிறது. மனம் அதை அகக்கருவியாகிய நம் புத்திக்கு தருகிறது. இதனால் நம் ஆன்மாவாகிய உயிர் புலன்களின் மூலம் பெறும் அறிவைப் பெற்று இயக்கம் பெறுகிறது.

  1. அந்தக்கரணங்கள் மூன்றா அல்லது நான்கா ?

அந்தக்கரணங்கள் நான்கு. அவை, சித்தம், புத்தி, அகங்காரம், மனம் ஆகியவையாகும். இவை நான்குமே அகக் கருவிகள் எனப்படும்.

  1. அந்தக்கரணங்களின் துணையால் ஆன்மா பெறுவது என்ன ?

புறத்தே உள்ள புலனை (உதாரணம் கண்) அதற்குரிய பொறியானது கவர்ந்து தர, அதனைப் பற்றி நிற்கும் மனம் அதை புத்திக்கு தர, புத்தி இஃது இன்னது என்று அகங்காரம் இச்செயல்களுக்கு அடிநிலையாக அமைந்து முன்னும் பின்னும் யான் செய்வேன் என்று முந்தியெழும் சித்தம் உற்ற அப்பொருளைப் பற்றி மீள மீள சிந்திக்கும் ஆற்றலை ஆன்மா பெறுகிறது. சுருங்கக் கூறின், ஆன்மா இந்த நான்கு கருவிகளையும் பற்றி நின்று, சிந்திக்கும் ஆற்றல் பெற்று உலகப் பொருட்களை சிறப்பாக உணந்து அவற்றில் அழுந்துகிறது.

  1. மூலப் பிரகிருதி / குணதத்துவம் – இவ்விரண்டுக்கும் என்ன வேறுபாடு ?

பிரகிருதி மாயை மூன்று குண வடிவாய் உள்ளது. சாத்துவிகம், இராசசம், தாமதம் என்பன அந்த மூன்று குணங்கள். பிரகிருதி மாயை இந்த மூன்று குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். நாற்றத்தினை உள்ளடக்கி நிற்கும் அரும்பு போல இது நிற்கும். இந்த மூன்று குணங்களும் வெளிப்படாமல் சூக்குமமாய் உள்ளடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை ஆகும். பின்னர் அம் மூன்று குணங்களும் வெளிப்பட்டுத் தம்முள் சமமான நிலையினதாக நிற்கும். இந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும். மூன்று குணங்கள் வெளிப்பட்டு நிற்கும் நிலையை வியத்தம் என்றும், வெளிப்படாமல் நிற்கும் நிலையை அவ்வியத்தம் என்றும் கூறுவர். குண தத்துவத்திற்கு வியத்தம் என்றும் பிரகிருதிக்கும் அவ்வியத்தம் என்ற பெயரும் தெளிவு. இந்த குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும்.

  1. பஞ்ச கஞ்சுகம் என்பவை எவை ? அவற்றின் தொழில் என்ன ?

கஞ்சுகம் என்றால் சட்டை. உயிர்கள் முதலில் ஆணவ மலத்தில் முழுவதுமாக அழுந்தி இருக்கும். உயிர்கள் ஆணவ மலத்திலிருந்து விடுபட்டாலன்றி, உலக போகத்தை அறிந்து, அவற்றை நுகர இச்சித்து அதை அடைய முயற்சி செய்யாது. ஆகவே, உயிர்களை ஆணவ மலத்திலிருந்து விடுவிக்க சில கருவிகள் தேவைப்படுகிறது. அவை அசுத்த மாயையிலிருந்து தோன்றுகின்றன. மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம் மற்றும் புருடன் என்பன. மாயையிலிருந்து தோன்றும் தத்துவங்கள் தாம் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்பன.  இவற்றில் அராகம் ஆன்மாவிற்கு இச்சா சக்தியையும், வித்தை ஞான சக்தியையும், கலை கிரியா சக்தியையும் கொடுத்து ஆன்மாவை நுகர்ச்சியில் ஈடுபடச் செய்யும். நியதி இதனையே நுகர்க என்று வரையறுத்து நிறுத்தும். காலம் இந்த நுகர்ச்சியை இத்தனை காலம் நுகர்க என்று எல்லைப்படுத்தும். இந்த ஐந்து கருவிகளும் ஆன்மாவிற்கு இன்றியமையாதனவாய் ஆன்மாவோடு நீங்காமல் சட்டை போல ஒட்டியே இருக்கும். இதுவே பஞ்சகஞ்சுகம் என்று பெயர் பெறும்.

  1. புருடன் என்பது எதைக் குறிக்கிறது ? அது ஒரு தத்துவமா இல்லையா ?

பஞ்சகஞ்சுகம் எனப்படும் ஐந்து சட்டைகளையும் ஆன்மா அணிந்து நிற்கும் நிலையில் புருடன் எனப்படும். இந்நிலையே புருடதத்தவம் எனப்படுகிறது. தத்துவம் என்று கூறப்பட்டாலும் இது ஏனைய தத்துவங்களைப் போல தனித் தத்துவம் அன்று. ஆகவே புருடன் என்பது தனித்தத்துவம் அன்று. அது ஆன்மாவின் நிலை.

  1. ஆன்மா எப்பொழுது பொது வகையில் வினைப் போகத்துக்குத் தகுதி பெறுகிறது ? அது எப்பொழுது சிறப்பு வகையான தகுதி பெறுகிறது ?

பஞ்சகஞ்சுகமாகிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகியவற்றை ஆன்மா அணிந்து நிற்கும் போது புருடன் எனப்படும். இந்த நிலையிலேயே ஆன்மா பொதுவகையில் வினைப் போகத்தை நுகரும் தகுதி பெறுகிறது. பின்னர், பிரகிருதியோடு தொடர்பு கொள்ளும் போது சிறப்பு வகையான தகுதி பெறுகிறது. பிரகிருதியே உலக அனுபவத்தைத் தருவது. அதனால், ஆன்மா பிரகிருதியோடு பொருந்தும் போது புருடனாம் நிலையை சிறப்பாகப் பெறுகிறது. இதனால், காலம் முதலிய ஐந்தினாலே வரும் தகுதி பொதுத் தகுதி என்றும், பிரகிருதியினாலே வரும் தகுதி சிறப்புத் தகுதி என்பதும் விளங்கும்.

  1. வித்யா தத்துவங்கள் எத்தனை ? அவை யாவை ? அவற்றின் தொழில் என்ன ?

வித்யா தத்துவங்கள் ஏழு. தத்துவங்களும் அவற்றின் தொழில்களும்:

தத்துவம்  –  தொழில்

  1. காலம்

இறந்த காலம் – எல்லை

நிகழ் காலம் – பலம்

எதிர் காலம் – புதுமை

  1. நியதி – எப்போதும் நிச்சயித்தல்.
  2. கலை – கிரியை விளங்கச் செய்தல்
  3. வித்தை – அறிவு விளங்கச் செய்தல்
  4. அராகம் – ஆசை விளங்கச் செய்தல்
  5. புருடன் – ஐம்புலனும் ஆரவரும் காலம்
  6. மாயை – மயக்குதல்.

உயிருக்கு வினைப் பயன்களை இத்துணைப் பொழுது என வரையறுப்பது காலம் அது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றாகி நிற்கும். அவற்றுள் இறந்தகாலம் வினைகளை நுகர்ச்சியினால் கழியச்செய்து உயிரை அவ்வினையினின்றும் பிரிக்கும். இதுவே எல்லை எனப்பட்டது. நிகழ்காலம் உயிரை வினைப்பயன்களோடு கூட்டி நுகர்விக்கும் இதுவே பலம் எனப்பட்டது. எதிர்காலம் வினைப் பயன்களை உயிர் எதிர்நோக்குமாறு செய்யும். இதுவே புதுமை எனப்பட்டது.

  1. சுத்த தத்துவங்கள் யாவை ?

சுத்த தத்துவங்கள் 5. அவையாவன.

  1. சிவதத்துவம்முதலில் இறைவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் இது விரிவடையத் தக்கது எனப் பொதுவாக நோக்குவான். அவ்வாறு அவன் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதி காரியப்படுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறும். பக்குவப்பட்ட அப்பகுதி சிவதத்துவம் என்றும் நாதம் என்றும் சொல்லப்பெறும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது.

    2. சத்திதத்துவம்

    இறைவன் பின்னர் முதல் விருத்தியாகிய சிவ தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது கிரியா சத்தியால் இது விரிவடைக எனப்பொதுவாகக் கருதுவான். அவ்வாறு அவன் கருதிய அளவில்
    அப்பகுதி இரண்டாம் விருத்திப்பட்டு சத்தி என்றும், விந்து என்றும் பெயர் பெறும். இறைவனது கிரியா சத்தி மட்டும் செயற்படும் நிலை இது.

    3. சதாசிவ தத்துவம்

    இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தி தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் சிறப்பாக நோக்கியும், கிரியா சத்தியால் சிறப்பாகக் கருதியும் நிற்பான். இது இவ்வாறு விரிவடையத்தக்கது என்பது சிறப்பாக நோக்குதல். இது இவ்வாறு விரிவடைக என்பது சிறப்பாகக் கருதுதல். நோக்குதலும், கருதுதலும் சிறப்பாக நிகழும் இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது.

    4. ஈசுர தத்துவம்

    ஞான சத்தியையும் கிரியா சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவ தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியா சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான் அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியா சத்தி மிகுந்தும் ஞான சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.

    5. சுத்த வித்தியா தத்துவம்

    கிரியா சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுர தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞான சத்தியை மிகச் செலுத்தி
    நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக  வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். (அசுத்த மாயையின் காரியங்களுள் வித்தை என ஒன்று இருப்பதால் சுத்த
    மாயையின் காரியமாகிய இதனை அதிலிருந்து வேறுபடுத்தற்காகக் சுத்த வித்தை என்றனர்.) ஞான சத்தி மிகுந்தும் கிரியா சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. இறைவனது இச்சா சத்தி
    என்றும் ஒரு நிலையிலே நிற்க, ஏனைய ஞான சத்தியும் கிரியா சத்தியும் தனித்தனியாயும், தம்முள் ஒத்தும், ஒன்றின் ஒன்று மிகுந்தும் குறைந்தும் செயற்படுதலால் சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் இவ்வைந்து தத்துவங்களும் சுத்த மாயையின் விரிவுகளாய்த் தோன்றலாயின எனச் சுருக்கமாகக் கூறலாம்.

  1. வாக்குகள் எத்தனை வகைப்படும் ?

வாக்குகள் ஐந்து வகைப்படும்

1.சூக்கும வாக்கு . ‍சொல் தோன்றாது ஒலி மட்டுமாய் உள்ளது

2.பைசந்தி வாக்கு . சொல் விளங்கியும் விளங்காமலுமாய் நிற்பது

3.மத்திம வாக்கு. உதானன் என்ற வாயுவால் பொருள் விளங்க உருவாகும் மொழி நிலை

4.சூக்கும வைகரி வாக்கு‍. சொல் புறத்தே தன் செவிக்கு மட்டும் கேட்கும் நிலை

5.தூல வைகரி வாக்கு. தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும் படியாகப் பல், நாக்கு,கண்டம்,வயிறு என்ற உறுப்புகளின் மூலம் தோன்றுவது.

  1. ஆணவம் என்பதற்கு மனவாசகங்கடந்தார் தரும் விளக்கம் என்ன ?காணும் தன்மையுடைய கண் பொருள்களைக் காணவொட்டாதபடி இருள் என்ற பொருள் அக்கண்ணை மூடி மறைக்கின்றது. கண் பொருள்களை அறியாத தன்மை இருளால் உண்டாவது. கண்ணை மறைக்கின்ற புற இருள்போல உயிரோடு பொருந்தி அதனை மறைத்திருக்கின்ற அகவிருள் ஒன்று உள்ளது. அதுவே ஆணவமலம் எனப்படுவது. பிறவித்துயர். வினை, திருவருள் முதலிய அறியத்தக்க பல பொருள்களுள் ஒன்றையும் அறியவொட்டாதபடி செய்வது ஆணவ இருளேயாகும். அறியாமையைத் தருவது ஆணவமலம்.
  2. மாறா வினை” என்பது என்ன ? கன்மத்தை இவ்வாசிரியர் எவ்வாறு விளக்குகிறார் ?

மாறா வினை என்பது ஆன்மாவை விட்டு நீங்காமல் தொடர்ந்து வரும் கன்மம், மாயை ஆகிய மலங்களாகும்.
ஆணவத்தின் காரணமாக உண்டாவது கன்மம் எனப்படும் வினையாகும். ஆணவத்தினால் வினை எப்படித் தோன்றுகிறது என்பதைக் காண்போம். உயிர் இறைவனைப் போல அறிவுப் பொருளேயாகும். ஆயினும் சுதந்திரமான அறிவுடையதல்ல. அறிவதற்குத் துணை ஒன்றே வேண்டாது தானே அறிவதே சுதந்திர அறிவாகும். அத்தகைய சுதந்திர அறிவு உயிருக்கு ஏது? பிறந்தது முதற்கொண்டு பெற்றோர், ஆசிரியர், நூல்கள் முதலிய துணையைக் கொண்டு தானே அறிவு விளங்குகிறது. மேலும் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிவதற்கு ஐம்பொறிகள் அல்லவா துணை செய்கின்றன? இவ்வாறு பொறிகளின் துணையில்லாமல் யாதொன்றையும் அறிய மாட்டாத உயிர்க்குச் சுதந்திர அறிவென்பது ஏது? உயிருக்குச் சுதந்திர அறிவு இல்லாமை போலவே சுதந்திரமான செயலும் இல்லை. சுதந்திரமான செயலாவது எத்தடையுமின்றி நினைத்ததை நினைத்தவாறே செய்து முடித்தலாகும். இத்தகைய செயல் உரிமை உயிருக்கு இருக்கிறதா?

இறைவனையின்றி ஆன்மா எதனையும் தானே அறியவும்மாட்டாது; எதனையும் தானே செய்யவும் மாட்டாது. ஆயினும் ஆணவ மலம் உண்டாக்குகிற மயக்க உணர்வால் ஆன்மா எச்செயலுக்கும் தன்னையே வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழும். அவ்வாறு எழுந்த ஆன்மா ஆணவ சத்தியின் தூண்டுதலால் உலகப் பொருள்களை நோக்கி அவற்றின் மேல் இச்சை கொள்ளும். அவ் இச்சையினால் தனது அல்லாத அப்பொருள்களை எனது எனது என்று சென்று பற்றும். எனது என்பது புறப்பற்றும், யான் என்பது அகப்பற்றும் ஆகும். இவ்விரு பற்றுக்களின் வழியே செய்யும் முயற்சியே வினை அல்லது கன்மம் எனப்படும்.

  1. வேறு ஆகா என்னை” என்பதன் பொருள் என்ன ?

முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பையும், ஆணவம், வினை என்ற இரு மலங்களின் தன்மைகளையும் ஆசிரியர் உரைக்க கேட்ட மனவாசகங்கடந்தார் ஆசிரியரின் அருளால் அவற்றை உணர்ந்து கொண்டார். இதுகாறும் இத்தத்துவங்களோடு கூடி இவையே நான் என்று மயங்கியிருந்தேன். ஆணவம், வினை இவற்றின் விளைவுகளாகிய அறியாமையையும் இன்ப துன்பங்களையும் என் இயல்புகள் என்று தவறாகக் கருதியிருந்தேன். இம் மயக்கவுணர்வு நீங்கி நான் யார்? என்பதை உணரும்படி என் உண்மையான இயல்பை எனக்கு உணர்த்தியருள்க. இவ்வாறு மாணாக்கர் வேண்டுகிறார்.

  1. இறைவன் உயிர்களுக்கு வேறாய், உயிர்களுடன் ஒன்றாய், அவற்றோடு உடனாய் நிற்றற்க்கு கூறப்படும் உவமைகள் யாவை ?
  2. இறைவன் வேறாய் நிற்றல்

கண்ணொளி தனியாக தானே நின்று பொருட்களைக் காண முடியாது. அவ்வாறு காண வல்லதாயின், இருளிலும் பொருட்களை காண முடிய வேண்டும். ஆகவே, வேறொரு ஒளியின் துணையைப் பெற்றே கண்ணொளி பொருட்களைக் காணும் திறனைப் பெறுகிறது. பகலில் சூரியனின் ஒளியைத் துணையாகக் கொண்டு கண்ணொளி பொருட்களைப் பார்க்கிறது. கண்ணொளி வேறு. சூரிய ஒளி வேறு. இரண்டும் கலந்தால் தான் கண்ணுக்கு பொருட்களைப் பார்க்கும் தன்மை கிடைக்கிறது. இது போலவே இறைவன் உயிர்களுக்கு வேறாய் நிற்கிறான்.

  1. இறைவன் ஒன்றாய் நிற்றல்ஐம்பொறிகள் தாமாக அறியா. இது எப்படித் தெரிகிறது? உயிர் நீங்கிய உடம்பில் கண், காது முதலிய பொறிகள் கெடாமல் நல்ல நிலையில் இருந்தாலும் அவை அறிதலாகிய தொழிலைச்
    செய்வதில்லை. அவை தாமே அறியா என்பதும், உயிர் தம்மோடு பொருந்தி நின்றபோதே அவை அறியும் என்பதும் இதனால் விளங்கும். அந்த ஐம்பொறிகளின் நிலையில்தான் உயிரும் உள்ளது.
    உயிரும் தானாக அறிவதில்லை. உயிருக்கு உயிராக இறைவன் பொருந்தி நின்று அறிவிக்கும்போதே உயிர் யாதொன்றையும் அறியும் வன்மையைப் பெறுகிறது. எவ்வாறு ஐம்பொறிகள் உயிரால் அறிகின்றனவோ, அவ்வாறே உயிரும் இறைவனால்  அறிகின்றது. இவ்வகையில் ஐம்பொறிகள் உயிருக்கு உவமையாகின்றன.
  2. இறைவன் உடனாய் நிற்றல்.ஒலிக்கும் முயற்சிகளுள் முதல் முயற்சி வாயைத் திறத்தல். அந்த முதல் முயற்சியிலேயே வாயைத்திறந்த அளவிலேயே உண்டாவது அ என்னும் ஒலி. மற்றைய ஒலிகள் வாயைத் திறப்பதோடு வேறு சில முயற்சிகளும் செய்யப் பிறப்பவையாகும். வாயைத் திறத்தல் ஆகிய அம்முதல் முயற்சியின்றிப் பிற முயற்சிகள் நிகழா என்பது தெளிவு. அம்முதல் முயற்சியோடு கூடியே பிற முயற்சிகள் நிகழ்கின்றன. எனவே முதல் முயற்சியில் பிறப்பதாகிய அகர வொலியோடு கூடியே பிற முயற்சிகளில் பிறப்பனவாகிய மற்றைய ஒலிகள் எழுகின்றன என்பதும், அகரவொலியின்றிப் பிற எழுத்தொலிகள் இல்லை என்பதும் புலனாகும் எனவே எழுத்துக்களுக்கெல்லாம் அடி நிலையாய் இருப்பது அகர வுயிரேயாகும். அதுபோல இறைவனே எப்பொருளின் இயக்கத்திற்கும் முதலாய் நிற்கின்றான்.
  3. இறைவன் நடம் செய்வதற்குரிய இடம், உருவம் குறித்து இந்நூல் கூறுவது என்ன ?திருக்கூத்து நிகழும் இரண்டு இடங்கள்

    இறைவன் எங்கும் அருவாய் நின்று ஆடுகின்றான். எல்லா இடங்களும் அவன் நடம் புரியும் இடமேயாயினும் அவற்றுள் இரண்டு இடங்களைச் சிறந்தனவாக எடுத்துக் கூறுவர். ஒன்று உயிர்களின் அறிவும், மற்றொன்று தில்லைச் சிற்றம்பலமும் ஆகும்.

    தில்லை மூதூர் ஆடிய திருவடி
    பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி என்று திருவாசகம் இவ்விரண்டிடங்களையும் குறிப்பிடும்.

    உயிர்களின் அறிவில் நின்று அவன் இடைவிடாது உணர்த்தி வருகின்றான். அச்செயல் அதிசூக்கும ஐந்தொழில் எனப்படும். அதனைப் பரநடனம் எனக் குறிப்பிடுவர். புருவ நடுவில் நிகழ்வதாகிய இந்நடனம் இல்லையேல் உயிர்களுக்கு அறிவு விளங்குதல் இல்லை. ஒருநாமம், ஓருருவம், ஒன்றும்
    இல்லாத இறைவன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான். உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான்.

    இறைவன் கொள்ளும் அருள்திருமேனி

    இறைவன் கொள்ளுகின்ற உருவத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அது மாயையினால் ஆனதன்று. உயிர்களாகிய நாமெல்லாம் மலம் உடையவர் ஆதலின் மலங்களில் ஒன்றாகிய மாயை நமக்கு உடம்பாக வந்து பொருந்துகிறது. இறைவன் மலம் இல்லாதவன் ஆதலின் மாயை அவனுக்கு உருவமாய் அமைதல் இல்லை. தூயதாகிய அவனது அறிவே அவனுக்கு உருவமாய் அமையும். அறிவின் இயல்பாவது
    பிறர் நிலைக்கு இரங்குதல்; கருணை கொள்ளுதல், அருளுதல், இறைவனது அறிவு பெருங் கருணையாயும், பேரருளாயும் நிற்கும். அது பற்றியே அவனது அறிவை அருள் என்றும், கருணை
    என்றும் குறிப்பர் பெரியோர். இறைவன் தனது அறிவினால் கொள்ளுகிற உருவம் எல்லாம் அருள் திருமேனி எனப்படுகிறது. அவனது திருமேனி அருள். ஆதலினால் அத்திருமேனியிற்
    காணப்படும் ஆடை, அணிகலம், படைக்கலம் முதலியனவும் அருளேயாம்; அவன் காட்சி தந்து நிற்கின்ற இடமும் அருளேயாம். இறைவனது உடம்பு அங்கம் எனப்படும். திருவடி, திருக்கரம்
    முதலிய உறுப்புக்கள் பிரத்தியங்கம் எனப்படும். அங்கத்துடன் கூடியுள்ள சூலம், மழு, பாம்பு, அபய முத்திரை, நெருப்பு முதலியவை சாங்கம் எனப்படும். அங்கத்தின் சார்பிலிருக்கும் ஆடை, அணிகலம், மாலை. அமரும் இருக்கை முதலியவை உபாங்கம் எனப்படும். அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் ஆகிய இந்நான்கும் அருளேயாம். இறைவனது திருமேனி உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வகைப்படும். அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க, இறைவன் அத்திருமேனிகளில் நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.

    மந்திரத்தைத் திருமேனியாகக் கொள்ளுதல்

    இனி, இறைவனுக்கு மந்திரம் சிறப்புத் திருமேனியாகச் சொல்லப்படுகின்றது. இதுபற்றிச் சிறிது சொல்ல வேண்டும். இறைவன் அனைத்து உலகங்களிலும் கலந்து அவையேயாய் நிற்கின்றான். உயிர் உடலெங்கும் கலந்து தான் சிறிதுந் தோன்றாமல் உடலேயாய் நிற்பது போன்றது இது.
    அவ்வாறு கலந்திருக்கும் உயிருக்கு உடம்பு வடிவமாய் அமைகிறது. அதுபோல எல்லாவற்றிலும் கலந்திருக்கும் இறைவனுக்கு அவையனைத்துமே வடிவமாய் அமைகின்றன.

    எனவே எல்லாப் பொருள்களுமே இறைவனுக்குத் திருமேனிகள்தாம் என்று சொல்லலாம். ஆயினும் அவற்றுள்ளும் மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனியாய் நிற்கின்றன. எவ்வாறெனில், சொற்களும் சொற்றொடர்களும் ஆகிய மந்திரங்கள் சுத்த மாயையில் தோன்றியவை. இறைவன் சுத்த மாயையை இடமாகக் கொண்டு நின்றே அசுத்த மாயையின் காரியமாய் உள்ள பொருள்களையெல்லாம் இயக்கி நிற்பான் என்பது நாமறிந்தது. இம்முறையில் அவன் மந்திரங்களைத் தனக்கு நேரே இடமாகக் கொண்டு அவற்றின் வாயிலாகத் தவத்தோர்க்குப் புத்தி,  முத்திகளாகிய பயன்களைத் தருவான். இறைவனுக்கு மந்திரங்கள் சிறந்த வாயில் ஆதலாலும், இறைவன் அவற்றைப் பற்றி அவையேயாய் நிற்பன் ஆதலாலும், அம்மந்திரங்கள் அவனுக்குச் சிறப்புத் திருமேனிகளாய்ச் சொல்லப்படுகின்றன. கல், மண், பொன் முதலிய பொருள்களும் இறைவன் அவற்றில் கலந்துள்ள கலப்பினால் அவனுக்கு வடிவமேயாயினும், மந்திர வடிவம் அவற்றினும் சிறந்தது என்பது உணர்தற்குரியது. மந்திரங்களுள் தலையாயது ஐந்தெழுத்து மந்திரமாகும். அதுவே ஞானத்தைத் தருவது. கூத்தப்பெருமான் திருவைந்தெழுத்தைத் தனது திருவுருவமாகக் கொண்டு ஆடல் புரியும் அருட்பெருமையை ஆசிரியர் இப்பகுதியில் விளங்கக் காட்டியுள்ளார்.

  4. இறைவன் நடம் புரிவதற்கு உண்மையான இடமும் திருமேனியும் எது ?

உயிர் ஆகிய ஆதாரத்தில் நின்று இறைவன் திருநடனம் செய்கின்றான். சிவபெருமான் சிவாயநம என்னும் பஞ்சாக்கரத்தால் திருமேனி கொண்டருளி, உயிர்களின் துன்பத்திற்கு காரணமான பிறப்பு அறும்படி, தன் திருவடியை ஊன்றி திருநடனம் புரிகின்றான். சிவபெருமான் திருமேனி ஐந்தெழுத்தில் அமைந்துள்ளது. பெருமான் நடனம் புரிதற்கு இடம் ஆன்மா என்றும், அவனுக்குத் திருமேனியாய் அமைவது ஐந்தெழுத்து மந்திரம் என்றும் மேலே பார்த்தோம். இவ்வாறு சொல்லப்படினும், உண்மையில் அவனுக்குத் திருமேனியாவது அவனது அருளேயாகும். அவனுக்கு இடமாவதும் அருளேயாகும்.

  1. தூல பஞ்சாக்கரம் ஓதுபவர் நடராஜர் திருவுருவை எப்படிக் காண வேண்டும் ?

நடராஜர் திருவடி “ந” காரமாய் இருக்கும். திருவயிறு “ம” காரமாய் இருக்கும். உயர்ந்த திருத்தோள் “சி” காரம் ஆகும். தேதாகமங்களை அருளிய திருமுகம் “வ” காரமாகும். திருமுடி “ய” காரமாய் இருக்கும்.

  1. சூக்கும பஞ்சாக்கரம் ஓதுபவர் நடராஜர் திருவுருவை எப்படிக் காண வேண்டும் ?

உடுக்கு ஏந்திய வலது திருக்கரத்தில் “சி” காரம் அமையும்.

தூக்கிய திருவடியைக் காட்டும் இடது திருக்கரத்தில் அருளைச் சுட்டும் “வ” காரம் அமையும். “அஞ்சேல்” என அபயக்குறி காட்டும் வலது திருக்கரத்தில் ஒளிபெற்ற “ய” காரம் அமையும். அக்னி ஏந்திய இடது திருக்கரத்தில் “ந” காரம் அமையும். முயலகனை அழுத்திப் பொருந்தியிருக்கும் வலது திருக்காலில் “ம” காரம் அமையும்.

  1. ஊன நடனம், ஞான நடனம், மோன நடனம் விளக்குக.

ஊன நடனம்

தூலம், சூக்குமம், அதிசூக்குமம் ஆகிய மூவகை ஐந்தொழில்களும் ஊன நடனம் என ஒன்றாய் வைத்துச் சொல்லப்படும். இத்தொழில்களால் உயிர்க்கு உண்டாவது உலக நுகர்ச்சியும், சிற்றறிவும் ஆகும். இவற்றால் உயிர் உலக வாழ்விற் கட்டுண்டு நிற்கிறது. இது பற்றியே இறைவனது செயல் ஊன நடனம் எனப்பட்டது. ஞான நடனம் என மற்றொன்று இருத்தலால், ஊன நடனமாகிய இதில் உள்ள ஊனம் என்பது ஞானம் இல்லாமையைக் குறித்தது.

ஞான நடனம்

முதல்வன் உயிர்கட்குப் பிறப்பு, வீடு என்னும் இரு நிலைகளையும் தருதற்காக ஆடுகின்றான். அவற்றுள் பிறப்பைத் தருவது ஊன நடனம் ஆயிற்று. வீட்டைத் தருவது ஞான நடனம் ஆகும்.ஊன நடனத்தின் பயனாக உயிர் உண்மையை உணரும். தத்துவங்கள் அனைத்தையும் தான் அல்ல என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணரும்; பின்பு, தான் சித்தப் பொருளாயினும் தானே அறியும் சூக்கும சித்து அன்று, அறிவித்தால் அறியும் தூல சித்து எனத் தனது உண்மையை உணரும். அதனால், தானே அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் நிற்கும்
சூக்கும சித்து தலைவனாகிய சிவன் என அறியும். இவ்வறிவு நூலறிவாய்  அபர ஞானமாய் நில்லாது, அதனை அனுபவமாக  பர ஞானமாகப் பெறும்.  இதுவே பக்குவம் முதிர்ந்த நிலையாகும். தன்னையும் தலைவனையும் உணர்ந்த நிலையாகும். தலைவனை உணர்ந்தவர் அவனே தமது வாழ் முதல் எனக் கொள்வர். தம் வழியில் நில்லாது அவன் வழியில் நிற்பர். முதல்வன் அவரை மும்மலம் நீக்கி அருள் நிலையில் வைத்துப் பேரின்பத்தை நுகரச் செய்வன் இவ்வுதவியும் ஐவகைத் தொழில்களாக வைத்துச் கூறப்படும். இது ஞான நடனம் எனப் பெயர் பெறுகிறது

மோன நடனம்

இவ்வுலகில் பக்குவ ஆன்மாக்களுக்குச் சீவன் முத்தி நிலையில் பேரானந்தத்தை இடையறாது தருகின்ற கூத்து இதுவாகும். மோனம் ஆகிய முடிநிலையில் நிற்கும் சிறந்த முனிவர்கள் மும் மல வாதனையை முற்றிலும் நீக்கி, தற்போதம் அற்ற நிலையில் விளங்கித் தோன்றும் பேரின்பமாகிய அமுதத்தைத் கண்களாலும் மொண்டு அருந்தும் படியாக இறைவன் வெளியே திருச்சிற்றம்பலத்துள் புலப்பட நின்று ஆடுகிறான். ஆனந்த நடனம் பரமுக்தி நிலையில் முத்தர்க்குச் செய்யும் உபகாரம் ஆகும்.

  1. மிகு பஞ்சாக்கரம் என்பது என்ன ?

மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மேலானதாகிய திருவைந்தெழுத்தால் திருமேனி தாங்கி, அவ்வருளே தனக்கு அரங்காகக் கொண்டு உமையம்மை காணுமாறு திருநடனம் புரிகிறான். மிகு பஞ்சாக்கரம் இறைவன் திருமேனியையும் அருளையும் குறிக்கிறது.

  1. இறைவன் நடனத்தை அம்மை காண்கிறாள் என்பதன் பொருள் என்ன ?

    ஞாயிறு உலகத்தோடு தொடர்பு கொள்வது தன் ஒளி மூலமாகவேயாம். அதுபோல இறைவன் உலகத்தோடும் உயிர்களோடும் கொண்டுள்ள தொடர்பு அவனது சத்தியாகிய அருள் வழியாகவேயாம். உமையம்மை காணும்படி நின்று சிவபெருமான் திருக்கூத்து இயற்றுகிறான் என்பதை வரைமகள் தான் காணும்படி என்று இந்நூலும், இவ்வாறே பிற நூல்களும் கூறிச் செல்லும். அதன் பொருள்தான் என்ன? சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தல் என்று பொருள் கூறுவர். இதனை மேலும் விரித்துக் கூறினால்தான் பொருள் இனிது விளங்கும். நாம் செய்யும் செயல்களுக்கு, நமக்கு வாய்த்துள்ள உடல், கருவி முதலியவை உடனின்று உதவுகின்றன. நாம் ஓரிடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால், நம் உடம்பானது இயங்கி அச்செயலை நிறைவேற்றுகிறது. நாம் ஒருவருக்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றால் நம் கைகள் இயங்கி அச் செயலை முற்றுவிக்கின்றன. உடம்பும் கருவிகளும் இவ்வாறு உதவினாலும் அச் செயல்கள் நம் செயல்களே. கொடுத்தலையும், எடுத்தலையும் செய்தவர் நாம். அதற்குக் கருவிகள் உடனின்று உதவின. அதுபோல, இறைவன் செய்யும் செயல்களுக்கு அவனது சத்தியே தனு, கரணம் முதலிய எல்லாமாய் நின்று செயல்களை முற்றுவிக்கும்.நங்கையினால் நாம் அனைத்தையும் செய்கிறோம். அதுபோல, நங்கையினால் இறைவன் அனைத்தையும் செய்கிறான். முதலில் உள்ள நங்கை என்பது நம் கை எனப்பிரிந்து பொருள்தரும். பின்னுள்ள நங்கை என்பது பெண் எனப் பொருள்பட்டு இறைவனது சத்தியைக் குறிக்கும். இதனால், இறைவனே செயலைச் செய்பவனாக, சத்தி அதனை முற்றுவிக்கும் துணையாக உள்ளமை விளங்கும். எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் என்பது அறியத்தகும். ஞானத்தை உணர்த்தி வீடு அளித்தல் இறைவனது செயல். அச் செயலைச் சத்தியே உயிர்களிடத்தில் உடனாய் நின்று செய்கிறது. முன்னர் அது திரோதான சத்தி என்ற பெயரும் நிலையும் கொள்கிறது. மலங்களைச் செயற்படுத்தி அவற்றின் வழியில் நின்று உயிர்களைச் செலுத்துகிறது. பிறப்பு இறப்புக்களையும் இன்பத் துன்பங்களையும் மாறி மாறிக் கொடுக்கிறது.

    திரோதான சத்தி எல்லாவுயிர்களிடத்திலும் ஒரே வகையாகச் செயற்படுவதில்லை. ஒவ்வொரு உயிரும் பக்குவ நிலையில் வேறுபாடு உடையது. ஆதலால், அந்தந்த உயிரின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகையில் அவற்றைச் செலுத்தி அவற்றின் அறியாமையைச் சிறிது சிறிதாக நீக்கி அறிவைப் படிமுறையில் வளர்த்து வருகிறது. குமர குருபர சுவாமிகள் இதற்கு ஓர் அருமையான எடுத்துக் காட்டுத் தருகிறார். கைக்குழந்தை நோய்வாய்ப்படுகிறது. அந்நோய்க்குரிய மருந்தை நேரே கொடுத்தால் மென்மையான அக்குழந்தையின் பசுங்குடல் அம்மருந்தின் வேகத்தைத் தாங்காது. அதனை உணர்ந்த தாய் அம்மருந்தைத் தான் உண்டு பால் வழியாக அம்மருந்தின் பயனைக் குழந்தை பெறும்படி செய்கிறாள்.

    பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென
    நோயுண் மருந்து தாய்உண் டாங்கு (சிதம்பர மும்மணிக் கோவை, செ.2)

    திரோதான சத்தியாகிய தாய் இதுபோன்ற செயலைத் தான் செய்கிறாள். அறியாமைதான் உயிர்களிடமுள்ள நோய். மெய்யறிவுதான் அதற்குரிய மருந்து. அம் மெய்யறிவை ஒரே காலத்தில் ஒருங்கே அளித்தால் உயிர் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது. உயிரின் பக்குவக் குறைபாடே
    அதற்குக் காரணம். ஆதலால் உலக நுகர்ச்சியாகிய பால் வழியாக மெய்யுணர்வைச் சிறிது சிறிதாகப் புகட்டி, அதன் அறியாமையைப் போக்கி, உண்மையைப் படி முறையில் உணரும்படி செய்கிறாள். எனவே, கூத்தப் பெருமானின் பக்கலில் நின்று ஆடல் காணும் அம்மை சிவகாமவல்லி திருக்கூத்தை முற்றக் கண்டு அதன் பயனாகிய ஞானத்தைப் பல்லுயிர்களுக்கும் அவற்றின் பக்குவ நிலைகளுக்கு ஏற்றவாறு ஊட்டி, அவற்றின் பாசப் பற்றை அறுத்து, உணர்வைவளர்த்து வரும் தாய் ஆவாள் என்பது உளங் கொள்ளுதற்குரியது.

  1. ஐந்தெழுத்தின் பொருள் என்ன ?

இறைவனின் திருவருளாக நிற்கும் மந்திரம் என்றும் அழியாத நமசிவய என்னும் திருவைந்தெழுத்து மந்திரம். அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும். அதன் பொருள்:

ந – இறைவனது மறைப்பாற்றல் – திரோதன சக்தி

ம – மும்மலங்கள் – ஆணவ மலம்

சி – இறைவன் சிவபெருமான் (பதி)

வ – திருவருள் (சக்தி)

ய – உ.யிர் (ஆன்மா)

தூல பஞ்சாட்சரம்:

நமசிவய என்பது தூல பஞ்சாட்சரம் ஆகும். இதை ஓதுவதன் மூலம் உலக இன்பங்களைப் பெறலாம். இறைவனின் மறைப்புச் சக்தியால் மும்மலங்களும் நீங்கி சிவபெருமானின் திருவருளால் உயிர்கள் உய்வு பெறும்.

சூக்கும பஞ்சாட்சரம்:

சிவயநம என்பது சூக்கும பஞ்சாட்சரம் ஆகும். இதை ஓதுவதன் மூலம் முத்திப்பேறு கிட்டும். சிவபெருமான் திருவருளால் ஆன்மா ஆன்மா இறைவனின் மறைப்புச் சக்தியால் மலம் நீங்கப் பெற்று உய்வு பெறும்.

  1. சிவஞானம் பெறுதற்கு ஐந்தெழுத்தை எவ்வாறு ஓத வேண்டும் ?உலகப்பற்று அற்று ஞானத்தில் வேட்கை கொண்டு ஞானநெறியிற் செல்லும் பக்குவர்க்கு உரியது முத்தி பஞ்சாக்கரம். நகாரம் மகாரம் ஆகிய பாச எழுத்துக்கள் நீங்க நிற்கும் சிவாய என்னும் மூன்றெழுத்தே முத்தி பஞ்சாக்கரம் எனப்படும். அதிசூக்கும பஞ்சாக்கரம் என்றும் கூறப்படும். ஞானாசிரியர் நிருவாண தீக்கை செய்து ஐந்தெழுத்தை இங்குக் கூறியவாறு மூன்றெழுத்தாக வைத்து உபதேசிப்பார். அவ்வுபதேசத்தைப் பெற்ற பக்குவ ஆன்மா அம்மூன்றெழுத்தை மட்டுமே மந்திரமாகக் கொண்டு, அதன் பொருளில் தன் அறிவை இடைவிடாது நிறுத்தி அப்பொருளை உணர்ந்து உணர்ந்து நிற்கும். அதனால் வினை நீங்கும். வினை நீங்கவே திருவருள் இனிது விளங்கும்.
  2. ஆதி மலம் இரண்டும் ஆதியா ஓதினால்”ஆதி மலம் என்றால் என்ன ?

ஆதி என்பது மறைப்பாற்றல் (திரோதான) சக்தியைக் குறிக்கும். இது திருவைந்தெழுத்தில் நகரத்தைக் குறிக்கும். மலம் என்பது மும்மலங்களையும் குறிக்கும். திருவைந்தெழுத்தில் இது மகரத்தைக் குறிக்கும். ஆதி மலம் இரண்டும் என்பது திருவைந்தெழுத்தில் நம என்பதைக் குறிக்கும்.

  1. விதிப்படி ஓதுதல் என்றால் என்ன ?

உயர்ந்த திருவைந்தெழுத்தை நமசிவாய என ஓதினால், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் உயிரிடமிருந்து களையப்பட மாட்டாது. இந்த மூன்று மலங்களையும் உயிரிடமிருந்து களைந்து சிவத்தை சேர வேண்டுமானால், சிவத்தை முதலாவதாக வைத்த சிவயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தையே ஓத வேண்டும். இதுவே விதி. பஞ்சாக்கரத்தை இவ்வாறு ஓதினால் இவ்வுலகத்தில் எவ்வித துன்பமும் இல்லாமல் வாழ்வதோடு, வீடுபேறு பெற்றுப் பேரின்பத்தோடும் வாழலாம்.பாசத்தைக் களைந்து பதியிலே சேர்தலாகிய முக்தி பஞ்சாக்கரத்தை உணர்ந்து ஓதுவதே, விதிப்படி எனப்பட்டது.

  1. முத்தியில் ஆன்மா இறைவனோடு கலந்திருப்பதற்குக் கூறப்படும் மூன்று உவமைகள் யாவை ?முத்தி நிலையில் உயிரும் சிவமும் உள்ளன ஆயின் பிரித்தறியவாராது ஒன்றாய் உள்ளன. உயிர் சிவனது திருவருள் வியாபகத்துள் அடங்கித் தனித்த ஒரு முதலாய்க் காணப்படாது நிற்றலே உயிர் சிவத்தோடு ஒன்றாதல் அல்லது இரண்டறக் கலத்தல் ஆகும். உயிரானது சிவத்தோடு ஒன்றாகி இல்லாமற் போய்விடவில்லை. உயிர் சிவத்தோடு ஒன்றி நின்று அதனையே இடையறாது உணர்ந்து அனுபவிக்கின்றது. அவ்வாறு ஒன்றி நிற்பது எது போலும் என்று காட்டுதற்குப் பல உவமைகளை
    எடுத்துக்கூறுகிறார் ஆசிரியர்.

    1. பேரின்ப முத்தியை அடைந்த பெருமக்கள் பழத்திற் சுவைபோலவும், பூவில் மணம் போலவும், நெருப்பில் வெம்மை போலவும், வீணையில் இன்னிசை போலவும் சிவ முதற் பொருளோடு ஒன்றிப் பிரியாது இயைந்து நிற்பர். இவ்வாறு சிவாகமங்கள் கூறும்.

    2. உயிர் எப்போதும் தனித்து இருக்காது. மலங்களை பற்றி இருக்கும், அல்லது சிவத்தை பற்றி இருக்கும். கட்டு நிலையில் உயிருக்கு உதவும் கருவிகளாக வந்த தத்துவங்கள் எல்லாம் உயிருக்கு வேறாய் நில்லாமல், உயிரே என்னும்படி இயைந்து ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன. அதுபோல, முத்தி நிலையில் மலம் நீங்கிய ஆன்மாக்கள் சிவத்திற் பொருந்தித் தாம் வேறாய் நில்லாமல் சிவமே எனும்படி அதனோடு ஒன்றி இயைந்திருப்பர். இவ்வாறு ஆகமங்கள் உறுதிபடக் கூறும்.

    3. பொழுது விடிந்து சூரியன் புறப்பட்டவுடன் அதன் பேரொளி முன், வானத்திலுள்ள தேய்பிறையாகிய நிலவின் ஒளி அடங்கிப் போய் விடுகிறது. நிலவின் ஒளி இருந்தும் இல்லையாய் நிற்கிறது. அதுபோல முதல்வன் திருவடியை அணைந்த உயிர் வெள்ளமெனப் பெருகும் இறையின்பத்தில் மூழ்கித் தான் என வேறு நில்லாது, தான் சிறிதும் தோன்றாது, அடங்கி நின்று
    இன்புறும்.

  2. பாடல் 46 இல் சித்தமலம் என்பதன் பொருள் என்ன ?

சித்த மலம் என்பது உயிர் அறிவைப் பற்றியிருக்கும் மும்மலத்தையும் (அல்லது பொதுவாக சொல்லும் ஆணவமலம்) குறிக்கும்.

  1. முப்பொருளும் நித்தம் என்றால் முத்தியில் பாசம் நீங்கியதா இல்லையா ?முத்தியில் ஆணவ மலத்தின் நிலை என்ன? இத்தை விளைவித்தல் என்பதன் மூலம் மலமும் முத்திக் காலத்தில் நித்தமாக இருக்கிறது என்பது தெரிகிறது. அது எவ்வாறு இருக்கும் என்பதை நோக்குவோம். உயிரிடத்தில் திருவருள் ஒளி மேலிடுதலால் ஆணவ இருள் அதன் கீழ்ப்பட்டு அடங்கி விடுகிறது. மந்திரத்தால் நெருப்பின் ஆற்றலைக் கட்டுப்படுத்த வல்லவர் நெருப்பின் நடுவில் நின்றாலும் அஃது அவரைச் சுடுதல் இல்லை. அப்பொழுது நெருப்பினது சுடும் சத்தி எங்கே போயிற்று? அச் சத்தி எங்கும் போய் விடவில்லை. இல்லாமற் கெட்டொழிய வில்லை. இருந்தும் இல்லாததாய் அவரிடத்தில் செல்ல மாட்டாமல் மடங்கி நிற்கிறது. அது போல முத்திக் காலத்தில் ஆணவ மலம் இருந்தும் அதன் மறைப்பு சிவமே எனும்படி ஒன்றாய் நிற்கும் உயிரிடத்துச் செல்ல மாட்டாமையால், அது தன் சத்தி மடங்கி இல்லாதது போல் நிற்கும். நடராச வடிவத்தில் முயலகனைத் திருவடிக்கீழ் அழுத்தி வைத்திருப்பதிலிருந்து முத்தியில் ஆணவ மலம் அடக்கப்பட்டுள்ளதேயன்றி இல்லாமற் போகவில்லை என்று தெளியலாம். இவ்வாறு மல சத்தி மடங்கி நிற்றலையே மலம் கெடுதல் என்றும், மலம் நீங்குதல் என்றும் நூல்கள் கூறும். பெத்தத்தில் இறையின்பம் உயிரிடத்து விளையவொட்டாது தடுத்து நின்ற ஆணவ மலம் முத்தியில் அங்ஙனம் செய்ய மாட்டாமல் இருக்கும். இங்ஙனம் மலம் தான் மடங்கி நிற்றலால் இறையின்பம் உயிரிடத்தே விளைவதற்கு இவ்வகையில் காரணமாயிற்று. இதனைக் கருதியே இத்தை விளைவித்தல் மலம் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். இதுவரை கூறியவற்றால், முத்தியில் ஆணவ மலம் உண்டு; ஆயினும் அதனால் உண்டாகும் பந்தம் இல்லை என்பது புலனாகும். இந்நிலையை விடுபட்ட நிலை என்று கூறலாம் தானே.
  2. முத்தியில் முப்பொருளின் நிலை என்ன ?நன்மாணாக்கனே, பரமுத்தியில் முப்பொருள்களும் உள்ள முறைமையைக் கூறுகிறோம். கேள். தூய பேரின்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பது உயிர். அவ்வின்பத்தை இடையீடின்றிக் கொடுத்துக் கொண்டிருப்பவன் இறைவன். அப்பேரின்பத்தை விளைவித்து நிற்பது மலம். இவ்வுண்மையை உணர்ந்து கொள்.
  3. இத்தை விளைவித்தல் மலம்” என்பதன் பொருள் யாது ?

43 ஆம் பதிலிலேயே இதுவும் விளக்கப்பட்டுள்ளது. மலம் உயிரை விட்டு நீங்கி அல்லது விலகி நிற்றலால் உயிருக்கு முத்தி கிடைக்கிறது. இவ்வாறு மலம் நீங்கி நிற்றலாலேயே உயிருக்கு பேரின்பம் கிடைத்ததால், இத்தை விளைவித்தல் மலம் எனப்பட்டது.

  1. முத்தி நிலை உயிருக்கு இயற்கையா, செயற்கையா ?

முத்தி நிலை உயிருக்கு இயற்கை.

  1. முத்தியில் சிவம் சென்று ஆன்மாவைச் சேர்ந்ததா ? இல்லை ஆன்மா சென்று சிவத்தைச் சேர்ந்ததா ?உயிர் சென்று சிவனோடு ஒன்றும் எனில் எங்கும் நிறைந்துள்ள பூரணத்தன்மை சிவனுக்கு இல்லை என்று கொள்ள நேரும். அது கூடாது. இனிச் சிவனே சென்று உயிரோடு பொருந்துவான் எனில், சிவன் உயிருக்கு வேறாய் இருந்தான் என்று கொள்ள நேரும். அதுவும் கூடாது. இவனும் சென்று அவனை அடைதல் இல்லை. அவனும் வந்து இவனை அடைதல் இல்லை. மற்று இருவரும் இயைந்து நிற்கும் முறைமைதான் யாது எனில், குருடனது கண்ணின் குற்றமாகிய படலம் நீங்க, அக்கண்ணொளியும், சூரியவொளியும் தம்முள் இயைந்து நிற்றல் போன்றதே அவனும் இவனும் பிரிப்பின்றி நிற்கும் முறைமை.
  2. முத்தியை அடைவதற்குரிய வழி யாது ?

குரு வழிபாடு, இலிங்க வழிபாடு, சங்கம வழிபாடு ஆகிய இம்மூன்று திருவருள் நிலைகளே முத்திக்கு உரிய வாயில்கள் ஆகும். இவ்விடங்களில் இறைவனை இடைவிடாது நினைந்து தொழுது இறைஞ்சுபவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்.

  1. முப்பத்தாறு தத்துவங்களைப் பற்றி அறிவதால் நமக்கு என்ன பயன் ?

முப்பத்தாறு தத்துவங்களை நாம் அறிவதால், நாம் யார், நமக்குரிய கருவிகளை எவை, அவை எதற்காக கொடுக்கப்பட்டிருக்கின்றன, இறைவன் யார் என்பதை உணராலம். இதனால், இக் கருவிகளை பயன்படுத்தி இறைவனை வணங்கி முத்தி நிலை அடையலாம்.

  1. திருவைந்தெழுத்தை ஓதும் முறை, நிற்கும் முறை யாது ?திருவைந்தெழுத்தில் ஒவ்வோர் எழுத்திற்கு ஒவ்வொரு பொருள் அமையும்.
    திருவருளைப் பெற விரும்புவோன் உலகியலில் நின்று நகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் வெளிப்படாது. உலகியலிலிருந்து நீங்கி, வீட்டு நெறியில் அறிவை நெறிப்படுத்தி நின்று, சிகாரத்தை முதலில் வைத்து ஓதினால் திருவருள் உன் உணர்வில் வெளிப்பட்டுத் தோன்றும். ஆகலின் நீ அவ்வாறு நின்று, அவ்வாறு ஓதுக.

    திருவெழுத்து ஐந்தையும் அண்ணலாகிய சிவனைக் குறிக்கும் சிகாரம் முதலாக வைத்து இடையறாது எண்ணி வந்தால், திருவருள் வெளிப்பட்டு உயிரைக் கேவலமும் சகலமும் நீங்கிய அருள் நிலையில் சேர்க்கும்; எல்லையற்ற சிவானந்தத்தை நுகரச் செய்யும்; அந்நிலையில் இருளான ஆணவ மலம் பற்றறக் கழியும்.

  2. தாத்துவிகங்கள் என்பது என்ன ? அவை எத்தனை ?தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. பல்வேறு வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும்.

*உண்மை விளக்கம் கேள்வி பதில் தொடர் நிறைவுற்றது.*

திருச்சிற்றம்பலம்.

பல்லாண்டு எனும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே !
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *