காலத்தை வென்ற நூல்கள் என்பது எத்தனை காலமானாலும் என்றும் பொருந்தி இருப்பதாகும். பன்னிரு திருமுறைகளின் பெருமை 4/5 (2)

காலத்தை வென்ற நூல்கள் – பன்னிரு திருமுறைகளின் பெருமை

காலத்தை வென்ற நூல்கள் என்றால் என்ன ?

நூல் செய்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒரே ஒரு எழுத்தைக் கூட மாற்றாமல் அப்படியே அந்த நூலின் பொருள் எக்காலத்தும் பொருந்துமாறு இருப்பது தான் காலத்தை வென்ற நூல்களாகும். இது போல காலத்தை வென்ற நூல்களை செய்வது எப்படி சாத்தியம் ? விஞ்ஞானம் நேற்று செய்த பொருள் இன்று புதிய வடிவம் (version) கொண்டு புதுப்பிக்கப்பட்டு (update) இவ்வுலகில் இருந்தே காணாமல் போய்விடுகிறது. ஆனால், பல ஆயிரம் காலங்கள் கடந்தும் ஒரு நூல் நிலைத்து நின்று, தற்காலத்திற்கும் இனி வரும் காலத்திற்கும் பொருந்துமாறு இருப்பது எத்தனை பெரிய அதிசயம், ஆச்சரியம் என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
 
இன்றைய உலகில் இத்தனை பெரிய நூல்கள் செய்வது சாத்தியமா என்றால், என்ன பதில் கொடுப்போம் என்று எண்ணிப் பாருங்கள். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நூல்கள் நிற்கிறது என்றால், அவை உண்மைப் பொருளைச் சொன்னால் மட்டுமே நிற்பது சாத்தியம். உண்மையல்லாதவை அழிந்து போகும். அத்தகைய நூலையோ பொருளையோ மனிதர்கள் செய்வது சாத்தியமா என்ற கேள்விக்கும் நாம் என்ன பதில் கூறுவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அத்தகைய நூல்கள் இறைவன் திருவருளினால் மட்டுமே செய்ய இயலும் என்பது இப்போது தெளிவாகும்.
 
வேகமாக மாறி வரும் இந்த விஞ்ஞான உலகிலும் காலத்தை வென்ற நூல்கள் இங்கு இருக்கிறதா என்று நாம் ஆராய்ந்தால் நமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட நூல்கள் இன்றும் அதன் தன்மை மாறால், உண்மைப் பொருள் மாறாமல் நிலைத்து நின்றால், அது அதிசயம் அல்லவோ ? அப்படி பல நூல்கள் உலகிலேயே இந்தியா என்னும் நாட்டின் தென்கோடியில் தமிழகம் என்ற பகுதியிலே உலகின் முதன்மொழியாக இன்றும் வழக்கில் இருக்கும் தமிழ் என்ற மொழியிலே உள்ளது என்றால் நமக்கு இன்ப அதிர்ச்சி தானே. உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் பல காலத்தை வென்ற நூல்கள் இல்லவே இல்லை. உலகிலேயே தமிழ் நாட்டிலே, தமிழ் மொழியிலே மட்டும் தான் இருக்கிறது.  எனக்கு அந்த நூல்களைக் காண மிகவும் இப்போது ஆவலாக இருக்கிறது.
 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவநாயனாரால் செய்யப்பட்ட திருக்குறள், பன்னிரு திருமுறை நூல்கள், இலக்கிய நூல்கள் என்று பல காலத்தை வென்ற நூல்கள் தமிழ் மொழியிலே உள்ளது. அத்தகைய நூற்களில் தலை சிறந்தது திருக்குறளும் பன்னிரு திருமுறை மற்றும் சித்தாந்த சாத்திர நூல்களும், இன்னும் பிற சைவ மரபு நூல்களுமாகும். நம் நூல்களின் பெருமை நமக்கே ஏனோ தெரிவதில்லை. அதை பாராட்டும் எண்ணமும் ஏனோ நமக்கே இருப்பதில்லை. அத்தகைய காலத்தை வென்ற நூல்களை நாம் எவ்வாறு போற்ற வேண்டும் ? எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ? அதை முதலில் நன்கு படித்து உள்வாங்கி உணர வேண்டும்.  அதற்கு சிறந்த ஞானாசிரியர்களின் துணையைப் பெற வேண்டும். திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் சைவத் திருமுறை நேர்முக வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இத்தகைய பெரிய சிவபெருமானின் அருளைப் பெற்றவர் இவ்வுலகில் எத்தனை பேர் ?
 
இந்த நூல்கள் சில ஆயிரம் ஆண்டு காலத்தின் முன்னர் தான் தோன்றியதா என்ற கேள்வியை எழுப்பினால்… நூல் வடிவமாக சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தான் தோன்றியது. ஆனால், சொல் வடிவில் குருவின் உபதேசமாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதற்கு முன்னரும் இருந்துள்ளன ? இதை ஆராய்ந்து துல்லியமான பதிலைக் கூறத்தக்கவர் இங்கு எவரேனும் உளரோ ?
 
இந்த நூல்களில் உள்ள பதிகங்கள் செய்த அற்புதங்கள் எத்தனை எத்தனை ?  இந்த அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்தனவா என்று வியந்து கேட்பவர்கள் ஏனோ, சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளி பிழைத்துக் கொண்டதை இக்கால மருத்துவர்கள் Its a medical miracle என்பதை மட்டும் அதே வினாவை எழுப்பாமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.  நமக்குத் தெரியவில்லை என்ற காரணத்தினால் மட்டும், அந்த அற்புதங்கள் இன்றும் நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. இந்த அற்புதங்கள் நடந்ததற்க்கு சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன.  இந்த உலகைச் சுற்றி இன்னும் நிறைய சூக்குமங்கள் இருக்கின்றன, அதுவும் மனிதனின் அறிவிற்கும் கவனத்திற்க்கும் எட்டாமல் இன்னும் நிறைய இருக்கிறன்றன என்பதை உணர இயலும்.
 
முதலை உண்ட பாலகனை மூன்று ஆண்டுகள் கழித்து அதே வளர்ச்சியோடு மீண்டும் பெற்றது எத்தனை பெரிய அதிசயம் ?  ஆற்றில் விட்டதை குளத்தில் பெற்றது, செங்கல் தங்கக் கட்டியாக மாறியது, காவிரி ஆறு பிரிந்து வழிவிட்டது, இந்த பூத உடலோடு திருக்கயிலாயத்திற்கு வெள்ளை யானையின் மீது ஏறிச் சென்றது, கொலை செய்ய ஏவப்பட்ட மதம் பிடித்த யானை வணங்கி வலம் வந்தது, கல்லைக் கட்டி கடலில் போட்டும் கல் தெப்பமாக மிதந்து கரையேறி அதற்கு சான்றாக இன்றும் இருக்கும் கரையேரவிட்ட குப்பம் என்ற பகுதியும், கொடிய நஞ்சை பாலில் கலந்து உண்டும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிரோடு இருந்ததும், பாடல் பாடி இறைவனிடம் படிக்காசு பெற்றதும், கயிலையில் உள்ள ஏரியில் மூழ்கி, திருவையாற்றின் குளத்தில் எழுவதும், இறந்து போன இளைஞரையும், பூம்பாவையையும் உயிருடன் எழுப்பியதும் (மாண்டவரை மீட்டது), பதிகம் பாடி நோய்களை நீக்கி மனித குலத்தை மீட்பதும், அடேங்கப்பா எத்தனை எத்தனை அற்புதங்கள்.  எல்லாம் இறைவன் திருவருளினால் நம் அருளாளர்கள் செய்த அற்புதங்கள்.
 
எத்தனை பெரிய சிறப்புகள் இந்த நூல்களுக்கு இருக்கின்றன ? அவற்றையெல்லாம் அறிவதற்கு நமக்கு ஏனோ இன்று நேரமே இருப்பதில்லை. சுதந்திரம் பெற்ற பின் சில பத்தாண்டுகளில் விஞ்ஞானத்தைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று நம் பல்லாயிரம் ஆண்டு கால சிறப்புகளை இழிவுபடுத்தி நம்மிடம் உள்ள மாணிக்கத்தை நாமே தூக்கி எறிய வைத்த இழி செயல்கள் எத்தனை எத்தனை ? இன்னும் நாம் விழித்துக் கொண்டு, நம் பெருமைகளை உணர்ந்து, அவற்றை மற்றவர்களுக்கும் உலகிற்கும் அறிய செய்யும் செயல்களை நாம் செய்யவில்லை என்றால், இந்த ஞான பூமி நம்மை மன்னிக்காது.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *