குற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள் No ratings yet.

குற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள்

ௐௐௐௐௐ
சிவ சிவ :


~ குற்றம் ஒன்றும் செய்ததில்ல.! ~


சுந்தர மூர்த்தி சுவாமிகள்கள் திருக் கயிலை மீண்ட நாள் / சிறப்புப் பதிவு
======+======
~ விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் / குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர் / எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் / மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே ~
~ 07-95-02 / திருவாரூர் / செந்துருத்தி ~
××××× ×××××
திருத் தரும புர ஆதீன உரையும் குறிப்புகளும். ~~
உரை : ~ அடிகளே ,நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில் ,யான் ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கி விட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழியொன்றில்லை ; பன் முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத் தர உடன்படாவிடின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !
~குறிப்புரை ; நம்பி ஆரூரர் செய்தது குற்றமாகாமை ,
“” பிழையுளன பொறுத்திடுவீர் என்றடியேன் பிழைத்தக்கால் ” (07-89-01)என்ற விடத்து விளக்கப்பட்டது .
அதனானே இங்கு ,””குற்றம் ஒன்றும் செய்ததில்லை “” என்று அருளினார்.
” நீரே பழிப் பட்டீர் ” என்றதன் காரணமும் ,
அவ்விடத்தே , ” பழியதனைப் பாராதே ” என்றதன் விளக்கத்துட் காண்க .

ஐயா !
சுந்தர மூர்த்தி சுவாமிகள் எவ்வளவோ பாடி இருக்கும் போது , மேலும் இன்று வெள்ளானை மீது சிவலோகும் ஏகும் போது ,இந்தப் பாடலை சிறப்பாக எடுத்தக் காரணம் அறிய விரும்புகிறேன் !
இப் பாடல் எழுந்த சூழல் அறிவாயா ?
வலக் கண் அருளும் படி ஆரூர் பெருமானிடம் மனம் நொந்து வேண்டி பாடி அருளியது ஐயா !
ஆம் !
இந்தப் பாடலில் , தான் “” குற்றம் ஒன்றும் செய்ததில்லை “” என இறைவன் முன் உறுதியாகச் சாற்றுவதும் , அவ்வாறு இருக்க , “எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் “” என வினவியதன் மூலம்
நமக்கு சிவ ஞானத்தின் எல்லையே உணர்த்தப் படுகிறது என அறிக !
புரிய வில்லை ஐயா ! பொழிப்புரை , குறிப்புரைகளிலும் விளக்கம் இல்லையே ;-நீங்கள் என்ன இல்லாததை விளக்கப் போகிறீர்கள் ?
இதை உரையளவில் புரிய வைப்பதைவிட , உரையாடல் மூலம் விளக்கலாம் என எண்ணுகிறேன்.
திருவருள் ; விளக்குங்கள் ஐயா !
****** ******
காட்சி :
சுவாமிகள் இறைவனாருக்கு , வலக் கண்ணின்றி அவர் படும் மனக் குமுறலையும் , அல்லல்களையும் ,
ஆரூரருக்கு உணர்த்துமாறு அகத் துறை உணர்வுடன் பறவைகளை நோக்கி விளித்து உருகிப் பாடி , பூங்கோயிலை அணைகிறார் ; ( ஒற்றைக் கண் இல்லாது எப்படி பரவையார் முன் தோன்ற முடியும் ;? அவர் வினவினால் என்ன விளக்கம் அளிக்க இயலும் ?) பூங்கோயிலார் முன் வீழ்ந்து , எழுந்து , கை தொழுது முன் நின்றே விம்முகிறார் ; “”ஆழ்ந்த துயர்க் கடலிடை நின்று அடியேனை எடுத்தருளித் தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண் தாரும்””எனத் தாழ்கிறார் .
தியாகேசர் : ~ சுந்தரா ! வா ! என்ன பறவைகள் வழியெல்லாம் தூது விடுகிறாய் ! ஒரே துன்பப் புலம்பலாக இருக்கிறதே ?
ஆரூரன் : ~ “மீளா அடிமை ”
தியா : ~ ” ஆம் ! மீளா அடிமைதான் ; அதற்கென்ன ?
ஆரூரர் : ~ “”உமக்கே ஆளாய் “”
தியா : ~ ஆமாம் ! எனக்கு மட்டுமேதான் ஆள் !
ஆரூரர் : ~ ” பிறரை வேண்டாதே ” !
தியா : ~ ” எனக்கு ஆட்பட்ட பின்னும் , மதியிலாதவன் தான் பிறரை வேண்டுவான் ! ; அவன் கனவிலும் என்னை உணர முடியாது ” உனக்கென்ன ?
ஆரூரர் : ~ ” தெரியவில்லையா என் முக வாட்டம் ; உணர வில்லையா என் நெஞ்சகத்தே எழும் கனலை ?
உனக்கு அடிமைப் பட்ட நான் இது வரை எடுத்துரைத்த அல்லல்கள் எல்லாம் தங்கள் செவியில் ஏறவில்லையா ?
தியா : ~ ” என்ன எதிர்பார்கிறாய் ”
ஆரூரர் : ~ ” இவ்வளவு எடுத்துச் சொல்லியும் ,ஏதும் அருளாது இருப்பின் நீரே நன்றாக வாழ்வீராக !
தியா :~ ” சரி ! உன் விருப்பம் !
மேலே சொல் !
ஆரூரர் : ~ ( என்னை ) ” விற்றுக் கொள்வீர் ; ஒற்றி அல்லேன் !
தியா : ~ ஆம் ! நீ என் மீளா அடிமைதான் !
ஆரூரர் : ~
“” விரும்பி ஆட்பட்டேன்””
தியா : ~ ” நிறுத்து !
“”நான் உன்னை ஈர்த்து ஆட் கொண்டதால் அல்லவா விரும்பினாய் “”
ஆரூரர் : ~ ” ஆமாம் சாமி ! தானே வந்து என் உளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தீர்கள் ; உண்மைதான் ! அருள் பெற்ற நான் ,வேறு சிந்தை இன்றி உங்களையே விரும்பி ஆட் பட்டேன் ! ”
தியா : ~ ” சரி மேலே சொல் ”
ஆரூரர் : ~
” குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; கொத்தை ஆக்கினீர்”
தியா : ~ என்ன ! குற்றம் ஒன்றும் செய்ததில்லையா ?
ஆரூரர் : ~ ” “ஆமாம் ; செய்ததில்லை ! – எற்றுக்கடிகேள் என் கண் கொண்டீர் ; நீரே பழி பட்டீர் ! “”
தியா : ~;” நன்றாக இருக்கிறதே ! இதுதான் திருவாரூர் நியாயமா ? ”
” சங்கிலியைப் பிரிய மாட்டேன் என மகிழ மரத்திலிருந்த என் முன் , அவளுடன் வந்து சத்தியம் செய்தவன் நீ !
சூளுறவு செய்ததை மீறி ,அவளை வஞ்சித்து , ஏமாற்றி , திரு வொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் நீ “”
ஆரூரர் : ~ ‘”அடியாருக்கு சத்தியம் செய்து , நம்பும் படி வாக்குக் கொடுத்து மீறினால் கண் இரண்டும் போகும் என்ற ஞானத்தை உலகுக்கு உணர்த்த நான் தான் உங்களுக்குக் கிடைத்தேனா ?
தியா : ~ ;” “பிழையுளனப் பொறுத்திடுவீர் என்று அடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராமல் படலம் என் கண் மறைப்பித்தாய் “” என்று உன் பிழையை வெண்பாக்கத்தில் என் முன்பு ஒப்புக் கொண்டாய் அல்லவா ? ”
ஆரூரர் : ~”” ஆம் ஐயனே ! ”
தியா : ~ ” உன் கண்கள் போனதற்கு என் அடியாளிடம் ,என் முன் சூளுறவு செய்து ஏமாற்றிய தண்டனையிலிருந்து தப்ப முடியாத பாவமே காரணமாக இருக்க ,நான்தான் உன் கண்களை மறைத்ததாகப் பழி சுமத்துகிறாயே இது தகுமா ? “”
ஆரூரர் : ” அடியேன் பிழை செய்தேன் என ஒப்புக் கொண்டது தவறுதான் தலைவ !”‘
தியா ;~ ” மீண்டும் பொய்யா ? ”
ஆரூரர் : ~ “” அது என் செய்கை என நான் நினைத்தது தான் பொய் ஈசனே !”
தியா : ~ “” எங்கே விளக்கு ! உண்மையாயின் உறுதிப் படுத்து ! ”
ஆரூரர் : ~ “கயிலையில் நான் தங்கள் அடிமையாகத்தானே இருந்தேன் ? ”
தியா : ~ ” மலர் மாலை சாத்துவதும் , அள்ளும் நீறு ஏந்துவதும் உன் தொழில் ! ”
ஆரூரர் : ~ ” திருமண போக ஆசை உள்ள பெண்ணோ ஆணோ கயிலை புக முடியுமா ? சிவமே ! “”
தியா : ~ “கயிலையின் எல்லையைக் கூட எட்ட முடியாது “‘
ஆரூரர் : ~ ” ஆக எனக்கும் , கமலினி ,
அநிந்திதைக்கும் அந்த ஆசை இல்லைதானே ! ”
தியா : ~ ” ஆமாம் ; இல்லை தான் ! ‘”
ஆரூரர் : ~ ” ” “”நந்தவனச் சூழலில் நாங்கள் ,
பார்வையால் கவரப் பட்டு மயங்கியது எங்கள் செயல் அல்லதானே ! ”
தியா : ~ ” ஆம் ! அதற்கென்ன இப்போது ? ”
ஆரூரர் : ~ ” “உங்களுக்கு எண்ணில் கோடி உயிர்கள் மீது அளவற்ற இரக்கம் !
அவர்கள் எளிதில் தங்களைப் பற்றி உய்ய ,திருத் தொண்டத் தொகையைக் கொடுக்க வேண்டும் ;
அதற்கு ஒரு திரு விளையாடல் “‘
தியா : ~ ” என்ன சொல்ல வருகிறாய் ? விரிவாகச் சொல் ! ”
ஆரூரர் : ~ “”கயிலையில் அந்தப் பெண்கள் மீது எனக்கு மையல் ஏற்படுத்தியவர் நீரே !
பூமியில் பிறக்கச் செய்ததும் நீரே !
ஆரூரில் பரவையாரையும் என்னையும் எதிரெதிரே சந்திக்கச் செய்ததும் நீரே ”
‘”ஒருவரை ஒருவர் விரும்பச் செய்ததும் நீரே ! அடியார்கள் மூலம் மணம் செய்வித்ததும் நீரே !
திருவொற்றியூர் வரச் செய்ததும் நீரே !
அஞ்செழுத்து மனம் தொடுக்க , அலர் தொடுத்த அடியார்கள் தொண்டினை பார்த்து நான் அக மகிழும் போது ,நிலவு போல் சங்கிலியை தோன்றி மறையச் செய்ததும் நீரே !
உன்னிடம் இருந்து எனது நீங்கா சிந்தையின் இடை புகுந்து ,மலர் தொடுத்து என் உள்ளத் தொடை அவிழ்த்த அவளை , அது இடையீடின்றி உன்னை நினைப்பதற்கு இடையூறு எனினும் , அதையும் மீறி என் மனத்தை அலைத்து உன்னிடம் அவளை வேண்டி அருளுமாறு வினவும் அடங்கா வேட்கையை ஏற்படுத்தியதும் நீரே !””
தியா : ~ “”மேலும் தொடர்க !””
ஆரூரர் : ~ ” அது போதாதென்று சங்கிலியை விட்டுப் பிரியேன் என சூளுறவு செய்ய வைத்தத் திரு
விளையாடலுக்கு ஒப்புண்டா ? ”
” சங்கிலியோடு உன் முன் சத்தியம் செய்ய வரும் போது ஆலயத்தில் இருக்காதீர் ; போய் மகிழ்க் கீழ் இரும் என்று சொன்ன என்னை , அப்படிச் செய்வதாக ஒப்புக் கொண்டு ,
விளையாட்டு பொம்மை போல ஆட்டிச் சுழலவிட்டு , செயவதறியாமல் என்னை விழிக்க வைத்து மகிழ்க் கீழேயே சத்தியம் செய்ய வைத்தீரே !””
தியா : ~” ஆம் ! இதெல்லாம் எமக்கு சாதாரண விளையாட்டுகள் ; உயிர்களுக்கு விளையும் பயன் கருதி !”‘
ஆரூரர் : ~ “அத்தோடு விடாது அவளுடன் அடியார்கள் மூலம் திருமணம் செய்து வைத்ததும் நீரே ! ”
“ஆரூர் வசந்த விழாவை நினைப்பித்து என்னை ஏங்க வைத்ததும் நீரே ! ” “உன் மீது எனக்குள்ள ஆரா வேட்கையை மேன் மேலும் பெருக்கி மிக வைத்ததும் நீரே ! ”
” சத்தியத்தை மீறி ஒற்றியூர் எல்லையைத் தாண்ட வைத்ததும் நீரே ! ”
“இரு கண் பார்வையையும் மறைப்பித்ததும் நீரே ? “”
தியா : ~ “” ஆமாம் ! அதற்கென்ன இப்போது ? ”
ஆரூரர் ; ~ “அதற்கெனானவா ?””அவன் அன்றி அணுவும் அசையாது ” என்பது ஆன்றோர் வாக்கு !
“உயிருக்கென்று எச் செயலும் இல்லை ; எல்லாம் ஈசன் செயல் என்பதே ஞானம் ! ‘
தியா : ~ ” எனக்கே ஞான போதனையா ? ”
ஆரூரர் : ~ ” “மன்னியுங்கள் ஐயா !
ஆனால் அது தானே உயர் சிவ ஞானம் ”
நீ ஆட்டி வைத்தாய் ; நான் ஆடினேன் !
” நான் செய்த புண்ணியமோ பாவமோ எல்லாம் உன் செயலே ! ”
“என்னைக்
கருவியாக வைத்து உன் திருவுளப் படி செயலை எல்லாம் செய்து விட்டு , எதற்காக ஐயா என் கண்ணை மறைப்பித்தீர் ? “”
“” உலகியல் மனிதர் அறியாராயினும் ஞானிகள் உம் மீது பழியாக எண்ணாரோ ? “”
தியா : ~ ” “”உண்மைதான் சுந்தரா ! கயிலை தொடங்கி ,இதுவரை உன் இச்சைப்படி நீ செய்த செயல் ஏதுமில்லை ; எல்லாம் என் செயல் தான் ! எல்லா உயிர்களையும் ஆட்டிப் பக்குவப் படுத்தும் என் திரு விளையாடல்களுக்கு நீ என் கருவி ; அவ்வளவே ! ”
“” சங்கிலியை சத்தியத்தை மீறிப் பிரிகிறோமே என அதை உன் செயலாக எண்ணிப் பாவம் பழிகளை உன் மேல் ஏற்றிக் கொண்டாய் ; கண் பார்வை போயிற்று !
“” இப்போது எனதன்றி எவருக்கும் எச்செயலும் இல்லை என்று உயர் சிவ ஞானத்தை உணர்ந்தாய் ; அதனால் நீ குற்றம் ஒன்றும் செய்ததில்லை என ஞானமாக உரைத்தாய் ! குற்றம் அகன்றது ! ”
“இனி வலக் கண் பார்வையையும் அடைவாய் ! ”
” உலோகோரை செயல்களில் ஈடு படுத்தி , பக்குவம் அடையும் வரை இன்ப துன்பங்களில் உழலச் செய்து நானே கடைந்து செம்மைப் படுத்துகிறேன் என்று அறியாமல் , அவனவனும் , தானே எதையும் செய்வதாகக் கருதி புண்ணிய பாவங்களுக்குத் தாமே மூலமாக/ கர்த்தாவாகத் தம்மை எண்ணும் வரை பிறவிக் கடலில் தத்தளிக்கவே வேண்டும் ! “”
××××××××××××××
” ~ இவ்வளவு சிவ ஞான விளக்கங்கள் இந்தப் பாடலில் பொதிந்துள்ளன என எண்ணும் போது அச்சமாக இருக்கிறது ஐயா ! ”
” என்னவென்று ? சொல் ! ”
” ஏதோ கொஞ்சம் படித்துவிட்டு , தாம் திருமுறைகளைக் கரைத்துக் குடித்துவிட்டோம் என , மேலோட்டமான பொருள் கூட அறியாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போவோரைப் பார்த்து ! “‘
இவ்வளவு நேரம் இந்த ஞான வரலாற்றைக் கேட்டும் ,எல்லாம் இறைவனார் செயல் என அறியாமல் மீண்டும் பிதற்றத் தொடங்கி விட்டாயே ! “”
“””மன்னியுங்கள் ஐயா !
அந்த உயர் ஞானம் கேட்கும் போது புரிகிறது ; ஆனால் மனத்தில் நிலைப் படுத்த முடிய வில்லையே ஐயா ! “‘
உரிய பக்குவம் வரும் வரை ஆட்டி அலைக் கழிக்கப் படுவாய் ! பின் தெளிந்த நிலையில் இந்த உயர் ஞானம் நிலை பெறும் !””
” எல்லாம் அவன் செயல் !”
– திருச் சிற்றம்பலம் –
கோமல் கா சேகர் / 9791232555/200718

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *