கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா? அக்னிகுண்டம் காத்திருக்கு. 5/5 (1)

கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா?

கோவில் சொத்தைத் திருடுதல், பிறர் சொத்தை அபகரித்தல், உயிர்களைக் கொலை செய்தல், அநியாயம் அக்கிரமம் செய்தல் என்று எத்தனையோ தீமைகளைச் செய்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் தண்டனையே கிடைக்காதா? என்று நாம் ஏங்குகிறோம். இன்னொரு பக்கம் பல விபத்துகள், பேரழிவு என்று மனிதன் துன்புறுகிறான். அதைக் கண்டு அவர்கள் மீது மனிதாபிமானத்துடன் இரக்கம் கொண்டு நாம் இறைவனுக்குக் கண் இல்லையா, மனது இல்லையா என்றெல்லாம்  கேட்கிறோம். இன்றைய காலகட்டத்தில் வரும் சில செய்திகளை உன்னிப்பாக கவனியுங்கள்.

1. எதிர்த்த வீட்டுக்காரன் மனைவியைக் கூட்டிக் கொண்டு வாலிபர் ஓட்டம்.

2. நிதானமில்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் மரத்தில் மோதி முள்வேலியில் சிக்கி உடல் கிழித்து சாவு.

3. வேறு வேறு பெயர்களில் முகநூலில் ஓராண்டாக காதலித்து வந்த இருவர் சந்தித்த போது தான், அவர்கள் கணவன் மனைவி என்று தெரிந்தது.

4. தவறான சிகிச்சையால் தனியார் மருத்துவமனையில் இருவருக்கு கண் பார்வை பறி போனது.

5. நெல்லையில் முன் விரோதம் காரணமாக ஜாமீனில் வெளி வந்தவர், வீடு புகுந்து அனைவரையும் வெட்டிக் கொலை செய்தார்.

6. மலை மீது செல்பி எடுக்க முயன்றவர் தவறி கீழே விழுந்து சூலாயுதம் உடலைக் கிழித்து உயிரிழந்தார்.

7. சீனாவைச் சேர்ந்தவர் புதிய கருவி கண்டுபிடிப்பு. கோழிகளை உள்ளே கொடுத்தால், அதுவே கொன்று, வெட்டி, பதப்படுத்தி, கறியாக திருப்பிக் கொடுக்கும்.

8. தாயின் கவனக் குறைவால் இரண்டு வயது குழந்தை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து பலி.

9. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் முதியவர் பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு மடங்காக உயர்ந்தது.

10. முதியவர் என்றும் பாராமல், சொத்துக்காக மகனே தந்தையை அடித்துக் கொலை.

11. உலகிலேயே எஞ்சியிருக்கும் அரிய வகை மான்களை வேட்டையாடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

12. காட்டில் மிகவும் சிதைந்த நிலையில் வாலிபர் உடல் கண்டுபிடிப்பு. முதல் கட்ட விசாரணையில் மிருகங்கள் கடித்திருக்கலாம் என தகவல். யானை மிதித்து பலி.

13. கோவில் உண்டியல் உடைப்பு. கோவில் சிலைகள் திருட்டு.

14. 50 வயது மதிக்கத்தக்கவர் கொடூர கொலை. மரத்தில் கட்டி வைத்து பெட்ரோல் ஊத்தி எரிப்பு.

15. அமெரிக்காவில் அணு ஆயுத ரகசியத்தைத் திருடிய சீனர் கைது.

16. கொரோனா வைரஸால் சீனாவில் இறந்தவர் எண்ணிக்கை 2000 ஐக் கடந்தது.

மேலே உள்ள செய்திகள் அனைத்தும் ஒரு சிறு துளிகள் தான். ஒரு பக்கம் அநியாயங்களும் அக்கிரமங்களும் நடந்தேறுகின்றன. இன்னொரு பக்கம் விபத்துக்களும் பேரழிவுகளும் நடக்கின்றன. இந்த இரண்டிற்க்கும் ஏதாவது இணைப்பு உண்டா ?

மிகவும் வேகமாகச் சுற்றும் பூமியில் இருந்து, காற்றில் பிராண வாயு அளவு வரை மனிதன் வாழ்வதற்க்குத் தேவையானவற்றை மிகத் துல்லியமாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு விநாடி இந்த பூமி நிலைகுலைந்தால், இங்கிருக்கும் அனைத்து உயிர்களும் மாண்டு போகும். இதுவே இதற்கு சாட்சி. இவ்வளவு துல்லியமாக காரியங்கள் நடக்கும் இந்த பூமியில், அநியாயமும் அக்கிரமும் செய்பவர்களுக்குத் தண்டனை கிடைக்காமலா போய்விடும்? அவர்கள் தப்பி விட முடியுமா?

மேலே உள்ள செய்திகளில் ஒற்றைப்படை எண்களில் இருக்கும் செய்திகளைப் பாருங்கள். அவை அனைத்தும் அநியாயமும் அக்கிரமும் செய்யும் செய்திகளாக இருக்கும். இரட்டைப் படை எண்களில் உள்ள செய்திகளைப் பாருங்கள். அந்த குற்றங்களுக்கு உரிய தண்டனைகளை நிறைவேற்றும் செய்திகளாக இருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டும் வேறு வேறு நிகழ்வுகள் போலத் தான் இருக்கும். ஆனால் இவற்றிற்க்கு தொடர்பு இருக்கிறதா என்றால், நம் சமயங்கள் தொடர்பு இருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாம் தான் பொறுப்பு. அது நம்மைத் திருப்பி வந்து தாக்கும். இதற்காகத் தான் நாம் ஒவ்வொருவருக்கும் வினை கணக்கு ஒன்று உண்டு. நீங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பது போல, இந்த கணக்குகளை எல்லோருக்கும் வைத்து பராமரிப்பவர் தர்மத்தை நிலைநாட்டும் வேலையைச் செய்யும் எமதர்மராஜன் ஆவார். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரே விடயம் என்னவென்றால் ஒவ்வொரு வினைக்கான பலன்களை எப்போது திருப்பிக் கொடுப்பது என்பது தான். அது எப்போது திரும்பி வரும்? அது உங்களுக்கு உரிய காலத்தில் தான் திருப்பிக் கொடுக்கப்படும். உங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிற விதியை நீங்கள் கழித்துக் கொண்டிருக்கும் போது, புதிய வினைகளின் பலனை இதே பிறவில் பின்னரோ அல்லது அடுத்த பிறவியிலோ அல்லது பல பிறவிகள் கழித்தோ தான் கொடுக்கப்படும். அதற்கு என்று உரிய நேரம் காலம் சூழல் வரும் போது தான் கொடுக்கப்படும். இதனால் தான் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளுக்கு கூட தீவினைகள் வந்து தீண்டுகின்றன. இந்த பிறவியில் பல உயிர்களைக் கொலை செய்பவன் இன்னொரு பிறவியில் இரண்டு வயதாகும் போது கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து மாண்டு போகிறான்.

ஆகவே, அநியாயமும் அக்கிரமும் செய்பவன் நன்றாக வாழ்வது போன்ற ஒரு மாயத் தோற்றம் நமக்குத் தெரிந்தாலும், அவன் ஒரு நாள் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அவன் தப்ப இயலாது. அந்த தண்டனைகள் இந்த உலகிலும் கொடுக்கப்படலாம், அல்லது நம் புராணங்கள் சொல்வது போல வேறு ஒரு உலகிலும் கொடுக்கப்படலாம். இதனால் தான், நம் சமயமும் பண்பாடும் பிறரை இம்சித்து வாழ்வதை முற்றிலும் ஒழிக்கச் சொல்கின்றன. அடிப்படை தர்மம் என்பதே பிறரை அதாவது எந்த ஒரு உயிரையும் இம்சிக்காமல் வாழ்வது தான்.

இந்த துன்பங்களிடம் சிக்காமல் தப்பித்து வாழ்வதற்க்காக நம் முன்னோர்கள் வரையறுத்தது தான் அடிப்படை ஒழுக்கம். சுய மரியாதை என்ற பெயரில் ஒழுக்கத்தை மீறினால், அதனால் வரக்கூடிய துன்பங்களை நாம் தான் அனுபவித்தாக வேண்டும். இது திண்ணம். ஒழுக்கம் என்பது நமக்கு நாமே போடும் பாதுகாப்பு வேலி. அதைத் தாண்டிச் சென்றால் துன்பங்கள் தீண்டும்.

பிறரது உழைப்பைச் சுரண்டி திருடிப் பிழைத்தால், பிறவற்றை துளைத்துச் செல்லும் கிருமிகள் மூலமாக பாவிகள் துன்புறுத்தப்படுவர் என்று இதை கிருமிபோஜனமாக கருட புராணம் சொல்கிறது. [மேலே 15,16 குற்றமும் தண்டனையும்]. கருட புராணத்தில் என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலே கொடுக்கப்பட்ட இன்றைய நிகழ்வுகள் இதை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது. தாமிஸிர நரகம்: [1,2], அநித்தாமிஸ்ர நரகம்: [3,4], ரௌரவ நரகம்: [5,6], கும்பிபாகம்: [7,8], காலகுத்திரம்: [9,10], அந்தகூபம்: [11,12], அக்னிகுண்டம்: [13,14], கிருமிபோஜனம்: [15,16].

இந்த உலகிலும் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம், அல்லது வேறு பாதாள உலகிலும் நிறைவேற்றப்படலாம். வேறு உலகில் அந்தந்த தண்டனைகளை அனுபவிப்பதற்க்கு ஏற்றார்போல உடல்கள் கொடுக்கப்படும். இவற்றிலிருந்து ஒன்று மட்டும் திண்ணம். தப்பு செய்பவர்கள் தப்பிக்க முடியாது, தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். பாவ மன்னிப்பு கிடையாது.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *