சனிப் பிரதோஷத்தின் மகிமை. சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசனம் செய்வோம் 5/5 (2)

சனிப் பிரதோஷத்தின் மகிமை. சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசனம் செய்வோம்

தினமும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அத்தகைய வாய்ப்பைப் பெற்றோர்கள், மிகவும் பாக்கியசாலிகள். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஔவையார் வாக்கு. பிரதோஷ காலங்களில் சிவாலயம் சென்று வழிபடுவது இன்னும் சிறப்பாகும். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் எனப்படும். தேய்பிறை சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் எனப்படும்.

*** பிரதோஷ வழிபாடு ***

திரயோதசி திதி என்பது நிறைமதி மற்றும் புதுமதி தினத்திலிருந்து பதிமூன்றாம் நாளாகும். இந்த தினத்தில் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். மிருத சஞ்சீவினி மந்திரத்திற்க்கு இணையான, நீண்ட ஆயுளைத் தர வல்ல, இறந்தவர்களை மீண்டும் உயிருடன் எழுப்ப வல்ல கடலுக்கு அடியில் இருக்கும் அமிர்தத்தை எடுக்க முயன்றனர் தேவர்களும் அசுரர்களும். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறு போல நாணாக்கி, பாற்கடலைக் கடைந்தார்கள். கடலில் இருந்து பல பொருட்கள் வந்தன. பின்னர் ஆலகால விடம் என்று சொல்லக்கூடிய கொடிய விடம் வந்தது. வாசுகி பாம்பும், கடைவதைப் பொறுக்க முடியாமல் விடத்தைக் கக்கியது. எல்லாவற்றையும் அழிக்க வல்ல கொடிய விடத்தைக் கண்டு அனைவரும் ஓடினர். தேவர்கள் அனைவரும் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களை ஆலகால விடத்திலிருந்து காக்குமாறு வேண்டிக் கொண்டனர்.

*** திருநீலகண்டம் ***

இந்த ஆலகால விடத்தை எதிர் கொள்ளும் சக்தி இறைவனாகி சிவபெருமான் ஒருவனுக்குத் தான் உண்டு. வேறு எவருக்கும் அந்த சக்தி இல்லை. ஆகையால், சிவபெருமானிடம் அனைவரும் சென்று தங்களைக் காக்குமாறு வேண்டிக் கொண்டனர். சிவபெருமானுக்கு அருகிலேயே இருந்து திருத்தொண்டு செய்து வரும் சுந்தரரை அந்த விடத்தை எடுத்து வரும் படி கட்டளையிட்டார் சிவபெருமான். சுந்தரரோ, அத்தனை விடத்தையும் ஒரு சிறு பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொடுத்தார். அந்த விட பந்தை சிவபெருமான் வாங்கி வாயில் போட்டு உண்டார். இதைக் கண்டு பயந்து போன பார்வதி தேவியார், அகில உலகங்களையும் விடத்திடமிருந்து காக்கும் பொருட்டு,  அந்த விடமானது கழுத்திலேயே இருக்கும் வண்ணம், சிவபெருமானின் கழுத்தை சற்றே இறுக்கிப் பிடித்தார். இதனால், சிவபெருமானின் கண்டத்திலேயே அந்த நஞ்சு தங்கி, அகில உலகங்களையும் காத்தது. சிவபெருமானின் கழுத்து நீல நிறத்தில் மாறியதால், திருநீலகண்டம் என்ற பெயரையும் சிவபெருமான் பெற்றார். பின்னர் சிவபெருமான் தாண்டவம் ஆடினார்.

சிவபெருமான் அன்று உலகங்களைக் காத்திராவிடில், இன்று இந்த பூமியும், நாமும் உயிரோடு இல்லை. சிவபெருமானுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க நாம் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறோம். அவ்வாறு நன்றி சொல்லவே பிரதோஷ வழிபாடு செய்கிறோம்.

*** சனிப் பிரதோஷ மகிமை ***

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் எனப்படும். இந்த பிரதோஷ காலத்திலே சிவபெருமான் நடனமாடுவதாக ஐதீகம். இதனால், இதைக் காண அனைத்து தேவர்களும் ரிஷிகளும் ஆலயம் வருவார்கள். இந்த பிரதோஷ வேளையிலே, நாமும் சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசித்தால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம். தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம், சனி மகா பிரதோஷம் எனப்படும்.

ஒவ்வொருவர் ஜாதகத்திலும், அதாவது வாழ்கை அமைப்பிலும் குறைந்தது நான்கு தோஷங்களாவது இருக்கும். இந்த தோஷங்கள் அனைத்தும் சனிப் பிரதோஷ வழிபாடு செய்வதால் நீங்கி விடும்.

சனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோட்சனம்

என்பது பழமொழி. சிவபெருமானையும் நந்தியம்பெருமானையும் வணங்க, நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும். பிரதோஷ வழிபாட்டால், அனைத்து தோஷங்களும் பாவங்களும் நீங்குவது மட்டுமின்றி, சகல நன்மைகளும் உண்டாகும். பொதுவாக பிரதோஷ காலத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்தால், ஓராண்டு சிவாலயம் சென்று வழிபட்ட பலன்கள் கிடைக்கும். சனிப் பிரதோஷம் அன்று வழிபடுவதால், ஐந்து ஆண்டுகள் வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.

ஏழரை சனி, கண்ட சனி, அட்டம சனி என்று சனியினால் ஏற்படும் தொல்லைகள் குறைந்து நீங்கும். ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியும், பன்னிரு திருமுறைகளை ஓதியும், சகல வாத்தியங்களுடன் இணைந்து சிவபெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளும் வந்து சேரும். சிவபெருமானிடம் நேரடியாக உபதேசம் பெற்றவர் நந்தியம்பெருமான். இவர் 64 கலைகளுக்கும் குருவாக விளங்குகிறார். வேத ஆகமங்களை நமக்கு அருளிச் செய்வதால், நமக்கு சந்தேகங்கள் நீங்கி, ஞானம் பெருகும். பசும்பால், சங்குப்பூ, வில்வ இலைகள் ஆகியவை கொண்டு வழிபட்டால், எல்லா சாபங்களும் நீங்கும். பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்துப் பின்னர், வில்வம், அரளி, தாமரை, மல்லிகை ஆகிய மலர்களால் அருச்சனை செய்து தீபாராதனை நடைபெறும்.

சனிப்பிரதோஷம் அன்று மறவாமல் சிவாலயம் செல்வோம். அபிஷேக பொருட்களை அளித்தும், அபிஷேகம் செய்தும், ஐந்தெழுத்து, திருமுறைகள் ஓதியும் வழிபடுவோம். மிகுந்த திருவருளோடு பாவங்கள் நீங்கப் பெற்று, சகல நன்மைகளைப் பெறுவோம். திருச்சிற்றம்பலம்.

 

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *