சமயக் கல்வியின் இன்றியமையாமை

சமயக் கல்வியின் இன்றியமையாமை No ratings yet.

இன்று, ஒரு வானஊர்தியை எடுத்துக் கொண்டு உலகை சுற்றி வந்தால்….

மலேசியாவில் பத்துகுகை முருகன் கோவில் உள்ளது. சிங்கப்பூரில் கல்லாங் சிவன் கோவில் உள்ளது. பிரான்ஸில் சிவன் கோவில்கள் இருக்கிறது, ஆஸ்திரேலியாவில் இருக்கிறது, அமெரிக்காவில் இருக்கிறது, இங்கிலாந்தில் இருக்கிறது, உலகம் முழுவதும் நம் சைவ கோவில்கள் இருக்கின்றன இன்று. கோவில்கள் இல்லாத நாடே இல்லை எனலாம் என்னும் அளவிற்கு நம் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இது எவ்வாறு சாத்தியமாயிற்று ? இவற்றில் பெரும்பான்மையான கோவில்கள் இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வுலகில் முதன்முதலில் இறைவனைப் பற்றிய சிந்தனை செய்து, அவனருளாளே அவனைத் துதித்து, அவனை அறிந்து, இந்த உலகம் முழுவதும் மக்களுக்கு அறிய வைத்தது சைவ சமயமே. சைவ சமயம் பன்நெடுங்காலம் உலகம் முழுவதும் இருந்தது. இதற்கு சான்றுகளே இன்று பல்வேறு நாடுகளின் பூமிக்கடியில் இருந்து சிவலிங்கமும் சிவன் கோவிலும் வெளிவருவதே நம் கண் முன்னர் நிற்கும் வாழும் சான்றுகள். பின்னர் பல அரசியல் காரணமாக சில பகுதிகளில் வெவ்வேறு மதங்கள் நிறுவப்பட்டன. ஆனால், கடந்த சில நூறாண்டுகளில், மீண்டும் சைவ கோவில்கள் உலகெங்கும் புதுமையாக நிறுவப்பட்டு வருவதையே நாம் பார்க்கிறோம்.
இலங்கையில் இனப்பிரச்சனை காரணமாக உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் இது சாத்தியமாயிற்று.

இலங்கைத் தமிழர்கள் நம் சைவ சமயத்தில் மிகவும் பிடிப்பாக அழுத்தமாக இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் 7 அரை கோடி தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம் ? சமயக்கல்வி ஒன்றே பெரும் வித்தியாசம். இந்த சமயக்கல்வியே இலங்கைத் தமிழர்களை நம் சமயமும் மொழியும் கலாசாரமும் உலகெங்கும் பரவ உதவி செய்தது என்றால் அது மிகையில்லை. இலங்கையில் பௌத்த அரசு இருப்பினும் தமிழர்களுக்கு தமிழ் சமய பாடங்களே நடத்தப்படுகிறது. தமிழ்ப் பாடசாலைகளில் சைவப்பாடம் கற்பிக்கப்படுகிறது. சமயகல்வி பெற்ற எவரையும் மதம் மாற்ற இயலாது. நம் சமயத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்தவர் எவரும் மதம் மாற மாட்டார்கள்.

கல்வியின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துவதை பாருங்கள்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

அதிகாரம்: கல்வி, குறள் 393.

கல்வி கற்காதவர் கண்ணில்லாத குருடர் என்றே சாடுகிறார் வள்ளுவர். கல்வி ஒருவருக்கு அவ்வளவு அவசியமானது. அந்த கல்வியின் அவசியத்தை நீங்கள் உணர வேண்டுமாயின், ஒரு நாள் இந்த பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் கண்களை நல்ல துணியைக் கொண்டு இறுக கட்டிக் கொண்டு ஒரே ஒரு நாள் முழுவதும் வாழ்ந்து பாருங்கள். நிஜமாகவே முயற்சி செய்து பாருங்கள். அப்போது தான் உங்கள் கண்களின் அருமை உங்களுக்குத் தெரியும். கல்வி இல்லாதவனுடைய வாழ்வும் குருடனின் வாழ்கை போலவே இருக்கும்.

சமயக்கல்வியின் பெருமை

அப்போ சமயக்கல்வி ? நம் ஆன்மா கடைத்தேற, இறைவன் திருவருள் பெற, இப்பிறப்பில் இன்பமும், மறுபிறப்பு இல்லாமல் இறைவன் திருவடி இன்பம் அனுபவிக்கவும் கண்போல நமக்கு வழிகாட்டுவது சமயக்கல்வியே. எப்பிறப்பிறப்பிற்கும் நமக்கு எப்போதும் இன்பம் தருவிக்கும் வழியையும், பிறப்பு சுழலில் இருந்து விடுபட்டு பூரண இன்மான இறைவன் திருவடி நீழலை எய்தவும் வழிகாட்டுவது சமயகல்வியே.

கல்வி இல்லாதவன் கண் இல்லாதவன்.
சமயகல்வி இல்லாதவன் உயிரே இல்லாதவன்.

“சமயகல்வி இல்லாதவன் தன் பிறப்பின் உண்மையையும் நோக்கத்தையும் அறியாதவனாகிறான்”

Please rate this