தமிழும் ஆரியமும் 5/5 (2)

தமிழும் ஆரியமும் – ஐயா, திரு கோமல் கா. சேகர் அவர்கள்

ஓம்
சிவ சிவ !
===
தமிழும் ஆரியமும் .
=======
முதலில் சிவத்தை அடைய வேண்டும்; அல்லது அவரது அன்பைப் பெற்றுத் தீதகன்று நல் வாழ்வினை இப் பிறவியிலேயே பெற வேண்டும் என விழைவோர்  சாதி, குல, இன, மொழி, ஏழை, செல்வந்தன், வலியவன் எளியவன் என்ற பாகுபாட்டு மனப்பாங்குகளில் இருந்து, உடைத்துக் கொண்டு வெளி வரவேண்டும் !

ஒரு அன்பர் தமிழின் தொன்மை பற்றிக் கடுமையாக உழைத்துக் கால ஆராய்ச்சியெல்லாம் செய்து,  நேரத்தை வீணடித்து பதிவிட்டிருந்தார் . அந்தக் கால எல்லைகள்நம்பகத் தன்மையுடையன அல்ல !  இறைவன் எப்போது உலகத்தைப் படைத்தாரோ,  அன்றே நம் செந்தமிழும், ஆரியமும் தோற்றிவிக்கப்பட்டுவிட்டன என அறிக ! எல்லா மொழிகளும் இறைவனன்றிப் படைக்கப்பட்டன அல்ல ! இறைவன் விரும்பி செவி சாய்க்கும் மொழிகள் செந்தமிழும்  ஆரியமும் ! ஆரியம் எந்தப் பகுதிக்கோ ,எந்த இனத்துக்கோ சொந்தம் என ஒதுக்கி , அதன் மேல் சைவர்களுக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுத்தல் அறிவுடைமையல்ல ! எனக்கு ஆரியம் தெரியாது ! திருமுறைகள் , சாத்திரங்களைக் கற்ற அளவில் சுமார் ஆயிரத்துக்கும் கீழ் ஆரியக் கலைச் சொற் பதங்களுக்கு மட்டுமே பொருள் அறிவேன் ! திருமுறைகளையும் , தமிழ் வழியில் சைவ சாத்திரங்களையும் கற்று ,சிந்தித்துத் தெளிந்து, உணர்ந்து ,இறைவன் மீது அன்பு பூண்டாலே போதும் என்ற கொள்கையே என் கொள்கை !

ஆரியமும் வழிபடும் மொழியே ! அதை வெறுக்கக் காரணம் என்ன ?

அதை ஏன் சில குறிப்பிட்டக் குல சாதியினரிடம் சேர்த்து அடையாளப் படுத்தி ,நம் உரிமையை இழக்க வேண்டும் ? இத்தகைய நிலை நம் ஆச்சாரியர்கள் கொண்ட கொள்கைக்கு , மாறானது ! இப்படிப் பட்டப் பொருந்தா எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் பலர் இறையருளை இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு விடுவர் ! திருமுறைகளிலும் சிறிதளவு , ஆரிய சொற்பதங்கள் கலந்தே உள்ளன ! சைவ சாத்திரங்களிலும் பெருமளவு ஆரியம் கலந்தே உள்ளது ! நம் ஆச்சாரியார்கள் எவரும் ஆரியம் கற்றால் தான் இறைவனை அடைய முடியும் என நம்மை ஆற்றுப் படுத்த வில்லையே ! ஏனெனில் அது இறைவனது உள்ளக் கிடைக்கை இல்லை ! அவர்கள் தம்மைத் தமிழோடு அடையாளப் படுத்தி அக மகிழ்பவர்கள் ! ஆனால் வட சொல்லையும் மதிப்பவர்கள்.! ஏனெனில் அதுவும் இறைவனுக்கு ஏற்புடைய
மொழி என்பதால் !

இதுதான் உண்மை நிலை !
இதை மறைத்து அறியா மக்களை இருளில் தள்ளி ஒருக் கூட்டம் தம் வாழ்வை வளப்படுத்தி வருவதே உண்மை !  இதைப் படிக்கும் எவரும் அறியாக் கருத்தை நான் இங்குக் கூறவில்லை ! நமது ஞானாசிரியர்கள் செந்தமிழும், வட மொழியும் சம அளவில் இறைவனுக்கு ஏற்புடைய மொழியே என அருளிய மெய்த் திரு வாக்குகளை இங்குப் பதிவிடுகிறேன் !

படித்து மனத்திருத்தி , சிந்தித்துத் தெளிக !
திருஞான சம்பந்தப் பெருமான் அருளியவை ~
‘” தமிழ் சொலும் வட சொலும்
தாள் நிழல் சேர “~ 01.77.04

‘”தென் சொல் விஞ்சமர் வட சொல் திசை மொழி எழில் நரம்பு எடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூர்””
~02.73.05

“ஆரியத்தொடு செந்தமிழ்ப்
பயன் அறிகிலா அந்தகர் “”
03.39.04

திருநாவுக்கரசு பெருமான் அருளியவை !
“”ஆரியம் தமிழோடு இசையானவன்” ”~05.18-03

‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் “‘~ 06-23.05

“முத் தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் “~06-23-09

“”செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை ‘”~06-46-10

“வட மொழியும் தென்தமிழும்
மறைகள் நான்கும் ஆனவன் காண் “”~06-87-01

சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது
“அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் விரவிய வேத ஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப ”( கயிலைக்கு ஏகும் போது
கேட்ட மொழிகள் )07-100-08

திருமூலர் அருளியவை

“ஆரியமும் தமிழும் உடனே
சொலிக் காரிகையார்க்குக்
கருணை செய்தானே ” திருமந்திரம் / ஆகமச் சிறப்பு -08

“தமிழ்ச் சொல் வட சொல் எனும் இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே ‘” ௸ ஆகமச் சிறப்பு -09
“”என்னை நன்றாக இறைவன்
படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே ”
~௸ பாயிரம் 20
சிவ பெருமானே தமிழ் ; தமிழன் / சிவ பெருமானே
ஆரியம் ; ஆரியன் / சிவ பெருமானே நான் மறைகளும்
ஆகமங்களும் / சிவ பெருமானே சைவத் திருமுறைகளும் ,
சைவத் தமிழ்
சாத்திரங்களும் / ஆரியமும்
தமிழும் சிவ பெருமானின் இரு கண்களுக்கு ஒப்பானவை ! இரு மொழிகளுமே சிவ பரம் பொருளை உணர்த்த வல்லவைகளே ! இது நம் அருளானர்கள் வாக்குகள் ! மாதவம் செய்த தென் திசையில் பிறந்த நாம் ,சைவத் திருமுறைகளையும் ,சாத்திர புராண நூல்களையும் ஐயம் திரிபுஅறக் கற்றாலே போதும் ! நம் பெருமானை எளிதில் எய்தி விடலாம்.  பிற மொழியைத் தாழ்த்தி நம் செந்தமிழை உயர்த்த வேண்டிய அவசியமில்லை ! மக்களே ஆலய பூசைக்கு வட மொழியை ஏற்கும் போது நமக்கு என்ன ?  எத்தனை பேர் தமிழில் அருச்சனை செய்யக் கோருகிறோம் ?  தமிழ் மொழியின் தொன்மைக்கு ஏன் நம்பத் தகா ஆதாரங்களை எல்லாம் நாட வேண்டும். ? சேக்கிழார் வழி இறைவனார் அருளிய இப் பாடலை உற்று நோக்குக !

~ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய /
ஞான முதல் நான்கும் அலர் நல் திருமந்திர மாலை / பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்று ஆகப் பரம் பொருளாம் / ஏன எயிறு அணிந்தாரை “ஒன்றவன்தான் ” என எடுத்து ~~திருத் தொண்டர் புராணம் / திரு மூலநாயனார் புராணம் |~ பாடல் எண் 26

இப் புவியில் 3000 ஆண்டுகள் வாழ்ந்து ,ஆண்டுக்கு ஒன்றாக
ஒரு பாடல் வீதம் திருமூலர் அருளியதாக உறுதி செய்யப் பட்டுள்ளது. திருமூலர் இப் புவியில் இறுதியாக 1700 ஆண்டுகளூக்கு முன் வாழ்ந்ததாக் கணிக்கிறோம் !

“சிவ சிவ என்கிலர் தீவினையாளர்” என்பது போன்ற மிக எளிமையானப் பாடல்களை இலக்கணத்தோடு ஒத்து  இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் பாடியிருக்கிறார் எனின் ,அந்த அளவுக்கு செம்மை மொழியாக ஆக ,அதற்கு முன் எத்தனை காலத்துக்கு முன் நம் மொழி தோன்றி இருக்க முடியும் ! கால எல்லையை எவரும் அறுதியிட்டுச் சிந்தித்தனரா ? சேரமான் பெருமாள் நாயனார் தமிழ் மொழியில் தம் முன் பாடியத் திருக்கயிலை ஞான உலாவைப் பெருமான் செவி மடுத்து இன்புற வில்லையா ?
திருக்கயிலையே தமிழும் ஆரியமும் வழங்கும் புனிதத் தலம் எனபதை சிந்திக்க வேண்டாமா ?  திருமூலர், தான் , தம் வரலாறு/ பாயிரம் பாடல் 15 -ல் “சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் “, என தாம் இவற்றை உணர்ந்ததைக் குறிப்பிடுகிறார் !  இவர் நந்தியிடம் கற்ற காலம் என்ன ? நந்திக்குத் தமிழை கற்பித்தது எப்போது ? ஆகவே உலகத் தோற்றத்தின் போதே ,சுத்த மாயைத் தலங்களில் வாக்குகள் எழுந்த போதே தமிழும் , ஆரியமும் இறைவனால் வகுக்கப் பட்டது என அறிக ! இறைவனால் அருளப் பட்டதாலேயே தமிழ் திருமுறைகளாக வெளிப்பட்டு இவற்றிலேயே இறைவன் அட்ட மூர்த்தியாக விளங்கி நிற்றல் என்றப் பயனால் ,உணர்க !

ஆகவே தமிழ் இறை மொழி என ஓர்க !
ஆரியமும் இறைவனே பொருளாக நிற்கும் வேத ,ஆகமங்களைத் தாங்கி நிற்றலால் நம் ஆச்சாரியார்கள் அதனை சமமான இறை மொழியாக  மதித்தமையை ஓர்க ! ஆகவே மொழி பேதச் சிறுமையிலிருந்து வெளி வருக ! முதலில் தற்கால சமுதாயம் இறை மொழியான  நம் செந்தமிழை முற்றும் கற்றிருக்கிறோமா எனத் தன் ஆய்வு செய்வோம் !
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்பது தற்பெருமை பேசியதல்ல !

அசுத்த மாயையிலிருந்து பிரபஞ்சம் தோன்றும் முன் சுத்த மாயையிலிருந்து இறைவனால் தோற்றிவிக்கப் பட்ட இனிய மொழி நம் தமிழ் மொழி ! அதைப் பயின்று வாழ்ந்த தொன்மை உடையோர் நம் முன்னோர் !
உலகில் அனுபவிக்கும் இன்பங்களில் , தமிழ் மொழியை முற்றும் உணர்ந்து அனுபவிப்பதை விட ஒப்பது ஏதும் இல்லை ! இப் பெரும் பேற்றை இழந்து நிற்கும் , இக் காலத்தவர் உணர வேண்டும் !
~ கோமல் கா சேகர் / 9791232555 /25.02 17/மீள் பதிவு 23-01-20

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *