புண்ணிய சிவபூமியாய் திகழும் தென்சென்னை 3/5 (2)


தென்சென்னை – ஒரு புண்ணிய சிவபூமி

உலகின் மிகப் பெரிய ஞானிகள் எண்ணற்றவர் வாழ்ந்து செழித்தது நம் பாரத பூமி. ஞானத்தின் விளைநிலமாகவும் மனித வாழ்கை இனிதாக அமைவதற்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் வகுத்து கோடி கோடி கோடி உயிர்களை இன்பமாக வாழ வைத்தும், வைத்துக் கொண்டிருப்பதுமாகியது நம் புண்ணிய பாதர பூமி. இந்த பூமியில் விளைந்த ஞான முத்துக்ளும் கோவில்களும் உலகெங்கும் பரவி நின்றது என்று வரலாறு தெரிவிக்கிறது.  அத்தகைய புண்ணிய பாரத பூமியில் தமிழ்நாட்டின் தொண்டை மண்டலமும் சிவஞானம் விளைந்த பூமியாக திகழ்கிறது. தற்போதைய சென்னையின் தெற்கு பகுதியாகிய தென்சென்னை சித்தர்களின் இருப்பிடமாகவும், புண்ணிய சிவபூமியாகவும்  தொன்று தொட்டு நீண்ட நெடுங்காலமாகத் திகழ்ந்து வருகிறது. பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள சித்தர் மலையில் இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நம்பப்படுகிறது. சித்தர்களின் இருப்பிடமாக இருந்தமையாலேயே அருகிலுள்ள ஊர் சித்தார்பாக்கம் என்று பின்னாளில் அழைக்கப்பட்டு இன்று சித்தாலபாக்கமாக மருவி நிற்கிறது. சித்தர்கள் பக்கம் பக்கமாக இருந்தமையால் சித்தர் பக்கம் என்ற ஊர் இன்று சிட்லபாக்கமாக மருவி நிற்கிறது. இந்த சித்தர்களும் ஞானிகளும் சிவபூசை செய்ய பெரிய சோலையாகிய நந்தவனத்திற்குச் சென்று பூக்கள் பறித்து வந்ததால், இந்த ஊர் சோலையூர் என்று அழைக்கப்பெற்று, இன்று சேலையூராக மருவி நிற்கிறது. கபில முனிவர் பூசித்த தேணுபுரீஸ்வரர் அருகிலுள்ள மாடம்பாக்கத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். இதனருகிலேயே 18 சித்தர்களுக்கும் சித்தர் கோவில் உள்ளது. மாமுனி அகத்தியர் வழிபட்ட சிவலிங்கமாகிய அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் சித்தாலபாக்கத்தில் இருந்து அருள்புரிகிறார். தென்சென்னை முழுவதும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. இந்த மலையைச் சுற்றியுள்ள கோவில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முழுமதி மலைவலம்

இந்த சித்தர் மலையைச் சுற்றி ஒவ்வொரு முழுமதி (பௌர்ணமி) தோறும் மலைவலம் (கிரிவலம்) சில ஆண்டுகளாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த பகுதியில் இருக்கும் அனைவரும், மேலும் சென்னையில் உள்ளோரும், சென்னையைச் சுற்றியுள்ளோரும் தவறாமல் இந்த கோவில்களைச் சென்று தரிசனஞ்செய்து, நிறைமதி தோறும் மலைவலம் வந்தும் பிறப்பு இறப்பு அற்றவனாகிய மாபெரும் கருணைக்கடலாம் சிவபெருமானின் பேரருளைப் பெற்று துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழ்வீர்காள். தென்சென்னையாகிய இந்த புண்ணிய பூமியில் மீண்டும் ஆன்மீக அதிர்வுகள் எழுந்தருளட்டும். அனைத்து மக்களின் ஒற்றுமை சிறந்து ஓங்கட்டும். வறுமை, பஞ்சம் அனைத்தும் நீங்கி செல்வச்செழிப்போடு திகழட்டும்.

சித்தர்மலை மலைவல பாதையில் உள்ள கோவில்கள்

1. கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில், அரசன்கழனி
2. வரசக்தி விநாயகர் கோவில், இந்திராநகர், பெரும்பாக்கம்.
3. அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வைத்தீஸ்வரர் திருக்கோவில், நூக்கம்பாளையம்
4. பெரியபாளையத்தம்மன் கோவில், போலினேனி

சித்தர்மலை அருகில் உள்ள சில சிவன் கோவில்கள்

1. அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் – அகத்தியர் வழிபட்ட தலம் – சித்தாலபாக்கம். – சித்தாலபாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ளது.

2. ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஒட்டீஸ்வரர் திருக்கோவில், ஒட்டியம்பாக்கம்

3. தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர், மாடம்பாக்கம். கபில முனிவர் பசுவாக சிவபெருமானை வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழில் பாடல்பெற்ற தலம்.

4. ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோவில், பள்ளிக்கரணை – பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் வழிபட்ட தலம்.

5. கற்பகாம்பாள் உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோவில் (கங்கையம்மன் கோவில்), காரப்பாக்கம்.

6. சுவாமிநாத சுவாமி திருக்கோவில், கந்தாஸ்ரமம், கிழக்கு தாம்பரம்.

7. சந்திரசூடேசுவரர் திருக்கோவில், கோவிலஞ்சேரி

8. கைலாசநாதர் திருக்கோவில், அகரம்தென்

9. ஸ்ரீ முருகநாதேஸ்வரர் திருக்கோவில், மாம்பாக்கம்

10. சக்திபுரீஸ்வரர் கோவில், பொன்மார்-நாவலூர் சாலை

11. ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை பொழிச்சலீசுவரர் திருக்கோவில், அகரம்தென்

12. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், கீழ்க்கட்டளை

13. ஆழிகண்டேஸ்வரர் திருக்கோவில், ஒக்கியம் துரைப்பாக்கம்.

14. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், நீலாங்கரை

15. வேதபுரீஸ்வரர் கோவில், பெருங்குடி

16. மரகதஈஸ்வரர் திருக்கோவில், சுண்ணாம்புகுளத்தூர்.

17. அமிர்தகடேஸ்வரர், அக்னீஸ்வரர், அகத்தீஸ்வரர் – மூன்று கோவில்கள், வேங்கடமங்கலம்.

18. நாவலூர் சிவாலயம், நாவலூர், OMR

சென்னையில் உள்ள சிவாலயங்களை கூகுள் வரைபடத்தில் குறிக்கப் பெற்ற சுட்டி.

சிவாலயம் செல்லுங்கள். திருமுறை ஓதுங்கள். சங்கநாதம் முழங்கிடுங்கள். எல்லாத் துன்பங்களும் விலகி இனிமையான வாழ்வு பெற்று சிவகதி பெறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

திருமுறை 1.1 பிரமபுரம் தோடுடைய செவியன் 4/5 (1)

பன்னிரு திருமுறை
பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்
1.1 – பிரமபுரம் – தோடுடைய செவியன் – Sirkazhi

padhigam 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி )

1.1 தோடுடைய செவியன் Verses: 1.1 – thOdudaiya seviyan – pdf : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHOE90a3pXNkktSHc/view?usp=sharing

Discussion audio – Part-1: 01_001 01 thOdudaiya seviyan – Part-1 – 2015-05-30 mp3 : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHVkNkMFluMjJNYTA/view?usp=sharing
Discussion audio – Part-2: 01_001 02-06 thOdudaiya seviyan – Part-2 – 2015-06-06 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHTG5aMUpqMjk3cFE/view?usp=sharing
Discussion audio – Part-3: 01_001 07-11 thOdudaiya seviyan – Part-3 – 2015-06-20: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHWmQ2NWFfNDQ5OVU/view?usp=sharing

********
The discussion is available on YouTube:
All 3 parts: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE_9VE7jolvpFw1_7DdFwfNo
********

தோடுடைய செவியன்” பதிகம் – (திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார்) – thOdudaiya seviyan padhigam – sung by Thiruththani Swaminathan Odhuvar: http://www.shaivam.org/gallery/audio/tis-tns-nalamiku-padhikangal.htm (The direct link is: http://www.shaivam.org/gallery/audio/thiruthani-swaminathan/nalamiku-padhikangal/tis-tns-np-01-thodudaiya-seviyan.mp3 )

You can find the audio of the first and last song of this padhigam – தோடுடைய செவியன் (Thodudaiya seviyan) – sung by Pondicherry Sambandam gurukkal:
http://www.shaivam.org/gallery/audio/tis-smbnd-grkl-sam-devaram.htm (direct link: http://www.shaivam.org/gallery/audio/sambanda-gurukkal/tis-sg-smbdr-dvrm-01-thodudaiya-seviyan.mp3 )

If you need English translation for this padhigam – 1.1 – thOdudaiya seviyan
– by V. M. Subramanya Ayyar – at IFP site: by V. M. Subramanya Ayyar – at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_001.HTM

சீகாழி (சீர்காழி) (பிரமபுரம்) – Sirkazhi – piramapuram temple – பிரம்மபுரீஸ்வரர் கோயில் தகவல்கள் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=495

V. Subramanian
==================== ===============

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி – ( உமாபதி சிவம் )

பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்,
வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடையெடுத்த
பொறியுறு பொற்கொடி யெம்பெரு மானமர் பொன்னுலகே. – (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி)

பதிகம் 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி ) ( பண் : நட்டபாடை )

பதிக வரலாறு:

சோழ நாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருகும் கவுணிய குலத்தில், சிவதீட்சை பெற்ற வேதியர்குல திலகராகிய சிவபாத இருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத் தோங்க, மிகுசைவத் துறைவிளங்க, சித்திரைமாதத்துத் திருவாதிரைத் திருநாளிலே திருமகனார் ஒருவர் தோன்றினார். இவருக்கு மூன்றாமாண்டு நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாத இருதயர் உடன் வந்த சிறுவரைக் குளக்கரையில் உட்கார வைத்து, நீருள்மூழ்கி `அகமர்ஷணம்` என்னும் திருமந்திரத்தைச் செபித்துக் கொண்டிருந்தார். அங்ஙனம் அவர் மூழ்கியதும் உடல் தந்தையைக் காணாது சிறிதும் தனித்திரார் என்ற வியாசத்தால் (வியாஜம் – Pretext, pretence;) முழுமுதல்தந்தையாகிய சிவபெருமானது திருவடிகளை முறைப்படி வழிபட்ட பண்டையுணர்வு மூண்டெழ, பிள்ளையார் திருத்தோணிச்சிகரம் பார்த்து, `அம்மே! அப்பா!` என அழுதார். இவ்வொலி திருத்தோணி மலையில் வீற்றிருக்கும் அம்மையப்பர் திருச்செவியில் சென்று சேர்ந்தது. முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னி, அவர்க்கருள் புரிவதற்காகப் பெருமான் பொருவிடைமேல் அம்மையுடன் எழுந்தருளினார். எவ்வுலகும் தொழநின்ற மலைக்கொடியைப் பார்த்து, `துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத்து ஊட்டுக` என ஆணை தந்தார். அப்படியே அம்மையாரும் கறந்தருளி, எண்ணரிய சிவஞானத்தின்னமுதம் குழைத்து `உண்அடிசில்` என ஊட்டினார்; கண்ணீரைத் துடைத்தார்; அழுகையை அகற்றினார். உயிர்த் தந்தையும் தாயுமாகிய இவர்களே திருமேனி தாங்கி வெளிப்பட்டுவந்து இங்ஙனம் அருளப் பெற்றமையால் இவர் ஆளுடைய பிள்ளையார் எனவும் தேவர் முதலானோர்க்கும் அறிய முடியாத சிவஞானம் சம்பந்திக்கப் பெற்றமையால் திருஞானசம்பந்தர் எனவும் அழைக்கப் பெறுவாராயினார். செப முடித்து நீராடிக் கரையேறிய சிவபாத இருதயர் கடை வாய் வழிந்து கிடக்கின்ற பாலைக் கண்டு “நீ யார் தந்த பாலை உண்டாய்? எச்சில் மயங்கிட உனக்கு இது இட்டாரைக் காட்டு` என்று சிறுகோல் கொண்டு ஓச்சி உரப்பினார். குழந்தை யாகிய பிள்ளையார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்க வலக் கையைச் சிரத்தின் மேலுயர்த்தி, வானிடமெல்லாம் பரவி நிற்கும் ஒளியோடு விடையின்மீது பண்ணிறைந்த அருமறைகள் பணிந் தேத்த, பரமகருணையின் வடிவாகிய பராசக்தியோடு நின்ற அருள் வண்ணப் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உளம் நிறைந்து வழிந்த உயர் ஞானத்திருமொழியால் இத்திருப் பதிகத்தைப் பாடியருளினார்.

#1970 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 72
சீர்மறையோர் சிவபாத விருதயருஞ் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யு நியமங்கண் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார் தமைநோக்கி
“யாரளித்த பாலடிசி லுண்டதுநீ?” யெனவெகுளா,

#1971 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 73
“எச்சின்மயங் கிடவுனக்கீ திட்டாரைக் காட்”டென்று
கைச்சிறிய தொருமாறு கொண்டோச்சக், காலெடுத்தே
யச்சிறிய பெருந்தகையா ரானந்தக் கண்டுளிபெய்
துச்சியினி லெடுத்தருளு மொருதிருக்கை விரற்சுட்டி,
(உச்சியினில் —- பாடபேதம் – உச்சியின்மேல்?)

#1972 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 74
விண்ணிறைந்த பெருகொளியால் விளங்குமழ விடைமேலே
பண்ணிறைந்த வருமறைகள் பணிந்தேத்தப் பாவையுடன்
எண்ணிறைந்த கருணையினா னின்றாரை யெதிர்காட்டி
யுண்ணிறைந்து பொழிந்தெழுந்த வுயர்ஞானத் திருமொழியால்,

#1973 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 75
எல்லையிலா மறைமுதன்மெய் யுடனெடுத்த வெழுதுமறை
மல்லனெடுந் தமிழாலிம் மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
பல்லுயிருங் களிகூரத் தம்பாடல் பரமர்பாற்
செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து,

#1974 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 76
செம்மைபெற வெடுத்ததிருத் “தோடுடைய செவிய”னெனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுர மேவினார்
தம்மையடை யாளங்க ளுடன்சாற்றித் தாதையார்க்
“கெம்மையிது செய்தபிரா னிவனன்றே” யெனவிசைத்தார்.
————–

பதிகம் 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி ) ( பண் : நட்டபாடை )

பாடல் எண் : 1
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 2
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 3
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 4
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 5
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 6
மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 7
சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 8
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 9
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 10
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 11
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
——————-

1.1 Padhigam songs 8, 9, 10, 11 – explanation in periyapurANam:

#1975 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 77
மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற்
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளு மெனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்க னெடுத்துமுறிந் திசைபாட
வண்ணலவற் கருள்புரிந்த வாக்கப்பா டருள்செய்தார்.

#1976 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 78
தொழுவார்க்கே யருளுவது சிவபெருமா னெனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும் பறவையுமா யெய்தாமை
விழுவார்க ளஞ்செழுத்துந் துதித்துய்ந்த படிவிரித்தார்.

#1977 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 79
வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை
நாதர்நெறி யறிந்துய்யார் தம்மிலே, நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே யெனமொழிந்தா ரெங்கள்பிரான் சம்பந்தர்.
(நாதன்நெறி — பாடபேதம் – நாதர்நெறி?)

#1978 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 80
திருப்பதிக நிறைவித்துத் திருக்கடைக்காப் புச்சாத்தி
யிருக்குமொழிப் பிள்ளையா ரெதிர்தொழுது நின்றருள,
வருட்கருணைத் திருவாள னாரருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும் பினிலார்த்துப் பிரசமலர் மழைபொழிந்தார்.
============================= ============================

பதம் பிரித்த பின்:

பூழியர்-கோன் வெப்பு ஒழித்த புகலியர்-கோன் கழல் போற்றி;
ஆழிமிசைக் கல்-மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி;
வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி;
ஊழி-மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி – ( உமாபதி சிவம் )

பெறுவது நிச்சயம், அஞ்சல் நெஞ்சே; பிரமா-புரத்து
மறு அறு பொற்கழல் ஞானசம்பந்தனை வாழ்த்துதலால்,
வெறி உறு கொன்றை, மறி உறு செங்கை, விடை எடுத்த
பொறி உறு பொற்கொடி எம்பெருமான் அமர் பொன்-உலகே. – (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி)

————

#1970 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 72
சீர்மறையோர் சிவ-பாத இருதயரும் சிறு-பொழுதில்
நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறிப்,
பேர்-உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி
“யார் அளித்த பால்-அடிசில் உண்டது நீ?” என வெகுளா,

#1971 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 73
“எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு” என்று
கைச் சிறியது ஒரு மாறு கொண்டு ஓச்சக், கால் எடுத்தே
அச்சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண்-துளி பெய்து
உச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்-கைவிரல் சுட்டி,
(உச்சியினில் —- பாடபேதம் – உச்சியின்மேல்?)

#1972 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 74
விண் நிறைந்த பெருகு-ஒளியால் விளங்கு மழ-விடைமேலே,
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப், பாவையுடன்
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி,
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர்-ஞானத் திரு-மொழியால்,

#1973 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 75
எல்லை இலா மறை-முதல்-மெய்யுடன் எடுத்த, எழுது-மறை
மல்லல் நெடும் தமிழால், இம்-மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப்,
பல்-உயிரும் களி-கூரத், தம் பாடல் பரமர்பால்
செல்லும் முறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து,
[செல்லுமுரை (செல்லும் உரை) —- பாடபேதம் – செல்லுமுறை (செல்லும் முறை) ]

#1974 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 76
செம்மை பெற எடுத்த திருத் “தோடுடைய செவியன்” எனும்
மெய்ம்மை-மொழித் திருப்பதிகம் பிரம-புரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றித், தாதையார்க்கு
“எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே” என இசைத்தார்.

பதிகம் 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி ) ( பண் : நட்டபாடை )

பாடல் எண் : 1
தோடு உடைய செவியன், விடையேறி, ஓர் தூ-வெண்-மதிசூடிக்
காடு உடைய சுடலைப்-பொடி-பூசி, என் உள்ளம் கவர்-கள்வன்,
ஏடு உடைய மலரான் முனை-நாள் பணிந்து ஏத்த அருள்-செய்த
பீடு உடைய பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 2
முற்றல் ஆமை, இள நாகமோடு, ஏன முளைக்-கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடு கலனாப் பலி-தேர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன்,
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்,
பெற்றம் ஊர்ந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 3
நீர் பரந்த நிமிர்-புன்-சடைமேல் ஓர் நிலா-வெண்-மதி சூடி,
ஏர் பரந்த இன-வெள்-வளை சோர என் உள்ளம் கவர்-கள்வன்,
ஊர் பரந்த உலகில் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 4
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை-ஓட்டில்
உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர்-கள்வன்,
மண் மகிழ்ந்த அரவம் மலர்க்-கொன்றை மலிந்த வரை-மார்பில்
பெண் மகிழ்ந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 5
ஒருமை பெண்மை உடையன், சடையன், விடை ஊரும் இவன் என்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன்,
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 6
மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இன-வெள்-வளை சோர என் உள்ளம் கவர்-கள்வன்,
கறை கலந்த கடி-ஆர்-பொழில் நீடு-உயர்-சோலைக் கதிர் சிந்து-அப்
பிறை கலந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 7
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த
உடை முயங்கும் அரவோடு உழி-தந்து எனது உள்ளம் கவர்-கள்வன்
கடல் முயங்கு கழி-சூழ் குளிர்-கானல்-அம், பொன்னஞ்-சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 8
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்றெனது உள்ளம் கவர்-கள்வன்
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும்பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 9
தாள்-நுதல் செய்து இறை காணிய மாலொடு தண்-தாமரையானும்
நீணுதல் செய்து ஒழியந் நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர்-கள்வன்
வாள்-நுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல்-செய் பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 10
புத்தரோடு பொறி-இல் சமணும் புறம் கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன்
மத்த-யானை மறுக(வ்) உரி போர்த்தது ஓர் மாயம் இது என்னப்
பித்தர் போலும் பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 11
அரு-நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய
பெரு-நெறிய பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு-நெறிய தமிழ் வல்லவர் தொல்-வினை தீர்தல் எளிது ஆமே.

——————-

1.1 Padhigam songs 8, 9, 10, 11 – explanation in periyapurANam:

#1975 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 77
மண்-உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்து அடையில்,
கண்-நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் எனக் காட்ட,
எண்ணம் இலா வல்-அரக்கன் எடுத்து முறிந்து இசை-பாட,
அண்ணல் அவற்கு அருள்-புரிந்த ஆக்கப்பாடு அருள்-செய்தார்.

#1976 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 78
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழு-ஆன மனத்தாலே மால்-ஆய மால் அயனும்
இழிவு ஆகும் கரு-விலங்கும் பறவையும் ஆய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார்.

#1977 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 79
வேத-காரணர் ஆய வெண்-பிறை-சேர் செய்ய-சடை
நாதர்-நெறி அறிந்து உய்யார் தம்மிலே, நலங்கொள்ளும்
போதம் இலாச் சமண்-கையர் புத்தர்-வழி பழி ஆக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்.
(நாதன்நெறி — பாடபேதம் – நாதர்நெறி?)

#1978 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 80
திருப்-பதிகம் நிறைவித்துத் திருக்-கடைக்காப்புச் சாத்தி
இருக்கு-மொழிப் பிள்ளையார் எதிர்-தொழுது நின்று-அருள,
அருட்கருணைத் திருவாளன் ஆர்-அருள் கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரச-மலர்-மழை பொழிந்தார்.

Please rate this

சிவாலயம் தரிசனம் செய்யும் முறை 3/5 (1)

சிவாலய தரிசன முறை

முதலும் முடிவும் இல்லாத சிவபெருமானார் புறத்தே திருக்கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளிலும், தமது மெய்யடியாருடைய திருவேடத்தை ஆதாரமாகக் கொண்டும் சிவவழிபாடு செய்பவர் வழிபாட்டை ஏற்றுக்கொண்டும் அருளுவார். நித்தமும் சிவாலயம் சென்று வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுதல் வாழ்வில் பேரின்பத்தைத் தரும். அத்தகைய சிவாலயத்தை தரிசனம் செய்யும் முறையாவது யாது ?

1.  திருக்கோவில் திருக்குள தீர்த்தத்தில் நீராடி, உலர்ந்த சுத்தமான ஆடை தரித்து, விபூதி தரித்து செல்ல வேண்டும். சுவாமி அபிஷேக தீர்தத்ங்கள் கோவில் குளத்தை அடைந்து அதில் உடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் வளர்ந்து நம் உடலுக்கு நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரும். இதனால் திருக்கோவில் குளத்தில் நீராடல் வேண்டும்.
2. ஒரு பாத்திரத்திலே, தேங்காய், பழம், பாக்கு வெற்றிலை, மலர்கள் வைத்து இடுப்புக்கு மேலே உயர்த்தி ஏந்தி செல்ல வேண்டும். பொருள் இல்லாதவர் சிவாலயத்தை பெருக்கி வணங்க வேண்டும்.
3. கோபுரத்தை இரு கைகளாலும் சிரசில் வைத்து வணங்கி, பலிபீடத்தை அடைய வேண்டும்.

4. பலிபீடத்தில் அனைத்து கெட்ட எண்ணங்களையும் பலியிட்டு மனத்தை சுத்தமாக வைத்தல் வேண்டும். ஆடவர் அட்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்யவேண்டும். அட்டாங்க வணக்கம்: தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், பயங்களிரண்டுமாகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோயும்படி வணங்குதல். பஞ்சாங்க வணக்கம்: தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து உறுப்புகளும் நிலத்தில் தோயும் படி வணங்குதல். திரயாங்க வணக்கம்: சிரசில் இரு கைகளையும் குவித்தல். வணக்கம் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பன்னிரண்டு தரமாயினும் செய்ய வேண்டும். ஒரு தரம் இரு தரம் பண்ணுதல் குற்றம். நமஸ்காரம் செய்யும் போது மேற்கேயாயினும், தெற்கேயாயினும் கால் நீட்டல் வேண்டும்.
5. நமஸ்காரம் செய்துவிட்டு, சிவபெருமானை சிந்தையில் வைத்து பஞ்சாட்சர செபம் செய்து கொண்டே, இரு கைகளை இருதயத்தில் வைத்துக் கொண்டு, பூமியைப் பார்த்து கால்களை அடிமேல் அடி வைத்து வலம் வர வேண்டும். (வலம் – பிரதஷிணம்). 3, 5, 7, 9, 15 அல்லது 21 முறை வலம் வரல் வேண்டும். வலம் வரும் போது, பலிபீடத்தையும், இடபத்தையும் சேர்த்து வலம் வர வேண்டும்.
6. வலம் முடித்து, துவாரபாலகரையும், திருநந்திதேவரையும் வணங்கி, “பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்த அடையேன் உள்ளே புகுந்து சிவபெருமானைத் தரிசித்து பயன்பெறும்பொருட்டு அனுமதி செய்தருளும்” என்று வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
7. விநாயகர் சந்நிதி அடைந்து, கைகூப்பி தியானித்து, முட்டியாக பிடித்த இரு கைகளினால், நெற்றியிலே மும்முறை குட்டி, வலக்காதை இடக்கையாலும், இடக்காதை வலக்கையாலும் பிடித்து மும்முறை தாழ்ந்தெழுந்து தோத்திரம் செய்ய வேண்டும்.
8. இரு கைகளையும் சிரசிலே குவித்து சிவபெருமான் சந்நிதி அடைந்து, அவரை தரிசித்து, மனதிலே தியானித்து, மனங்கசிந்துருக உரோமம் சிலிர்ப்ப ஆனந்த அருவி சொரிய, பண்ணோடு தோத்திரங்களை சொல்லக் கடவர். உத்தமோத்தமமாகிய தோத்திரங்கள் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் என்னும் ஐந்துமாம்.
9. பூசகர் கொண்டு வில்வத்தினாலே அருச்சனை செய்து, சுத்திசெய்யப்பட்ட பழம் முதலியவற்றை நிவேதித்து கர்ப்பூராராத்திரிகம், பணிமாறப்பண்ணி, பூசகருக்கு இயன்ற தஷிணை கொடுக்க கடவர்.
10. பின்பு, சபாபதி, தஷிணாமூர்த்தி, சந்திரசேகரர், சுப்பிரமணியர் ஆகியோரையும், சமயகுரவர் நால்வரையும் தரிசித்து வணங்கி துதிக்கக்கடவர்.
11. பார்வதி தேவியாருடைய சந்நிதி அடைந்து , சிரசிலும், இருதயத்திலும் அஞ்சலி செய்து அருச்சனை செய்து, தோத்திரங்களை சொல்லக்கடவர்.
12. பின்பு, விபூதி பிரசாதம் வாங்கி தரித்துக் கொண்டு, சண்டேசுவரர் சன்னதியை அடைந்து தோத்திரம் செய்து, சிவதரிசன பலத்தை தரும் பொருட்டு பிரார்த்திக்க கடவர்.
13. பின்னர், நந்திதேவரை அடைந்து வணங்கி துதித்து, பலிபீடத்துக்கு இப்பால் மும்முறை நமஸ்கரித்து சிவபெருமானை தியானித்து, பஞ்சாட்சரத்தில் இயன்ற உருச் செபித்து எழுந்து வீட்டுக்குப் போகக்கடவர். .

ஆலயம் தொழுவது சாலவும் நன்று -ஔவையார்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

பிரதோஷ நாட்கள் 2017 5/5 (1)

2017 பிரதோஷ நாட்கள்

பிரதோஷ நேரத்தில் சிவாயலம் சென்று நந்தியெம்பெருமானையும் நம் தலைவன் சிவபெருமானையும் வழிபடுங்கள். திருச்சிற்றம்பலம்.

பிரதோஷ நாட்கள் 2017

Please rate this

வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா ? சிவபெருமானை வணங்குங்கள் 4.5/5 (2)

வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா ? சிவபெருமானை வணங்குங்கள்

சகல அண்ட புவனங்களையும் தன்னுள் கொண்டு காத்தருளும், தனக்கு நிகரற்ற தெய்வம் சிவபெருமானின் ஆணையின் கீழ், அனைத்துலகும் இயங்கி வருகிறது. எல்லா உயிர்க்குத் தேவையானவற்றையும், பொருளையும், இன்பத்தையும் தன் அளப்பரிய கருணையினால் தக்க சமயத்தில் கொடுத்து அருள எல்லா ஆலயங்களிலும் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிவம் நம்மை உய்விக்கும் தெய்வம். ஆணவத்தை வேற்றுத்து நிகரற்ற பேரின்பத்தை எப்போதும் வழங்கும் தன்மையுடைய ஒரே கருணை தெய்வம் சிவபெருமான். திக்குத் தெரியாமல் தவித்துப் புலம்பும் எல்லா உயிர்களுக்கும் தெப்பமாக தானே வந்து காத்தருளி நம்மை உய்விக்கிறான். அவ்வாறு இவ்வுலக உயிர்களுக்கு வாழ்விற்க்குத் தேவையான செல்வங்கள் அனைத்தையும் மகாலட்சுமிக்கு அருளி, செல்வத்திற்கெல்லாம் தெய்வமாக அவளை நியமித்தருளினார். மகாலட்சுமி சிவபெருமானின் திருவருளால் எட்டு சக்திகளைப் பெற்றார். தனம், தான்யம், சந்தானம் உள்ளடக்கிய எட்டு சக்திகளையும் சங்கநிதி பதுமநிதி என இருவரிடம் ஒப்படைத்தார். இந்த செல்வங்கள் யாவையும் கணக்கு பார்த்து தேவையான செல்வத்தை தேவையானவர்களுக்கு வழங்க ஒருவர் வந்து சேர்ந்தார். அவரே குபேரன்.

குபேரன் யார் ?

திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்க்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் சொல்கிறது. சிவபிரானுக்கு இரண்டு நெருங்கிய தோழர்கள். ஒன்று சுந்தரமூர்த்தி நாயனார். இன்னொருவர் குபேரன். பிரம்மாவின் மனதில் தோன்றியவர் புலஸ்தியர். இவருடைய பிள்ளைகள் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பநகை, வீபீஷணன் மற்றும் குபேரன். குபேரனும் இராவணனும் சிறந்த சிவபக்தர்கள். குபேரன் சிவபிரானிடம் தவம் செய்து அருள் பெற்றார். மேலும் வடக்கு திசைக்கு உரிய அதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இந்த குபேரனிடம் தான் மகாலட்சுமி தான் சிவபெருமானிடம் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். குபேரன் அரசாட்சி செய்ய அழகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பி விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அதில் ஓர் அதிசய அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி மீன் ஆசனத்தில் போடப்பட்ட மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினார். கிரீடம், தங்க ஆபரணங்கள் அணிந்து முத்துக் குடையின் கீழ் அமர்ந்து கையில் அபய முத்திரை காட்டுகிறார். யார் யாருக்கு என்ன செல்வம் போய்ச் சேர வேண்டுமோ, அவற்றை சரியாக சமர்பிப்பதே இவர் வேலை. மேலும் பாவங்கள் செய்யாதிருப்பவர்களை கோடீஸ்வரானாக்குவதும் இவரது பணியாகும். இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும் இடதுபுறத்தில் பதுமநிதியும் அமர்ந்து உதவிபுரிவார்கள்.

சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவர். இவரது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்களாகும்.

குபேரனின் சிறப்புகள்

குபேரனின் உருவ அமைப்பு

குபேரன், சிறுத்த சிவந்த உருவமும் பருத்த வடிவமும் கொண்டவர். இவரது துணைவி சித்ரலேகா. தலையில் கிரீடம் ஆபரணங்கள் அணிந்து முத்துக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் குபேரன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சிம்மாசனம் தாமரை மலர் மீது மீனாசனம் அமைத்து அதன் மேல் மெத்தை விரிக்கப்பட்டிருக்கும்.அவர் காலின் கீழ் அவரது வாகனமான குதிரை இருக்கும்.

குபேரனின் ஒரு கை அபயமுத்திரையைக் காட்டும். இன்னொரு கை பாம்புக்குப் பகைவனான கீரியைத் தொட்டுக் கொண்டிருக்கும். சில சித்திரங்களில் கீரிக்குப் பதிலாக கைக்குடை ஒன்றை வைத்திருப்பார். இது இறைத்தன்மைக்குரிய, அதாவது அரசனுக்குரிய அடையாளம். குபேரன் எங்கு பறந்து சென்றாலும் தங்கம், முத்து ஆகியவை வழி நெடுக சிதறிக் கொண்டே போகும் என்பார்கள்.

அவர் தன் வாய் வழியே ரத்தினங்களை உமிழ்ந்து செல்வதாலேயே இது நடைபெறுகிறது. குபேரனின் வலப்புறத்தில் சங்கநிதியும் இடப்புறத்தில் பது மநிதியும் வீற்றிருக்கிறார்கள். கீழே உள்ள பாத்திரங்களில் நவரத்தினக் குவியல்கள் காணப்படும். அதோடு குபேர யந்திரத்துடன் குபேரன் காட்சியளிக்கிறார்.

குபேரனுக்கு மொத்தம் ஒன்பது பொருளாளர்கள் உள்ளனர். குபேரன் ஒரு சமயம் எல்லா சிவாலயங்களுக்கும் தன் புஷ்பக விமானத்தில் சென்று வழிபட்டுச் சென்று கொண்டிருந்தான். ஒரு முறை காவேரி நதிக்கரையில் மான், புலி, பசு, யானை, பாம்பு மற்றும் எலி ஆகியவை ஒரே இடத்தில் தங்கள் பகைமை கணங்களைக் காட்டாமல் நீர் அருந்திக் கொண்டிருந்தன.

ஆகா, இந்த ஊர் எவ்வளவு அழகாக இருக்கிறது. இங்கு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்தான். அவ்வளவு தான், அந்த விருப்பத்தை நிறைவேற்ற சிவபெருமானார் அவருக்கு ஒரு பிறவி கொடுத்து விட்டார். அந்த நதிக்கரையருகே ஓர் இலந்தை மரமும் இருந்தது. இலந்தை மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வெளியே எடுத்து முறையாக நீ என்னை வழி பட்டா யானால், உனக்கு அளவிலாத நன்மைகள் கிடைக்கும். என்னை வழிபடுபவர்களுக்கு உன் அருள் கடாட்சமும் கிட்டும் என்றவாறே சிவபெருமான் திடீரென குபேரன் முன் தோன்றினார்.

ஈசன் கூறியவாறே குபேரனும் அவரை வெளியே எடுத்து வழிபாடு செய்தான். தன் பெயர் அளகேசன் என்ற நாமம் கொண்டு விளங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டான். சிவனும் சம்மதித்தார். குபேரன் வழிபட்ட அந்தச் சிவன் கோவில் பவானியில் உள்ளது. அது பவானி சங்கமேஸ்வரர் கோவில். எனவே தீபாவளியன்று இத்தலத்தில் வழிபட்டால் அளவற்ற செல்வமும் அருளும் பெறலாம்.

ஆகவே, குபேரனை எண்ணத்தில் கொண்டு சிவபெருமானை தினம் வணங்கி வந்தால் உங்கள் இல்லத்தில் செல்வம் கொழிக்கும். புதிய வீடு, வாகனம் பெறுவீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். வறுமையும் தரித்திரியமும் தெறித்து காணாமல் ஓடி விடும். கேட்டதெல்லாம் கொடுக்கும் தெய்வம் சிவபிரான். இந்த பிறவியில் செழித்து வாழ நல்ல செல்வமும் மறுபிறவி வேண்டாதவர்க்கு பிறவிப் பிணியை நீக்கி பேரின்ப முக்தியும் கொடுத்து அருளுவார். சிவபிரான் மீது அன்பு கொண்டு அவர் திருவடியை இறுக பற்றிக் கொள்ளுங்கள். ஓம் நமசிவாய.

 

Please rate this

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ? 5/5 (3)

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ?

1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.

2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.

3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.
சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது

4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.

5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.

6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.

7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் கடைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.

8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

Please rate this

மாகேசுரர்கள் யார் ? மாகேசுர பூசை என்றால் என்ன ? 4.75/5 (4)

சிவமயம்

மாகேசுர பூசை என்றால் என்ன ?

மாகேசுர பூசை – பெயர் விளக்கம்
ஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள். முடிவில்லாத மகா அண்டத்தை உடையவனை மகேஸ்வரன் என்கிறோம். மகேஸ்வரனுக்கு செய்யும் பூசை மகேஸ்வர பூசை. ஆதியும் அந்தமும் அற்ற அந்த மகேஸ்வரனோ, அவனுடைய தொண்டர்களின் உள்ளத்துள் ஒடுக்கம் என்கிறார் ஔவையார். இந்த தொண்டர்கள் மாகேசுரர் எனப்படுவர். அத்தகைய பெருமை உடைய மாகேசுரர்களுக்கு செய்யும் பூசை மாகேசுர பூசை.

மாகேசுர பூசையின் பெருமை
புண்ணியங்களுள் சிறந்தது சிவபுண்ணியமாகும். அந்த சிவபுண்ணியத்துள்ளும் சிவபூசை மிகவும் சிறந்ததாகும். அந்த சிவபூசையிலும் சிறந்தது மாகேசுர பூசை.
மாகேசுர பூசை எப்படி செய்யப்படுகிறது ?
மாகேசுர பூசையாவது, மாகேசுரர்களை விதிப்படி பூசித்து அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாகும். மாகேசுரர்களை தூரத்தே கண்டவுன், அவர்களது சாதி, குலத்தை ஆராயாமல், ஏழை செல்வந்தர் என்றும் பாராமல், திருநீறும், கண்டமணியும் அணிந்திருக்கும் அந்த அடியவர்களை, மனிதர் என்றும் எண்ணாமல், சிவபெருமானே வந்திருப்பதாக எண்ணி உபசரிக்க வேண்டும். சிவவேடமே சிவனாக கொள்ளவேண்டும். சிவனின் மீது இருக்கும் அன்பினாலும், அவன் அடியவர்களின் மீது இருக்கும் அன்பினாலும், தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து, அகமகிழ்வோடும் முகமலர்ச்சியோடும், தம் கைகளைக் குவித்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் அருகில் சென்றபின், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி, இனிமையான சொற்களைப் பேசி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை வசதியான இடத்தில் அமரச் செய்து, பூசை செய்ய உகந்த கரகநீரைக் கொண்டு அவர்களின் திருவடிகளை விளக்க வேண்டும். அந்த நீரை தீர்த்தமாக எண்ணி, நம் தலையில் தெளித்து, உள்ளும் பருக வேண்டும். பின்னர், மெல்லிய சுத்தமான ஆடையினால் அவர்களின் திருவடிகளை ஒற்றி உலர்த்த வேண்டும். பின்னர் அவர்களை பூசை செய்வதற்கு உகந்த மலர்களால் பூசித்து, தூபதீபம் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, மற்றும் உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடைய உணவை, உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் வசதிப்படி அமுது செய்விக்க வேண்டும். நான் மனித பிறவி பெற்ற பயனை இன்றல்லவோ பெற்றேன் என்று அவர்களிடம் மனமகிழ்வோடு கூற வேண்டும்.  சிவதருமோத்தரம், “புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே.” அவர்கள் விடைபெற்று போகும் போது, அவர்களோடு கூடவே பதினான்கு அடி சென்று வழியேற்றிவிட வேண்டும்.

இத்தனை பெரும் சிறப்பு பெற்றது மாகேசுர பூசை. இந்த மாகேசுர பூசையை தினம் தோறும் தவறாது, சைவ ஆகம விதிப்படி, உண்மையான உள்ள அன்போடு செய்து சிறப்புப் பெற்றவர் இளையான்குடிமாற நாயனார். தினமும் மாகேசுர பூசை செய்ததினாலே, தன்னுடைய எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து வறுமையில் வாடிய போதும், இவர்புண்ணியம் செய்த நமக்கு கடவுள் இவ்வளவு இடர் செய்கிறாரேஎன்று சிவனை  சிறிதும் நோகாமல் தொடர்ந்து மாகேசுர பூசை செய்து வரலானார். இவர்களின் மேலான தவத்தை உலகறிய செய்யவே, பரமசிவனார் இவர்கட்கு வறுமை அருளினார். பின்னர் இவர்கட்கு பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையாளன் சிவபெருமான்.

உருத்திராக்கங்களை பல்வேறு அபிசேடங்கள் செய்து அதை இறைவனுக்கு ஆவாகனம் செய்யும் போது, சிவபெருமானே அதை ஏற்றுக்கொண்டு தன் அருளை வழங்குகிறார்.

அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

மாகேசுர பூசையின் பெருமை

Please rate this

உழவாரப்பணியின் மகிமை 5/5 (2)

சிவமயம்

உழவாரத் திருப்பணியின் மகிமை அறிவோம். உழவாரம் செய்வோம்.

ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப்படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தாலும், அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.  இந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த அவன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது. மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான். செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிலர் கோவிலை பெருக்கி சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து, ஐயா தர்மப்பிரபு தயவு கூர்ந்து அந்த மட்டையை எடுத்துக் கொடுங்களேன் என்று கேட்க, தர்மப்பிரபு என்ற வார்த்தையில் மயங்கியவன், மட்டையை எடுத்து ஏணியில் சிறிது படிகள் ஏறி அந்த மட்டையை கொடுத்துவிட்டு சென்றான்.

இவன் செய்த பாவங்களின் பலனாக, இவன் குழந்தை பிறக்கும் தருவாயில் இறந்து போய், இவனுக்கு குலம் தழைக்காது போவதே விதியாக இருந்தது. எம தூதர்கள் இவன் இல்லம் அடைந்து பாசக்கயிற்றை வீச தயாரானார்கள். திடீரென்று சிவலோகத்திலிருந்து இரு பூதகணங்கள் தோன்றி, எமதூதர்களை தடுத்தனர். குடமுழுக்கிற்காக தயாராகும் சிவாலயத்தில், அடியவர் ஒருவருக்கு இவர் சிறு உதவி செய்த காரணத்தால், அந்த புண்ணியத்தில் லட்சத்தில் ஒரு பங்கு இவருக்கு சேர்ந்துவிட்டது. ஆகவே, இவரது குழந்தையின் உயிரை கவரக்கூடாது என்பது ஈசனின் ஆணை என்றனர். மேலும் சுகப்பிரசவத்திற்கு வேண்டியவற்றை செய்ய எம்பெருமான் கட்டளையிட்டுள்ளார். ஆகவே திரும்பி செல்லுங்கள் என்று எமதூதர்களை திருப்பி அனுப்பி விட்டனர் சிவகணங்கள். தன் குழந்தைக்கு நிகழவிருந்த ஆபத்தையும், தன் உதவியினால் அது விலகியதையும் ஜோதிடர் மூலம் அறிந்து கொண்ட செல்வந்தன் திருந்தி கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து வரலானான். கோவிலை சுண்ணம் அடித்து கொண்டிருந்தவர்களுக்கு மட்டையை எடுத்து கொடுத்ததற்கே இவன் இப்பலனை அடைந்தால், அவன் ஆலயத்தில் உழவாரப்பணி செய்பவர்களுக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும் என்பதை பாருங்கள். ஆனால், நாம் இந்த உழவாரத் திருப்பணியை, கிடைக்க போகும் புண்ணியத்திற்காக அல்ல, அவன் மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பினால் செய்ய வேண்டும்.

கருணையே உருவான இறைவன் இவ்வுடம்பு, நல்ல மனம், புத்தி, சித்தி, அகங்காரம், உலகம், கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், வீடு, வாசல், பொன், பொருள் என்று நாம் கேட்காமலேயே நமக்கு அருளியிருக்கிறார். இதற்காக நாம் அவரிடத்தில் மிகுந்த அன்பு கொண்டு தொண்டு புரியவேண்டும். இறைவனை உணர்ந்து, அவரோடு உறவை ஏற்படுத்தி, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளாக, சைவ சமயம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்று நான்கு வழிகளை குறிப்பிடுகிறது. நம் தாய் தந்தை சகோதரர்களிடம் அன்பு செலுத்துவதைப் போல, இறைவனிடமும் ஆழ்ந்த அன்பு செலுத்தவேண்டும். அந்த அன்பை நாம் மேற்கூறிய வழிகளில் வெளிப்படுத்தலாம். இதில் மிகவும் எளிதானது சீலம் என்ற இறைத் தொண்டு புரிவதே. இறைவன் உறையும் வீடாகிய திருக்கோவில்களில் நீரும், பூவும், பாமாலையும் சாற்றி வழிபடுதல், கோவில்களை தூய்மை செய்தல், அலங்கரித்தல், கோலமிடுதல், விளக்கேற்றுதல், பூச்செடிகள் நட்டு வளர்த்தல், மலர் பறித்தல், திருமுறைகளை ஓதுதல், எழுதுதல், மாலை கட்டுதல், நீர் சுமந்து கொடுத்தல், பூந்தோட்டம் அமைத்தல், குளம் அமைத்து கொடுத்தல், சந்தனம் அரைத்தல், கோவில் திருவுருவங்களை துலக்குதல், ஊதுபத்தி ஏற்றுதல், திருப்பணிகளுக்கு நிதியுதவி செய்தல், பல்லக்கு சுமத்தல், வடம் பிடித்தல், தீவட்டி ஏந்துதல், பழமையான கோவில்களை புதுப்பித்தல், பூசை பொருட்கள் வாங்கித் தருதல், பூசை செலவுகளை ஏற்றல், அன்னதானம் வழங்குதல், பரிமாற உதவிடல், திருநீறு அணிதல், கண்டமணி (உருத்திராக்கம்) அணிதல், சிவநாமம் சொல்லல், பிறரையும் இத்தொண்டு செய்ய ஊக்குவித்தல் போன்று எண்ணற்ற தொண்டுகளை புரிந்து வரலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொண்டை தொடர்ந்து வழுவாமல் செய்து வருவது சிறப்பு. இன்றைய தினங்களில் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை ஏதாவது ஒரு சிவாயத்திற்கு சென்று உழவாரப் பணி மேற்கொள்ளலாம். 200 அல்லது 300 பேர் கொண்ட பெரிய குழுவாக இணைந்து செய்தால் எத்தகைய பணியினையும் விரைந்து செய்ய இயலும். பழைய கோவில்களை ஆகம விதிப்படி புதுப்பித்தலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 63 நாயன்மார்கள் யாவரும் இது போன்ற தொண்டுகளை வழுவாமல் பற்றி செய்து வந்தவர்களே. நாயன்மார்களின் வரலாற்றை அறிந்து யாவருக்கும் உரைப்பதும் ஒரு தொண்டு. உழவாரப்பணி என்றாலே நம் நினைவுக்கு வருவது உழவாரப் படை ஏந்திய திருநாவுக்கரசர் பெருமான். சமண சமயத்தால் பூசையின்றி இருந்த சிவாயலங்களுக்கு உழவாரப் பணி செய்தார். இவருக்கு உழவாரப் பணி செய்ய வேண்டுகோள் விடுத்து முன்னோடியாக இருந்தவர் இவர் சகோதரி திலகவதியார். இவர்கள் வரலாற்றை அறிவோம்.

உழவாரத் திருப்பணியின் மகிமைகள்

இறைவனுக்கு செய்யும் தொண்டினால் வரும் மனநிறைவு பேரின்பம். இந்த பேரின்பத்தை அனுபவித்தவரிடம் கேட்டு பாருங்கள். இந்த தொண்டு இறைவனோடு உங்களைப் பிணைக்கும் மிக வலுவான பாலமாக அமையும். இந்த தொண்டிற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதுமில்லை. பலனை எதிர்பாராமல், உள்ளன்போடு செய்யும் தொண்டினை ஏற்கும் இறைவன், உங்களை ஒரு குறையும் வராமல், நல்வழியில் நடத்தி செல்வார். என் கடன் பணி செய்து கிடப்பதே.

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

உழவாரத் திருப்பணியின் மகிமைகள்
Jpeg

Please rate this

சிலந்தி அரசனானது எப்படி ? 4/5 (1)

சிலந்தி அரசனான வரலாறு

மனிதப்பிறவியின் நோக்கம் இறைவனை அடைதலே. ஆனால் ஏனைய பிறவிகள் அவற்றுக்கு கொடுக்கப்பட்ட உடல், கருவிகள், உலகம், அனுபவங்கள் வாயிலாகப் பக்குவ முதிர்ச்சி பெற்று பின்னர் மேலான மனிதப்பிறவியில் பிறந்தே இறையை அடைதல் வேண்டும். ஆனாலும் இதற்கு விதி விலக்குகளும் உள்ளன. ஈ இறைவனை வழிபட்டு நற்கதி அடைந்த தலம் ஈங்கோய் மலை. யானையும் சிலந்தியும் வழிபட்டு நற்கதி அடைந்த தலம் திருவானைக்கா. திருவிளையாடற் புராணத்தின் நாரைக்கு உபதேசித்த படலமும், கரிக்குருவிக்கு முத்தி கொடுத்த படலமும் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுத்த படலமும் விலங்குகள், பறவைகள்கூட இறையை அடைவதற்கும் புண்ணிய பாவ காரியங்களுக்கும் விதி விலக்கல்ல என்று நமக்கு கூறுகின்றன.

திருச்சியில் உள்ள தலம் திருவானைக்கா. இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரஞ் செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம். இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கனாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம்தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.
இங்கு முன்னர் ஜம்பு முனிவர் பூசை செய்த லிங்கத்துக்கு மேலே அங்கிருந்த சிலந்தி தினமும் விதானம் போல வலை பின்னி அதையே தன் வழிபாடாகச் செய்து வந்தது. அங்கு ஓர் யானையும் தினமும் நீரினால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. யானையின் நித்திய வழிபாடு சிலந்தி பின்னிய வலையைத் தினமும் சிதைத்தது. இதனால் ஆற்றாது கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையில் துதிக்கையினுள் புகுந்து கடிந்துவிட்டது. வலி தாங்காத யானையும் துதிக்கையை அடித்து மோதி இறந்தது. அதனுள் இருந்த சிலந்தியும் மாண்டது. இச் சிலந்தியே அடுத்த பிறப்பில் சோழ இராஜ குடும்பத்தில் பிறந்தது.

இவன் தாய் இவனைப் பிரசவிக்கும்போது சோதிடர்கள் காலம் கணித்து இன்னும் சில நாழிகை காலம் தாழ்த்திப் பிறந்தால் இவன் சக்கரவர்த்தியாக உலகாள்வான் என்று கூறினர். இதனால் பிரசவத்தை இயற்கைக்கு மாறாக தள்ளிப்போடுவதற்கு தாய் சம்மதித்தாள். அவளை தலைகீழாக்க் கட்டித் தூக்குமாறு பணித்தாள். இதனால் பிரசவமும் தாமதமாகி ஆண் குழ்ந்தை பிறந்தது. காலந் தாழ்த்திப் பிறந்ததனால் அவன் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன. இன்றைய மருத்துவத்தில் காலந்தாழ்த்திப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் இச் செங்கண்ணை Sub-conjunctival haemorrhage என்று கூறுகின்றனர். இவ்வாறு சிவந்த கண்ணுடன் பிறந்த காரணத்தால் இக் குழந்தைக்கு கோச் செங்கணான் என்று பெயரிட்டனர். சமஸ்கிருதத்தில் இவனை ரெக்தாக்ஷ சோல என்று அழைப்பர். தாயும் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு இறந்துவிட்டாள். இவனே பின்னால் கோச்செங்கட் சோழன் என்ற பெயருடன் அரசாட்சியேறி சோழ நாட்டை ஆண்ட மன்னன். இவன் எழுபது கோவில்களைக் கட்டியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அத்தனை கோவில்களும் யானை ஏற முடியாத கட்டட அமைப்புடன் கட்டப்பட்டவை. இந்த கட்டட அமைப்புக் கோவில்களை மாடக்கோவில்கள் என்று அழைப்பர். இவன் விஷ்ணு ஆலயங்களும் கூட அமைத்துள்ளான். வைணவ ஆழ்வார்களினால் பாடப்பட்ட ஒரேயொரு சைவ நாயன்மார் இந்த கோச்செங்கட் சோழனே.

பெரியாழ்வார், நாச்சியார் கோயில் (திரு நறையூர்) பெருமாளைப் பாடும்போது எழுபது சிவாலயங்கள் எழுப்பிய சோழனால் கட்டப்பட்ட ஆலயம் என்று சிறப்பித்துப் பாடுகின்றார். இவ்வாறு பல வேறு வகையான கோவில் கட்டட அமைப்புகளைப் பற்றி பின்வரும் அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலும் கூறுகின்றது.

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங் கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்(டு) ஏத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே
     திருநாவுக்கரசர் தேவாரம்-


அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

 

Please rate this

63 நாயன்மார்கள் செய்த தொண்டு யாது ? 4/5 (4)

சிவமயம்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?

சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டிற்கே தம்மை அர்ப்ணித்துக்கொண்ட சிவனடியவர்கள் எக்காலத்திலும் இருந்தனர். இன்றும் எண்ணற்றவர் உள்ளனர். வரும் காலத்திலும் இருப்பர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்ற பாடலில், அவ்வாறு தொண்டு செய்தவர்களின் குறிப்புகளை விரித்து, சேக்கிழார் சுவாமிகள் 12 வது திருமுறையாகிய திருத்தொண்டர் (பெரிய) புராணம் தொகுத்தருளியுள்ளார். 12 ம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த இந்த அடியவர்களின் வரலாற்றை அறிந்துணர்ந்து நாமும் சிவதொண்டு செய்வோம். இங்கு ஒரு வரி குறிப்பே தரப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் நாயன்மார்களின் வரலாறு முழுமையும் சேக்கிழார் சுவாமிகள் கூற நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது பெரியபுராணம் புத்தகம் வாங்கி படிக்க வேண்டும். திருச்சிற்றம்பலம்.

 1. தில்லைவாழ் அந்தணர்: தில்லையில் நடராசப் பெருமானுக்கு வழிபாடு புரியும் அந்தணர்கள் 3000 பேர்.
 2. திருநீலகண்டர்: சிவனடியார்களுக்கு இலவசமாகத் திருவோடு கொடுத்து தொண்டு புரிந்த குயவர்.
 3. இயற்பகை நாயனார்: யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறாமல் கொடுத்து தொண்டு செய்பவர். இறைவன் சோதித்த போது, தம் துணைவியாரையே சிவனடியார்க்கு மனமுவந்து அளித்த வணிகர்.
 4. இளையான்குடி மாறர்: வறுமையிலும், நள்ளிரவிலும் மாகேசுவர பூசை செய்து அடியார்க்கு அமுது அளித்த வேளாளர்.
 5. மெய்ப்பொருள் நாயனார்: அடியார்கள் திருவேடத்தையே மெய்ப்பொருளாக எண்ணி, தன்னை கொன்றவரையே காத்தவர்.
 6. விறன்மிண்டர்: தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த சிவனடியார்களை வணங்காமையால் சுந்தரரையும் பகைத்த வேளாளர். இவரின் மூலமே சுந்தரர் திருத்தொண்டத்தொகை இயற்றி நமக்கு கிடைத்திட ஈசன் திருவுளம் கொண்டார்.
 7. அமர்நீதி நாயனார்: அடியார் கொடுத்த கோவணம் மறைந்ததற்கு ஈடு செய்ய தம் மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்னையும் சிவனடியார்க்கு அர்ப்பணம் செய்த வணிகர்.
 8. எறிபத்த நாயனார்: சிவனடியார்கட்கு வரும் துன்பத்தை களைபவர். தன் கையிலிருந்த மழுவாயுதத்தால் சிவனடியாரை துன்புறுத்திய பட்டத்து யானையைக் கொன்று சைவத்தை வளர்த்தவர்.
 9. ஏனாதிநாத நாயனார்: வாள்வித்தை பயிற்றுவிக்கும் ஆதிசூரனோடு யுத்தம் செய்யும் போது, ஆதிசூரன் நெற்றியில் திருநீறு அணிந்திருக்கவே அவனைக் கொல்லாது விட, சிவபெருமான் அவரைத் தம் திருவடியில் சேர்த்தருளினார்..
 10. கண்ணப்பர்: சிவனின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தம் கண்களையும் பறித்து ஈசனுக்குக் கொடுத்த வேடுவர்.
 11. குங்கிலியக் கலயனார்: நாள்தோறும் (வறுமை வந்தபோதும்) சிவனுக்கு குங்கிலியத் தூபமிட்ட மறையவர்.
 12. மானக்கஞ்சாறன்: தம்மகளின் நீண்டகூந்தலைத் திருமணத்தன்று சிவனடியாரின் பஞ்சவடிக்காக அரிந்தளித்த வேளாளர்.
 13. அரிவாட்டாயர்: நெல்லரிசியும் மாவடுவும் செங்கீரையும் கொண்டு தினமும் பூசை செய்பவர். ஓர் நாள் பூசைப் பொருட்கள் தவறித் தரையில் விழ, இன்று பூசை செய்ய வழியில்லையே என்று தம் கழுத்தறுக்க முயன்ற வேளாளர்.
 14. ஆனாய நாயனார்: பஞ்சாட்சரத்தை வேய்ங்குழலால் இசைத்து முக்தி பெற்ற யாதவர்.
 15. மூர்த்தி நாயனார்: சந்தனக் கட்டை கிடைக்காதபோது தம் முழங்கையைத் தேய்த்து இறைவனுக்குக் காப்பிட்ட வணிகர்.
 16. முருக நாயனார்: தினமும் மலர் மாலைகள் தொடுத்து இறைவனை வழிபடும் திருத்தொண்டு செய்த மறையவர்.
 17. உருத்திர பசுபதியார்: நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முத்தியடைந்த மறையவர்.
 18. திருநாளைப் போவார் (நந்தனார்): பறையர் குலத்தில் தோன்றிய இவர், தில்லை சிதம்பரத்தில் சிவனின் கட்டளைப்படி தீக்குள் புகுந்து வேதியராகி முக்தியடைந்தவர்.
 19. திருக்குறிப்புத் தொண்டர்: தினமும் சிவனடியார்களின் ஆடைகளைத் துவைத்து அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.
 20. சண்டேசுவரர்: சிவபூசைக்குரிய பாற்குடங்களை உதைத்த தமது தந்தையின் மீது வைக்கோலை வீச, அது மழுவாக மாறி அவரின் காலை வெட்டியது. தொண்டர்களுக்கெல்லாம் தலைவராகி சண்டீசர் பதவியை ஏற்ற மறையவர்.
 21. திருநாவுக்கரசு சுவாமிகள்: சைவமும் தமிழும் தழைக்கத் தேவாரம் பாடியவர். புறச் சமய(சமணம்,பவுத்தம்) இருளை நீக்கிய வேளாளர். திருக்கோவில் உழவாரப்பணி செய்து தொண்டுபுரிந்தவர். 3,4,6 திருமுறைகளை அருளியவர்.
 22. குலச்சிறை நாயனார்: கூன்பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்து சைவ நெறியைக் காத்தவர்.
 23. பெருமிழலைக் குறும்ப நாயனார்: சுந்தரமூர்த்தி நாயனாரையே தொழுது அவரோடு சிவப்பேறு பெற்றவர்.
 24. காரைக்காலம்மையார்: சிவனருளால் இருமுறை மாயமாங்கனி பெற்றார். கயிலை மலையை கைகளால் நடந்து சென்ற போது சிவனே அம்மையே என்று அழைக்கப்பெற்றவர். அந்தாதி பாடி இசைத்தமிழுக்கும் சைவத்திற்கும் பங்களித்தார்.
 25. அப்பூதியடிகளார்:திருநாவுக்கரசரின் திருப்பெயரை ஓதி பல்வேறு தொண்டுகள் புரிந்து சிவப்பேறு பெற்ற அந்தணர்.
 26. திருநீல நக்க நாயனார்: ஈசனின் திருமேனியில் விழுந்த சிலந்தியை வாயில் ஊதிய மனைவியை துறக்க முயன்றவர். திருஞானசம்பந்தரின் திருமணத்திற்கு புரோகிதம் பார்த்து தரிசித்து சிவப்பேற்றை அடைந்த மறையவர்.
 27. நமிநந்தியடிகள் நாயனார்: தினமும் திருவாரூர் கோவிலில் விளக்கு ஏற்றுவதை தொண்டாக செய்து வந்தவர். ஓர் நாள், சமணர்கள் எண்ணெய் தர மறுத்தமையால், திருவருள் பெற்று குளத்து நீரைக்கொண்டே விளக்கு எரித்த மறையவர்.
 28. திருஞானசம்பந்தர்: பார்வதி அம்மையே ஞானப்பால் அருளி சிவஞானம் பெற்றவர்; 1,2,3 திருமுறை பாடிச் சைவமும் தமிழும் தழைக்கச் செய்த மறையவர். பல அற்புதங்களை நிகழ்த்தி புறசமயம் அழிந்து சைவம் தழைக்க அருளியவர்.
 29. ஏயர்கோன்கலிக்காமர்: சுந்தரர் சிவனைத் தூதனுப்பியதால் பகைத்து, பின் சுந்தரர் மூலம் சூலை நீங்கப்பெற்ற வேளாளர்.
 30. திருமூல நாயனார்: கயிலை திருநந்தியின் மாணவ சிவயோகியர், மூலன் உடலில் புகுந்து திருமந்திரம் பாடிய சித்தர்.
 31. தண்டியடிகள்: திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் திருத்தி தொண்டு செய்தவர்..
 32. மூர்க்க நாயனார்: சூதாடி வென்ற பொருளால் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்த வேளாளர்.
 33. சோமாசி மாற நாயனார்:சிவ வேள்விகள் புரிந்து சுந்தரரை வழிபட்டுச் சிவபதம் அடைந்த மறையவர்.
 34. சாக்கிய நாயனார்: புத்த சமயத்திலிருந்து சிவனை உணர்ந்து திரும்பி, பூக்கள் இல்லாத நிலையில், நாள் தோறும் கற்களையே மலராகச் சிவலிங்கத்தின் மீது எறிந்து தமது சிவ பக்தியை வெளிப்படுத்தி சிவனருள் பெற்ற வேளாளர்.
 35. சிறப்புலி நாயனார்:திருவைந்தெழுத்து ஓதி, அடியவர்க்கு அமுதும், யாகங்களும் செய்து தொண்டுபுரிந்த மறையவர்.
 36. சிறுதொண்டர்: சிவனடியார் கேட்டதற்காக தம் பிள்ளையையே அரிந்து கறி சமைத்து அர்ப்பணித்து வழிபட்டவர்.
 37. கழறிற்றறிவார்: உவர்மண் பூசிய சலவைத் தொழிலாளியை சிவனாக வணங்கிய மன்னன் சேரமான் பெருமான்.
 38. கணநாதர்: சீர்காழியில் தினமும் திருப்பணி செய்தும், ஞான சம்பந்தரை வழிபட்டும் தொண்டுபுரிந்த மறையவர்.
 39. கூற்றுவ நாயனார்: பஞ்சாட்சரத்தை ஓதி, நடராசரின் திருவடியே தம் மணிமுடியாகப் பெற்று வழிபட்ட குறுநிலமன்னர்.
 40. பொய்யடிமையில்லாத புலவர்: சைவம், தமிழ் வளர்த்து, சிவனையே பாடிய சங்ககாலப் புலவர் நாற்பத்தொன்பதின்மர்.
 41. புகழ்ச் சோழர்: எறிபத்த நாயனாரை அணைந்து என்னையும் கொன்றருள்க என்ற அரசர். அதிகனுடைய போரில், தம் படையினர் வெட்டி கொணர்ந்த படைவீரர் தலை ஒன்று சடைமுடி தரித்திருப்பதை அறிந்து மனம் நொந்து தீப்புகுந்தவர்.
 42. நரசிங்கமுனையரையர்: போலிச் சிவனடியாரிடமும் அன்பு காட்டி பொன் கொடுத்தும், தொண்டுபுரிந்த பெருந்தகையார்.
 43. அதிபத்தர்: நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை(தங்கமீனையும்) இறைவனுக்குப்படைத்த மீனவர்.
 44. கலிக்கம்பர்: தமக்கு பணிவிடை செய்தவரையும் வழிபட்டவர். கரகநீர் தரமறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்.
 45. கலியநாயனார்: தினமும் விளக்கெறித்து தொண்டு செய்து, வறுமையில் வாடி, ஓர் நாள் எண்ணை இல்லாத போது, தம் மனைவியையும் வாங்குவதற்கு எவருமின்றி, தமது ரத்தத்தால் விளக்கெரிக்க தமது கழுத்தை அரிய முயன்ற வணிகர்.
 46. சத்தி நாயனார்: சிவனின் திருவடித்தாமரைகளை சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை இகழும் பாதகர்களின் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.
 47. ஐயடிகள் காடவர்கோன்: ஆட்சியைத் துறந்து சிவத்தலங்களை வழிபட்டு க்ஷேத்ரத் திருவெண்பா நூலை இயற்றினார்.
 48. கணம்புல்ல நாயனார்: சிவாலயத்தில் திருவிளக்கேற்றி தோத்திரம் செய்து வந்தார். வறுமை வரும் காலத்து, கணம்புல்லை விற்று நெய் வாங்கி தீபமேற்றினார். ஓர்நாள் நெய்யும் புல்லும் போதாமையால், தலைமயிரையே எரித்தார்.
 49. காரி நாயனார்: “காரிக் கோவை” நூல் இயற்றி, மன்னர்களிடம் பொருள் பெற்று, சிவாலயங்கள் கட்டுவித்தார்.
 50. நின்றசீர் நெடுமாறன்: கூன் பாண்டியன் சமணத்திலிருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறி சைவத்தை வளர்த்தார்.
 51. வாயிலார்: சிவனுக்கு மனதிலேயே கோவிலமைத்து ஞானவிளக்கேற்றி அன்பு படைத்து ஞானபூசை செய்த வேளாளர்.
 52. முனையடுவார்: கூலிக்கு போர் செய்து திரட்டிய பொருளை அடியார்களுக்கு அருளி தொண்டுசெய்த வேளாளர்.
 53. கழற்சிங்க நாயனார்: போரிட்டு வென்று சைவசமயம் தழைத்தோங்க செய்தார். ஓர்முறை, சிவாயலத்தில், பூ மண்டபத்திலிருந்த மலரை முகர்ந்து பார்த்த தம் மனைவியாரின் கையை வெட்டிய பல்லவ மன்னர்.
 54. இடங்கழி நாயனார்: சிவனடியார்களுக்குத் திருவமுது செய்ய இயலாத ஓர் சிவனடியார், நெற்கூட்டு கொட்டகையில் திருடி அகப்பட, தம் செல்வத்தையும், நெற்பண்டாரத்தையும் அவருக்குக் கொடுத்து அருளிய குறுநில மன்னர்.
 55. செருத்துணை நாயனார்: கழற்சிங்க நாயனாரின் மனைவி, பூ மண்டபத்திலுள்ள மலரை முகர்ந்து பார்த்ததால், அவரின் மூக்கையறுத்த வேளாளர். இதன் பிறகே கழற்சிங்கர் தமது மனைவியின் பூ எடுத்த கையை வெட்டினார்.
 56. புகழ்த்துணை நாயனார்: சிவாகம விதிப்படி தினமும் சிவனை அர்ச்சனை செய்துவந்தார். பஞ்சம் வந்த காலத்தில் சிவபெருமானின் திருவருளினால், தினமும் ஒவ்வொரு பொற்காசு பெற்று தொண்டுசெய்த ஆதிசைவர்.
 57. கோட்புலி நாயனார்: சோழநாட்டின் சேனாதிபதி போருக்கு சென்ற காலத்திலே, சிவபெருமானுக்குப் படைப்பதற்காக தாம் சேமித்து வைத்த நெல்லை உண்ட சுற்றத்தார் அனைவரையும் கொன்று நேர்மையை நிலைநாட்டிய வேளாளர்.
 58. பத்தராய்ப் பணிவார்: திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமானை முழுமுதற்கடவுளாய் வழிபட்ட தொகையடியார்கள்.
 59. பரமனையே பாடுவார்: சிவபெருமானை மட்டுமே பாடுபவர்கள், பிற தெய்வத்தைப் பாடாத தொகையடியார்கள்.
 60. திருவாரூர்ப் பிறந்தார்: திருவாரூரில் பிறந்த அனைவரும் திருக்கையிலாயத்தில் உள்ள சிவகணங்களே ஆவர்.
 61. முப்போதும் திருமேனி தீண்டுவார்:மூன்று காலங்களிலும் சிவபெருமானையே அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்கள்.
 62. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்: சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள்.
 63. முழு நீறுபூசிய முனிவர்: உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே பூசித்து வருபவர்.
 64. அப்பாலும் அடிசார்ந்தார்: முத்தமிழ் நாடுகளுக்கு அப்பால் உள்ள அத்தனை நாடுகளிலும் உள்ள சிவனடியார்கள்.
 65. பூசலார் நாயனார்: மனதிலேயே கோவில் கட்டி சிவனைப் பிரதிட்டை செய்து, சிவன் எழுந்தருளப் பெற்ற மறையவர்.
 66. மங்கையர்க்கரசியார்: நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. சமணத்தில் உழன்ற மன்னரையும் நாட்டையும் காத்திட, திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து, தம் கணவரை சைவராக்கி, சைவத்தை மீட்டெடுத்த அரசியார்.
 67. நேச நாயனார்: சிவனடியார்களுக்கு உடை, கோவணம், கீள் முதலியன கொடுத்துக் காத்து தொண்டுபுரிந்த சாலியர்.
 68. கோச்செங்கோட் சோழ நாயனார்: திருவானைக்கா மதில் பணி செய்து, எழுபது மாடக்கோவில்களைக் கட்டினார்.
 69. திருநீலகண்ட யாழ்ப்பாணர்: திருஞானசம்பந்தரின் திருக்கூட்டத்தோடு இணைந்து யாழ் இசைத்துப் பாடிய பாணர்.
 70. சடைய நாயனார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தந்தை. திருநாவலூரில் ஆதிசைவ குலத்தில், சிவதொண்டு புரிந்தார்.
 71. இசை ஞானியார்: சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அன்னை. திருநாவலூரில் சிவதொண்டு புரிந்தார்.
 72. சுந்தர மூர்த்தி நாயனார்: சிவனின் தோழராய், 7ம் திருமுறை திருப்பாட்டு பாடி செந்தமிழ் வளர்த்த ஆதி சைவர்.

ஓம் நமசிவாய

சிவனடியார்களும், சிவதொண்டு புரிந்தவர்களும் சாதிபேதம் பார்க்கவில்லை. இந்த 63 நாயன்மார்கள் 9 தொகை அடியார்களும் பல்வேறு வகுப்பைச் சார்ந்தவர்கள். நிலையில்லாத இவ்வுலகில் அழியும் பொருளைத் தேடி ஓடும் நாம், நிலையான வீடுபேற்றையும் இன்பத்தையும் பெற சிவதொண்டு புரிவோம். சிவனருள் பெறுவோம். திருச்சிற்றம்பலம்.

63 நாயன்மார்கள் செய்த சிவதொண்டுகள்

Please rate this