சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 4.75/5 (4)

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம்

12 ஆம் தொகுப்பு வகுப்பு   2018 – 2019

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதின 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதினத்தின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பின் 12 ஆவது தொகுப்பு 2018 சனவரியில் தொடங்கப் பெற உள்ளது. இரண்டு ஆண்டுத் தொகுப்பான இந்தப் பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சுமார் 85 ஊர்களிலும், ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அயல் நாடுகளிலும் நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் ஏன் சேர வேண்டும் ? இந்த வகுப்பு நமக்கு என்ன நன்மை தரும் ? இந்தப் பயிற்சியில் யார் சேரலாம் ? பயிற்சி காலம், பயிற்சி கட்டணம், தேர்வு மற்றும் சான்றிதழ் பற்றிய மேலும் பல செய்திகளுக்கு இணைக்கப்பட்டுள்ள அறிக்கையைப் படிக்கவும்.

அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள மையங்களுக்கு சென்று இன்றே உங்கள் பெயரைப் பதிவிடுங்கள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

வகுப்பு நடைபெறும் அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம் -திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2 No ratings yet.

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம்

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2

சிவதீபன் -📱9585756797

குறிப்பு: திருவாலங்காட்டில் “அண்டமுற நிமிர்ந்தாடும் அப்பனது திருநடம் கண்டபோது அம்மை பாடிய பதிகங்களுள் இது இரண்டாவதாம்”

சுடுகாட்டின் காட்சியமைப்புகளையும் பேய்களின் இயல்புகளையும் விரிவாக பதிவு செய்யும் இப்பாடல்கள் மிகுந்த சுவை மிகுந்தவைகளாம்

இறைவனது ஆடல்கோலம் பற்றி விரிவாகப் பேசும் இப்பாடல்களின் நிறைவில் “காடுமலிந்த கனல்வாய் எயிற்று காரைக்கால் பேய்” என்று தம்மை குறித்து கொள்வது அம்மையாருக்கே உரிய தனிப்பெரும் சிறப்பாம்

இப்பதிகத்தின் நிறைவான இரண்டு பாடல்கள் இவை

பாடல்
பண் : இந்தளம்

குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென்று இசைபாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே

சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்  ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடியாடப் பாவம் நாசமே
பொருள்

வயிறு பெருத்ததும் சிறிய உருவம் உடையவையும் பெரியதுமான பேய்கள் கரிய இருட்டில் மிகநெருக்கமாக வாயில் தீயை உடைய கோலத்தில் சின்னஞ்சிறிய குழந்தை பேய்களுக்கு விளையாட்டு காட்டியபடி “கொள்” என்ற ஒலியெழுப்பியபடி ஆடும் மயானத்தில் சடைகள் பொன்போல மிளிர்ந்திட விமலன் ஆடுகிறார்

சடைமேல் மதிசூடி சுழன்று சுழன்று திருநட்டம் செய்பவரும் ஆடுகின்ற அரவத்தை இடுப்பில் கட்டியவருமான இறைவரது அருளினால் காட்டில் வாழ்கின்ற கனல்போன்ற பற்களை உடைய காரைக்கால் பேயாகிய நான் சொன்ன இப்பாடல்களை பாடியாடுபவர்களது பாவம் நாசமாகும்

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம் – திருவாலங்காட்டு மூத்தபதிகம் – 1 No ratings yet.

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம்

திருவாலங்காட்டு மூத்தபதிகம் – 1
[11/2-1/10,11 – 02/06/18]

சிவதீபன் – 📱9585756797

குறிப்பு: “பதிகம்” என்ற சொல்லுக்கு பத்து பாடல்கள் அடங்கிய தெகுப்பு என்று பெயர்.

தேவார மூவரும் இப்பதிக நடையை அதிகம் கையாண்டிருந்தாலும் இதற்கு முன்னோடியாக தமிழ் பாடியவர் “காரைக்கால் அம்மையாரேயாவார்”
இதுபற்றியே இப்பதிகம் “திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம்” எனப்பட்டது, இது திருவாலங்காட்டில் அருளிச்செய்யப்பெற்றது

திருக்கயிலையை தலையால் கடந்தேறிய அம்மை சிவதரிசனம் செய்து “ஆடும்போது அடியின் கீழிருக்கும் வரம் வேண்டினர்”

அப்பொழுது ஆடல்காட்சி காண்பதற்கு “திருவாலங்காடு வரப்பணித்த இறைவர் பேய்களும் விலங்குகளும் திரியும் ஈமப்புறங்காட்டில் நடனம் ஆடிக்காட்டினார்”

அவ்வாடல் காட்சிகளை பதிவு செய்வதே இப்பாடல்களாம்

பதிகத்தின் கடைக்காப்பு பாடலில் தம்மை “காரைக்கால் பேய்” என்று அம்மையார் குறித்து கொள்ளும் பாங்கு நம் நெஞ்சம் நிறையும் அற்புதக்குறிப்பாம்

பாடல்
பண்: நட்டபாடை

புந்தி கலங்கி, மதிமயங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து,
பப்பினை யிட்டுப் பகண்டை பாட,
பாடிருந் தந்நரி யாழ மைப்ப,
அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்
அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே

பொருள்

இறைவனை பற்றி நினைவு இல்லாமல் வாழ்ந்து புந்தி கெட்டு மதி மயங்கி இறந்து போனவருக்காக சாலைகள் சந்திக்கும் இடங்களில் சடங்குகள் செய்தபின் கொண்டுபோய் எரிக்க தக்க இடமான ஈமப்புறங்காட்டில் ஆடுகின்ற அப்பனது இடம் திருவாலங்காடு ஆகும்

பெரும் பேய்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதும் பகண்டை இடுவதும் நரிகள் ஊளையிடுவதுமான காட்டில் ஆடுகின்ற ஆலங்காட்டு ஐயனை காரைக்கால் பேயாகிய யான் சொன்ன பத்து பாடல்களையும் பாடிவழிபடுபவர் சிவகதி பெறுவர்

தவறாமல் கேட்டின்புறுங்கள் கிடைத்தற்கரிய பாடல்கள்🙏🏻🙂

 

Please rate this

சம்பந்தர் தேவாரம் – திருக்கோளிலி திருப்பதிகம் No ratings yet.

சம்பந்தர் தேவாரம்

திருக்கோளிலி திருப்பதிகம்
[1/62/4 – 23/06/18]

சிவதீபன்  – 📱9585756797

குறிப்பு: “திருக்குவளை என்று தற்காலத்தே அழைக்கப்பெறும் இத்தலம் நவகோள்கள் வழிபட்டமையால் திருக்கோளிலி எனப்பட்டது”

திருவாரூருக்கு அருகில் இருக்கும் இவ்வூருக்கு நாகையில் இருந்தும் திருவாரூரில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு

சப்தவிடங்க தலங்களுல் ஒன்றான இத்தலத்தில்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்பெற்ற அற்புதம் நிகழ்ந்தது

“சிவபூசையின் மகத்துவத்தை உணர்த்தும் சண்டேச நாயனாரது வரலாற்றை பிள்ளைப் பெருமானார் இத்தலத்து பதிகத்தில் குறித்து பாடியிருக்கிறார்”

“நாளாய போகாமே” என்று துவங்கும் அற்புதமான இத்தல பதிகத்தின் நான்காம் பாடல் இது

பண் : பழந்தக்கராகம்

பாடல்

வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.

பொருள்

மண்ணியாறு கொண்டுவந்த மணலால் அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன் தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப் பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச் சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில் விளங்கும் எமது பெருமான் ஆவான்

அற்புதமான இசை தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

சம்பந்தர் தேவாரம் -இலம்பையங்கோட்டூர் திருப்பதிகம் 4/5 (1)

சம்பந்தர் தேவாரம்

இலம்பையங்கோட்டூர் திருப்பதிகம்
[1/76/1,11 – 29/06/18]

சிவதீபன் -📱9585756797

குறிப்பு: தேவலோக மங்கையாம் “அரம்பை வழிபட்டதால் அரம்பையங் கோட்டூர் எனப்பட்டு பின்னாளில் இலம்பைய்கோட்டூர் என்றழைக்கப் பெற்றது”

இது ஒரு தொண்டைநாட்டு தலம், திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்னும் திருவிற்கோலத்தில் இருந்து தென்மேற்கே 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது, திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம், அல்லது சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் இருப்பு பாதையில் கடம்பத்தூரில் இறங்கி பேரம்பாக்கம் சென்றும் செல்லலாம்

முப்புர சம்ஹாரத்தின் பொருட்டு சுவாமி தேரில் ஆரோஹணித்து செல்கையில் அவரது கொன்றைமாலை விழுந்த இடத்தில் உண்டான சுயம்பு லிங்கமே இத்தலத்து மூலமூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தேவர்களுக்கு உதவ சென்றமையால் இவருக்கு தெய்வநாதீஸ்வரர் என்றும் அரம்பை வழிபட்டதால் அரம்பேஸ்வரர் என்றும் பெயர்களாம், இத்தல அம்பிகை கோடேந்து முலையம்மை என்ற திருநாமத்துடன் விளங்குகிறார்

பிள்ளைப் பெருமானார் இத்திலத்திற்கு எழுந்தருளியது பற்றி ஒரு செவிவழிச் செய்தியும் இங்கு நிலவுகிறது, “எனதுரை தனதுரையாக” என்ற பெருமானது புகழ்பெற்ற வாக்கியம் இத்தலப் பதிகத்தில்தான் பாடல்தோறும் இடம்பெற்றுள்ளது

பெருமானார் பாடல்களில் வைப்பு தலங்களை குறிப்பது அரிது என்றாலும் இப்பதிகத்தில் முதல் பாடலிலேயே பருப்பதம் கயிலாயம் நெய்த்தானம் துருத்தி உள்ளிட்ட தலங்களை குறிப்பது எண்ணி மகிழத்தக்க ஒன்றாம்

பண்: குறிஞ்சி

பாடல்

மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

கந்தனைமலிகனை கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ ரிசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.

பொருள்

கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந் தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?

மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

Please rate this

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1 No ratings yet.

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1

உமாபதிசிவம்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களுல் உமாபதிசிவாச்சாரியார் அருளிய கொடிக்கவி என்ற நூலிலிருந்து முதல் பாடலின் விளக்கத்தை இங்கு காண்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this