சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ? 5/5 (3)

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ?

1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.

2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.

3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.
சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது

4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.

5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.

6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.

7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் கடைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.

8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

Please rate this