அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ? அச்சிட்டு வழங்க துண்டறிக்கை 4.8/5 (5)

அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ? அனைவருக்கும் அச்சிட்டு வழங்க ஏதுவான ஒரு பக்க துண்டறிக்கை

இங்கு பதிவிறக்கம் செய்க => சைவ சமயம் அடிப்படை துண்டறிக்கை

அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ?

 இறைவன் ஒருவன் ஒருவனே என்று மிகத் தெளிவாக சைவ சமயம் எடுத்துரைக்கிறது. அந்த ஒருவனுக்கு நாம் சூட்டிய பெயர் மங்களம் பொருந்தும் சிவம். பிறப்பு, இறப்பு, ஆதி, அந்தம், விகாரம், ஆண், பெண் என்று ஏதும் இல்லாத இறைவன், சிவபெருமான் ஒருவன் ஒருவனே. மற்ற யாவரும் பிறப்பர், இறப்பர், விகாரமடைவர். அந்த சிவன் 8 குணங்களை உடையவர். யாரையும் சாராமல் தனித்து இயங்குதல், தூய உடம்பினனாதல், மலங்களின் (குற்றங்கள்) நீங்கி நிற்றல், தானே அறியும் அறிவைப் பெற்றிருத்தல், எல்லா இடமும், எல்லா காலமும் ஒருங்கே அறியும் பேரறிவுடைமை, எல்லையற்ற ஆற்றல், கருணை, இன்பம் ஆகிய 8 குணங்களும் உடையவன். தனக்கென்று எந்த தேவையும் இல்லாத சிவம், உயிர்கள் படும் துன்பத்தை அறிந்து தன் நிலையிலிருந்து கீழிறங்கி வந்து அருவம், அருவுருவம் (லிங்கம்), உருவம் ஆகிய உருவங்களை எடுத்து உயிர்களுக்காக அருள் புரிகிறான். சிவபிரானுடைய ஆற்றலாகிய சக்தியை நாம் பராசக்தியாக பெண் உருவம் கொடுத்து வழிபடுகிறோம். சிவபெருமானின் சக்தியை விநாயகர், முருகராகவும் உருவகித்து சிவகுடும்பமாக வழிபடுகிறோம். விநாயகர், முருகர், பராசக்தி இவர்கள் வேறு சிவபெருமான் வேறு அல்ல. அனைவரும் சிவபெருமானின் வடிவமே. ஆணவ மலம் என்பது அறிவை மறைக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஒரு அருவப் பொருள். இந்த ஆணவம் உயிர்களின் அறிவை மறைத்து, உயிர்களுக்கு அறியாமையைக் கொடுத்து உயிர்களைத் துன்புறச் செய்கிறது. உயிர்களின் அத்தனை துன்பங்களுக்கும் இந்த அறியாமை தான் காரணம். இதை நீக்கவே இறைவன், மாயை என்ற தன் சக்தியிலிருந்து இந்த உலகத்தை தோற்றுவித்து படைத்தல், காத்தல், ஒடுக்குதல் (அழித்தல்), மறைத்தல், அருளல் ஆகிய 5 தொழில்களைச் செய்கிறான். இதனால் உயிர்கள் அறிவு பெற்று, ஆணவ மலத்திடமிருந்து விலகி, இறைவனை உணர்ந்து முக்தி பெற்று பேரின்பம் அடைகின்றன. இறைவன்(பதி), உயிர்கள் (பசு), சடப்பொருட்களாகிய தளை (பாசம்), இந்த மூன்றும் அழிக்கமுடியாத என்றும் உள்ள நித்தியப் பொருட்கள். சிவனும் சைவ சமயமும் அநாதியானது. அதாவது, தோற்றமும் முடிவும் இல்லாதது. சிவவழிபாடு எக்காலத்தும் இருந்தது, இருக்கிறது, இருக்கும். சிவனை வழிபடும் அடியார்கள் எக்காலத்தும் இருப்பர். சிவவழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை வேதங்களும் ஆகமங்களுமாக இறைவனே நமக்கு அருளியுள்ளான். ரிக், யசூர், சாமம், அதர்வணமாக, வடமொழி வேதங்கள் 4, தற்போது நம்மிடம் உள்ளது. அதற்கும் முன்னால், அறம், பொருள், இன்பம், வீடு என்று 4 தமிழ்மொழி வேதங்கள் நம்மிடம் இந்ததாக குறிப்புகள் உள்ளன. சிவ ஆகமங்கள் 28. வேத, சிவஆகமங்களில் உள்ள அதே கருத்தை நம் முன்னோர்கள் தமிழில் பன்னிரு திருமுறைகளில் பதிவிட்டுள்ளனர். தோத்திர நூல்களாகிய பன்னிரு திருமுறைகளிலும் வேத ஆகமங்களிலும் உள்ள கருத்துக்களைப் பின்னர் 14 சாத்திர நூல்களில் மெய்கண்ட சாத்திரமாக தொகுத்தனர். பன்னிரு திருமுறையும், 14 சாத்திரமும் நாம் யாவரும் தினமும் படித்து ஓதி வழிபடக்கூடிய நூல்களாகும். இந்த நூல்களையும் அருளி சைவ சமயத்தை மீட்டெடுத்த சமய குரவர்களாகிய (குருமார்கள்) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரும், சந்தான குரவர்களான மெய்கண்டார், அருநந்திசிவம், மறைஞானசம்பந்தர் மற்றும் உமாபதிசிவம் ஆகியோரும் நம் சமயத்திற்கு பங்களித்திருப்பது சிவபெருமானுடைய திருவருள். சைவநெறிப்படி வாழ்ந்து காட்டி 63 நாயன்மார்களும் நமக்கு வாழ்வின் முன்னோடிகளாக உள்ளனர். நாம் அனைவரும், 63 நாயன்மார்களின் வரலாற்றைப் படித்து, நம் குழந்தைகளுக்கும் அதை எடுத்துக்கூறி, திருமுறைகளை தினமும் ஓதி அந்த பிறப்பு இறப்பில்லாத சிவபெருமானைத் தினமும் விளக்கேற்றி வீட்டிலும், திருக்கோவில் வழிபாடு செய்தும் போற்றுவோம். யாவரும் இறைவனே காட்டிய இந்த நன்னெறியில் நிற்க, வான்மழை வளாது பெய்தலும், அனைத்து தீவினைகள் அகன்றும், எல்லா நன்மைகளும் பெற்று, நாமும், நாடும், மக்கள் அனைவரும் இன்பமாகவும் அமைதியாகவும் வாழ்வர்.

http://www.saivasamayam.in வலைதளத்தில் சைவ சமயம் பற்றிய அடிப்படை செய்திகளும், படங்களும், காணொளிகளும் யாவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு பகிரப் பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், முகநூல், வாட்சப் குழுக்கள் ஆகியவற்றில் பகிர்ந்தும் நம் பாரத பூமியில் மீண்டும் ஆன்மீகம் தழைத்தோங்க பங்களிக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் திருக்கூட்டம், சென்னை.

இங்கு பதிவிறக்கம் செய்க =>  சைவ சமயம் அடிப்படை துண்டறிக்கை

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *