இறைவனுக்கு தீப ஆராதனை காட்டப்படுவதன் தத்துவம் என்ன? ஏன் தீபம் தொட்டு வணங்குகிறோம்?
கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசனஞ் செய்யும் காலத்தில், சிவாச்சாரியார் மந்திரங்களும் திருமுறைகளும் ஓதி இறுதியில் கற்பூரம் அல்லது விளக்கு தீப வழிபாடு செய்கிறார். அந்த தீபத்தை இறைவனைச் சுற்றிக் காட்டுகிறார். அந்த நேரத்தில் பக்தர்கள் அனைவரின் கவனமும், சிந்தனையும் ஒருங்கே இறைவனை நினைந்து வேண்டிக்கொள்ளும். தேவையில்லாத சத்தங்கள் ஒடுங்க, சங்கொலி, மணி, வாத்திய ஒலிகளும் மிகுந்து ஒலிக்கின்றன. பின்னர், அந்த தீபத்தை நமக்குக் காட்டி, நாமும் அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். இந்த தீபத்தின் தத்துவம் என்ன?
இதை உணர்ந்து கொள்ள, ஒரே ஒரு விடயம் நாம் அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இறைவன் என்பவன் ஒருவனே. அவன் பிறப்பு இறப்பிற்க்கு அப்பாற்பட்டு, அவனுடைய உண்மையான சொரூப நிலையில் கண்களுக்குத் தெரியாத எந்த நிறமும் உருவமும் இல்லாத நிலையில் இருந்து நாம் இறைவனை அறியும் பொருட்டு, கீழிறங்கி வந்து, அருவம், அருவுரும், உருவம் ஆகிய நிலையை எடுக்கிறான். அவ்வகையில் அவன் சோதியாக இருக்கிறான். கண்களுக்குப் புறத்தே அமையும் தீப சோதியாகவும், உள்ளே உள்ளத்தின் உள்ளே இருளைப் போக்கி ஞாயிறு போன்று எழுகின்ற சோதி உருவாகவும் இறைவன் இருக்கிறான்.
எனவே, நாம் கோவில்களில் நேரடியாக கண்களில் காணும் அருவுருவ நிலையான சிவலிங்க வடிவம் அல்லது உருவ வடிவமான நிலையில், அம்மைய்ப்பராக, தென்முகக் கடவுளாக, நடராசனாக, சந்திரசேகரராக, சோமஸ்கந்தராக என்று பல்வேறு உருக் கொண்டு இருந்தாலும், அவனுடைய உண்மையான நிலையான சோதி வடிவத்தை நாம் உணர்ந்து கொண்டு அதை நம் மனக் கண்களில் கண்டு போற்றித் துதிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தீப ஆராதனை காட்டப்படுகிறது.
சோதி வடிவாக இருக்கும் இறைவனை நாம் வணங்கி, அவனது அருளை நாம் கண்களில் ஒற்றிக் கொண்டு நன்றி சொல்கிறோம். இன்னும் ஆழமாக இதை சிந்திக்க, இந்த காணொளி உதவும்.