காரைக்கால் அம்மையார் திருப்பதிகம் -திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2 No ratings yet.

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம்

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2

சிவதீபன் -📱9585756797

குறிப்பு: திருவாலங்காட்டில் “அண்டமுற நிமிர்ந்தாடும் அப்பனது திருநடம் கண்டபோது அம்மை பாடிய பதிகங்களுள் இது இரண்டாவதாம்”

சுடுகாட்டின் காட்சியமைப்புகளையும் பேய்களின் இயல்புகளையும் விரிவாக பதிவு செய்யும் இப்பாடல்கள் மிகுந்த சுவை மிகுந்தவைகளாம்

இறைவனது ஆடல்கோலம் பற்றி விரிவாகப் பேசும் இப்பாடல்களின் நிறைவில் “காடுமலிந்த கனல்வாய் எயிற்று காரைக்கால் பேய்” என்று தம்மை குறித்து கொள்வது அம்மையாருக்கே உரிய தனிப்பெரும் சிறப்பாம்

இப்பதிகத்தின் நிறைவான இரண்டு பாடல்கள் இவை

பாடல்
பண் : இந்தளம்

குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென்று இசைபாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே

சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்  ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடியாடப் பாவம் நாசமே
பொருள்

வயிறு பெருத்ததும் சிறிய உருவம் உடையவையும் பெரியதுமான பேய்கள் கரிய இருட்டில் மிகநெருக்கமாக வாயில் தீயை உடைய கோலத்தில் சின்னஞ்சிறிய குழந்தை பேய்களுக்கு விளையாட்டு காட்டியபடி “கொள்” என்ற ஒலியெழுப்பியபடி ஆடும் மயானத்தில் சடைகள் பொன்போல மிளிர்ந்திட விமலன் ஆடுகிறார்

சடைமேல் மதிசூடி சுழன்று சுழன்று திருநட்டம் செய்பவரும் ஆடுகின்ற அரவத்தை இடுப்பில் கட்டியவருமான இறைவரது அருளினால் காட்டில் வாழ்கின்ற கனல்போன்ற பற்களை உடைய காரைக்கால் பேயாகிய நான் சொன்ன இப்பாடல்களை பாடியாடுபவர்களது பாவம் நாசமாகும்

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *