சமயக் கல்வியின் இன்றியமையாமை

சமயக் கல்வியின் இன்றியமையாமை 3.33/5 (3)

சமயக் கல்வியின் இன்றியமையாமை
1. கல்வியின் பெருமை

2. சமயகல்வியின் பெருமை

3. அன்றைய சமயகல்வி

4. இன்றைய சமயகல்வி

5. நாளைய சமயகல்விக்கு இன்றைய விதை

கல்வியின் பெருமை

இன்று, ஒரு வானஊர்தியை எடுத்துக் கொண்டு உலகை சுற்றி வந்தால்….

மலேசியாவில் பத்துகுகை முருகன் கோவில் உள்ளது. சிங்கப்பூரில் கல்லாங் சிவன் கோவில் உள்ளது. பிரான்ஸில் சிவன் கோவில்கள் இருக்கிறது, ஆஸ்திரேலியாவில் இருக்கிறது, அமெரிக்காவில் இருக்கிறது, இங்கிலாந்தில் இருக்கிறது, உலகம் முழுவதும் நம் சைவ கோவில்கள் இருக்கின்றன இன்று. கோவில்கள் இல்லாத நாடே இல்லை எனலாம் என்னும் அளவிற்கு நம் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இது எவ்வாறு சாத்தியமாயிற்று ? இவற்றில் பெரும்பான்மையான கோவில்கள்  இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்டது.  இவ்வுலகில் முதன்முதலில் இறைவனைப் பற்றிய சிந்தனை செய்து, அவனருளாளே அவனைத் துதித்து, அவனை அறிந்து, இந்த உலகம் முழுவதும் மக்களுக்கு அறிய வைத்தது சைவ சமயமே. சைவ சமயம் பன்நெடுங்காலம் உலகம் முழுவதும் இருந்தது. இதற்கு சான்றுகளே இன்று பல்வேறு நாடுகளின் பூமிக்கடியில் இருந்து சிவலிங்கமும் சிவன் கோவிலும் வெளிவருவதே நம் கண் முன்னர் நிற்கும் வாழும் சான்றுகள். பின்னர் பல அரசியல் காரணமாக சில பகுதிகளில் வெவ்வேறு மதங்கள் நிறுவப்பட்டன. ஆனால், கடந்த சில நூறாண்டுகளில், மீண்டும் சைவ கோவில்கள் உலகெங்கும் புதுமையாக நிறுவப்பட்டு வருவதையே நாம் பார்க்கிறோம்.
இலங்கையில் இனப்பிரச்சனை காரணமாக உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் இது சாத்தியமாயிற்று.

இலங்கைத் தமிழர்கள் நம் சைவ சமயத்தில் மிகவும் பிடிப்பாக அழுத்தமாக இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் 7 அரை கோடி தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம் ? சமயக்கல்வி ஒன்றே பெரும் வித்தியாசம். இந்த சமயக்கல்வியே இலங்கைத் தமிழர்களை நம் சமயமும் மொழியும் கலாசாரமும் உலகெங்கும் பரவ உதவி செய்தது என்றால் அது மிகையில்லை. இலங்கையில் பௌத்த அரசு இருப்பினும் தமிழர்களுக்கு தமிழ் சமய பாடங்களே நடத்தப்படுகிறது. தமிழ்ப் பாடசாலைகளில் சைவப்பாடம் கற்பிக்கப்படுகிறது. சமயகல்வி பெற்ற எவரையும் மதம் மாற்ற இயலாது. நம் சமயத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்தவர் எவரும் மதம் மாற மாட்டார்கள்.

கல்வியின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துவதை பாருங்கள்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

அதிகாரம்: கல்வி, குறள் 393.

கல்வி கற்காதவர் கண்ணில்லாத குருடர் என்றே சாடுகிறார் வள்ளுவர். கல்வி ஒருவருக்கு அவ்வளவு அவசியமானது. அந்த கல்வியின் அவசியத்தை நீங்கள் உணர வேண்டுமாயின், ஒரு நாள் இந்த பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் கண்களை நல்ல துணியைக் கொண்டு இறுக கட்டிக் கொண்டு ஒரே ஒரு நாள் முழுவதும் வாழ்ந்து பாருங்கள். நிஜமாகவே முயற்சி செய்து பாருங்கள். அப்போது தான் உங்கள் கண்களின் அருமை உங்களுக்குத் தெரியும். கல்வி இல்லாதவனுடைய வாழ்வும் குருடனின் வாழ்கை போலவே இருக்கும்.

சமயக்கல்வியின் பெருமை
அப்போ சமயக்கல்வி ? நம் ஆன்மா கடைத்தேற, இறைவன் திருவருள் பெற, இப்பிறப்பில் இன்பமும், மறுபிறப்பு இல்லாமல் இறைவன் திருவடி இன்பம் அனுபவிக்கவும் கண்போல நமக்கு வழிகாட்டுவது சமயக்கல்வியே. எப்பிறப்பிறப்பிற்கும் நமக்கு எப்போதும் இன்பம் தருவிக்கும் வழியையும், பிறப்பு சுழலில் இருந்து விடுபட்டு பூரண இன்மான இறைவன் திருவடி நீழலை எய்தவும் வழிகாட்டுவது சமயகல்வியே.

கல்வி இல்லாதவன் கண் இல்லாதவன்.
சமயகல்வி இல்லாதவன் உயிரே இல்லாதவன்.
“சமயகல்வி இல்லாதவன் தன் பிறப்பின் உண்மையையும் நோக்கத்தையும் அறியாதவனாகிறான்”

இன்றைய நிலை

சென்னையின் மக்கள் தொகை 50 லட்சம். சென்னையில் வேளச்சேரியில் மட்டும் எத்தனை பேர் உள்ளனர் ? எத்தனை பேர் பக்தர்கள் ? எத்தனை பேர் கோவிலுக்கு வருபவர்கள் ? எத்தனை பேருக்கு சமயகல்வி உள்ளது ? ஒரு நூறு பேரிடம் சென்று, “ஏனப்பா திருநீறு பூசிகிறாய்” என்று கேட்டால் அநேகர் தெரியாது என்பார்கள், மற்றவர்கள் ஆளுக்கொரு பதிலை கொடுப்பார்கள். எவ்வளவு இழிவான நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை இந்த நிகழ்வே எடுத்துக்காட்டும். இது மிகவும் வேதனையான விடயம். சமயக்கல்வி இல்லாமையே இந்த இழிவான நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம். இன்று சமயக்கல்வி எங்கே கிடைக்கிறது ? சமயக்கல்வி முழுவதுமாக திட்டமிட்டு ஒழிக்கப்பட்டு விட்டது. ஆங்காங்கே நம் பெற்றோர்கள் நமக்கு சொல்லிக்கொடுக்கும் செய்திகளும் விடயங்களும் மட்டுமே நம் பக்குவப்படுத்தி வளப்படுத்துவதாக அமைகிறது. அந்த சிறு விடயமே இன்று நம் சமயத்தைக் கட்டிக் காத்து வருகிறது. அடிப்படை சமய அறிவு இல்லாதவர்களே இன்று மதம் மாறி வருகிறார்கள்.

நேற்றைய நிலை

பாடசாலைகளில் சமயக்கல்வி கொடுக்கப்பட்டது. சமயமும் படிப்பும் ஒன்றாக பிணைந்திருந்தது. சைவம் என்பது ஒரு பாடமாகவே பாடசாலைகளில் இருந்தது. சைவத்தை பற்றி அடிப்படை தெரியாமல் ஒரு மாணவர் கூட வெளியில் வருவது இல்லை. ஞாயிற்றுக்கிழமை தோறும் சமய வகுப்பு கட்டாயமாக அனைவருக்கும் நடத்தப்பட்டது. மேலும் பஞ்ச புராண பாடல்கள் தினமும் கடவுள் வாழ்த்தாக பாடப்பட்ட பின்பு தான் வகுப்புகள் துவங்கும். பஞ்ச புராணம் தெரியாமல் மாணவர்கள் பாடசாலையை விட்டே வெளியே வரமாட்டார்கள். அது மட்டுமல்லாது, பாடசாலையின் வளாகத்தின் உள்ளேயே ஒரு பிள்ளையார் கோவிலோ, சிவன் கோவிலோ இருக்கும். அங்கு வெள்ளிக்கிழமை தோறும் காலையில் சுவாமிக்கு அபிடேகம் நடக்கும். பின்னர் ஒரு 15 நிமிடம் சமயச் சொற்பொழிவு நடக்கும். நம் சமய செய்திகள் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படும். பின்னர் சுவாமிக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கும். இது அனைத்து பாடசாலைகளிலும் கட்டாயமாகஇருந்தது. இவ்வாறு வலுவாக நம் சமய கல்வி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

நாளைய சமயகல்விக்கு இன்றைய விதை

 1. பெற்றோர்களே இன்று மிகப்பெரிய பங்களிப்பு செய்யும் நிலையில் உள்ளார்கள். பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு போதிய அடிப்படை சமயகல்வி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். வாரம் ஒரு முறையேயாயினும் குழந்தைகள் கண்டிப்பாக கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். தல வரலாறுகளை அறிவித்து பல்வேறு பாடல் பெற்ற தலங்களுக்கும் சிறப்பான தலங்களுக்கும் தொடர்ந்து அழைத்துச் செல்லப்பட வேண்டும். சமயகல்வி வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

  2. கோவில்கள், ஆதீனங்கள் போதிய சமயகல்விக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும். இலவசமாக வகுப்புகள் நடத்துவதற்கு இடமளித்தும், இலவசமாக நூல்கள் வழங்கியும் பங்களிக்கலாம்.

  3. ஒவ்வொரு ஞாயிறும் கட்டாயமாக சமய வகுப்புகள் ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு தெருவில் உள்ள ஏதாவது ஒரு வீட்டிலும் நடைபெற வேண்டும்.

  4. பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். குருபூஜை, குடமுழுக்கு, ஆண்டு விழாக்கள், சமய கருத்தரங்குகள், பிரதோஷம், வார வழிபாடுகள், வீடுகளில் சிறப்பு வழிபாடுகள் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும்.

  5. நமக்கு தெரிந்த விடயத்தை நாலு பேருக்கு சொல்ல வேண்டும். அனைத்து ஊடகங்களிலும் சைவ செய்திகள் பகிர வேண்டும். எங்கும் எதிலும் சிவபெருமானின் புகழ் பாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

  6. பள்ளி கல்லூரிகளில் சமய பாடங்கள் கொண்டு வர வேண்டும். இதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.
தூங்கியது போதும் தமிழர்களே, எழுமின், செயலாற்றுமின் !

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
உலகின் தெருக்கள் எங்கும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

சமய கல்வியின் இன்றியமையாமை

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *