சிவனடியார்களுக்கு ஆபத்து விளைவித்தவர்களை மழுவினால் துணிந்து சிவப்பணி செய்த எறிபத்தநாயனார்
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
… திருத்தொண்டத்தொகை, சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
எறிபத்த நாயனார் குருபூசை: மாசி அத்தம்
பகுதி 1: எறிபத்த நாயனாரின் வரலாறு
பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்
பகுதி ௧: எறிபத்த நாயனார் வரலாறு
இருளில் மூழ்கிய உயிர்களைக் காத்து உய்விக்க வந்த எம்பெருமான், பிரபஞ்சத்தைப் படைத்து உலகையும் படைத்து, அதில் அவர்கள் வாழும் நெறியையும் படைத்து, அந்த நெறியின் படி வாழ்ந்த அடியார்களின் வரலாறுகளையும் நமக்குக் காட்டியுள்ளார் ஈசன். அவ்வகையிலே அறுபத்து மூவருள் இப்போது எறிபத்த நாயனார் வரலாறு பற்றி இங்கு சுருக்கமாகக் காண்போம்.
பெரியபுராணம் பகுதி 08 – எறிபத்த நாயனார் புராணம்.
கொங்கதேசத்திலே, அழகிய கருவூர் ஊரில் ஆநிலையப்பர் ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் அவருடைய அடியார்களுக்கும் திருத்தொண்டு செய்து வந்தவர் எறிபத்த நாயனார். சிவன் அடியார்களுக்குத் திருத்தொண்டுகள் செய்வதும், அந்த அடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்திலே அந்த ஆபத்தை ஏற்படுத்தியவர்களை மழுவால் வெட்டியும் சிவதொண்டு புரிந்தார் எறிபத்த நாயனார்.
சிவகாமியாண்டார் என்று ஒரு பெரியவர், தினமும் பூமாலை கட்டிக் கொண்டு கருவூர் ஆநிலையப்பருக்குச் சாற்றி வந்தார். ஒரு நாள் வழக்கம் போல அதிகாலையிலேயே எழுந்து, நீராடி, தன் மூச்சினால் அசுத்தக் காற்றும், முகத்திலிருந்து எச்சியும் விழாத வண்ணம் தன் முகத்தைத் துணியினால் கட்டிக் கொண்டு, திருநந்தவனத்துக்குப் போய், பூவாக மலர்ந்து கொண்டிருக்கும் மொட்டுக்களைக் கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார்.
அவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது, அந்நாட்டு மன்னருடைய பட்டத்து யானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே நீராடி, மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே செல்ல, தன்மேல் ஏறி அமர்ந்திருக்கும் பாகர்களோடும் வீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின் தொடர்ந்து சென்று, அவர் கையிலே தாங்கிய தண்டிலே வைத்திருக்கும் திருப்பூங்கூடையைப் பறித்துக் கீழே சிதறியது. அந்த யானையின் மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக, சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை வேகமாகச் செல்ல, தன் முதுமை காரணமாக வேகமாகச் செல்ல இயலாமல் விழுந்த சிவகாமியாண்டார், நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, மனது கலங்கி, மிகுந்த துக்கங் கொண்டு “இறைவனுக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானை சிந்திவிட்டதே. சிவதா சிவதா” என்று சொல்லி ஓலமிட்டார்.
அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி “உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது” என்று கேட்க, அவர் “சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது” என்றார். உடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு மிகவும் விரைந்து ஓடிப் போய் யானைக்கு மிக அருகே சென்று, மழுவை வீசி அதன் மேலே பாய்ந்தார். இதைக் கண்ட யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப, எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, யானையின் துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.
அந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், மன்னராகிய புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, “பட்டத்து யானையையும், பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று விட்டார்கள்; இதை அரசருக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்” என்று சொன்னார்கள். உடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய், அவரை வணங்கி, அந்தச் செய்தியைச் சொன்னார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த இடத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடம் தரித்த எறிபத்தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாமல், “யானையைக் கொன்றவர் யாவர்” என்று கேட்டார்.
பாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, “மழுவைத் தரித்துக்கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்” என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் “இவர் சிவபத்தராக இருப்பதால், அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்ல மாட்டார். அந்த யானை என்ன குற்றம் செய்தது என்று தெரியவில்லையே” என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, “இந்த அடியவர் யானைக்கு எதிரே சென்ற பொழுது அந்த யானையால் இந்த அடியவருக்கு யாதொரு துன்பமும் நிகழாமல் இருக்கும்படி பூர்வசென்மத்திலே தவஞ்செய்திருக்கிறேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ” என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, “சுவாமீ! தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னம் அறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா? சொல்லி யருளும்” என்றார். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, “சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்” என்றார்.
புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, “சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது, அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்வது நீதியன்று” என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, ‘இதினாலே கொன்றருளும்” என்று நீட்டினார். எறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. “இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்” என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, “பட்டத்து யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கம் கொள்ளாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே” என்று எண்ணி “முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு” என்று நினைத்து, அந்த வாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.
அப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, “அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை பூக்களைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்” என்று ஓர் அசரீரீ வாக்கு ஆகாயத்திலே ஒலித்தது. உடனே யானையும் பாகர்களும் இறவாதது போல எழுந்து நின்றனர். அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து வணங்கினார். புகழ்ச்சோழநாயனாரும் அந்த வாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து வணங்கினார். பின் இருவரும் எழுந்து அசரீரி வாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். பாகர்கள் பட்டத்து யானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, “அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்” என்று விண்ணப்பஞ்செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் சாத்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பக்தி வலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக்குத் தலைவரானார்.
பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்
திருச்சிற்றம்பலம்.