சிவாலயங்கள் அறிவோம். சிவாலயங்கள் செல்வோம்.
ஆறுகளையும் நீர் நிலைகளையும் மையமாகக் கொண்டே அன்றைய ஊர்கள் அமைந்தன. ஊர்களின் மைய பகுதியில் சிவாலயம் இருக்கும். அதாவது, சிவாலயத்தைச் சுற்றித் தான் ஊரே வடிவமைக்கப் பட்டிருக்கும். ஊரின் பெயரே அவ்வூரின் சிறப்பு மிக்க பெயரான சிவபெருமானின் திருநாமமாகத் தான் இருக்கும். ஆகையாலே, ஊரின் பெயரைச் சொன்னாலே, சிவபெருமானின் மந்திரத்தை ஓதியதற்க்கும் சமம். சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமானின் பாடல்களில் ஊர்களின் பெயர்களைத் தொகுத்தே பாடல்களைக் காணலாம். ஆறாம் திருமுறையில், முழுப் பாடலுமே திருத்தலங்களின் பெயர்களைத் தொடுத்தே திருத்தல தாண்டகம் என்று பதிகமாக பாடியுள்ளார். அந்த பாடல் இங்கே:
ஆறாம் திருமுறை. திருநாவுக்கரசர் அருளிய திருத்தல திருத்தாண்டகம்
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிருறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம்
கல்லில் திகழ் சீரார் காளத்தியும் கயிலாய நாதனையே காணலாமே.
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானமும் கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப் பேருங் கயிலாய நாதனையே காணலாமே.
இடைமருது ஈங்கோ இராமேச்சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேரூர்
சடைமுடி சாலைக்குடி தக்கரூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டைகோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே.
எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பை யங்கோட்டூர் இறையாய் சேரி
அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடு தண்டுரை அழுந்தூர் ஆறை
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்துங் கயிலாய நாதனையே காணலாமே.
கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளுங் கயிலாய நாதனையே காணலாமே.
மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
வெண்ணை அருட்டுரை தண்பெண்ணாடகம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பாலையுங் கயிலாய நாதனையே காணலாமே.
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப் பெரும்
பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக் காரோணத்துங் கயிலாய நாதனையே காணலாமே.
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைகாட்டுள்ளும்
மஞ்சார் பொதியின் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீசுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே.
திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம் ஐயாறசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டங் கருகாவூருங் கயிலாய நாதனையே காணலாமே.
நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் உற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூருங் கயிலாய நாதனையே காணலாமே.
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலி நெய்த்தானத்தோ டெத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணலாமே.
திருச்சிற்றம்பலம்.
ஆகவே, சிவபெருமான் குடிகொண்டு அருள் புரியும் தலங்களின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தாலே, சிவபுண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
திருத்தலங்கள் சென்று வழிபடுவீர்
தேவார பாடல் பெற்ற தலங்கள், இன்று வரை நமக்குத் தெரிந்த 276 தலங்களில் சிவபெருமான் பல்வேறு திருநாமங்களோடு, அடியவர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார். திருவாசகத் தலங்கள், மலைகளின் மேலே உள்ள தலங்கள் என்று எண்ணற்ற தலங்களில் பெருமான் குடிகொண்டு அருள் பாலித்து வருகிறார். நாம் செய்திருக்கும் புண்ணியங்களைப் பொறுத்து நாம் இந்த தலங்களுக்கெல்லாம் சென்று வழிபட பெருமான் அருள் புரிவார். இந்த தலங்களை அறிந்து, இந்த தலங்களைப் பற்றி தகவல்களை எண்ணியும், சிவபெருமானையும் எண்ணிக் கொண்டிருந்தால், அவர் நிச்சயம் அந்தந்த கோவிலுக்கு உங்களை அழைப்பார். அருள் தருவார்.
தேவார பாடல் பெற்ற தலங்களை அறிந்து கொள்ள கீழேயுள்ள வலைதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தலங்களையெல்லாம் கூகுள் வரைபடத்திலேயே காண:
https://shaivam.org/temples-special/thevara-paadal-petra-thiruthalangal
இந்த திருத்தலங்களை இணைத்து மிக இனிமையான கேட்க கேட்க திகட்டாமல், நம்முள் உள்ளே சென்று திருத்தலங்களை விதைக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. இதைக் கேட்க கேட்க, மனனமாகி, நமக்கு பல்வேறு தலங்களை நம் மனதில் நிற்கச் செய்து அங்கே இருக்கும் பெருமானிடம் விண்ணப்பம் கேட்டு அங்கே சென்று அவரைத் தரிசிக்கும் பாக்கியமும் சித்திக்கும். ஆகவே, இந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருங்கள்.
திருச்சிற்றம்பலம்.
excellent work