சென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் 5/5 (5)

சென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோயில்

சென்னையில் உள்ள சிவாலயங்களில் பார்க்க வேண்டிய கோவில்.
காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ளது பள்ளிக்கரணை என்ற ஊர். இங்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஆதிபுரீஸ்வரர் கோவில். இது வேளச்சேரி – தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை குளம் எதிரில் அமைந்துள்ளது. பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த திருத்தலம்.
மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மழன் என்று பெயரிட்டு வளர்த்தார் முனிவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மழன், ‘தந்தையே! இறைவனை அடைய தவத்தினால் தானே முடியும்’ என்று கேட்டான். அதற்கு முனிவர், ‘தவம் செய்தால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால் சிவ பூஜையை பக்தியுடன் செய்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது’ என்றார்.
அது முதல் சிவபூஜை செய்ய தொடங்கினான் மழன். அதன் பயனாக மழன் முனிவர் என்று பெயர் பெற்றார். ஒரு முறை அவர் சிவபெருமானிடம் வேண்டினார். *‘என் வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். ஆகையால், சிவபூஜை செய்ய வில்வ இலைகளை பறிப்பதற்காக, வில்வ மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருப்பதற்காக என் கால்களை புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலி நகமாகவும் மாற அருள் செய்ய வேண்டும்’* என்று வேண்டினார். வேண்டியது போலவே மழன் முனிவரின் கால்கள் புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலியின் நகங்களாகவும் மாறிவிட்டன. புலியை, சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்று அழைப்பார்கள்.
எனவே சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற மழன் அன்று முன் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். பின்னர் வியாக்ரபாதர், வில்வ மரங்கள் அடர்ந்த சோலையை தேடிச் சென்றார். அப்படி அவர் வந்த இடம் வில்வ மரங்கள் நிறைந்து மனதிற்கு பிடித்த இடமாக இருந்தது. அந்த இடம்தான் பள்ளிக்கரணை.
வியாக்ரபாதர் இந்த பகுதியில் வில்வ இலைகளை பறித்து அர்ச்சனை செய்து செண்பக மலர் சூட்டி மகிழ்ந்தார்.
பிற்காலத்தில் சோழ மண்டலத்தில் உள்ள சுரது நாட்டு மன்னர் இந்த பகுதிக்கு வந்தபோது, வியாக்ர பாதர் பற்றி கேள்விப்பட்டு, இந்த பகுதியை புலியூர் கோட்டம் என்று அறிவித்ததுடன், பள்ளிக்கரணையில் சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினார்.
இக்கோவில் ராஜகோபுரம் 39 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.
ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அம்பாள் சாந்தநாயகி தெற்கு நோக்கி தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
ஆஞ்சநேயர் மேற்கு பார்த்தும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர்.
ஆதிபுரீஸ்வரர் ஏகலிங்க பாண வடிவமாக உள்ளார். மேலும் இவர் நவக்கிரக நாயகராகவும் இருக்கிறார். எனவே ஆதிபுரீஸ்வரரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
கருவறையில் இறைவனோடு, அம்பாளும் உடனிருப்பது தனிச்சிறப்பாகும். இறைவனும் இறைவியும் சேர்ந்திருப்பதால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு ஆனந்த வாழ்வு கிடைக்கும்.
சாந்தநாயகி என்ற பெயரில் அம்மன் தெற்கு நோக்கி தனிச் சன்னிதி கொண்டுள்ளார். நின்ற கோலத்தில் அருள்புரியும் அம்மனை வணங்கும் பக்தர்களுக்கு எம பயம் நீங்கி நல்ல ஆரோக்கியத்துடன், செல்வ செழிப்பும் நிம்மதியும் வந்தடையும்.
அம்பாள் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் யானை மாலையுடன் உள்ள தோற்றம் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் குடும்ப சகிதமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அறுபடை வீடுகளில் பழமுதிர்சோலையில் மட்டும் தான் குடும்ப சகிதமாக முருகப்பெருமான் உள்ளார். இந்த தலத்திலும் பழமுதிர்சோலையின் அம்சம் அப்படியே இருக்கிறது.
கருவறை மண்டப விதானத்தில் சூரியனை நாகம் விழுங்கும் காட்சி புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்டபத்தை சுற்றிலும் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண் கொடுக்கும் காட்சி, மயில் சிவபெருமானுக்கு பூஜை செய்வது, நாகம் பூஜை செய்வது போன்றவை காட்சியளிக்கின்றன.
பஞ்ச வில்வம் என்று சொல்லப்படும் வில்வமரம், விளாமரம், நொச்சி, கிளுவை, மாவிலங்கம் ஆகிய மரங்கள் இத்தலத்தில் உள்ளன. மேலும் செண்பகம், பன்னீர், மந்தாரை, சென்றை மலர், செம்மரம், ருத்ராட்ச மரம், வெள்ளெருக்கு, அரசு, இலுப்பை, வேங்கை, மூங்கில், பாராய், அரளி, பாரிஜாதம், வன்னிமரம், வேம்பு, நாகலிங்கம், முல்லை, மகிழமரம் போன்றவை இங்கு தல விருட்சங்களாக இருக்கின்றன. இந்த கோவிலில் மற்றொரு சிறப்பும் இருக்கிறது.
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
 

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *