திருச்சி திருஆனைக்கா கோவிலில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
திருச்சியில் மிகவும் புகழ்பெற்ற சிவதலம் திருஆனைக்கா. பஞ்ச பூத தலங்களில் நீர் தலமாக விளங்குகிறது இந்த தலம். இங்கு சிவபெருமான் ஜம்புகேசுவரர் என்ற திருநாமத்தோடு அகிலாண்டேசுவரி அம்மையோடு எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இது தேவார பாடல் பெற்ற தலங்கள் 276 இல் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தாயுமானவர் ஆகியோர் இந்த தலத்து இறைவனைப் போற்றி பதிகம் பாடியுள்ளனர்.
இந்த கோவிலின் அன்னதானக்கூடம் அருகே ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவைச் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, தங்க நாணய புதையலை இவர்கள் கண்டனர். சுமார் 500 க்கும் மேற்பட்ட தங்க நாணயங்கள் கிடைத்தன. இன்றைய மதிப்பில் இது தோராயமாக 61 லட்சமாகும். இருப்பினும் இவை பழங்கால நாணயங்கள் என்பதால், இந்த தங்கத்தின் தரம் ஆகியவற்றைப் பொருத்து இதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
இதைக் கேள்வியுற்ற ஸ்ரீரங்கம் காவல் துறையினர் விரைந்து வந்து இந்த தங்க நாணயங்களைக் கைப்பற்றி பத்திமாக எடுத்துச் சென்றனர். இந்த தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டு அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.