திருமுறை 1.1 பிரமபுரம் தோடுடைய செவியன் 4/5 (1)

பன்னிரு திருமுறை
பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்
1.1 – பிரமபுரம் – தோடுடைய செவியன் – Sirkazhi

padhigam 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி )

1.1 தோடுடைய செவியன் Verses: 1.1 – thOdudaiya seviyan – pdf : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHOE90a3pXNkktSHc/view?usp=sharing

Discussion audio – Part-1: 01_001 01 thOdudaiya seviyan – Part-1 – 2015-05-30 mp3 : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHVkNkMFluMjJNYTA/view?usp=sharing
Discussion audio – Part-2: 01_001 02-06 thOdudaiya seviyan – Part-2 – 2015-06-06 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHTG5aMUpqMjk3cFE/view?usp=sharing
Discussion audio – Part-3: 01_001 07-11 thOdudaiya seviyan – Part-3 – 2015-06-20: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHWmQ2NWFfNDQ5OVU/view?usp=sharing

********
The discussion is available on YouTube:
All 3 parts: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE_9VE7jolvpFw1_7DdFwfNo
********

தோடுடைய செவியன்” பதிகம் – (திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார்) – thOdudaiya seviyan padhigam – sung by Thiruththani Swaminathan Odhuvar: http://www.shaivam.org/gallery/audio/tis-tns-nalamiku-padhikangal.htm (The direct link is: http://www.shaivam.org/gallery/audio/thiruthani-swaminathan/nalamiku-padhikangal/tis-tns-np-01-thodudaiya-seviyan.mp3 )

You can find the audio of the first and last song of this padhigam – தோடுடைய செவியன் (Thodudaiya seviyan) – sung by Pondicherry Sambandam gurukkal:
http://www.shaivam.org/gallery/audio/tis-smbnd-grkl-sam-devaram.htm (direct link: http://www.shaivam.org/gallery/audio/sambanda-gurukkal/tis-sg-smbdr-dvrm-01-thodudaiya-seviyan.mp3 )

If you need English translation for this padhigam – 1.1 – thOdudaiya seviyan
– by V. M. Subramanya Ayyar – at IFP site: by V. M. Subramanya Ayyar – at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_001.HTM

சீகாழி (சீர்காழி) (பிரமபுரம்) – Sirkazhi – piramapuram temple – பிரம்மபுரீஸ்வரர் கோயில் தகவல்கள் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=495

V. Subramanian
==================== ===============

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி – ( உமாபதி சிவம் )

பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்,
வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடையெடுத்த
பொறியுறு பொற்கொடி யெம்பெரு மானமர் பொன்னுலகே. – (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி)

பதிகம் 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி ) ( பண் : நட்டபாடை )

பதிக வரலாறு:

சோழ நாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருகும் கவுணிய குலத்தில், சிவதீட்சை பெற்ற வேதியர்குல திலகராகிய சிவபாத இருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத் தோங்க, மிகுசைவத் துறைவிளங்க, சித்திரைமாதத்துத் திருவாதிரைத் திருநாளிலே திருமகனார் ஒருவர் தோன்றினார். இவருக்கு மூன்றாமாண்டு நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாத இருதயர் உடன் வந்த சிறுவரைக் குளக்கரையில் உட்கார வைத்து, நீருள்மூழ்கி `அகமர்ஷணம்` என்னும் திருமந்திரத்தைச் செபித்துக் கொண்டிருந்தார். அங்ஙனம் அவர் மூழ்கியதும் உடல் தந்தையைக் காணாது சிறிதும் தனித்திரார் என்ற வியாசத்தால் (வியாஜம் – Pretext, pretence;) முழுமுதல்தந்தையாகிய சிவபெருமானது திருவடிகளை முறைப்படி வழிபட்ட பண்டையுணர்வு மூண்டெழ, பிள்ளையார் திருத்தோணிச்சிகரம் பார்த்து, `அம்மே! அப்பா!` என அழுதார். இவ்வொலி திருத்தோணி மலையில் வீற்றிருக்கும் அம்மையப்பர் திருச்செவியில் சென்று சேர்ந்தது. முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னி, அவர்க்கருள் புரிவதற்காகப் பெருமான் பொருவிடைமேல் அம்மையுடன் எழுந்தருளினார். எவ்வுலகும் தொழநின்ற மலைக்கொடியைப் பார்த்து, `துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத்து ஊட்டுக` என ஆணை தந்தார். அப்படியே அம்மையாரும் கறந்தருளி, எண்ணரிய சிவஞானத்தின்னமுதம் குழைத்து `உண்அடிசில்` என ஊட்டினார்; கண்ணீரைத் துடைத்தார்; அழுகையை அகற்றினார். உயிர்த் தந்தையும் தாயுமாகிய இவர்களே திருமேனி தாங்கி வெளிப்பட்டுவந்து இங்ஙனம் அருளப் பெற்றமையால் இவர் ஆளுடைய பிள்ளையார் எனவும் தேவர் முதலானோர்க்கும் அறிய முடியாத சிவஞானம் சம்பந்திக்கப் பெற்றமையால் திருஞானசம்பந்தர் எனவும் அழைக்கப் பெறுவாராயினார். செப முடித்து நீராடிக் கரையேறிய சிவபாத இருதயர் கடை வாய் வழிந்து கிடக்கின்ற பாலைக் கண்டு “நீ யார் தந்த பாலை உண்டாய்? எச்சில் மயங்கிட உனக்கு இது இட்டாரைக் காட்டு` என்று சிறுகோல் கொண்டு ஓச்சி உரப்பினார். குழந்தை யாகிய பிள்ளையார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்க வலக் கையைச் சிரத்தின் மேலுயர்த்தி, வானிடமெல்லாம் பரவி நிற்கும் ஒளியோடு விடையின்மீது பண்ணிறைந்த அருமறைகள் பணிந் தேத்த, பரமகருணையின் வடிவாகிய பராசக்தியோடு நின்ற அருள் வண்ணப் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உளம் நிறைந்து வழிந்த உயர் ஞானத்திருமொழியால் இத்திருப் பதிகத்தைப் பாடியருளினார்.

#1970 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 72
சீர்மறையோர் சிவபாத விருதயருஞ் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யு நியமங்கண் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார் தமைநோக்கி
“யாரளித்த பாலடிசி லுண்டதுநீ?” யெனவெகுளா,

#1971 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 73
“எச்சின்மயங் கிடவுனக்கீ திட்டாரைக் காட்”டென்று
கைச்சிறிய தொருமாறு கொண்டோச்சக், காலெடுத்தே
யச்சிறிய பெருந்தகையா ரானந்தக் கண்டுளிபெய்
துச்சியினி லெடுத்தருளு மொருதிருக்கை விரற்சுட்டி,
(உச்சியினில் —- பாடபேதம் – உச்சியின்மேல்?)

#1972 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 74
விண்ணிறைந்த பெருகொளியால் விளங்குமழ விடைமேலே
பண்ணிறைந்த வருமறைகள் பணிந்தேத்தப் பாவையுடன்
எண்ணிறைந்த கருணையினா னின்றாரை யெதிர்காட்டி
யுண்ணிறைந்து பொழிந்தெழுந்த வுயர்ஞானத் திருமொழியால்,

#1973 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 75
எல்லையிலா மறைமுதன்மெய் யுடனெடுத்த வெழுதுமறை
மல்லனெடுந் தமிழாலிம் மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
பல்லுயிருங் களிகூரத் தம்பாடல் பரமர்பாற்
செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து,

#1974 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 76
செம்மைபெற வெடுத்ததிருத் “தோடுடைய செவிய”னெனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுர மேவினார்
தம்மையடை யாளங்க ளுடன்சாற்றித் தாதையார்க்
“கெம்மையிது செய்தபிரா னிவனன்றே” யெனவிசைத்தார்.
————–

பதிகம் 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி ) ( பண் : நட்டபாடை )

பாடல் எண் : 1
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 2
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 3
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 4
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 5
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 6
மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 7
சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 8
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 9
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 10
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 11
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
——————-

1.1 Padhigam songs 8, 9, 10, 11 – explanation in periyapurANam:

#1975 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 77
மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற்
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளு மெனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்க னெடுத்துமுறிந் திசைபாட
வண்ணலவற் கருள்புரிந்த வாக்கப்பா டருள்செய்தார்.

#1976 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 78
தொழுவார்க்கே யருளுவது சிவபெருமா னெனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும் பறவையுமா யெய்தாமை
விழுவார்க ளஞ்செழுத்துந் துதித்துய்ந்த படிவிரித்தார்.

#1977 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 79
வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை
நாதர்நெறி யறிந்துய்யார் தம்மிலே, நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே யெனமொழிந்தா ரெங்கள்பிரான் சம்பந்தர்.
(நாதன்நெறி — பாடபேதம் – நாதர்நெறி?)

#1978 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 80
திருப்பதிக நிறைவித்துத் திருக்கடைக்காப் புச்சாத்தி
யிருக்குமொழிப் பிள்ளையா ரெதிர்தொழுது நின்றருள,
வருட்கருணைத் திருவாள னாரருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும் பினிலார்த்துப் பிரசமலர் மழைபொழிந்தார்.
============================= ============================

பதம் பிரித்த பின்:

பூழியர்-கோன் வெப்பு ஒழித்த புகலியர்-கோன் கழல் போற்றி;
ஆழிமிசைக் கல்-மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி;
வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி;
ஊழி-மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி – ( உமாபதி சிவம் )

பெறுவது நிச்சயம், அஞ்சல் நெஞ்சே; பிரமா-புரத்து
மறு அறு பொற்கழல் ஞானசம்பந்தனை வாழ்த்துதலால்,
வெறி உறு கொன்றை, மறி உறு செங்கை, விடை எடுத்த
பொறி உறு பொற்கொடி எம்பெருமான் அமர் பொன்-உலகே. – (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி)

————

#1970 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 72
சீர்மறையோர் சிவ-பாத இருதயரும் சிறு-பொழுதில்
நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறிப்,
பேர்-உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி
“யார் அளித்த பால்-அடிசில் உண்டது நீ?” என வெகுளா,

#1971 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 73
“எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு” என்று
கைச் சிறியது ஒரு மாறு கொண்டு ஓச்சக், கால் எடுத்தே
அச்சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண்-துளி பெய்து
உச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்-கைவிரல் சுட்டி,
(உச்சியினில் —- பாடபேதம் – உச்சியின்மேல்?)

#1972 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 74
விண் நிறைந்த பெருகு-ஒளியால் விளங்கு மழ-விடைமேலே,
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப், பாவையுடன்
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி,
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர்-ஞானத் திரு-மொழியால்,

#1973 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 75
எல்லை இலா மறை-முதல்-மெய்யுடன் எடுத்த, எழுது-மறை
மல்லல் நெடும் தமிழால், இம்-மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப்,
பல்-உயிரும் களி-கூரத், தம் பாடல் பரமர்பால்
செல்லும் முறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து,
[செல்லுமுரை (செல்லும் உரை) —- பாடபேதம் – செல்லுமுறை (செல்லும் முறை) ]

#1974 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 76
செம்மை பெற எடுத்த திருத் “தோடுடைய செவியன்” எனும்
மெய்ம்மை-மொழித் திருப்பதிகம் பிரம-புரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றித், தாதையார்க்கு
“எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே” என இசைத்தார்.

பதிகம் 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி ) ( பண் : நட்டபாடை )

பாடல் எண் : 1
தோடு உடைய செவியன், விடையேறி, ஓர் தூ-வெண்-மதிசூடிக்
காடு உடைய சுடலைப்-பொடி-பூசி, என் உள்ளம் கவர்-கள்வன்,
ஏடு உடைய மலரான் முனை-நாள் பணிந்து ஏத்த அருள்-செய்த
பீடு உடைய பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 2
முற்றல் ஆமை, இள நாகமோடு, ஏன முளைக்-கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடு கலனாப் பலி-தேர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன்,
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்,
பெற்றம் ஊர்ந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 3
நீர் பரந்த நிமிர்-புன்-சடைமேல் ஓர் நிலா-வெண்-மதி சூடி,
ஏர் பரந்த இன-வெள்-வளை சோர என் உள்ளம் கவர்-கள்வன்,
ஊர் பரந்த உலகில் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 4
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை-ஓட்டில்
உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர்-கள்வன்,
மண் மகிழ்ந்த அரவம் மலர்க்-கொன்றை மலிந்த வரை-மார்பில்
பெண் மகிழ்ந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 5
ஒருமை பெண்மை உடையன், சடையன், விடை ஊரும் இவன் என்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன்,
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 6
மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இன-வெள்-வளை சோர என் உள்ளம் கவர்-கள்வன்,
கறை கலந்த கடி-ஆர்-பொழில் நீடு-உயர்-சோலைக் கதிர் சிந்து-அப்
பிறை கலந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 7
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த
உடை முயங்கும் அரவோடு உழி-தந்து எனது உள்ளம் கவர்-கள்வன்
கடல் முயங்கு கழி-சூழ் குளிர்-கானல்-அம், பொன்னஞ்-சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 8
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்றெனது உள்ளம் கவர்-கள்வன்
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும்பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 9
தாள்-நுதல் செய்து இறை காணிய மாலொடு தண்-தாமரையானும்
நீணுதல் செய்து ஒழியந் நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர்-கள்வன்
வாள்-நுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல்-செய் பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 10
புத்தரோடு பொறி-இல் சமணும் புறம் கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன்
மத்த-யானை மறுக(வ்) உரி போர்த்தது ஓர் மாயம் இது என்னப்
பித்தர் போலும் பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 11
அரு-நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய
பெரு-நெறிய பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு-நெறிய தமிழ் வல்லவர் தொல்-வினை தீர்தல் எளிது ஆமே.

——————-

1.1 Padhigam songs 8, 9, 10, 11 – explanation in periyapurANam:

#1975 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 77
மண்-உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்து அடையில்,
கண்-நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் எனக் காட்ட,
எண்ணம் இலா வல்-அரக்கன் எடுத்து முறிந்து இசை-பாட,
அண்ணல் அவற்கு அருள்-புரிந்த ஆக்கப்பாடு அருள்-செய்தார்.

#1976 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 78
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழு-ஆன மனத்தாலே மால்-ஆய மால் அயனும்
இழிவு ஆகும் கரு-விலங்கும் பறவையும் ஆய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார்.

#1977 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 79
வேத-காரணர் ஆய வெண்-பிறை-சேர் செய்ய-சடை
நாதர்-நெறி அறிந்து உய்யார் தம்மிலே, நலங்கொள்ளும்
போதம் இலாச் சமண்-கையர் புத்தர்-வழி பழி ஆக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்.
(நாதன்நெறி — பாடபேதம் – நாதர்நெறி?)

#1978 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 80
திருப்-பதிகம் நிறைவித்துத் திருக்-கடைக்காப்புச் சாத்தி
இருக்கு-மொழிப் பிள்ளையார் எதிர்-தொழுது நின்று-அருள,
அருட்கருணைத் திருவாளன் ஆர்-அருள் கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரச-மலர்-மழை பொழிந்தார்.

Please rate this

One thought on “திருமுறை 1.1 பிரமபுரம் தோடுடைய செவியன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *