திருவாதவூரர் திருக்கோவையார்
இயற்கை புணர்ச்சி – தெய்வத்தை மகிழ்தல்
[8/கோவை/1/6 – 16/05/18]
குறிப்பு: “திருக்கோவையார்” என்பது அகத்துறை செய்திகளின் மூலம் தில்லை கூத்தபிரான் புகழ்பாடும் திருமுறை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை
இதனில் தலைவன் தலைவி செவிலி தோழி நற்றாய் உள்ளிட்டோரது பேச்சுகளுக்கு இடையே தில்லையில் திருக்கூத்தாடும் ஆடவல்லார் புகழ்பேசப்படும்
மேலோட்டமாகப் பார்த்தால் நேரடியாக அகத்துறை செய்திகள் மட்டும்தான் இதனில் பேசப்படுகிறது என்பதுபோல தோன்றும் என்றாலும் நுணுகிப் பார்ப்போர்க்கு மட்டுமே திருக்கோவையார் ஒரு சைவசித்தாந்த பெட்டகம் என்பது விளங்கும்
கோவையாரின் முதல் அதிகாரமான “இயற்கை புணர்ச்சி” என்பது தலைவனும் தலைவியும் இயற்கையாக முதல்முறை சந்திக்கும் பொழுது ஒருவரைப்பற்றி ஒருவர் சிந்திப்பது பேசுவது முதலான செய்கைகளை கொண்டிருப்பதாம்
இதனில் “தெய்வத்தை மகிழ்தல்” என்பது இத்தகு அழகிய தலைவியை தந்தமைக்கு தலைவனும் வீரமிக்க தலைவனை தந்தமைக்கு தலைவியும் தெய்வத்திற்கு நன்றி கூறுதலேயாம்
அத்தெய்வத்தை “கூடல்தெய்வமாக” கொள்ளுதலும் இங்கு மரபு என்றாலும் அவர்கள் போற்றும் தெய்வம் தில்லை கூத்தபிரானேயாவர்🙏🏻
தற்காலத்திலும் கூட கணவன் மனைவியரோ அல்லது காதலன் காதலியரோ “இவர்/இவள் எனக்கு கிடைப்பதற்கு தெய்வத்துக்குதான் நன்றி சொல்லனும்” என்று கூறுவது வழக்கம் இதுவே “தெய்வத்தை வியத்தலாம்”
பாடல்
வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத் தொல்லோன் கயிலைக் கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவை அல்லால்வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே.
பொருள்
தலைவன் கூறுகிறான்:
கீழ்கடலில் எறியப்பட்ட ஒரு வளைத்தடியானது அலைகளால் எற்றுண்டு மேல்கடலில் மிதக்கும் ஒரு நுகத்தடியில் உள்ள துளையில் போய் செருகிக்கொள்வது எப்படி இறைவனது சித்தமாக நடக்கிறதோ அதே போல “கயிலையில் இருந்து வந்து தில்லை என்னும் பழமையான பதியில் நடனமிடும் தில்லை கூத்தபிரான் எனக்கு அளித்த இவளை தெய்வத்தின் அருள் என்று வியப்பேன் நயப்பேன்”
பின்குறிப்பு: சைவ சித்தாந்த விளக்கப் பாடங்களில் ஆசிரியர்கள் பரசமய நிராகரண விளக்கம் கொடுக்கும் பொழுது
உலகாயுதர்கள் வினைக்கொள்கையை ஏற்க மறுப்பதற்கு மேலே தலைவன் கூறிய “கீழ்கடல் மேல்கடல் நுகத்தடி” உதாரணம் கூறி விளக்கப்படும்
உலகத்தில் அவரவர் வினைவசம் நடக்கும் அனைத்தையும் தானாகவே இயற்கையாக நடக்கிறது என்பது உலகாயுதர்களின் நம்பிக்கை
ஆனால் ஒரு வளைத்தடியும் அதனை கோர்த்து வீச ஏதுவான நுகத்தடியையும் நாம் பிரித்து வளைத்தடியை வங்கக்கடலிலும் நுகத்தடியை அரேபியக்கடலிலும் வீசிவிடுகிறோம் என்று வைத்து கொள்வோம்
அவையிரண்டும் இனி சேருவதற்கு எந்த வாய்ப்பு இல்லை, ஆனாலும் அலையின் வேகத்தில் எற்றுண்ட இரண்டு தடிகளும் மிதந்துவந்து ஒரிடத்தில் சந்தித்து இணைந்து தக்க வகையில் பொருத்தி கொள்கிறது என்றால் இதனை தானாக நடந்ததாக எப்படி கொள்ள முடியும்?? அது இறைவனின் அருளால் அன்றி தானாக நடக்க வாய்ப்பே இல்லை என்பது உலகாயுதருக்கு சொல்லப்படும் மறுப்பு ஆகும்
இந்த செய்தியை எடுத்தாளும் தலைவன், தலைவியும் அவனும் இணைந்தது கீழ்கடலில் எறியப்பட்ட வளைத்தடியும் மேல்கடலில் எறிப்பட்ட நுகத்தடியும் இணைந்தது போல தில்லைகூத்தன் திருவருளால் நிகழ்ந்த ஒன்று என்று உணர்ந்து தெய்வத்திற்கு நன்றி கூறுகிறார்.