தெப்பல் திருவிழா சென்னையில் ஓர் கிரிவலம் அரசன்கழனியில்
சென்னையில் ஓர் கிரிவலம் என்றாலே அரசன்கழனி ஔடதசித்தர் மலை அருகில் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயம் தான் நினைவுக்கு வரும். இத் திருக்கோவிலில் இருந்து ஒவ்வொரு மாதமும் நிறைமதி நாள் தோறும் மாலை 5 மணிக்கு சில ஆயிரக்கணக்கானோர் இணைந்து தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளைத் தலையில் ஏந்தியும், சிவ வாத்தியம் இசைக்க ஔடதசித்தர் மலையைக் கிரிவலம் வரும் நிகழ்வு நடைெபற்று வருகிறது.
மலைவலம்
கடந்த தை மாதம் நடைபெற்ற நிறைமதி மலைவலத்தின் போது மாலை 5 மணிக்கே திரளான மக்கள் அரசன்கழனியில் குடி கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரரை வணங்கி வலம் வந்து மலைவலம் செல்வதற்க்காக காத்திருந்தனர். மலைவலம் துவங்கிய பின்னர், கயிலாய வாத்தியங்கள் முழங்க, சிவ பக்தர்கள் மிகவும் பக்தியுடனும் ஆர்வத்துடனும் வலம் வந்தனர். மலைவலத்தின் போது கிரிவலப் பாதையில் உள்ள விநாயகர் மற்றும் முருகர் ஆலயங்களிலும் தரிசனம் செய்து தங்கள் மலைவலத்தைத் தொடர்ந்தனர். மலையின் கிழக்குத் திசைக்கு வந்த போது தீபம் ஏற்றப்பட்டு, மலையின் மேலே குடிகொண்டிருக்கும் ஈசுவரனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது.
தெப்பல் திருவிழா
மலைவலம் முடிந்த பின்னர், முதன் முறையாகத் தெப்பல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த தெப்பல் திருவிழாவைக் காண, மலைவலம் வந்த பக்தர்களும், ஊர் மக்களும் திரளாக குளத்தைச் சுற்றித் திரண்டிருந்தனர். கல்யாணபசுபதீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர், தெப்பலில் எழுந்தருளிய இறைவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அப்போது தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவ பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.
ஏக இறைவனாம் பிறப்பு இறப்பு அற்ற சிவபெருமான் விடைக் கொடிகள் பறக்க, பக்தர்கள் படை சூழ, வாத்தியங்க முழங்க, திருமுறைகள் ஓத, திருக்குளத்தில் எழுந்தருளி குளத்தைச் சுற்றி வலம் வந்தார். இந்த கண்கொள்ளாக் காட்சியை பல்லாயிரக் கணக்கானோர் கண்டு களித்து ஆனந்தம் அடைந்தனர். குளங்களின் அனைத்து பக்கங்களிலும் பக்தர்கள் குழுமியிருந்து இந்த விழாவினைக் கண்டு களித்தனர். பின்னர், பெண்கள் திரளாக வந்து குளத்தில் நீரில் விளக்கை ஏற்றினர். நூற்றுக்கணக்கான விளக்குகள் மிகவும் அழகான தீப ஒளியை ஒளிர்ந்து கொண்டு நீரில் ஆடிக் கொண்டே சென்றது காண்போருக்கு மிகவும் பேரானந்தத்தைக் கொடுத்து சொல்ல இயலாத புதிய அனுபவத்தைக் கொடுத்தது.
சிவபெருமானின் கொடையும் நன்றி உரைத்தலும்
சிவபெருமானின் திருக்கருணையினாலே, அவனது அருளே இயற்கை வளங்களாக நமக்குக் கொடையளித்துள்ளான். ஆகவே, அவற்றைப் பாதுகாப்பது மட்டுமின்றி அவற்றை இறைவன் திருவுவமாகவே பாவித்து பூசை செய்வது இறைவனே நமக்குக் காட்டிய மிக உயர்ந்த தத்துவமாகும். இத்தகைய வழிபாட்டு முறையினை நம் முன்னோர்கள் இடையராது கடைப்பிடித்தமையால் எவ்வித குறையுமின்றி நல்ல உணவு, நீர், காற்று என்று அத்தனை வளங்களும் வாய்க்கப் பெற்று சிறப்பாக வாழ்ந்தனர். நாம் மீண்டும் சிறப்பான வாழ்வு வாழ இறைவனின் கொடையை மறவாது, அவனுக்கு நன்றி சொல்லும் விதமாக திருவிழாக்களை இடையறாது கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும்.
மலைவலம் மற்றும் தெப்பல் திருவிழா ஏற்பாட்டுக் குழு
இந்த மலைவலத்தையும் தெப்பல் திருவிழாவையும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர், மலைவல ஏற்பாட்டுக் குழுவினர். கோவில் பணிகளில் துவங்கி, சாலைகளில் பக்தர்களை மிகவும் பத்திரமாக அழைத்துச் சென்று திருப்பி அழைத்து வரும் வரை, குழுவினர் மிகுந்த சிரத்தையோடும் ஆர்வத்தோடும், ஆத்மார்த்த பங்களிப்பு செய்கின்றனர். அக்குழுவினருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
அந்த திருவிழாவில் இருந்து இங்கே சில காட்சிகள்.
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
திருச்சிற்றம்பலம்.
Arumai arumai….. Om namasivaya **