பீடுடைய மார்கழி போற்றி – மாணவர்களுக்கான திருமுறை ஒப்புவித்தல் போட்டி
திருச்சிற்றம்பலம்.
தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை நம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மார்கழி மாதத்தில் அனைவரும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிவபுராணம் ஆகிய பதிகங்களை முழுமையாக படித்து மனனமாக சொல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மாணவர்களுக்காக இந்த மூன்று பதிகங்களையும் படித்து ஒப்புவிக்கும் போட்டி கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
மிகவும் உன்னதமான மார்கழி மாதத்தை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து, இறைவனை அறியாமல் உலகியலில் உழன்று கொண்டிருக்கும் மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து எழுப்புவதே திருப்பள்ளியெழுச்சியாகும். அத்தகைய பெருமைமிகு மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடி சிவாலயங்களில் இறைவனை வழிபாடு செய்வது பல்லாயிரமாண்டு மரபு. அந்த திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியோடு சேர்த்து சிவபுராணமும் குழந்தைகள் இளவயதிலேயே கற்க வேண்டும் என்று நோக்கம் கொண்டு, *பீடுடைய மார்கழி போற்றி* என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பதிகம் ஒப்புவித்தல் போட்டி, பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் திருக்கோவிலில் 26-01-2019 அன்று மாலை 5 மணிக்கு திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. இதில் 5 வயது குழந்தைகள் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் வரை பலர் பங்கு பெற்று பரிசு பெற்றனர். இந்த போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிக்கரணை மாணவர்களும் பங்கு கொண்டு, கலைநிகழ்ச்சிகளும் நடத்தி சிறப்பித்தனர். நம் இயற்கையோடு இயைந்த பண்டைய கால சிறப்பான வாழ்க்கை முறையை நாமும் கடைப்பிடித்தால் நோயின்றி நலமாக நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது திண்ணம்.
இது போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து சிவனடியார்களும் தங்களது சிவாலயங்களிலும் மடங்களிலும் நடத்தி நம் குழந்தைகளுக்கு பன்னிரு திருமுறையையும் அதன் பெருமைகளையும் நிலைநிறுத்துவது மிக மிக அவசரமான அவசியமானதாகும். ஆகவே, இது போன்ற போட்டிகளும், நிகழ்ச்சிகளும் தொடர்ந்து இடைவிடாது அடிக்கடி நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருச்சிற்றம்பலம்.