30 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில் கார்த்திகை தீப விழா
இறைவன் ஒளியாக இருப்பதை நாம் தீபமாக ஏற்றி உணர்கிறோம். அடிமுடி தேடிய வரலாற்றில், பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான், சோதி உருவாக நெடும் பிளம்பாக எல்லையில்லா வண்ணமாக திரு அண்ணாமலையில் தோன்றினான். அந்த நாள் கார்த்திகை முழுமதி நாள். இந்த நிகழ்வை குறிக்கும் வண்ணம் இன்றும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது. தீப ஒளியாக இறைவன் எழுந்தருளி பக்தகோடிகள் அனைவருக்கும் அருள் புரிகிறான்.
இதே நேரத்தில் உலகில் எல்லா இடங்களிலும், கோவில்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கமாகும். அவ்வாறாக, சென்னை பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலிலும் அதன் எதிரில் உள்ள குளத்திலும் தீப வரிசைகள் பல்லாண்டு காலமாக ஏற்றப்பட்டு வந்தது.
இடையில் நுழைந்த மேற்கத்திய பண்பாட்டு தாக்கத்தினால், இந்த பழக்கம் பள்ளிக்கரணையில் நின்று போனது. சென்ற ஆண்டு இதை மீட்டெடுக்க திட்டமிட்டாலும், இந்த ஆண்டு தான் இது நிகழ வேண்டும் என எம்பெருமான் திருவருள் கூட்டியது. பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலின் தொண்டர்கள், பக்தர்கள், திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் ஆகியோர் இணைந்து இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளை மாலை 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு விளக்கேற்றினர்.
கோவிலின் மதிற்சுவற்றிலும், குளத்தின் நான்கு திசைகளிலும் உள்ள படிக்கரையிலும், சாலையை ஒட்டியுள்ள குளக்கரையில் முழுவதுமாக விளக்குகள் அடுக்கப்பட்டு ஒளியேற்றப் பட்டன. மீண்டும் இந்த புண்ணிய பூமி பிறந்துவிட்டது போன்ற ஒரு எல்லையில்லாத இனம் புரியாத இன்ப உணர்வு அத்தனை பக்தர்களுக்கும் ஏற்பட்டது.
இனி வரும் காலங்களில், இந்த தீபமேற்றும் விழா எவ்வித தடையின்றி நடைபெற பேரருளாளன் சிவபிரானின் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கப்பட்டது.
அதிலிருந்து சில காட்சிகள் இங்கே:
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.
திருச்சிற்றம்பலம்.