பண்ணமர் பதிகம் – தேவார பண் இசை ஆதார தொகுப்பு 5/5 (3)

பண்ணமர் பதிகம் – தேவார பண் இசை ஆதார தொகுப்பு

பண்ணமர் பதிகம் – சான்று பாடல்களின் சுட்டியை PDF வடிவில் பதிவிறக்கம் செய்க

தேவார பாடல்களை எவ்வாறு பாட வேண்டும்?

தேவார பாடல்களை முறைப்படி பாட அதன் பண் அமைப்பில் பாட வேண்டும்.

தேவார பண்கள் மொத்தம் எத்தனை?

தற்போது நம்மிடம் இருக்கும் தேவார பண்கள் மொத்தம் 23 (+யாழ்மூரி)

தேவார பண்கள் எவை?

தேவார பதிகங்களை, அதற்குரிய பண்ணில் பாடுவது எப்படி?

பண் என்பது ஒலி அலைகளின் தொடர் அமைப்பாகும். ஒவ்வொரு பண்ணையும் எவ்வாறு பாட வேண்டும் என்று முறைப்படி ஓதுவார்களிடம் பயிற்சி செய்து பாட வேண்டும். ஒவ்வொரு பண்ணுக்கும் ஒரு பாடலை எவ்வாறு பாட வேண்டும் என்று ஒரு சான்று ஆதாரமாக வைத்துக் கொண்டு, அதற்குரிய தாளத்தையும் இணைத்து பாடுவது புதியவர்களுக்கான எளிய வழியாகும். நிறைய பயிற்சி செய்ய செய்ய, அனைவரும் மிகவும் அழகாக பாடலாம்.

எல்லோரும் தேவாரம் பாடலாமா, குரல் வளம் கட்டாயமாக தேவையா?

குரல் என்பது ஒவ்வொருவருக்கும் இறைவனே அருளிச் செய்த வரமாகும். ஒவ்வொருவருடைய குரலும் வித்தியாசமானதாகும். ஸ்ருதியோடு இணைத்து பாடினால், அனைவரின் குரலிலும் தெய்வீக உணர்வு ஊற்றெடுக்கும். ஆகவே, முயற்சி திருவினையாக்கும். அனைவரும் கட்டாயமாக இனிமையாக தேவாரம் பாடலாம்.

ஒவ்வொரு தேவார பண்ணிற்க்கும் நம் பண்ணிசை மரபின் வழியாக ஒவ்வொரு சான்று பாடல் தொகுப்பு இருக்கிறதா?

இருக்கிறது. இதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பண்ணமர் பதிகம் தேவார பண் இசைத் தொகுப்பு. அந்த தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சான்று பாடல் தொகுப்பாகிய பண்ணமர் பதிகங்களை PDF வடிவில் தொகுக்கப்பட்ட கோப்பை பதிவிறக்கம் செய்ய.

பண்ணமர்பதிகம் கைக்கோப்பு வடிவம்

பண்ணமர் பதிகம் – தேவார பண் இசைத் தொகுப்பு

YouTube Play List:  பண்ணமர் பதிகம்

 

YouTube.com/ThiruNandhiTV

 

 

Please rate this

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை பௌர்ணமியில் கிரிவலம் வாருங்கள். No ratings yet.

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை சுற்றி கிரிவலம் வாருங்கள் !!!

அச்சிறுபாக்கம் – அச்சுமுறிப்பாக்கம் – சிவபெருமானின் எட்டு வீரட்ட செயல்களில் முப்புர அசுரர்களை அழிக்க இரதத்தில் செல்லும் போது, விநாயகர் அந்த இரதத்தின் அச்சினை முறித்த இடம் ஆதலால், இது அச்சுமுறிப்பாக்கம் என்று பெயர் பெற்றது என்பது வரலாறு.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி நம் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் யாரும், அவ்வழியில் அச்சிறுப்பாக்கத்தில் வரும் நம் வஜ்ரகிரி மலையை கண்ணால் காணாமல் செல்ல முடியாது. இந்த மலை அச்சிறுப்பாக்கத்தில் மேல்மருவத்தூரை அடுத்து அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ௧௫௰௰ (1500) ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவாலயம் உள்ளது. இங்கு உறையும் பெருமான் மரகதாம்பிகை உடனுறை பசுபதீசுவரர் என்று அன்போடு காலம் காலமாக அழைக்கப்பட்டு வருபவர்.  அச்சிறுபாக்கத்தில் அமையப் பெற்றுள்ள பாடல் பெற்ற தலமான ஆட்சீசுவரர் கோவிலுக்கு உட்பட்டது தான் மலை உச்சியில் உள்ள பசுபதீசுவரர் கோவிலும் என்கிறார்கள். மலையின் உச்சியில் உள்ள கோவிலை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று செங்குத்தான படிக்கட்டு. இன்னொன்று மலையின் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

இந்த மலையை சுற்றி பல்லாண்டு காலமாக மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சிறிதே தடைபட்ட இந்த மலைவலம், பிறப்பு இறப்பு அற்ற எல்லையில்லாத ஆற்றல் பொருந்திய உலகின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் திருவருளினாலும் அவர் விருப்பத்தினாலும் இப்போது மீண்டும் துவங்கியுள்ளது.  மொத்தம் ௧௪ (14 km) கி.மீ. தூரம் உள்ள இந்த மலையைச் சுற்றி வரும் பாதையில் முழுநிலவு (பௌர்ணமி) அன்று கிரிவலம் வரப்படுகிறது.

மலைவலம் துவங்கும் இடம்:  அச்சிறுபாக்கம் பசுபதீசுவரர் கோவில் மலையடிவாரம்.

எல்லையற்ற கருணையும், ஆற்றலையும் கொண்டு, இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, ஒடுக்கி, அருள் புரிந்து வரும் சிவபெருமான் உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த உலகில் படைத்து அருளி காத்து வருகிறான். அவ்வாறாக, சிவபெருமானே, மலையின் வடிவில் அமைந்து அருள் பாலிப்பதாக நம் சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு நாட்டின் அரசனுக்கு நாம் செய்யும் பணிகள் தான் எத்தனை எத்தனை ? அவனை வரவேற்று உபசரிக்கும் விதம் தான் எத்தனை எத்தனை ? இந்த ௨௨௪ (224) புவனங்களில் ஆயிரக்கணக்கான கோள்களையும் பரவெளியையும் படைத்து அருள் புரிந்து வரும் நம் ராஜாதி ராஜனான சிவபெருமானை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் ? எப்படி வணங்க வேண்டும் ? அவனை எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இந்த மலையிலும் அரிய வகை மூலிகைகளும் மரங்களும் உள்ளன. சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்திருந்த பூமியாக விளங்கியது இது. பெருமை மிக்க இந்த மலையில் மேவி அருள்பாலிக்கும் பசுபதீசுவரரை வணங்கியும் இந்த மலையை சிவபிரானாகவே எண்ணி மலைவலம் வருவதும் நாம் மிக்க புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். திருவண்ணாமலைக்கு இணையாக இந்த மலையும் திகழ்வதால், திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் அதே புண்ணியமும், சிறப்பும், அருளும் இந்த மலையை வலம் வருவதால் கிடைக்கப்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள், திருவண்ணாலை செல்வதோடு இந்த வஜ்ரகிரி மலையையும் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பைத் தரும். இந்த மலையை சீர் செய்யவும், வழிபாடுகள் சிறப்பாக அமையவும் பல உதவிகள் தேவைப்படுகிறது. இந்து உதவி அமைப்பினர் பல சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் அனைத்து இந்து அமைப்புகளும் கூட்டாக ஒன்று சேர்ந்து நம் பாரம்பரிய சொத்தான இந்த மலையை சீரமைத்து, கோவில்களையும் வழிபாடுகளையும் சிறப்பாக நடத்த இணைந்து செயல்பட வேண்டும்.  திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் அன்பர்கள் வஜ்ரகிரி மலைக்கும் கிரிவலம் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இணையற்ற ஒப்பற்ற பெருமானின் திருவருள் மீண்டும் நம் பூமியில் பட்டு ஆன்மீக ஒளிப்பெருக்கு ஏற்பட வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

சென்னையில் ஒரு கிரிவலம் 4.75/5 (4)

சென்னையில் ஒரு கிரிவலம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தமிழ் வழக்கு. ஆற்றல் உள்ள மலைகளை சிவமாகவே வணங்கி வலம் வருவதும் நம் மரபு. அவ்வாறாக இந்தியாவில் பல்வேறு மலைகளை சிவமாக வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஒரு மலை சென்னை மாநகரிலும் உள்ளது.

சென்னை மாநகரின் மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம், அரசன்கழனி, சித்தாலபாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய ஊர்களையும், போலினேனி ஹில்சைட் (Bollineni Hillside) போன்ற நவீன குடியமைப்பு நகரங்களின் நடுவில் அமைந்துள்ளது ஔடத சித்தர் மலை. இந்த மலையின் மீது பன்நெடுங்காலமாக சிவபெருமான் இலிங்க வடிவாய் எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார். நிறைய பக்தர்கள் இம்மலை மீது இருக்கும் சிவபெருமானைத் தரிசித்து அபிஷேக வழிபாடு செய்து வருகிறார்கள். இம்மலை மீது கார்த்திகை தீபத் திருநாள் அன்று, திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் முழுமதி/நிறைமதி/பௌர்ணமி தினத்தன்று மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றளவு உள்ள இந்த மலையை ஒரு முறை வலம் செய்ய 1 மணி நேரம் 15 நிமிடங்களும் ஆகிறது. மலை மீது ஏற சுமார் 20-30 நிமிடமும், இறங்க சுமார் 15-20 நிமிடங்களும் ஆகிறது.

நீங்களும் முழுநிலவு நாளில் இந்த மலையை மலைவலம் (கிரிவலம்) வந்து பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானின் தரிசனத்தைக் கண்டு அவனருள் பெற வாருங்கள்.

ஒரு பெரும் குழு தற்போது ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் மலைவலம் செல்கிறது. இந்த குழுவோடு இணைந்து நீங்களும் மலைவலம் செல்ல நீங்கள் அரசன்கழனி கல்யாண பசுபதீசுவரர் கோவிலுக்கு சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடவும்.

கோவிலை அடையும் வழி

மேடவாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 51B பேரூந்து சைதாப்பேட்டை, மேடவாக்கத்திலிருந்து அரசன்கழனி நிறுத்தத்தில் நிற்கும். இறங்க வேண்டிய இடம் அரசன்கழனி பஸ்டாப். தாம்பரத்திலிருந்து 51K பேரூந்து இந்த நிறுத்தத்தில் நிற்கும்.

ஒவ்வொரு முழுமதி அன்றும் வாருங்கள்.

அரசன்கழனி பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ள இடம் – இதை சுட்டவும்

மேலும் தகவல்களுக்கு: +91-8122299938, +91-9382664059 அழைக்கவும்.

 

 

 

 

 

 

Please rate this

மார்கழி திருவீதி உலா 2022 பள்ளிக்கரணை 63வர் நடராஜ பெருமானுடன் No ratings yet.

சிவமயம்.

பன்னிரு திருமுறைகளை சிரசில் ஏந்தி, திருமுறை பள்ளிக்கரணை வீதிகள் எங்கும் ஒலிக்க, கயிலாய வாத்தியங்கள் முழங்க, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் மாணிக்கவாசகரும் இணைந்து, அருள்மிகு சிவகாமி அம்மை உடனுறை ஆனந்த நடாரஜர் பள்ளிக்கரணையின் வீதிகளில் எங்கும் எழுந்தருளி அருள்பாலித்தார்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை மற்றும் மல்லிகேசுவரர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து நடத்திய மார்கழி வீதி உலா நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

காணொளி:

படக்காட்சிகள்:

 

Please rate this

சைவ சமயக் காணொளி போட்டி !!! No ratings yet.

சைவ சமயக் காணொளி போட்டி !!!

காணொளிகளை அனுப்ப: shivathondu14@gmail.com

வாட்சப்பில் அனுப்ப: 9445769019

 

 

 

 

 

Please rate this

63 பக்தித் திரைப்படங்கள் உங்கள் விரலின் நுனியில்.. 5/5 (6)

திருச்சிற்றம்பலம்.

நோய் தொற்றின் காரணமாக வீட்டிற்க்குள் வாழ்வை அனுபவிக்கும் அன்பர்களுக்கு ஏதுவாகவும், விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து பக்தி மணம் கமழ குழந்தைகளுக்கு பக்தி சுவை ஊட்டவும், சைவ சமய திரைப்படங்களின் தொகுப்பை ஒரு கோப்பில் தொகுத்து அளிக்கப்படுகிறது.

அன்பர்கள், குடும்பத்தோடு அமர்ந்து பக்தி திரைப்படங்கள் கண்டு மகிழுங்கள். நம் சமயம் மற்றும் பண்பாட்டை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

கீழே உள்ள சைவ சமய காணொளி தொகுப்பு.pdf கோப்பை பதிவிறக்கம் செய்க.

63 பக்தி திரைப்படங்கள் உங்கள் விரல் நுனியில்

பக்தி திரைப்படங்கள்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கயிலாய வாத்திய பயிற்சி குறிப்புகள் வாய்பாடு 4.77/5 (62)

கயிலாய வாத்திய பயிற்சி குறிப்புகள்

கயிலாய வாத்தியம்

பஞ்ச வாத்தியம் எனப்படும் கயிலாய வாத்தியம் சிவவாத்தியம் என்றும் அழைக்கப்படும். ஐந்து வித வாத்திய கருவிகளால் இசைக்கப்படுவதால் பஞ்ச வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மட்டும் வாசிக்கப்படும் இந்த இசை, பூதகணங்களால் வாசிக்கப்படும். இதனால் இதை பூதகணஇசை என்றும் கூறுவர். திருநந்திதேவர் தலைமையில் பூதகணங்கள் வாத்தியம் இசைக்க, சிவபெருமான் நடமாடுவதை விரும்பாதவர் எவருமிலர். அதை நினைப்பதற்க்கும் காண்பதற்க்கும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அவ்வாத்தியம் பயிற்சி எடுக்க, சில குறிப்புகள் விரைந்து கற்பதற்க்கு ஏதுவாக இருக்கும். அவை இங்கே பகிரப்படுகிறது. வாத்தியம் தாளத்தின் அடிப்படையில் அமைவதாகும். அந்த தாளத்தை வாய் வழியே சொல்லி முதலில் கற்றுக் கொண்டால், அதை இசை வடிவமாக திருவுடலிலும் தாளத்திலும் எளிதாக கொண்டு வந்து விடலாம். அவ்வாறு வாய் வழியே சொல்லி கற்பது வாய்பாடு எனப்படுகிறது. கயிலாய வாத்தியம் கற்க விரும்பும் மாணவர்கள், இந்த வாய்பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு, வாயில் சொல்லி பயிற்சி எடுத்து, அதை தொடையிலும், வீட்டில் நாற்காலியிலும் தட்டி பயிற்சி எடுத்துக் கொண்டு திருவுடலிலும் தாளத்திலும் முயற்சி செய்தால், விரைந்து கற்றுக் கொள்ளலாம்.  அதற்கான வாய்பாடு இங்கே.

வாய்பாடு

 கயிலாய வாத்திய அடிப்படை பயிற்சி – வாத்திய வாய்ப்பாட்டு உரை

 

 1. மகுடம்
 2. முதல் மெட்டு
 3. இரண்டாம் மெட்டு
 4. மூன்றாம் மெட்டு
 5. நான்காம் மெட்டு
 6. காளி நடை 1
 7. காளி நடை 2
 8. நந்தி நடை 1
 9. நந்தி நடை 2
 10. ஐயாரப்பர் மெட்டு
 11. அண்ணாமலையார் மெட்டு
 12. புறப்பாடு மெட்டு
 13. நடராசர் மெட்டு
 14. முதல் மெட்டு மூன்று சுற்று
 15. நான்காம் மெட்டு மூன்று சுற்று

 

 கயிலாய வாத்திய அடிப்படை பயிற்சி – வாத்திய வாய்ப்பாட்டு உரை

மேலும் வளரும்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு காணொளிகள் 4.78/5 (9)

சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு காணொளிகள்

சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு

அனைத்து காணொளிகளின் பட்டியல் தொகுப்பு

அனைத்து வகுப்புகளிலும் பயன்படுத்தப்பட்ட விளக்கத் தகடுகளின் தொகுப்பு புத்தகம் இந்த வலைதளத்தின் பதிவிறக்கம் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே ஒவ்வொரு வகுப்பின் தனி காணொளி சுட்டி

வகுப்பு 1

நம் கண்களுக்குத் தெரியும் இந்த உலகத்தில் இருக்கும் பொருட்களை ஆராய்ச்சி செய்வோம். கண்களுக்குத் தெரியும் உருவம், கண்களுக்குத் தெரிந்து குறிப்பிட்ட வடிவம் இல்லாத அருவுருவம், கண்களுக்குத் தெரியாத அருவம் ஆகிய பொருட்கள் உள்ளன. பொருட்கள் அன்றி, ஆற்றலும் உள்ளது. பொருட்களுக்கும் ஆற்றலுக்கும் தொடர்பு இருக்கிறது.

வகுப்பு 2

சைவ சமயத்தின் கருப்பொருள் முப்பொருள் உண்மை. இவ்வுலகை பகுத்தறிந்து ஆராய்ந்து அடிப்படையான பொருட்களைக் கருதினால், அவை மூன்று. அவையாவன, பதி, பசு, பாசம் என வடமொழியிலும், இறை, உயிர், தளை என்று தீந்தமிழிலும் அறியப்படும். அந்த மூன்று அடிப்படைப் பொருளை அறிந்து உணர்ந்து அவற்றின் தன்மைகளை அறிந்து, நாம் யார், நமக்கு ஏன் பிறப்பு இருக்கிறது, நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை உணர வைப்பதே சைவ சித்தாந்த நெறியின் குறிக்கோளாகும்.

வகுப்பு 3

முப்பொருள் உண்மை பற்றிய சில வேறு கருத்துக்களைக் கொண்ட அகப்புற சமயங்கள் எவை. அடுத்து முப்பொருளில் முதலில் இறைவனைப் பற்றி அறிவோம். பதியின் சொரூப நிலை யாது? தடத்த நிலை யாது? பதியின் குணங்கள் எவை?

வகுப்பு 4

இறைவன் ஏன் உலகை உருவாக்க வேண்டும்? ஆணவம் கன்மம் மாயை என்றால் என்ன? உலகினால், உயிர்கள் பெறும் நன்மை யாது ? இறைவன் எவ்வாறு உலகை உருவாக்குகிறான்?

வகுப்பு 5

36 தத்துவங்களாகிய கருவிகள் எங்கிருந்து பெறப்படுகிறது ? இந்த கருவிகளால் யாருக்கு என்ன பயன்? இந்த கருவிகள் எப்படி வந்தது? இதனால் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது?

வகுப்பு 6

உயிர்களாகிய நம்முடைய பல்வேறு நிலைகள் என்ன? இறைவன் செய்யும் ஐந்து தொழில்கள் எவை? இந்த தொழில்களால் யாருக்கு என்ன பயன்?

தேர்வு 1

வகுப்பு 7

சிவபெருமான் ஏன் நடனம் ஆட வேண்டும்? சிவபெருமானது திருநடனத்தினால் என்ன பயன் கிடைக்கும்? அவர் எங்கெல்லாம் திருநடனம் செய்வார்?

வகுப்பு 8

திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாக்கரம் என்று சொல்லக்கூடிய உயரிய மந்திரம் யாது?  இதை ஓதுவதால் நமக்கு என்ன நன்மை? எத்தனை வகையான மந்திரங்கள் உள்ளன?

வகுப்பு 9

சைவ சித்தாந்த சாத்திரங்களாக கருதப்படும் மெய்கண்ட சாத்திரங்களின் மொத்த நூல்கள் எத்தனை? அவை எவை? அவற்றை அருளிய குருமார்கள் யாவர்?

வகுப்பு 10

கன்மம் அல்லது கர்மா என்றால் என்ன? நல்வினை தீவினை செய்தால் கிட்டும் பயன் என்ன? சித்தாந்தம் கூறும் வினைக் கொள்கை யாது?

வகுப்பு 11

சந்தான குரவர்களாகிய குருமரா்கள் மெய்கண்டார் மற்றும் அருள்நந்திசிவம் ஆகியோரது வரலாறு.

வகுப்பு 12

நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? எனக்கு ஏன் துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன?

வகுப்பு 13

வாக்குகள் என்றால் என்ன? அவை எங்கிருந்து வருகிறது? சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி  ஆகிய வாக்குகளால் என்ன பயன்?

 

வகுப்பு 14

வீடுபேறு என்றால் என்ன? முக்தி என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? ஞானம் அடையும் வழி யாது? இருவினை ஒப்பு, மலபரிபாகம், சந்திநிபாதம் என்றால் என்ன?

வகுப்பு 15

சைவ சமய சந்தான குரவர்கள் மறைஞானசம்பந்தர் மற்றும் உமாபதிசிவம் ஆகியோரது வரலாறு.

வகுப்பு 16

நான் ஏன் பிறந்தேன்? தொடர் துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி? முக்தி அடைவது எப்படி? மீண்டும் பிறவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சைவ நெறிகள் எவை? சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவை காட்டும் நெறி யாது?

வகுப்பு 17

இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முக்தி அடைய முடியுமா? சீவன் முத்தர் என்றால் யார்? அவர்களின் தன்மை என்ன? திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாக்கரம் என்று சொல்லக்கூடிய மந்திரத்தின் சிறப்பு யாது ? யாரெல்லாம் திருவைந்தெழுத்து ஓதலாம்? திருவைந்தெழுத்து ஓதுவது எப்படி?

வகுப்பு 18

இறந்த பின் தான் முக்தியா? முக்தியடைந்த பின்னர் என்ன செய்வோம்?  வீடுபேறு சிவப்பேறு என்றால் என்ன? அணைந்தோர் தன்மை யாது?

வகுப்பு 19

சிவஞானபோதம் நூல் அமைப்பு மற்றும் நூற்பா 1, 2, 3 ஆகியவற்றின் பதவுரை.

வகுப்பு 20

சிவஞானபோதம் நூல் அமைப்பு மற்றும் நூற்பா 4, 5, 6, 7, 8 ஆகியவற்றின் பதவுரை.

வகுப்பு 21

சிவஞானபோதம் நூல் அமைப்பு மற்றும் நூற்பா 9, 10, 11, 12 ஆகியவற்றின் பதவுரை.

வகுப்பு 22

தாத்துவிகங்கள் என்றால் என்ன? இந்த பிரபஞ்சத்தில் எத்தனை புவனங்கள் இருக்கின்றன? சித்தாந்த தத்துவங்கள் எவற்றைக் கொண்டு நிரூபிக்கப்படுகின்றன?

தேர்வு 2

உலகின் இல்லங்கள் (உள்ளங்கள்) தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

 

Please rate this

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம். அவ்வினைக்கு இவ்வினையாம் Avvinaikku Ivviani 5/5 (2)

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

இறைவனைக் காட்ட முடியுமோ என்றார். ஒழுக்கம் விலகினார். கண்டதையும் எடுத்துத் தின்றார். செய்யத் தகாதன செய்தார். என்னை விஞ்ச ஆள் இல்லை என்றார்.  நானே கடவுளும் என்று கூட சொல்லிப் பார்த்தார். எத்தனை ஆட்டம் போட்டார் ? இன்று உலக மக்கள் அனைவரையும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது கண்களுக்குத் தெரியாத நுண்கிருமி. நிலநடுக்கம் வந்தது. பேரலை வந்தது. புயல் மழை வந்தது. வெள்ளம் வந்தது. இப்போது கிருமி வந்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் எத்தனை எத்தனை இன்னல்களைப் பார்த்து விட்டது? எத்தனை விலங்குகள் இங்கு காணாமல் போய்விட்டது?

இயற்கையோடு இயைந்து வாழ் என்று நமக்கு இறைவன் மணி அடித்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். நம் அறியாமையை அகற்ற ஒவ்வொரு பொழுதும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால், நாமோ, எங்கோ சென்று கொண்டே இருக்கிறோம். எதுவுமே நடவாதது போல சென்று கொண்டே இருக்கிறோம். அவ்வப்போது நம்மை நம் கனவிலிருந்து எழுப்பி உண்மையை உணர வைக்கிறான். இன்பமும் துன்பமும்  கொடுத்து நம்மை வலுவுறச் செய்யவே தருகிறான். நம்மைப் பக்குவப் படுத்துகிறான்.

ஒவ்வொரு துன்பத்திலும் நம் அறிவை செயல்படுத்தி பாதுகாப்பாக இருக்கச் சொல்கிறான். இறைவன் என்னென்ன செய்வான் என்று நம்மால் கூறவே இயலாது. ஆனால், எல்லாமே நமக்கு நன்மை தருவதற்க்கே செய்வான் என்பது மட்டும் திண்ணம்.

கொரானா பரவாமல் தடுக்க அற்புதமான நடவடிக்கைகளை நம் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்கள் கொடுக்கும் விதிமுறைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அவ்வப்போது நன்றாக கழுவ வேண்டும். குறிப்பாக வெளியே சென்று வந்த பின் கை கால், முகம் அகியவற்றை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். உடல் நிலை சரியில்லாதது போல இருந்தால், முதலில் பயம் கொள்ளத் தேவையில்லை. மருத்துவரின் துணையை நாட வேண்டும். அரசாங்கம் கேட்கும் தகவல்களைக் கொடுக்க வேண்டும்.  பின்னர், இறைவனை வணங்க வேண்டும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆகவே, இறைவனை வணங்கி விண்ணப்பிப்பது மிகவும் முக்கியமானது. நம் கடமைகளை ஒழுக்கமாக சரியாகச் செய்துவிட்டு இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டும். இறையருள் எதையும் செய்ய வல்லது.

நம் நாட்டிலும், உலகம் முழுவதிலும், கொரானா நுண்கிருமியின் பரவுதலைத் தடுக்கவும், அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மக்கள் இனிதாக தங்கள் வழக்கமான வாழ்விற்க்குத் திரும்பவும், நம் குருமார்கள் அருளிய இந்த பதிகத்தை ஒரு முறையாயினும் வாயார படிப்போம். திருஞானசம்பந்தர் தேவாரம்.

( Avviniakku Ivvinai )

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் திருஞானசம்பந்தர் தேவாரம்  திருநீலகண்டப் பதிகம் விஷ ஜுரம், விஷக் கடி நீங்க, தொண்டையில் ஏற்பட்ட கோளாறுகள் நீங்க, எடுத்த காரியம் வெற்றி பெற, குரல் வளம் பெருக, செய்வினை பில்லி சூனியம் ஆகியவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, துணிவுடன் செயலாற்ற ஓத வேண்டிய பதிகம். திருச்சிற்றம்பலம்.

 

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சனிப் பிரதோஷத்தின் மகிமை. சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசனம் செய்வோம் 5/5 (2)

சனிப் பிரதோஷத்தின் மகிமை. சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசனம் செய்வோம்

தினமும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அத்தகைய வாய்ப்பைப் பெற்றோர்கள், மிகவும் பாக்கியசாலிகள். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஔவையார் வாக்கு. பிரதோஷ காலங்களில் சிவாலயம் சென்று வழிபடுவது இன்னும் சிறப்பாகும். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் எனப்படும். தேய்பிறை சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் எனப்படும்.

*** பிரதோஷ வழிபாடு ***

திரயோதசி திதி என்பது நிறைமதி மற்றும் புதுமதி தினத்திலிருந்து பதிமூன்றாம் நாளாகும். இந்த தினத்தில் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். மிருத சஞ்சீவினி மந்திரத்திற்க்கு இணையான, நீண்ட ஆயுளைத் தர வல்ல, இறந்தவர்களை மீண்டும் உயிருடன் எழுப்ப வல்ல கடலுக்கு அடியில் இருக்கும் அமிர்தத்தை எடுக்க முயன்றனர் தேவர்களும் அசுரர்களும். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறு போல நாணாக்கி, பாற்கடலைக் கடைந்தார்கள். கடலில் இருந்து பல பொருட்கள் வந்தன. பின்னர் ஆலகால விடம் என்று சொல்லக்கூடிய கொடிய விடம் வந்தது. வாசுகி பாம்பும், கடைவதைப் பொறுக்க முடியாமல் விடத்தைக் கக்கியது. எல்லாவற்றையும் அழிக்க வல்ல கொடிய விடத்தைக் கண்டு அனைவரும் ஓடினர். தேவர்கள் அனைவரும் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களை ஆலகால விடத்திலிருந்து காக்குமாறு வேண்டிக் கொண்டனர்.

*** திருநீலகண்டம் ***

இந்த ஆலகால விடத்தை எதிர் கொள்ளும் சக்தி இறைவனாகி சிவபெருமான் ஒருவனுக்குத் தான் உண்டு. வேறு எவருக்கும் அந்த சக்தி இல்லை. ஆகையால், சிவபெருமானிடம் அனைவரும் சென்று தங்களைக் காக்குமாறு வேண்டிக் கொண்டனர். சிவபெருமானுக்கு அருகிலேயே இருந்து திருத்தொண்டு செய்து வரும் சுந்தரரை அந்த விடத்தை எடுத்து வரும் படி கட்டளையிட்டார் சிவபெருமான். சுந்தரரோ, அத்தனை விடத்தையும் ஒரு சிறு பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொடுத்தார். அந்த விட பந்தை சிவபெருமான் வாங்கி வாயில் போட்டு உண்டார். இதைக் கண்டு பயந்து போன பார்வதி தேவியார், அகில உலகங்களையும் விடத்திடமிருந்து காக்கும் பொருட்டு,  அந்த விடமானது கழுத்திலேயே இருக்கும் வண்ணம், சிவபெருமானின் கழுத்தை சற்றே இறுக்கிப் பிடித்தார். இதனால், சிவபெருமானின் கண்டத்திலேயே அந்த நஞ்சு தங்கி, அகில உலகங்களையும் காத்தது. சிவபெருமானின் கழுத்து நீல நிறத்தில் மாறியதால், திருநீலகண்டம் என்ற பெயரையும் சிவபெருமான் பெற்றார். பின்னர் சிவபெருமான் தாண்டவம் ஆடினார்.

சிவபெருமான் அன்று உலகங்களைக் காத்திராவிடில், இன்று இந்த பூமியும், நாமும் உயிரோடு இல்லை. சிவபெருமானுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க நாம் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறோம். அவ்வாறு நன்றி சொல்லவே பிரதோஷ வழிபாடு செய்கிறோம்.

*** சனிப் பிரதோஷ மகிமை ***

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் எனப்படும். இந்த பிரதோஷ காலத்திலே சிவபெருமான் நடனமாடுவதாக ஐதீகம். இதனால், இதைக் காண அனைத்து தேவர்களும் ரிஷிகளும் ஆலயம் வருவார்கள். இந்த பிரதோஷ வேளையிலே, நாமும் சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசித்தால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம். தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம், சனி மகா பிரதோஷம் எனப்படும்.

ஒவ்வொருவர் ஜாதகத்திலும், அதாவது வாழ்கை அமைப்பிலும் குறைந்தது நான்கு தோஷங்களாவது இருக்கும். இந்த தோஷங்கள் அனைத்தும் சனிப் பிரதோஷ வழிபாடு செய்வதால் நீங்கி விடும்.

சனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோட்சனம்

என்பது பழமொழி. சிவபெருமானையும் நந்தியம்பெருமானையும் வணங்க, நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும். பிரதோஷ வழிபாட்டால், அனைத்து தோஷங்களும் பாவங்களும் நீங்குவது மட்டுமின்றி, சகல நன்மைகளும் உண்டாகும். பொதுவாக பிரதோஷ காலத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்தால், ஓராண்டு சிவாலயம் சென்று வழிபட்ட பலன்கள் கிடைக்கும். சனிப் பிரதோஷம் அன்று வழிபடுவதால், ஐந்து ஆண்டுகள் வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.

ஏழரை சனி, கண்ட சனி, அட்டம சனி என்று சனியினால் ஏற்படும் தொல்லைகள் குறைந்து நீங்கும். ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியும், பன்னிரு திருமுறைகளை ஓதியும், சகல வாத்தியங்களுடன் இணைந்து சிவபெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளும் வந்து சேரும். சிவபெருமானிடம் நேரடியாக உபதேசம் பெற்றவர் நந்தியம்பெருமான். இவர் 64 கலைகளுக்கும் குருவாக விளங்குகிறார். வேத ஆகமங்களை நமக்கு அருளிச் செய்வதால், நமக்கு சந்தேகங்கள் நீங்கி, ஞானம் பெருகும். பசும்பால், சங்குப்பூ, வில்வ இலைகள் ஆகியவை கொண்டு வழிபட்டால், எல்லா சாபங்களும் நீங்கும். பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்துப் பின்னர், வில்வம், அரளி, தாமரை, மல்லிகை ஆகிய மலர்களால் அருச்சனை செய்து தீபாராதனை நடைபெறும்.

சனிப்பிரதோஷம் அன்று மறவாமல் சிவாலயம் செல்வோம். அபிஷேக பொருட்களை அளித்தும், அபிஷேகம் செய்தும், ஐந்தெழுத்து, திருமுறைகள் ஓதியும் வழிபடுவோம். மிகுந்த திருவருளோடு பாவங்கள் நீங்கப் பெற்று, சகல நன்மைகளைப் பெறுவோம். திருச்சிற்றம்பலம்.

 

 

Please rate this

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு சமய வகுப்பு பாடங்கள் சொல்லிக்கொடுங்கள் No ratings yet.

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு சமய வகுப்பு பாடங்கள் சொல்லிக்கொடுங்கள்

நம் பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை. கடந்த 60 ஆண்டுகளில், திராவிட அரசுகள், நம் மாண்பு மிக்க வரலாற்றையும், பண்பாடுகளையும், உலகின் மகுடமாக விளங்கும் நம் சமய அடிப்படை செய்திகளையும் நம் பாட நூல்களிலிருந்து அகற்றிவிட்டார்கள். அவற்றை நம் குழந்தைகட்டு சொல்லிக் கொடுக்கும் தலையாய கடமை தற்போது ஒவ்வொரு பெற்றோரிடமும் உள்ளது. நம் குழந்தைகள் ஆங்கிலம் கலவாத அருமையான தமிழ் மொழி பேச வேண்டும். நம் சமயத்தின் அடிப்படை அறிந்து கொண்டு நம் தமிழ் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து காத்து நிற்கும் வீரர்களாக வளர வேண்டும். தேவாரம் திருவாசகம், வாயார இறைவன் முன் பாட வேண்டும். தினமும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக திருக்கோவில் தரிசனம் செய்ய வேண்டும். நம் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் நன்றாகக் கொண்டாட வேண்டும். இதற்கெல்லாம் உறுதுணையாக பெற்றோர்களாகிய நீங்களே திகழ வேண்டும்.

உங்கள் வீடுகளுக்கு அருகில் இது போன்ற வகுப்பு நடைபெறவில்லை என்றால், நீங்களும் உங்கள் தெருவில் அல்லது உங்கள் ஊரில், பகுதியில், அடுக்ககத்தில் இருக்கும் பெற்றோர்கள் இணைந்து உங்கள் அருகில் உள்ள கோவிலிலோ, அல்லது ஒருவர் வீட்டிலோ, ஒரு வகுப்பை ஏற்படுத்தி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துப் பாருங்கள். அதை ஒவ்வொரு ஆண்டும் விடவே மாட்டீர்கள்.

அவ்வகையிலே, இந்த ஆண்டு வரும் கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு திருமந்திரம் உபதேசம் பகுதியில் உள்ள 30 பாடல்களும் சொல்லிக் கொடுங்கள். மனனம் செய்து எழுதச் சொல்லுங்கள். அந்த பாடல்களை இங்கே. கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை இதை படித்து மனனம் செய்து ஒப்புவிக்கலாம், அல்லது எழுதிக் காட்டலாம்.

2020 கோடை விடுமுறை வகுப்பு — திருமந்திரம் உபதேசம் 30

இந்த பிரதியை அச்சிட்டுக் கொடுத்து படித்து மனனம் செய்யச் சொல்லுங்கள். ஐந்து ஐந்து பாடல்களாக மனனம் செய்து எழுதியோ ஒப்புவித்தோ காட்டலாம்.

முந்தைய ஆண்டு கோடை விடுமுறை வகுப்பு பாடத் திட்டம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

எல்லாக் குழந்தைகளும் படிக்கும் வண்ணம் அடிப்படைப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

சைவ சமயம் பற்றிய அடிப்படை செய்திகள் படித்து அறிய இங்கே சொடுக்கவும்.

சிறியவர்களும் பெரியோர்களும் சைவ சமய அடிப்படை நுட்பம் அறிந்து கொள்ள கீழேயுள்ள வீடியோ காணவும்.

 

 

Please rate this

காசி விசுவநாதரின் தரிசனம் நேரலையில் காணுங்கள் 5/5 (1)

காசி விசுவநாதரின் தரிசனம் நேரலையில் காணுங்கள்.

எம்பெருமான் காசி விசுவநாதரின் திருவருளாலும், அக் கோவில் நிர்வாகத்தின் கருணையாலும், எங்கிருந்தும் காசி விசுவநாதரை நேரலையில் காணும் பாக்கியம் கிடைக்கும் அதிசய அற்புதமான காலம் இது. கண்டு மகிழுங்கள். சிவசிவ.
காசி விசுவநாதர் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ தளம்:

https://shrikashivishwanath.org/

Please rate this

காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றி 30 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கோவில்கள் கண்டுபிடிப்பு No ratings yet.

காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றி 30 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கோவில்கள் கண்டுபிடிப்பு

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவுத் திட்டமானது, காசி விசுவநாதர் ஆலயத்தில் இருந்து கங்கையின் கரை வரை செல்ல நேரடியாக பாதை அமைக்கும் காசி-விசுவநாதர் சாலை திட்டமாகும்.  சென்ற 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கிய இந்த திட்டத்தைச் செயல் படுத்த, கோவிலைச் சுற்றியுள்ள வீடுகளும் நிலங்களும் கையகப்படுத்தும் பணி துவங்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அதில் இருந்த வீடுகளை இடிக்கும் பணியும் நடைபெறுகிறது.

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உள்ளே பழம்பெரும் கோவில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஒன்று இரண்டு அல்ல, மொத்தம் 43 கோவில்களை அடையாளம் கண்டிருப்பதாக தொல்லியல் துறையினர் (ASI) தெரிவித்துள்ளனர். இந்த வீடுகளை இடிக்கும் பணிகளின் போது, இது வரை 30 க்கும் மேற்பட்ட கோவில்கள் வெளி வந்துள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் மிகவும் பழமையானதாகவும், கந்த புராணத்தோடு தொடர்புடையதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

திட்டமிடப்பட்டுள்ள முதலாவது வாயிலின் அருகே பழம்கோவில் துந்திராஜ் விநாயகர் ஆலயம்  என்ற கோவிலை புதியதாக கண்டுபிடித்திருப்பதாக இந்த காசி-கங்கை கரை சாலை திட்டத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு விஷால் சிங் தெரிவித்துள்ளார். இத்தனை கோவில்களும் இது நாள் வரை, காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீடுகளுக்குள் மறைந்து இருந்துள்ளன. புதியதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்த 30 க்கும் மேற்பட்ட கோவில்களை அனைத்தும் இந்த திட்டத்தின் கீழ் புணரமைக்கப்படும்.

காளி மாதா கோவில்,  திரு கோனேஷ்வர் மகாதேவர் ஆலயம், திரு ராணி விஜயராஜ் மகோய்பா கோவில், திரு பிரமோத் விநாயகர் கோவில், திரு ருத்ரேஸ்வர் மகாதேவர் ஆலயம், ஷீட்லா மாதா கோவில் ஆகிய கோவில்கள் கண்டெடுக்கப்பட்ட கோவில்களில் மிகவும் முக்கியமானவை. இவை அனைத்தும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதைச் சுற்றிக் கிடைத்துள்ள பழம்பெரும் கோவில்களை அழகாகப் புணரமைத்தும், விசுவநாதர் ஆலயத்திலிருந்து கங்கையின் கரை வரை அழகான நடைபாதை அமைத்தும் இந்த கோவில் மிக அழகாகவும், புதுப் பொலிவுடனும், புனிதத் தன்மையுடனும் மின்னுவதைக் காணும் நாளை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Please rate this

எறிபத்தர் நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில 4.5/5 (4)

எறிபத்தர் நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில

பகுதி 1  எறிபத்தர் நாயனார் வரலாற்றுச் சுருக்கம்

பகுதி 2:

எறிபத்த நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில

1. தினமும் அதிகாலையில் குற்றம் இல்லாத, மலரும் தருவாயில் இருக்கும் பூக்களை மாலையாகத் தொடுத்து, இறைவனுக்குச் சாற்றிய பின்னர் தான், தாம் உணவு உண்பதையே வழக்கமாகக் கொண்டவர்கள் நம் சிவனடியார்கள். சிவகாமியாண்டாரும் இந்த வழக்கத்தைக் கொண்டவர் என்பதை இந்த வரலாறு காட்டுகிறது. வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் வரலாறு, முருக நாயனார் வரலாறு என்று பல வரலாறுகள் இதை நமக்கு உணர்த்துகின்றன. புறம் மற்றும் அகத்தூய்மையோடு மலர்களைப் பறிக்க வேண்டும் என்பது மிகத் தெளிவு. முகத்தைத் துணியினால் கட்டுவது அசுத்தக் காற்று பூக்களின் மீது படாமல் இருக்கவும், எதேச்சையாக இருமினாலோ, தும்மினாலோ, நம் எச்சில் நீர் இறைவனுக்குச் சாற்றுப்போகும் மலர்களில் பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். மலர் தானே, பறித்து மாலையாக்கி போட்டால் போச்சு என்று எளிதாக எடுத்துக் கொள்ளாமல், தாமே தம் நந்தவனங்களில் பறிந்து மாலை தொடுத்து அதை இறைவனுக்குச் சாற்றும் போது கிடைக்கும் பேரானந்தத்தை அனுபவித்தால் தான் புரியும். புறத்தூய்மை போலவே, அகத்தூய்மையும் முக்கியம். ஐந்தெழுத்து மந்திரம் சொல்லிக் கொண்டு பறித்தல் மிக உன்னதம்.

2. பட்டத்து யானையும் பாகர்களும் இறந்ததைக் கேள்வியுற்று, சிறு படையோடு வந்த மன்னன், அந்த இடத்தில் சிவனடியார் ஒருவர் நிற்பதைக் கண்டு, இவர் இதைச் செய்திருக்க மாட்டார் என்று மிக உறுதியுடன் இருந்தான். அடியார்கள் மீது தான் எத்தனை நம்பிக்கை?

3. எறிபத்தர் தான் இந்த யானையையும் பாகர்களையும் கொன்றார் என்ற செய்தி கேட்டு, அவரிடம் பேசுவதற்க்கு முனைந்த மன்னன், முதலில், தனது படைகளையும் மற்று அனைவரையும் நிறுத்தி விட்டு, தானும் முதலில் வலிமை வாய்ந்த குதிரையிலிருந்து கீழே குதித்தான். ஒரு சிவனடியாரை எவ்வாறு அணுக வேண்டும், அவரிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று நுட்பம் இதில் நிறைந்துள்ளது. தான் இந்த நாட்டிற்க்கே மன்னன் என்ற போதும், அவன் குதிரையிலேயே அருகில் சென்ற விசாரிக்கவில்லை. சிவ அடியாரைக் கண்டவுடன் முதலில் கீழே குதித்து பணிவோடு எறிபத்தரை நெருங்கி வணங்கினான். எத்தனை உயர்ந்த பண்பு? சிவனடியார்களிடத்து நாம் எவ்வாறு அணுக வேண்டும், அவர்களிடம் எவ்வாறு பணிவுடன் வணக்கம் செய்ய வேண்டும் என்ற மிக உயர்ந்த பண்பை இங்கு நுட்பமாக நோக்க வேண்டும்.

4. எறிபத்தர் தான் யானையையும் பாகர்களையும் கொன்றார் என்று உறுதிபடக் கேட்ட பின்னர், அவர் சிவனடியார் வேடம் தரித்திருந்தமையால், அந்த சிவனடியார் கண்டிப்பாக தவறு செய்திருக்க மாட்டார் என்று ஆயிரம் சதவிகிதம் உறுதி எடுத்துக் கொண்டான் மன்னன். யானை ஏதோ தவறு செய்யப் போய் தான் இந்த அடியார் யானையையும் பாகர்களையும் கொன்றிருக்க வேண்டும் என்று முழுமையாக முடிவு கொண்டான். சிறு சந்தேகம் கூட அவருக்கு வரவில்லை. அது பற்றி எந்தவித விசாரணையும் செய்யவில்லை. எத்தனை பெரிய பண்பு இது ? இதற்கு காரணம் என்ன என்று நாம் இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால், சிவனடியார் வேடம் தரிந்திருந்தவர்கள் அத்தகைய உயர்ந்த பண்புகளோடு வாழ்ந்து காட்டியிருந்தனர். அனைத்து சிவனடியார்களும் சிறிது குற்றமும் இல்லாமல் நெறியின் வழிப்படி வாழ்ந்தார்கள். உலகினர் யாவரும் போற்றும் படி பிழையின்றி வாழ்ந்தனர். இதுவே அதற்கான காரணம்.

5. எறிபத்தர் நிகழ்ந்ததைக் கூறக் கேட்ட மன்னர், சிவனடியார் வருந்தும் படி இந்த நிகழ்வு நிகழ்ந்து விட்டதே என்று மனம் வருந்துவது எத்தனை உயரிய புரிதலும், இறைவர் பால் அன்பும் இருக்க வேண்டும்? இப்படி நிகழ்ந்து விட்டதா, சரி, பரவாயில்லை. நீங்கள் கிளம்புங்கள் என்று அதை முடித்துவிடாமல், இந்த நிகழ்வுக்கு, மன்னராகிய தானும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதை நினைந்து, என்னையும் கொல்லுங்கள் என்று எறிபத்த நாயனாரிடம் கேட்பது, சாதாரண மனிதர்களால் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத சிந்தனையும் செயலும் ஆகும். சிவபெருமான் மீதும், சிவனடியார்கள் மீதும் எத்தனை அன்பு கொண்டிருந்தால், இறைவனின் திருவருள் நம்மை இப்படி சிந்திக்க வைக்கும்? (என் கண்களில் நீர் பெருகி வழிந்தோடுகிறது.) புகழ்த்துணையாரான இவரும் ஒரு நாயன்மார் அன்றோ?

6. தன்னிடம் வாளை நீட்டி தன்னைக் கொல்லச் சொல்லும் மன்னரிடம், தயங்கி, இன்னும் கொஞ்ச நேரம் விட்டால், மன்னர் தானே தம்மை மாய்த்துக் கொள்வார் என்று பயங்கொண்டு, அந்த வாளை வாங்கி, அவருக்கு முன்பு நாம் மாண்டு விட வேண்டும் என்று தன் கழுத்தை அறுப்பது எத்தகைய செயல்? இன்றைய போர்க்களத்தை சற்றே சிந்தித்துப் பாருங்கள். மனிதன் உயிருக்குப் பயந்து எப்படி ஓடி ஒளிகிறான்? நாயன்மார்கள் அனைவருமே தங்கள் உயிரைத் துச்சமென நினைத்தவர்கள். தங்களால் ஒரு துன்பமோ, ஒழுக்கக் கேடோ வரவிருந்தால், தங்கள் உயிரை உடனே மாய்த்துக் கொள்ளத் துணிந்துவிடுவார்கள்.

7. எறிபத்த நாயனார் செய்த சிவ தொண்டு யாது? சிவனடியார்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு ஆபத்துக் காலத்தில், உதவி செய்து, ஆபத்தை நீக்குவதும், அந்த ஆபத்தை விளைவித்தரை மழுவால் கொல்வதும் ஆகும். ஒருவரைக் கொன்றால், பிரம்மகத்தி தோஷம் வந்துவிடுமே என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஆபத்தை விளைவித்தவர் பிராமணராகவோ (இறை தொண்டு செய்பவர்), தபோதனராகவோ (தவம் உடைய முனிவர்கள்) இருந்தால், அவர்களைக் கொல்லாமல், பிற வழிகளால் அவர்களை வெல்ல வேண்டும். சிவதொண்டு செய்வர்களுக்கு தீங்கு செய்பவர்களைத் தடுக்கவில்லை என்றால், தொண்டு செய்பவர்கள் தொடர்ந்து அந்த தொண்டை செய்ய இயலாத நிலை ஏற்படும். இது சிவ தொண்டு செய்வதற்க்கான தடையாகும். இந்த தடையை எவ்வாறாயினும் நீக்க வேண்டும். இதனால் ஒருவரைக் கொல்ல நேரிடும் போது, அவர் செய்யும் கொலை தன்னுடைய சுயநலத்திற்க்கோ, தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்கோ செய்யப்படவில்லை. அது முழுக்க முழுக்க இறை பணி தடையில்லாமல் நடப்பதற்க்குச் செய்யப்படும் கொலையாகும். இந்த கொலை செய்வதால், சிவ தொண்டு தடைபடாமல் நடக்கும், வளரும். இதனால் இறுதியில் கிடைப்பது சிவபுண்ணியமே. ஆகவே, சிவபுண்ணியத்தின் பொருட்டு செய்யப்படும் கொலைக்கும் சிவபுண்ணியமே கிடைக்கும். இந்த உண்மையை எறிபத்த நாயனார் வரலாறு மட்டுமல்ல, சண்டிகேஸ்வரர் வரலாறு, கோட்புலி நாயனார் வரலாறு என்று பல வரலாறுகள் நமக்கும் உணர்த்துகின்றன. பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே என்பார் சேந்தனார். சிவ புண்ணியம் செய்வதற்க்கு உரிய தடையாக இருப்பவரை நீக்கா விட்டால், இதைப் பார்த்து இன்னும் நிறைய பேர் அந்த தடைகளைச் செய்ய முயல்வர். தடைகள் வளரும். ஆகவே, சிவ புண்ணியத்திற்க்கான தடைகளை நீக்குவதும் சிவ புண்ணியமே. கொலை களவு ஆகியன உலகத்தாரால் நீக்கப்பட்டாலும், அவை நன்மை பயக்கும் இடத்தில் அவை புண்ணியத்தைத் தருகின்றன. இதை நம் சாத்திர நூல்களும் உறுதி படுத்துகின்றன.

ஒலி/ஒளி வடிவத்தில்:

Please rate this

சைவசமயம்.in சைவ சமயத்திற்க்கான சிறப்பு செய்திகள். தினம் வாருங்கள் 5/5 (1)

சைவசமயம்.in சைவ சமயத்திற்க்கான சிறப்பு செய்திகள். தினம் வாருங்கள்

Please rate this

இறைவனுக்கு தீப ஆராதனை காட்டப்படுவதன் தத்துவம் என்ன? ஏன் தீபம் தொட்டு வணங்குகிறோம்? 5/5 (2)

இறைவனுக்கு தீப ஆராதனை காட்டப்படுவதன் தத்துவம் என்ன? ஏன் தீபம் தொட்டு வணங்குகிறோம்?

கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசனஞ் செய்யும் காலத்தில், சிவாச்சாரியார் மந்திரங்களும் திருமுறைகளும் ஓதி இறுதியில் கற்பூரம் அல்லது விளக்கு தீப வழிபாடு செய்கிறார். அந்த தீபத்தை இறைவனைச் சுற்றிக் காட்டுகிறார். அந்த நேரத்தில் பக்தர்கள் அனைவரின் கவனமும், சிந்தனையும் ஒருங்கே இறைவனை நினைந்து வேண்டிக்கொள்ளும். தேவையில்லாத சத்தங்கள் ஒடுங்க, சங்கொலி, மணி, வாத்திய ஒலிகளும் மிகுந்து ஒலிக்கின்றன. பின்னர், அந்த தீபத்தை நமக்குக் காட்டி, நாமும் அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். இந்த தீபத்தின் தத்துவம் என்ன?

இதை உணர்ந்து கொள்ள, ஒரே ஒரு விடயம் நாம் அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இறைவன் என்பவன் ஒருவனே. அவன் பிறப்பு இறப்பிற்க்கு அப்பாற்பட்டு, அவனுடைய உண்மையான சொரூப நிலையில் கண்களுக்குத் தெரியாத எந்த நிறமும் உருவமும் இல்லாத நிலையில் இருந்து நாம் இறைவனை அறியும் பொருட்டு, கீழிறங்கி வந்து, அருவம், அருவுரும், உருவம் ஆகிய நிலையை எடுக்கிறான். அவ்வகையில் அவன் சோதியாக இருக்கிறான். கண்களுக்குப் புறத்தே அமையும் தீப சோதியாகவும், உள்ளே உள்ளத்தின் உள்ளே இருளைப் போக்கி ஞாயிறு போன்று எழுகின்ற சோதி உருவாகவும் இறைவன் இருக்கிறான்.

எனவே, நாம் கோவில்களில் நேரடியாக கண்களில் காணும் அருவுருவ நிலையான சிவலிங்க வடிவம் அல்லது உருவ வடிவமான நிலையில், அம்மைய்ப்பராக, தென்முகக் கடவுளாக, நடராசனாக, சந்திரசேகரராக, சோமஸ்கந்தராக என்று பல்வேறு உருக் கொண்டு இருந்தாலும், அவனுடைய உண்மையான நிலையான சோதி வடிவத்தை நாம் உணர்ந்து கொண்டு அதை நம் மனக் கண்களில் கண்டு போற்றித் துதிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தீப ஆராதனை காட்டப்படுகிறது.

சோதி வடிவாக இருக்கும் இறைவனை நாம் வணங்கி, அவனது அருளை நாம் கண்களில் ஒற்றிக் கொண்டு நன்றி சொல்கிறோம். இன்னும் ஆழமாக இதை சிந்திக்க, இந்த காணொளி உதவும்.

Please rate this

அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா? 4.75/5 (4)

அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா?

நாம் பிறந்து முதலில் உலகியலை நன்கு பழகுகின்றோம். அது தான் நம் உடம்பை வளர்க்கவும், வயிற்றுப் பசியைப் போக்க நல்ல வேலையையும் கொடுக்கிறது. பின்னர், நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் பக்திப் பாடல்களைக் கேட்கிறோம், பாடுகிறோம். நம் தேவைகளை தேவாலயம் சென்று முறையிடுகிறோம். இறைவன் இருக்கிறார் என்பதை நம் பெற்றோரும், நண்பர்களும் கூறுவதால், அதை நம்புகிறோம். அவர்கள் செய்யச் சொல்வதை அப்படியே செய்கிறோம். நமக்கு இறைவன் திருவுருவத்தையும் அவனுக்கு செய்யும் பூசைகளையும் மிகவும் பிடித்து விடுகிறது. இறைவனை நேசிக்க ஆரம்பிக்கிறோம்.

இன்னும் நம் அறிவு முதிர்வு அடையும் போது, இறைவனைப் பற்றியும் இந்த பிரபஞ்சம் பற்றியும் நாமே ஆராய்ச்சி செய்கிறோம். பெரியோர்களும் ஞானிகளும் பேசுவதைக் கேட்டு அறிகிறோம். இறைவன் இல்லாமல் இங்கு ஓர் அசைவும் அசையாது என்ற உண்மையை நாமே நம் ஆய்வின் மூலமாக அனுபவப்பூர்வமாக உணர்கிறோம். அப்போது தான் இறைவன் இருப்பதையும், அவன் எப்படியெல்லாம் இருக்கிறான், எப்படியெல்லாம் பக்தருக்கு அருள் புரிகிறான் என்பதையெல்லாம் நாமே நேரடியாக உணர ஆரம்பிக்கிறோம். நம் மனதிலே அடுக்கடுக்கான கேள்விகள். அனைத்திற்க்கும் பதில் நாடி கிடைத்தும் விடுகிறது. இறைவன் மீது அன்பு பெருகுகிறது. நமக்கும் அவனுக்கு உள்ள தொடர்பே நிரந்தரம், மற்று எல்லாம் சில காலமே என்பதை உணர்ந்து, இறைவனுக்கு அடியவனாக நம்மைக் கருதி, சிவப் பணிகளைச் செய்கிறோம்.

இன்னும் சிலருக்கோ சிறுவயதிலிருந்து அதிதீவிர அன்பும் பக்தியும் வந்து விடுகிறது. ஒவ்வொருவருக்கும் எப்போது பக்தி வரும், அன்பு பெருகும் என்று நாமறியோம். இறைவனே அறிவார். அனைத்திற்க்கும் அடிப்படையாக இருப்பது, இறைவனை உணர்வதும், அவன் மீது அன்பு பெருகுதலும் தான். இறைவனை உணர்ந்து நம்மை முழுமையாக இறைவனிடம் கொடுத்து விடுவதைத் தான் இறைவன் ஆட்கொண்டுவிட்டார் என்கிறோம். நம் குருமார்கள் சொல்லிய நெறிகளின் படி வாழ்கிறோம். அவ்வாறாக, நமக்கும் இறைவனுக்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துகிறோம். நம் அடிப்படை உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு நாம் நம் சமுதாயத்தைச் சார்ந்து வாழ்கிறோம். அந்த சமுதாயமே நமக்குக் கோவில் கட்டியுள்ளது, தேர் கட்டமைத்துள்ளது, குளத்தை சீர் படுத்தி வைத்திருக்கிறது. ஆங்கே, இறைவனுக்கு அடியார்கள் எண்ணற்றவர்கள் இருக்கின்றார்கள். நல்ஞானம் அருளும் குருமார்களும் இருக்கிறார்கள்.

அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து அடியார்களை வணங்குகிறோம். நமக்கு வழிகாட்டும் நெறியைக் கடைப்பிடித்து வாழ்கிறோம். அவ்வாறு வாழ்பவர்களின் இலக்கணமாக பத்தைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது அக இலக்கணம் பத்து. புற இலக்கணம் பத்து. இதைத் திருமுறைகளும் பிற நூல்களும் சொல்கின்றன.

பத்து கொலாம் அடியார் செய்கை தானே – திருமுறை 4:18:10

பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் – திருமுறை 6:15:2

அடியார்களின் புற இலக்கணம் பத்து. அதாவது புறத்தே காணுமாறு அமையும் இலக்கணம் பத்து. இவற்றை உபதேச காண்டம் என்ற நூல் தெளிவுபடுத்தியுள்ளது.

1) திருநீறும் கண்டிகையும் அணிதல்
2) பெரியோரை வணங்குதல்
3) சிவனைப் புகழ்ந்து பாடுதல்
4) சிவநாமங்களை உச்சரித்தல்
5) சிவபூசை செய்தல்
6) சிவபுண்ணியங்களை செய்தல்
7) சிவபுராணங்களை கேட்டல்
8) சிவாலய வழிபாடு செய்தல்
9) சிவனடியாரிடத்தன்றி உண்ணாமை
10) சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல்

அக இலக்கணம் என்பது அடியார்களின் மனத்துள்ளேயும் உணர்வுள்ளும் ஏற்படும் மாற்றங்களாகும். சிவபெருமானது புகழைக் கேட்குங்கால்,

1) மிடறு விம்மல் (மிடறு-கழுத்து)
2) நாத்தழுதழுத்தல்
3) இதழ் துடித்தல்
4) உடல் குலுங்கல்
5) மயிர் சிலிர்த்தல்
6) வியர்த்தல்
7) சொல்லெழாமை
8) கண்ணீர் அரும்புதல்
9) வாய்விட்டழுதல்
10) மெய்மறத்தல்

என்பனவாகும். சிவபெருமானைப் பற்றி நினைக்கும் போதும், கேட்கும் போதும், தரிசனஞ் செய்யும் போதும், இவை தானாக நிகழும்.

அடியார்கள் அனைவரும் பத்தர்களே. பத்தர் என்ற சொல்லும் அடியார் என்ற சொல்லும் மாறி மாறி திருமுறைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இறைவனை உணரும் தொடக்க நிலையில் இருப்பவரை பக்தர் என்றும் இன்னும் ஆழச் சென்று சிவபெருமான் மீது அன்பு பெருக்கி, நெறியோடு வாழ்பவர் அடியார் என்று தோன்றினாலும், அனைத்தும் சிவன் பால் அன்பே. ஆகவே, நான் பக்தரா, அடியாரா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், நாயன்மார்களின் வரலாறுகளைத் தொடர்ந்து படித்தும், திருமுறைகளை தினம் ஓதியும், சிவ புண்ணிய செயல்களில் ஈடுபாடு கொண்டு செய்தும் வந்தால், அதுவே, இறைவன் திருவருளை நமக்கும் காட்டும்.

Please rate this

“சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிருங்க” என்று சொல்வது சரி தானா? சொல்லலாமா? 5/5 (3)

“சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிருங்க” என்று சொல்வது சரி தானா?

உங்கள் பெயர் குலம் கோத்திரம் சொல்லுங்கோ என்று சிவாச்சாரியார் கேட்டவுடன் தான் சிலருக்கு ஒன்றிரண்டு டக்குனு நியாபகம் வராது. சிலர் மிகச் சரியாக உடனே சொல்லிடுவாங்க. இன்னும் சிலர், இதை அச்சடித்து தங்கள் கைப்பையிலேயே வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ, நம் பெயரைச் சொல்வதை விட, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வது சிறந்தது என்று முடிவுக்கு வந்து, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து விடுங்கள் என்கின்றனர்.

அர்ச்சனை என்பது யாது?

மனிதர்களுக்குப் பல குறைகள் உண்டு. பல குறிக்கோள்களும் உண்டு. இவற்றையெல்லாம் அடைவதற்க்கு இறைவனின் திருவருள் வேண்டும். ஆகவே, இறைவனிடம் அந்த எண்ணங்களைச் சொல்லி அதை நிறைவேற்றுமாறு விண்ணப்பம் செய்து கொள்வதே அர்ச்சனையாகும்.  அப்படியானால், இறைவனிடம் யாருக்கு இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறோம் என்று சொல்ல வேண்டாமா? அதற்க்குத் தான் நம் பெயர், குலம் மற்றும் கோத்திரம். ஒவ்வொருவரையும் குறிப்பாக அடையாளப்படுத்துமாறு (Personal Identity) இருப்பது இந்த மூன்றும் தான். தங்களுடைய பெயரோடு ஊரையும் சேர்த்து சொல்வது மரபாக இருந்து வந்தது. இன்றும் பலர் தங்கள் பெயரோடு ஊரையும் சேர்த்துச் சொல்கின்றனர். அப்படி நம்மை அடையாளம் காட்டுவதற்கான பெயர், குலம் மற்றும் கோத்திரம் சொல்லி, இந்த விண்ணப்பத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நாம் இறைவனிடம் சொல்ல வேண்டும். நமக்கு மந்திரங்கள் தெரியாத காரணத்தினாலே, அந்த அர்ச்சகர் நமக்காக நம் பொருட்டு அந்த மந்திரங்களைச் சொல்லி சமர்ப்பிக்கிறார்.

இன்று தமிழில் அர்ச்சனை செய்யலாம். முறையாக பார்த்தால், நமக்கு நாமே தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் ஒரு ஆள் வைத்து செய்கிறோம், தவறில்லை. நாமே செய்வது சிறப்பு. அர்ச்சனை என்பது பாட்டேயாகும் என்பதை சுந்தரர் பெருமான் வரலாற்றில் உணர்த்துவதாக சேக்கிழார் மொழிகிறார். இறைவனைப் போற்றிப் பாடிவிட்டு நம் விண்ணப்பங்களையும் அதோடு சேர்த்து சொல்லுகிறோம். இதுவே அர்ச்சனையாகும்.

குறைகளும் குறிக்கோளும் உள்ள நாம் இறைவனிடம் விண்ணப்பம் செய்து அர்ச்சனை செய்கிறோம். இறைவன் பெயருக்கே அர்ச்சனை செய்வது என்றால் என்ன? இறைவன் தனக்கு என்று எந்த தேவையும் இல்லாதவன். அவனும் யாரிடமும் போய் எதையும் கேட்கும் அவசியமும் இல்லை. அப்படி என்றால், இறைவன் பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பது அர்த்தமற்றதாகும். நம்முடைய பெயைரை இறைவன் திருமுன் சொல்லி அவனைப் போற்றி, நம்முடைய விண்ணப்பங்களையும் அவனிடம் வைப்பதே அர்ச்சனையாகும். ஆகவே, அர்ச்சனை நம் பெயரைச் சொல்லியே செய்ய வேண்டும்.

இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கும் போது நமக்கு சரி என்று தோன்றுவதைக் கேட்கிறோம். நம் ஆசைகளைச் சொல்கிறோம். ஆனால், நிஜ உலகில், அதுவே நமக்கு வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்து தந்துவிடும். ஆகவே, நமக்கு என்ன சரியாக வேண்டும் என்பது பெரும்பாலும் நமக்கே தெரிவதில்லை. நம்மைப் பற்றி நமக்குத் தெரிவதை விட முக்காலமும் முழுவதும் அறிந்த இறைவனுக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதும், நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும், நன்றாகவே தெரியும். ஆகவே, எனக்கு வேண்டியதை நீயே அறிவாய், அதை எனக்கு கொடுக்க விருப்பம் இருந்தால் அதைக் கொடுப்பா என்று இறைவனிடம் புத்திசாலிகள் வேண்டுவர். இதுவே ஒரு பாடலாக திருவாசகத்தில் இருக்கிறது.

வேண்டத் தக்கது அறிவோய் நீ,
    வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
    யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
    அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

இறைவா, எனக்கு என்ன கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை நீயே அறிவாய். அப்படி நீ எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால், உன் விருப்பப்படியே அதை கொடுப்பா என்று கேட்பது மிகவும் கெட்டிக்காரத்தனம். இதனால் தான், கோவிலுக்குச் செல்லும் பெரியோர்கள், தனக்கு இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்பதில்லை. உனக்கா ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் கொடுப்பா என்று இறைவனைப் போற்றிப் பாடி மட்டும் வந்துவிடுவார்கள். எனவே, கோவிலுக்குச் சென்று நமக்காக விண்ணப்பம் வைக்கும் போது நம் பெயர் சொல்லியே அர்ச்சனை செய்ய வேண்டும். அதைவிட சிறப்பு, இந்த திருவாசக பாடலை மனனம் செய்து பாடிவிட்டு வருவது மிகவும் சிறப்பாகும்.

இறைவன் திருநாமம் சொல்லி எப்போது அர்ச்சனை செய்யப்படும் ?

பண்டிகை காலங்களிலும், திருவிழா காலங்களிலும், விஷேட நாட்களிலும் இறைவனுடைய திருநாமத்தைக் கூறி அர்ச்சகர்கள் அருச்சனை செய்வார்கள். உதாரணமாக, சுவாமி திருக்கல்யாணம், நன்நீராட்டு, பிரம்மோத்சவம் போன்ற காலங்களில் சுவாமி பெயரைச் சொல்லியே சங்கற்பம் செய்யப்படும்.

அர்ச்சனை சங்கல்பம் என்பதே, வேண்டுதல் உறுதிமொழி விண்ணப்பம் தான். விண்ணப்பத்தில் சுவாமி பெயரா? நம் பெயரா? இரண்டு பெயர்களுமே சொல்லி செய்யலாம். அது தவறல்ல. ஆனால்! நம் பெயரை எப்போது சொல்வது! சுவாமி பெயரை எப்போது சொல்வது என தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக முருகனுக்கு அர்ச்சனை செய்கிறீர்கள் என கொள்வோம். உங்கள் பிறந்தநாள்; உங்கள் திருமணநாள்; உங்கள் பரீட்சை நாள்களில் உங்கள் பெயர் கூறி சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். கிருத்திகை, ஷஷ்டி,  விசாகம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ நாட்களில் (நமது பெயர்களை க்கூறாமல்) அங்கு முருகன் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். இதுதான் சரியான வழியாகும்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

நாயன்மார்களின் நட்சத்திரமும் குருபூசையும் 4.67/5 (9)

நாயன்மார்களின் குருபூசை நட்சத்திரம்

திருச்சிற்றம்பலம்.

தாமாக அறியும் திறன் இன்றி, அறிவிக்க அறியும் திறனை உடைய நமக்கு, ஒவ்வொன்றையும் குருவாக ஒருவர் அறிவிக்க, அதைக் கற்று அறிகிறோம். அவ்வகையிலே, இறைவனை அறியவும் அவனின் திருவருளைப் பெறவும் நமக்கு வழி காட்டுபவர்களாய் இருப்பவர்கள் நம் குருமார்கள். சீடனுடைய அறியாமையை நீக்கி, இறைவனிடம் இட்டுச் செல்ல வல்லவரே குருவாவர். துன்பமின்றி வாழவும் இறைவன் திருவருள் பெற்று பேரின்பவீடு பெறவும் நமக்கு வழிகாட்டியார் இருப்போர் 63 நாயன்மார்கள். அத்தகையோரை நாம் கொண்டாட வேண்டாமா ? பூசை செய்ய வேண்டாமா ?
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
 
என்பது தெய்வப் புலவர் வாக்கு. நமக்கு இறைவனையும் அவனை அடையும் வழியையும் காட்டும் குருவிற்கு நாம் நன்றி சொல்ல மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  இறைவன் திருக்காட்சி கொடுத்து நாயன்மார்கள் முக்தி அடைந்த தினத்தை நாம் நாயன்மார் குருபூசையாக வணங்குகிறோம். நாயன்மார்களின் குருபூசை செய்வது நம் தொன்று தொட்டு செய்து வரும் மரபாகும். இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் நாயன்மார்களின் குருபூசை நிகழ்ந்து வருகிறது. குருவருளைப் பெற்றால், திருவருளை எளிதில் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு.

63 நாயன்மார்கள் முக்தியடைந்த நட்சத்திர நாளை நாம் அவர்களது குருபூசையாக வணங்கி வருகிறோம். எத்தனையோ உலகங்கள் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாமல் தவித்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்தையும் இடத்தையும் மிக மிகத் துல்லியமாக அளக்கும் அளவைகளையும் வைத்து மிகவும் முன்னோடியான நாகரீகமாகத் திகழ்ந்தார்கள். ஆகையாலேயே, நாம் இன்றும் நம் நாயன்மார்களின் துல்லியமான முக்திநாளை கொண்டாடி குருபூசை செய்ய வேண்டும்.

சிவாயநம.

Please rate this

சிவனடியார்களுக்கு ஆபத்து விளைவித்தவர்களை மழுவினால் துணிந்து சிவப்பணி செய்த எறிபத்தநாயனார் No ratings yet.

சிவனடியார்களுக்கு ஆபத்து விளைவித்தவர்களை மழுவினால் துணிந்து சிவப்பணி செய்த எறிபத்தநாயனார்

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

… திருத்தொண்டத்தொகை, சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

எறிபத்த நாயனார் குருபூசை:  மாசி அத்தம்

பகுதி 1: எறிபத்த நாயனாரின் வரலாறு

பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்

பகுதி ௧: எறிபத்த நாயனார் வரலாறு

இருளில் மூழ்கிய உயிர்களைக் காத்து உய்விக்க வந்த எம்பெருமான், பிரபஞ்சத்தைப் படைத்து உலகையும் படைத்து, அதில் அவர்கள் வாழும் நெறியையும் படைத்து, அந்த நெறியின் படி வாழ்ந்த அடியார்களின் வரலாறுகளையும் நமக்குக் காட்டியுள்ளார் ஈசன். அவ்வகையிலே அறுபத்து மூவருள் இப்போது எறிபத்த நாயனார் வரலாறு பற்றி இங்கு சுருக்கமாகக் காண்போம்.

பெரியபுராணம் பகுதி 08 – எறிபத்த நாயனார் புராணம்.

கொங்கதேசத்திலே, அழகிய கருவூர் ஊரில் ஆநிலையப்பர் ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் அவருடைய அடியார்களுக்கும் திருத்தொண்டு செய்து வந்தவர் எறிபத்த நாயனார். சிவன் அடியார்களுக்குத் திருத்தொண்டுகள் செய்வதும், அந்த அடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்திலே அந்த ஆபத்தை ஏற்படுத்தியவர்களை மழுவால் வெட்டியும் சிவதொண்டு புரிந்தார் எறிபத்த நாயனார்.

சிவகாமியாண்டார் என்று ஒரு பெரியவர், தினமும் பூமாலை கட்டிக் கொண்டு கருவூர் ஆநிலையப்பருக்குச் சாற்றி வந்தார். ஒரு நாள் வழக்கம் போல அதிகாலையிலேயே எழுந்து, நீராடி, தன் மூச்சினால் அசுத்தக் காற்றும், முகத்திலிருந்து எச்சியும் விழாத வண்ணம் தன் முகத்தைத் துணியினால் கட்டிக் கொண்டு, திருநந்தவனத்துக்குப் போய், பூவாக மலர்ந்து கொண்டிருக்கும் மொட்டுக்களைக் கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார்.

அவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது, அந்நாட்டு மன்னருடைய பட்டத்து யானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே நீராடி, மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே செல்ல, தன்மேல் ஏறி அமர்ந்திருக்கும் பாகர்களோடும் வீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின் தொடர்ந்து சென்று, அவர் கையிலே தாங்கிய தண்டிலே வைத்திருக்கும் திருப்பூங்கூடையைப் பறித்துக் கீழே சிதறியது. அந்த யானையின் மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக, சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை வேகமாகச் செல்ல, தன் முதுமை காரணமாக வேகமாகச் செல்ல இயலாமல் விழுந்த சிவகாமியாண்டார், நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, மனது கலங்கி, மிகுந்த துக்கங் கொண்டு “இறைவனுக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானை சிந்திவிட்டதே. சிவதா சிவதா” என்று சொல்லி ஓலமிட்டார்.

அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி “உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது” என்று கேட்க, அவர் “சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது” என்றார். உடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு மிகவும் விரைந்து ஓடிப் போய் யானைக்கு மிக அருகே சென்று, மழுவை வீசி அதன் மேலே பாய்ந்தார். இதைக் கண்ட யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப, எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, யானையின் துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.

அந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், மன்னராகிய புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, “பட்டத்து யானையையும், பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று விட்டார்கள்; இதை அரசருக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்” என்று சொன்னார்கள். உடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய், அவரை வணங்கி, அந்தச் செய்தியைச் சொன்னார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த இடத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடம் தரித்த எறிபத்தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாமல், “யானையைக் கொன்றவர் யாவர்” என்று கேட்டார்.

பாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, “மழுவைத் தரித்துக்கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்” என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் “இவர் சிவபத்தராக இருப்பதால், அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்ல மாட்டார். அந்த யானை என்ன குற்றம் செய்தது என்று தெரியவில்லையே” என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, “இந்த அடியவர் யானைக்கு எதிரே சென்ற பொழுது அந்த யானையால் இந்த அடியவருக்கு யாதொரு துன்பமும் நிகழாமல் இருக்கும்படி பூர்வசென்மத்திலே தவஞ்செய்திருக்கிறேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ” என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, “சுவாமீ! தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னம் அறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா? சொல்லி யருளும்” என்றார். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, “சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்” என்றார்.


புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, “சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது, அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்வது நீதியன்று” என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, ‘இதினாலே கொன்றருளும்” என்று நீட்டினார். எறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. “இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்” என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, “பட்டத்து யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கம் கொள்ளாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே” என்று எண்ணி “முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு” என்று நினைத்து, அந்த வாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.

அப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, “அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை பூக்களைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்” என்று ஓர் அசரீரீ வாக்கு ஆகாயத்திலே ஒலித்தது. உடனே யானையும் பாகர்களும் இறவாதது போல எழுந்து நின்றனர். அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து வணங்கினார். புகழ்ச்சோழநாயனாரும் அந்த வாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து வணங்கினார். பின் இருவரும் எழுந்து அசரீரி வாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். பாகர்கள் பட்டத்து யானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, “அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்” என்று விண்ணப்பஞ்செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் சாத்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பக்தி வலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக்குத் தலைவரானார்.

பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்

திருச்சிற்றம்பலம்.

பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்

Please rate this

திருச்சி திருஆனைக்கா கோவிலில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு No ratings yet.

திருச்சி திருஆனைக்கா கோவிலில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

திருச்சியில் மிகவும் புகழ்பெற்ற சிவதலம் திருஆனைக்கா. பஞ்ச பூத தலங்களில் நீர் தலமாக விளங்குகிறது இந்த தலம். இங்கு சிவபெருமான் ஜம்புகேசுவரர் என்ற திருநாமத்தோடு அகிலாண்டேசுவரி அம்மையோடு எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இது தேவார பாடல் பெற்ற தலங்கள் 276 இல் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தாயுமானவர் ஆகியோர் இந்த தலத்து இறைவனைப் போற்றி பதிகம் பாடியுள்ளனர்.

இந்த கோவிலின் அன்னதானக்கூடம் அருகே ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவைச் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, தங்க நாணய புதையலை இவர்கள் கண்டனர். சுமார் 500 க்கும் மேற்பட்ட தங்க நாணயங்கள் கிடைத்தன. இன்றைய மதிப்பில் இது தோராயமாக 61 லட்சமாகும். இருப்பினும் இவை பழங்கால நாணயங்கள் என்பதால், இந்த தங்கத்தின் தரம் ஆகியவற்றைப் பொருத்து இதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

இதைக் கேள்வியுற்ற ஸ்ரீரங்கம் காவல் துறையினர் விரைந்து வந்து இந்த தங்க நாணயங்களைக் கைப்பற்றி பத்திமாக எடுத்துச் சென்றனர். இந்த தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டு அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

Please rate this

அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு 5/5 (2)

அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னையிலிருந்து தெற்கே உள்ள நகரங்களுக்கு செல்வபர்கள் கண்ணில் படமால் போகாது இந்த அச்சரப்பாக்க மலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம். இது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை உள்ள அச்சரப்பாக்கம் ஊரில் உள்ள மலையாகும். இந்த மலையில் பன்நெடுங்காலமாக சிவாலயம் ஒன்று உள்ளது. மேலும் இந்த மலையைச் சுற்றி கிரிவலமும் மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த மலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான 55 ஏக்கம் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிமித்து மலைமாதா கோவில் என்ற கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டது. மலைகளை வெடி வைத்துத் தகர்த்தும், விதிகளை மீறி படிக்கட்டுகளை அமைத்தும், கட்டப்பட்டுள்ளது. மேலும் கடைகளும் பல வைக்கப்பட்டுள்ளது. இது காரணமாக அந்த மலைப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், அவை ஊருக்குள் வர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த மலைமாதா கோவிலையும் அதன் அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் ஆர். கேமலதா மற்றும் எம். சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசு, தொல்லியல் துறை மற்றும் மலைமாதா தேவாலய நிர்வாகம் ஆகியோர் உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Please rate this

ஆங்கிலம் கலவாத தமிழில் பேச திருமுறை திருப்புகழ் படிப்போம். திருமுறை பதிகங்களில் வரும் தமிழ் சொற்களை அறிவோம். 5/5 (2)

பொருள் உணர்ந்து பாடல்கள் படிக்க முதலில் தமிழ் சொற்களின் பொருளை அறிவோம். திருமுறை பதிகங்களில் வரும் தமிழ் சொற்களின் பொருள்

ஆங்கில சொற்களைத் தவிர்த்து தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் நம் தமிழ் பேச்சை வலுவடையச் செய்யலாம். திருமுறைகள் திருப்புகழ் படித்தாலே நன்றாக ஆங்கிலம் கலவாத தமிழில் பேசலாம். திருமுறைகளில் உள்ள சில சொற்கள் தற்போது வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அவை எல்லாம் அருமையான சொற்கள். திருமுறை பதிகங்களை நன்றாக புரிந்து பொருள் உணர்ந்து படிக்க, முதலில், அவற்றை சீர் பிரித்து சொற்களுக்கு உரிய பொருளை உணர்ந்து படிக்க வேண்டும். அதற்கு உதவியாக இருக்கும் வண்ணம் சில பதிகங்களில் வரும் சொற்களுக்குரிய பொருளை இங்கே காண்போம். தொடர்ந்து திருமுறை படியுங்கள். தமிழ் புலமையும் திருமுறை திருவருளும் வளரும். ஆங்கிலம் கலவாமலும் பேச இயலும்.

எட்டாம் திருமுறை திருவாசகத்தின் முதல் பதிகம் சிவபுராணத்தில் வரும் சில சொற்களுக்குரிய பொருள்.

சொல் பொருள்
சிவபுராணம்
தாள் திருவடி – இறைவன் திருவடியை குறிக்கும்.
கழல் பாதம், திருவடி – இறைவன் திருவடி
கோகழி திருப்பெருந்துறை
குருமணிதன் குருவாகிய மாணிக்கம்
ஆகமம் 28 ஆகமங்கள்
ஏகன் ஒருவன்
பிஞ்ஞகன் 1. கங்கை, பிறை, மலர்கள், விரிசடை என்று தலைக்கோலம் உடையவன். 2.பிஞ்சாகிய அணுவிலும் உறைபவன். பிஞ்சு + அகன். பிரபஞ்சத்திற்கு மூலமான அணுவிலும் சிறிய பொருளிலும் இருப்பவன். இது சிவனையே குறிக்கும்.
சேயோன் சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன். குறிஞ்சி கடவுளார் சேயோன். இது சிவனை குறிக்கும்.
கோன் அரசன்
சீரார் பெருந்துறை திருப்பெருந்துறை
தேசன் ஒளிமயமானவன், பெரியோன்
கண்ணுதலான் நெற்றிக் கண்ணை உடையவன். (சிவன்)
நுதல் நெற்றி
மிக்காய் கொண்டுள்ள(வன்)
விருகம் மிருகம்
வீடுபேறு மறுபிறவி இல்லாத மோட்ச நிலை.
விடை காளை சிவனின் வாகனம் நந்தி
விடைப்பாகன் காளை வாகனமுடைய சிவன்
நேயம் அன்பு
நிமலன் அழுக்கற்றவன், குற்றமற்றவன்
சீர் செல்வம், நன்மை, அழகு, பெருமை, புகழ், இயல்பு.
இயமானன் யாகம் செய்விப்பவன்
பெம்மான் பெருமான், சிவன்
கன்னல் கரும்பு
தேற்றனே தெளிவானவனே
குரம்பை உடல்

அடுத்து சொற்றுணை வேதியன் என்ற திருநாவுக்கரசர் பெருமான் பாடலில் வரும் சில சொற்கள்.

சொற்றுணை வேதியன் பதிக பாடல்
அருங்கலம் கலம் – மண்பாண்டம், பொருள். அரிய கலம். அணிகலன். பெருமை மிக்கது, சிறப்பானது.
கோ அரசன்
கோட்டமில்லது குற்றமில்லாது – செங்கோல் வளையாமல் ஆட்சி செலுத்துதல்.
அழல் நெருப்பு, தீக்கொழுந்து
நண்ணி நெருங்கி, அணுகி
இரந்து கெஞ்சி பெறுதல், தயவுடன் வேண்டல்
ஆறங்கம் வேதாங்கம் ஆறு – சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம். அரசர்க்குரிய – படை குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு உறுப்பு.
சலமிலன் சலம் – குற்றம், கோட்டம். சலமிலன் குற்றமற்றவன்
வீடினார் உலகினில் உலக பற்றை விட்டவர்
விழுமிய செழித்த, வளமான, உயர்ந்த
இல்லக விளக்கது வீட்டில் இருக்கும் புற விளக்கு. இல்+அக விளக்கு – இவ்வுடம்பினுள் இருக்கும் அக விளக்கு நமசிவாய, உள்ளத்து இருளைப் போக்கும்.
மாப்பிணை மான் குட்டியை கையில் ஏந்திய பெருமான்

அடுத்து சுந்தரர் பெருமான் அருளிய பித்தா பிறைசூடி பாடலில் சில சொற்கள்

பித்தா பிறை சூடி பெருமானே பாடல்
எத்தான் என்ன ஆனாலும்
வேயார் மூங்கில் காடு
பெற்றம் விடை, காளை
யாதன் அறிவில்லாதவன்
தாதார் பூக்களின் மகரந்தம்
அழல் நெருப்பு, தீக்கொழுந்து

மறையுடையாய் தோலுடையாய் திருஞானசம்பந்தரின் பதிகம்

மறையுடையாய் தோலுடையாய் பதிகம்
வார்சடை நீண்ட சடை
மேயவனே உறைபவனே
கனைத்தெழுந்த அதிர வைத்து எழுந்த, முழங்கிய
நிமலா குற்றமற்ற, தூயவன்
வவ்வேல் வல் + வேல். வல் – சீக்கிரம். வவ்வேல் – சீக்கிரம் எடுக்காதே
அடல் வலிமையோடு, வீரியமிக்க
மலைபுரிந்த மன்னவன் பார்வதியின் தந்தை பர்வதராஜனாகிய இமயமலை ஆண்ட அரசன்; இமவான்
அவிர்சடை ஒளிவீசும் சடை, மின்னும்
பாங்கினல்லார் நல்ல பாங்கை உடையவர், நல்ல குணமுடையவர்
படிமம் தவவேடம்
தூங்கி மனம் ஒன்றி
விருத்தன் முதியவர்
கருத்தனாகி முழு முதற் கடவுளாகி
அருத்தன் பொருளானவன்
நிருத்தம் நடனம்
நிருத்தர் நடனமாடுபவர், நடிப்பவர்
கீதர் பாடுபவர்
மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெண்கனையால் அரி, எரி, காற்று மூன்றையும் கூட்டிய கொடிய அம்பினால்.
அருவரை மலை
வேழம் யானை
கேழல் ஆண் பன்றி
துஞ்சல் தூக்கம், இறப்பு (தன்னை மறந்த நிலை)
சேடர் சேணியர் என்னும் செட்டி இனத்தவர். பண்புடையோர்
மறுகு குறுந்தெரு
பனுவன் நூல்

மந்திரமாவது நீறு என்று திருநீற்றின் பெருமையினை சொல்லும் ஞானசம்பந்தர் தேவாரம்.

மந்திரமாவது நீறு பதிக பாடல்
போதம் ஞானம், அறிவு.
புனல் ஆறு, நீர்.
புன்மை சிறுமை, இழிவு.
தக்கோர் தகுதி வாய்ந்தவர், அறிஞர்.
கவின் அழகு.
சேணம் பொறுப்பான இடம்.
புகலி சொல், கூறு.
பூசுரன் பிராமணன்.
குண்டிகை கமண்டலம், குடுக்கை.
சாக்கியர் சூரிய குல சத்திரியர் வம்சத்தை சேர்ந்தவர்கள்.

இடரினும் தளரினும் எனத் துவங்கும் திருஞானசம்பந்தர் தேவார பாடல்.

இடரினும் தளரினும் பதிக பாடல் – காந்தார பஞ்சமம்
இடரினும் துன்பம். துன்பம் வந்த போதும்.
தளரினும் தளர்ச்சி. தளர்ந்த போதும், மூப்பு வந்த போதும்
கழல் திருவடி
மிடறு கழுத்து
தாழ் இளம் தடம் புனல் தாழ் – தங்குகின்ற. தடம் புனல் – பரவிய புனல் – கங்கை
சென்னி தலை. தலையின் மேல் பகுதி
போழ் தகடு போன்ற மெலிந்த
இளமதி சடையில் இருக்கும் மெல்லிய பிறை
கனல்எரி அனல்புல்கு கையவனே கனன்று எரியும் அனலை கையில் ஏந்தியவனே
அரற்றுதல் ஒலித்தல், ஓசை எழுப்புதல், – இங்கு தொழுதல் என்ற பொருளில் வருகிறது.
கைம்மல்கு மல்கு – அதிகமாதல், நிறைதல். மேருமலையை கையில் ஏந்தி
வரிசிலை கட்டமைந்த வில்லை உடைய
கணை அம்பு
கையது வீழினும் கையில் இருக்கும் பொருட்கள் யாவும் வீழ்ந்து வருந்தும் காலத்தும்
கழிவுறினும் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும்
கொய்யணி கொய்து அணியப் பெறும் மலர்
மையணி மிடறுடை மை போன்ற கருநிற கழுத்து
வெருவுதல் அஞ்சுதல், பயம் வருதல்
அரவு பாம்பு – அரவு, அரவம்.
சந்த வெண்பொடி நறுமணம் கமழும் திருநீறு
விரவி அணுகி
ஒப்புடை ஒருவனை அழகில் ஒப்பில்லாதவன் – மன்மதன்
அழல் தீக்கொழுந்து, நெருப்பு
ஏருடை சிறப்புடைய
ஆரிடர் அருமை + இடர். பொறுத்துக்கொள்ளக்கூடிய இடர்
கடிகமழ் தாமரை மேல் அண்ணலும் தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமன்
இலைநுனை வேற்படை இலை போன்ற நுனியுடைய திரிசூலம்

திருச்சாழல் எனப்படும் மாணிக்கவாசகரின் திருவாசகம்.

திருச்சாழல் – தில்லையில் அருளியது
அரவம் பாம்பு
துன்னம்பெய் கோவணம் கீளொடு பொருந்த தைத்த கோவணம். அதாவது கிழியாமல் தைத்த கோவணம்.
மன்னுகலை மன்னுக – நிலைபெற்ற
துன்னுபொருள் பொருந்திய பொருளை உடைய
சரடாத் சரடு – கயிறு
காயில் சினம் கொண்டால்
அயனை பிரமன்
அநங்கனை மன்மதன்
அந்தகனை கூற்றுவன், எமன்
வயனங்கண் வசனம், சொல்
நயனங்கள் கண்கள்
எச்சனையுந் வேள்வித் தேவன்
தக்கன் தக்ஷன்
அலரவன் திருமால்
அழலுருவாய் நெருப்புருவாய், சோதியாய்
பிலமுகத்தே பாதாளத்தில்
குரை ஒலி
சதுர் சாமர்த்தியம்

திருமுறை பயில்வோம். தமிழில் பேசுவோம். திருவருள் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

வாட்சப் நிலை (whatsapp status) ஆக வைப்பதற்க்கு சைவ சமய செய்திகள் கொண்ட சில படங்களின் தொகுப்பு 4.75/5 (4)

வாட்சப் நிலை (whatsapp status) ஆக வைப்பதற்க்கு சைவ சமய செய்திகள் கொண்ட சில படங்களின் தொகுப்பு

வாட்சப்பில் பகிரக்கூடிய நம் சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளைக் கொண்ட சில படங்கள். இதை பதிவிறக்கம் செய்து வாட்சப்பில் நிலையாக வைத்துக் கொள்ளலாம்.

இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் அறுதியிட்டுக் கூறுகிறது. முதலும் முடிவும் இல்லாத  பேரொளியாக திகழும் இறைவனுக்கு நாம் இட்ட பெயர் சிவன்.

தமிழர்களின் மரபு வழி அடையாளம் என்ன ? மொழி தமிழ், நாடு பாரதம், சமயம் சைவ சமயம் உள்ளடக்கிய இந்து மதம், தமிழ் வேதம் நான்கு, பன்னிரு திருமுறை, குரு நாயன்மார்கள், தலைவன் ஒருவனே சிவபெருமானே.

தமிழர்களின் புனித நூல் எது? தமிழ் வேதங்கள் நான்கு. 28 சிவ ஆகமங்கள், பன்னிரு திருமுறை, பதினெட்டு புராணங்கள், பதினான்கு சாத்திரங்கள், இன்னும் எண்ணற்ற அருளாளர்களின் நூல்கள்.

தமிழர்களின் குருமார்கள் யாவர்? இறைவனே எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு உபதேசம் செய்தது வேதங்களும் ஆகமங்களும். அதன் வழிப்படி நின்று அந்த நெறிப்படி நமக்கு வாழ்ந்து காட்டி குருவாக திகழ்பவர்கள் நாயன்மார்கள், சமய குரவர்கள், சந்தான குரவர்களும் அவர்கள் ஞானப் பரம்பரையும் வரும் ஆச்சாரியர்களும் ஆவர்.

பன்னிரு திருமுறை நூல்கள் எவை ?

இறைவனை நாம் அடைவதற்க்குத் துணையாக நிற்கும் கருவிகள், திருநீறு, உருத்திராக்கம், ஐந்தெழுத்து நமசிவாய மந்திரம் ஆகும்.

கடவுள் என்று சொல்லக்கூடிய இறைவன் ஒருவனே. ஆனால், தெய்வங்கள் எண்ணற்றவை. தெய்வங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நானே கடவுள் என்று நம் நாட்டில் ஊருக்கு ஒருவன் சொல்லி ஏமாற்றி நன்றாக சம்பாதித்து காணாமல் போய் இருக்கிறார்கள். நம் நாட்டில் மட்டுமல்ல, சில நாடுகளில் இருந்து நானே மெய்யான தேவன் என்று உலகம் முழுவதும் சொல்லிப் பிழைக்கும் கூட்டமும் உண்டு. உயிர்கள் ஒரு போதும் இறைவனாகவே முடியாது. இறைவன் வேறு, உயிர்கள் வேறு.

இறைவனுடைய உண்மையான சொரூபம், உருவம், நிறம், பெயர் இல்லாமை. ஆனால், அத்தகைய இறைவனால் மக்களுக்கும் உயிர்களுக்கும் ஒரு நன்மையும் விளையாது. ஆகவே இறைவன் பெரும் கருணை கொண்டு, உயிர்களின் கண்களுக்குத் தெரிவது போல பல உருவங்கள் கொண்டு வருகிறான். எல்லாவற்றிற்க்கும், எல்லா உருவத்திற்க்கும் சொந்தக்காரன் அவனே.

இறைவனால் எந்த உருவமும் எடுக்க இயலும். அவனது உடல் வேறு. நமது உடல் வேறு. நமது உடல் மாயை என்ற அழுக்கிலிருந்து செய்யப்பட்டது. இறைவன் அழுக்கோடு கலவான். எனவே, இறைவனானவன் மனித உருக் கொண்டு வர இயலும். ஆனால், கருவுற்ற அன்னையில் வயிற்றில் மனிதனாக ஒரு போதும் பிறவான். அவனே பிறக்கமாட்டான் என்றால், அவனுக்கு குமாரன் என்ற தேவ குமாரன் எப்படி வருவான் ? விநாயக பெருமானையும், முருகப்பெருமானையும், வீரபத்திரரையும், பைரவரையும், இறைவனின் சக்திகளாகத் தான் நாம் காண்கிறோம். நம்முடைய எளிமையான புரிதலுக்காக, அவர்களை இறைவன் பிள்ளைகளாக பாவித்து சொல்கிறோமே ஒழிய, இறைவனுக்கு காமமும் கிடையாது. குழந்தை குட்டியும் கிடையாது.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா? அக்னிகுண்டம் காத்திருக்கு. 5/5 (1)

கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா?

கோவில் சொத்தைத் திருடுதல், பிறர் சொத்தை அபகரித்தல், உயிர்களைக் கொலை செய்தல், அநியாயம் அக்கிரமம் செய்தல் என்று எத்தனையோ தீமைகளைச் செய்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் தண்டனையே கிடைக்காதா? என்று நாம் ஏங்குகிறோம். இன்னொரு பக்கம் பல விபத்துகள், பேரழிவு என்று மனிதன் துன்புறுகிறான். அதைக் கண்டு அவர்கள் மீது மனிதாபிமானத்துடன் இரக்கம் கொண்டு நாம் இறைவனுக்குக் கண் இல்லையா, மனது இல்லையா என்றெல்லாம்  கேட்கிறோம். இன்றைய காலகட்டத்தில் வரும் சில செய்திகளை உன்னிப்பாக கவனியுங்கள்.

1. எதிர்த்த வீட்டுக்காரன் மனைவியைக் கூட்டிக் கொண்டு வாலிபர் ஓட்டம்.

2. நிதானமில்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் மரத்தில் மோதி முள்வேலியில் சிக்கி உடல் கிழித்து சாவு.

3. வேறு வேறு பெயர்களில் முகநூலில் ஓராண்டாக காதலித்து வந்த இருவர் சந்தித்த போது தான், அவர்கள் கணவன் மனைவி என்று தெரிந்தது.

4. தவறான சிகிச்சையால் தனியார் மருத்துவமனையில் இருவருக்கு கண் பார்வை பறி போனது.

5. நெல்லையில் முன் விரோதம் காரணமாக ஜாமீனில் வெளி வந்தவர், வீடு புகுந்து அனைவரையும் வெட்டிக் கொலை செய்தார்.

6. மலை மீது செல்பி எடுக்க முயன்றவர் தவறி கீழே விழுந்து சூலாயுதம் உடலைக் கிழித்து உயிரிழந்தார்.

7. சீனாவைச் சேர்ந்தவர் புதிய கருவி கண்டுபிடிப்பு. கோழிகளை உள்ளே கொடுத்தால், அதுவே கொன்று, வெட்டி, பதப்படுத்தி, கறியாக திருப்பிக் கொடுக்கும்.

8. தாயின் கவனக் குறைவால் இரண்டு வயது குழந்தை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து பலி.

9. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் முதியவர் பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு மடங்காக உயர்ந்தது.

10. முதியவர் என்றும் பாராமல், சொத்துக்காக மகனே தந்தையை அடித்துக் கொலை.

11. உலகிலேயே எஞ்சியிருக்கும் அரிய வகை மான்களை வேட்டையாடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

12. காட்டில் மிகவும் சிதைந்த நிலையில் வாலிபர் உடல் கண்டுபிடிப்பு. முதல் கட்ட விசாரணையில் மிருகங்கள் கடித்திருக்கலாம் என தகவல். யானை மிதித்து பலி.

13. கோவில் உண்டியல் உடைப்பு. கோவில் சிலைகள் திருட்டு.

14. 50 வயது மதிக்கத்தக்கவர் கொடூர கொலை. மரத்தில் கட்டி வைத்து பெட்ரோல் ஊத்தி எரிப்பு.

15. அமெரிக்காவில் அணு ஆயுத ரகசியத்தைத் திருடிய சீனர் கைது.

16. கொரோனா வைரஸால் சீனாவில் இறந்தவர் எண்ணிக்கை 2000 ஐக் கடந்தது.

மேலே உள்ள செய்திகள் அனைத்தும் ஒரு சிறு துளிகள் தான். ஒரு பக்கம் அநியாயங்களும் அக்கிரமங்களும் நடந்தேறுகின்றன. இன்னொரு பக்கம் விபத்துக்களும் பேரழிவுகளும் நடக்கின்றன. இந்த இரண்டிற்க்கும் ஏதாவது இணைப்பு உண்டா ?

மிகவும் வேகமாகச் சுற்றும் பூமியில் இருந்து, காற்றில் பிராண வாயு அளவு வரை மனிதன் வாழ்வதற்க்குத் தேவையானவற்றை மிகத் துல்லியமாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு விநாடி இந்த பூமி நிலைகுலைந்தால், இங்கிருக்கும் அனைத்து உயிர்களும் மாண்டு போகும். இதுவே இதற்கு சாட்சி. இவ்வளவு துல்லியமாக காரியங்கள் நடக்கும் இந்த பூமியில், அநியாயமும் அக்கிரமும் செய்பவர்களுக்குத் தண்டனை கிடைக்காமலா போய்விடும்? அவர்கள் தப்பி விட முடியுமா?

மேலே உள்ள செய்திகளில் ஒற்றைப்படை எண்களில் இருக்கும் செய்திகளைப் பாருங்கள். அவை அனைத்தும் அநியாயமும் அக்கிரமும் செய்யும் செய்திகளாக இருக்கும். இரட்டைப் படை எண்களில் உள்ள செய்திகளைப் பாருங்கள். அந்த குற்றங்களுக்கு உரிய தண்டனைகளை நிறைவேற்றும் செய்திகளாக இருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டும் வேறு வேறு நிகழ்வுகள் போலத் தான் இருக்கும். ஆனால் இவற்றிற்க்கு தொடர்பு இருக்கிறதா என்றால், நம் சமயங்கள் தொடர்பு இருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாம் தான் பொறுப்பு. அது நம்மைத் திருப்பி வந்து தாக்கும். இதற்காகத் தான் நாம் ஒவ்வொருவருக்கும் வினை கணக்கு ஒன்று உண்டு. நீங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பது போல, இந்த கணக்குகளை எல்லோருக்கும் வைத்து பராமரிப்பவர் தர்மத்தை நிலைநாட்டும் வேலையைச் செய்யும் எமதர்மராஜன் ஆவார். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரே விடயம் என்னவென்றால் ஒவ்வொரு வினைக்கான பலன்களை எப்போது திருப்பிக் கொடுப்பது என்பது தான். அது எப்போது திரும்பி வரும்? அது உங்களுக்கு உரிய காலத்தில் தான் திருப்பிக் கொடுக்கப்படும். உங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிற விதியை நீங்கள் கழித்துக் கொண்டிருக்கும் போது, புதிய வினைகளின் பலனை இதே பிறவில் பின்னரோ அல்லது அடுத்த பிறவியிலோ அல்லது பல பிறவிகள் கழித்தோ தான் கொடுக்கப்படும். அதற்கு என்று உரிய நேரம் காலம் சூழல் வரும் போது தான் கொடுக்கப்படும். இதனால் தான் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளுக்கு கூட தீவினைகள் வந்து தீண்டுகின்றன. இந்த பிறவியில் பல உயிர்களைக் கொலை செய்பவன் இன்னொரு பிறவியில் இரண்டு வயதாகும் போது கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து மாண்டு போகிறான்.

ஆகவே, அநியாயமும் அக்கிரமும் செய்பவன் நன்றாக வாழ்வது போன்ற ஒரு மாயத் தோற்றம் நமக்குத் தெரிந்தாலும், அவன் ஒரு நாள் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அவன் தப்ப இயலாது. அந்த தண்டனைகள் இந்த உலகிலும் கொடுக்கப்படலாம், அல்லது நம் புராணங்கள் சொல்வது போல வேறு ஒரு உலகிலும் கொடுக்கப்படலாம். இதனால் தான், நம் சமயமும் பண்பாடும் பிறரை இம்சித்து வாழ்வதை முற்றிலும் ஒழிக்கச் சொல்கின்றன. அடிப்படை தர்மம் என்பதே பிறரை அதாவது எந்த ஒரு உயிரையும் இம்சிக்காமல் வாழ்வது தான்.

இந்த துன்பங்களிடம் சிக்காமல் தப்பித்து வாழ்வதற்க்காக நம் முன்னோர்கள் வரையறுத்தது தான் அடிப்படை ஒழுக்கம். சுய மரியாதை என்ற பெயரில் ஒழுக்கத்தை மீறினால், அதனால் வரக்கூடிய துன்பங்களை நாம் தான் அனுபவித்தாக வேண்டும். இது திண்ணம். ஒழுக்கம் என்பது நமக்கு நாமே போடும் பாதுகாப்பு வேலி. அதைத் தாண்டிச் சென்றால் துன்பங்கள் தீண்டும்.

பிறரது உழைப்பைச் சுரண்டி திருடிப் பிழைத்தால், பிறவற்றை துளைத்துச் செல்லும் கிருமிகள் மூலமாக பாவிகள் துன்புறுத்தப்படுவர் என்று இதை கிருமிபோஜனமாக கருட புராணம் சொல்கிறது. [மேலே 15,16 குற்றமும் தண்டனையும்]. கருட புராணத்தில் என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலே கொடுக்கப்பட்ட இன்றைய நிகழ்வுகள் இதை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது. தாமிஸிர நரகம்: [1,2], அநித்தாமிஸ்ர நரகம்: [3,4], ரௌரவ நரகம்: [5,6], கும்பிபாகம்: [7,8], காலகுத்திரம்: [9,10], அந்தகூபம்: [11,12], அக்னிகுண்டம்: [13,14], கிருமிபோஜனம்: [15,16].

இந்த உலகிலும் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம், அல்லது வேறு பாதாள உலகிலும் நிறைவேற்றப்படலாம். வேறு உலகில் அந்தந்த தண்டனைகளை அனுபவிப்பதற்க்கு ஏற்றார்போல உடல்கள் கொடுக்கப்படும். இவற்றிலிருந்து ஒன்று மட்டும் திண்ணம். தப்பு செய்பவர்கள் தப்பிக்க முடியாது, தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். பாவ மன்னிப்பு கிடையாது.

Please rate this

கம்போடியாவில் இராசேந்திர சோழருக்கு திருவுருவச்சிலை அமைத்து, திருக்குறளைப் பள்ளிப்பாடத்தில் இணைக்கவும் திட்டம் No ratings yet.

கம்போடியாவில் இராசேந்திர சோழருக்கு திருவுருவச்சிலை அமைத்து, திருக்குறளைப் பள்ளிப்பாடத்தில் இணைக்கவும் திட்டம்

அங்கோர் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம் ஆகிய இரண்டும் கம்போடிய நாட்டின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகம் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் ஆகியவை இணைந்து  கம்போடியா நாட்டில் சியம் ரியாப் நகரில், இராசேந்திர சோழர் மற்றும் கமேர் மன்னன் முதலாம் சூரியவர்மன் திருவுருவச் சிலை அமைக்கவும், திருக்குறளை கமேர் மொழியில் மொழி பெயர்த்து பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. வரும் மே மாதம் 2022 இல் இந்த இரண்டு மன்னர்களின் நட்புறவைக் கொண்டாடி மகிழும் வண்ணம் இது திருக்குறள் மாநாடாகவும் நிகழவிருக்கிறது.

முதல் முறையாக, தமிழ் மொழியின் சங்க இலக்கியத்தின் முக்கிய நூலான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை கமேர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யவும் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உலகம் எங்கிலும் இருந்து 25,000 தமிழர்கள் கம்போடியா வர உள்ளனர். இந்த நிகழ்வு இந்தியா மற்றும் கம்போடிய நாட்டின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவி செய்யும்.

கம்போடிய நாட்டின் கலை மற்றும் பண்பாடு அமைச்சகத்தில் பணிபுரியும் மோன் சாப்கீப் மற்றும் ப்ரோம் கமேரா ஆகியோர் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்க்கு வருகை புரிந்து, காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் வைகுண்டநாதர் கோவில், தஞ்சைப் பெரியகோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் மாமல்லபுரம் குகைக்கோவில் ஆகிய கோவில்களுக்குச் சென்று பார்வையிட்டனர். இந்தியாவில் நடைபெற்ற பல்லவர் ஆட்சிக்கும், கம்போடியாவில் நடைபெற்ற கமேர் ஆட்சிக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்புகளுக்கான பல ஆதாரங்களை நேரடியாகக் கண்டனர். இந்த வரலாற்றுச் சின்னங்களைக் கண்ட இவர்கள், ஆறாம் நூற்றாண்டில் கம்போடியாவை ஆண்ட கமேர் அரசன் மகேந்திரவர்மன் இந்தியாவில் உள்ள பல்லவ பேரரசைச் சேர்ந்தவர் என்பதில் உறுதி மேற்கொண்டனர்.

Please rate this

எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிகள் சூழ்ந்து நின்று அலற, சிறு பிள்ளையார் திருவருளால் வெற்றி கொண்டார் 4.5/5 (2)

எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிகள் சூழ்ந்து நின்று அலற, சிறு பிள்ளையார் திருவருளால் வெற்றி கொண்டார்.

நீங்கள் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று சாலையில் தோன்றிய தீவிரவாதிகள் உங்கள் வாகனத்தை வழிமறித்து உங்களையும் உங்களோடு வந்த ஒரு பத்து பேரையும்,  அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கோ மலையில் ஏறி இறங்கி காடுகளைத் தாண்டி ஏதோ ஒரு பெரிய குகை போன்ற இடத்தில் சுற்றிலும் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் காவல் இருக்க, உங்களை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். மிகப் பெரிய அறையில் சுற்றிலும் எங்கும் தீவிரவாதிகள் சூழ்ந்து இருக்க, உங்கள் அனைவரையும் அங்கே, கைகளைக் கட்டி அறையின் ஒரு பகுதியில் நிற்க வைக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராக கோஷம் இடுகிறார்கள். உங்களை அடிக்க வேண்டும் என்று ஒருவன் கத்த, இன்னொருவன் வெட்டுங்கள் என்று கத்த, இன்னும் ஒருவன் ஆயுதத்தை எடுத்து உங்களை நோக்கி இவர்களைக் கொல்லுங்கள் என்று உங்களை நோக்கிப் பாய்ந்து ஓடி வருகிறான். உங்களுக்கு எப்படி இருக்கும் ?

ஓடி வந்தவனை இருவர் பிடித்துக் கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் அறையில் முழு அமைதி. இன்னொரு கதவு திறக்கப்பட, அதிலிருந்து கோரமாக ஒருவன் வருகிறான். அவனைப் பின்தொடர்ந்து இன்னும் நாலைந்து கோரமானவர்கள் வருகிறார்கள். அநேகமாக, அவன் தான் இந்த கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும். அவன் வந்தவுடன் அறையின் நடுவில் இருக்கும் பெரிய இருக்கையில் அமர, அவனைப் போற்றும் வகையில் அனைவரும் ஒன்று போல கோஷமிடுகிறார்கள். அந்த சத்தமே மரண ஓலமாக நமக்குக் கேட்கிறது. அந்த தலைவன் உங்களைப் பார்த்து கோபமாக ஏதேதோ சொல்கிறான். அவன் பேசும் மொழி உங்களுக்குப் புரியவில்லை. ஆனால், உங்களை திட்டுகிறான், கோபமாக கொக்கறிக்கிறான் என்று மட்டும் புரிகிறது. அடுத்து என்ன செய்வார்களோ தெரியவில்லை. இன்று இந்த குகையில் இருந்து நீங்கள் உயிருடன் திரும்பிச் செல்ல வாய்ப்பே இல்லை. மரணத்தின் விளிம்பில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்களை எப்படிக் கொல்வார்கள் என்றே தெரியவில்லை. மனது உடல் அனைத்தும் நடுங்குகிறது. இறைவா என்று மனம் இறைவனை வேண்டுகிறது. உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை அப்படியே பதிவு செய்து கொள்ளுங்கள்.

இது ஒரு கற்பனையான சித்திரம் என்றாலும், இவ்வாறு நிகழக்கூடிய வாய்ப்புகள் இன்று உள்ளது. இதை விட கொடூரமான நிகழ்வுகள் எல்லாம் இன்றைய உலகில் நிகழ்ந்து வருவதை நாம் நம் கண்கூடாகவே செய்திகளில் காண்கிறோம். அமர்நாத் யாத்திரை சென்று இவ்வாறு மாட்டிக் கொள்ளாமல், நீங்களே, இந்த தீவிரவாதிகளை நல்வழியில் திருத்தும் ஒரு நல்ல உயரிய எண்ணம் பொருட்டு, உங்கள் உயிரையும் துச்சம் என நினைந்து நீங்களே தீவிரவாதிகளின் கூடாரத்தைத் தேடிச் செல்வீர்களா ? அவ்வளவு தைரியமும் வலிமையும் உங்களுக்கு இருக்கிறதா ?

நிற்க.

இந்த கற்பனையான நிகழ்வுக்கும் இனி நாம் பார்க்கப் போகும் வரலாற்று நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நிகழ்வானது பிறருக்கு நடக்கும் போது, அது நமக்கெல்லாம் படிக்கக்கூடிய கதையாகவும், அதே நிகழ்வு நமக்கே நடக்கும் போது அந்த உணர்வுகளின் ஊடே நாமே நீந்திச் செல்லும் போது ஏற்படும் உணர்வுகளும் விளைவுகளையும் நாமே அனுபவிப்பது வேறு விதமாக இருக்கும். உணர்வுப்பூர்வமாக நாம் வரலாற்றைப் பார்க்கும் போது தான் அதன் உண்மை நமக்கு நன்றாகப் புரியும். அந்த உணர்வுகளை எடுத்துக் காட்டவே மேலே கற்பனையான ஒரு நிகழ்வை உங்கள் சிந்தனையை தட்டி எழுப்ப, இன்றைய உலகியலில் நடப்பது போன்ற நிகழ்வை எடுத்துக் காட்டியுள்ளேன். மற்ற படி மேலேயுள்ள நிகழ்வுக்கும் நம் வரலாறுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

வளம் மிகுந்திருந்த நம் செல்வங்களைக் கவர்வதற்க்கு வேறு இடங்களில் இருந்த படையெடுத்து வந்தவர்கள் தங்கள் மொழி பண்பாடு சமயம் ஆகியவற்றை நம் மீது திணித்தனர். அவ்வாறு செய்யத் துணிந்தவர்கள் முதலில் நாட்டின் அரசனை அணுகி அவனுக்கு தங்கள் போதனைகளை போதித்து அவனை தமது சமயத்திற்க்கு மாற்றுவர். உலகிலேயே மிக உயரிய பண்பான, வந்தார் யாவரையும் இன் முகத்துடன் வரவேற்று, விருந்தோம்பி, அவர்களை வாழ வைக்கும் உயரிய பண்பை நாம் பெற்றிருந்ததால், அனைவரும் நம் ஊருக்குள் எளிதாக பிரவேசம் செய்தனர். மன்னரைச் சந்தித்தனர், தங்கள் சமயம் மாற்றினர். இவ்வாறு பாண்டிய நாடு சமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சிவ வழிபாடு குன்றியது. சிவாலயங்கள் வழிபாடு இன்றி இருளாகக் கிடந்தன.

மன்னன் சமண குருமார்களின் பேச்சைக் கேட்டு யாவும் செய்வார். ஆனால், அவனது மனைவியோ, சோழ நாட்டு இளவரசி. அவளும் அமைச்சர் ஒருவரும் தான் இன்னும் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். சமண குருமார்களின் வழிகாட்டுதல் படி, கண்டுமுட்டு கேட்டுமுட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. திருநீறு பூசியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் தான், அரசியின் விண்ணப்பம் கேட்டு, சைவ சிறுவர் ஒருவர் தன் அடியார் கூட்டத்தோடு மதுரை வந்தார். சிறுவர் என்றால், சாதாரண சிறுவர் அல்ல. மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதே, உமையவளே நேரில் வந்து தந்த ஞானப்பாலை உண்டு சிவஞானம் பெற்றவர். சமணர்களின் கோட்டையான மதுரைக்கு வந்தார். சமணர்களால் அவர் தங்கியிருந்த மடம் தீ வைத்து சூறையாடப்படுகிறது. அவரது தெய்வ வாக்கால், மன்னருக்கு வெப்பு நோய் ஏற்படுகிறது. அந்நோயை சமணர்களால் தீர்க்க இயலவில்லை. அரசியின் யோசனைப் படி, அந்த சிறுவர் இந்த வெப்பு நோயைத் தீர்க்க அரண்மனை வருகிறார்.

சுற்றிலும் சமணர்கள். அவர்கள் தங்கள் சமய கொள்கைகளை உரக்கச் சொல்கின்றனர். இந்த சிறுவருக்கு எதிராக கூச்சலிடுகின்றனர். இவருக்கு துணையாக இங்கு இருப்பவர் அரசியாரும் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் தான். மற்று யாவரும் இவரது வருகையை விரும்பாதவர்கள். இவரை எப்படியாவது இங்கிருந்து அகற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த சூழலை தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணத்தில் விரித்துரைப்பதைக் காண்போம்.

பாண்டிய மன்னன் சமணனாக இருப்பினும், தன் மனைவியை சைவராக இருந்து தன் சமய கடைமைகளை ஆற்ற அனுமதி தந்த பெரியோன். சிறு பிள்ளை செம்பொன் நிறத்தில் ஒளி வீசும் மணிப் பீடத்தில் எழுந்து அருளினார். பிள்ளையார், அரசியாருடைய அன்பிற்க்குரியவர். வேற்று சமயத்தவர் ஒருவர் சமணர்களின் கோட்டையான தலைநகர் திருஆலவாய் மதுரை மாநகரிலேயே நுழைந்து, அதுவும் மன்னனிம் அரண்மனைக்குள்ளேயே வந்து ஒளிவீசும் பீடத்தில் அமர்ந்திருந்தால், யாருக்குத் தான் பொறாமை வராது? அத்தனை பொறாமையிலே, இந்த காட்சியைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல், அச்சம் கொண்டு, அந்த அச்சத்தை மறைத்து துள்ளி எழுவது போல வந்து தங்கள் கண்கள் சிவக்க பலவாறு கூறினார்கள்.

காலை எழும் சூரியன் அழகிய கதிர்களோடு மிகவும் ஒளி பொருந்தி இருக்கும். அத்தகைய சூரியனின் ஒளியை கரு முகில்கள் மறைத்து விட முடியுமா ? அவ்வாறு சூரியனை மறைக்க முயலும் கருமுகில் போல பிள்ளையாரைச் சூழ்ந்து மறைக்க முயன்றனர் அமணர்கள். தங்கள் புனித நூலான ஆருகத நூலில் இருக்கும் வசனங்களைப் பிள்ளையார் முன் எடுத்துக் கூறி தங்களை தலைகளை அசைத்துக் குரைத்தார்கள்.

மொத்தமாகத் திரண்டு எழுந்து தன்னை நோக்கிக் குரைத்த சமணர்களை மிகவும் பொறுமையுடன் கேட்ட பிள்ளையார், உங்கள் நூல் கூறும் பொருள்களின் முடிவை உள்ளபடியே கூறுங்கள் என்று சொன்னார். உடனே, பலரும் எழுந்து துள்ளிக் குதித்துக் கொண்டு பிள்ளையாரைச் சுற்றி நின்று கொண்டு தங்கள் நூலின் வசனங்களை ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் அலறிக் கதறினர். சிறு பிள்ளையை கருத்த மேனியுடைய கொடிய சமணர்கள் சூழ்ந்து கொண்டு கத்துவதை எந்த தாய் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாள் ? தாயுள்ளம் கொண்டு மங்கையர்க்கு அரசியார், அதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல், உடனே எழுந்து மன்னரை நோக்கி, மன்னா, இனிய அருள் பெற்ற இந்த பிள்ளையாரோ சிறுவர். ஆனால், சமணர்களாகிய இவர்கள் எண்ணற்றவர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். முதலில் பிள்ளையார் உங்கள் வெப்பு நோயின் மயக்கம் நீங்குமாறு அருள் செய்வார். பின்னர், இந்த அமணர்கள் வாது செய்ய வல்லவராக இருந்தால், பின்னர் வாது செய்யட்டும் என்று கூறினார். பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமான், பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் (திருவருள் பெற்று ஆட்கொள்ளப்பட்ட பின்னர் நின்றசீர் நெடுமாற நாயனார்), மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறை நாயனார் ஆகிய நால்வரும் நம் அறுபத்து மூவர்களுள் உள்ளவர்கள் என்பது நமக்குத் தெரிந்த விடயம்.

எத்தகைய காலத்திலும், நம் சமய உண்மைகளை நன்கு அறிந்து குற்றமறக் கற்றும், பழங்குருக்களிடம் உபதேசம் பெற்றும், குருவருளோடு திருவருள் பெற்றும், அந்த உண்மைகளைத் தைரியமாக எவரிடத்திலும் எங்கும் எந்த சூழலிலும் எடுத்துக் கூறும் வல்லமை மற்றும் இறையருள் பெற்றோர் வேண்டும். உலகமயமாக்கல் காரணமாக, உலகம் எங்கும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அஞ்ஞான மதங்கள் இன்று நம்மைச் சூழ்ந்துள்ள வேளையில், ஒளி பொருந்திய சூரியனாக திருவருள் பெற்றோரை நமக்கு இறைவன் அருள வேண்டும், அவர்களை நம் காலத்தில் நாமும் காண வேண்டும் என்பதே அன்புடையோர்களின் எண்ணமாக இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ். 5/5 (2)

தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்

இது நீங்கள் படிக்கும் இன்னும் ஒரு பதிவு அன்று. தமிழர்கள் ஆழ்ந்து சிந்தித்து மீண்டும் அலட்சியம் செய்து தூக்கத்திற்க்குப் போகாமல் உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது. இது ஒரு அபாய எச்சரிக்கை மணி.

இந்த சுய பரிசோதனையை இன்றே செய்து பாருங்கள். நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசி அல்லது பேசுவதை உங்கள் கைபேசியில் ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதில் எத்தனை ஆங்கில வார்த்தைகள் எத்தனை தமிழ் வார்த்தைகள் இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். 30-40 சதவிகிதத்திற்ககு மேல் தமிழ் வருகிறதா என்று பாருங்கள். மீண்டும் ஒரு முறை ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்து பாருங்கள். இன்னும் 10 சதவிகிதம் மட்டுமே முன்னேறும். பல வார்த்தைகளுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்றே தெரியாமல் திணறுவீர்கள்.

நாம் தமிழர், நான் திராவிடன், தமிழ் தொன்மையான மொழி, தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்றெல்லாம் வீர வசனம் பேசும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம் இது. கடந்த பல பத்தாண்டுகளில், எத்தனை அரசியல் கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்து விட்டன ? தமிழை வைத்து சம்பாதித்து விட்டன ? அவையெல்லாம் நம் தாய் மொழி தமிழை வளர்க்க ஏதாவது ஒரு சிறு துரும்பாவது முயற்சி செய்தனவா ? ஆங்கில கலப்பை தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்தனவா ?

அடுத்த தலைமுறை அல்லது உங்கள் குழந்தைகளின் பேச்சை இதே பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் முடிவு இன்னும் அபாயகரமாக இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க என்ன சிரத்தை எடுத்தீர்கள் ? உங்களின் அடுத்த தலைமுறைக்கு எத்தனை தமிழ் போதிக்கப்படுகிறது. தமிழைத் துறந்து பிற முக்கிய பாடங்கள் படிக்க வேண்டும் என்று மருத்துவர், பொறியாளர் என்று படிக்க வைத்தவர்கள் எல்லாம் இன்று மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்க்கு வேலை செய்யும் நிலை. பொறியாளர்களின் நிலையோ இன்னும் மோசம்.

இன்னொரு பக்கம் தமிழில் பேசுவதை இழிவாகத் தானே கருதுவது. உலகிலேயே யாருக்குமே இல்லாத வியாதி இது. உலகில் இருக்கும் அனைவரும் தங்கள் மொழியில் பேசுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் மட்டும் இதற்குப் புறம்பாக இருக்கிறது. நம் தாழ்வு மனப்பான்மையை நன்றாகத் தூண்டி விட்டு, அதை பயன்படுத்திய பல காலம் அந்நிய ஆட்சி நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளாக நம்மை சீரழித்த அந்நிய ஆட்சியின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்லை. முக்கியமாக நம் இளைய தலைமுறையினருக்கு, வெளிநாடு படங்கள், கதை புத்தகங்கள் சிறந்தவை என்றும் நம் நாட்டு பொருட்கள் உப்பில்லாதவை என்று தவறான கண்ணோட்டம் புகுத்தப்படுகிறது. வியாபார நோக்கத்திற்க்காக நம் ஆட்களே இதற்குத் துணை போகிறார்கள். ஆகவே, இளைஞர்கள், தவறான பாதையிலேயே வளர்ந்து நம் சமுதாயத்தைச் சீரழிக்கின்றனர். வயது வந்து முதிர்வு வந்த பின்னர், தமிழில் பேச முயன்றாலும் முடியாத இழிவான நிலை. கேவலம்.

உலகிலேயே உயர்ந்த நூல்கள் இருப்பது தமிழில் தான். நான்கு வேதங்கள் இருந்தது தமிழில் தான். எண்ணற்ற நுண்ணிய அறிவுப் புதையல்கள் இருப்பது தமிழில் தான். இயல் இசை நாடகம் என்று பிரிவுகளில் தமிழ் வளர்ந்தது இங்கே தான். சங்கம் வைத்து தமிழ் வளர்ந்தது உலகிலேயே இங்கு தான். எத்தனை எத்தனை அரிய நூல்கள் ? இத்தனை நூல்கள் இருந்தும், நம் இளையவர்கள் சேக்ஸ்பியர் நாவல் பற்றி பெருமையாக பேசுவது எத்தனை இழிவான நிலை ? கொடுமை. தமிழின் வளர்ச்சிக்கு எல்லாக் காலங்களிலும் ஆட்சி செய்யும் மன்னர்கள் துணை நின்றார்கள். ஆனால், சனநாயக ஆட்சியிலோ, தங்கள் அரியணையைத் தக்க வைப்பதிலேயே மன்னர்கள் காலம் போக்குகிறார்கள். அப்படி நல்ல நிலையில் இருந்தாலும், அலட்சியமாக இதைப் பற்றி எதுவும் செய்வதில்லை.

தெய்வம் பேசிய தமிழ், தெய்வத்தமிழ் என்றெல்லாம் பெருமை பேசுகிறோம். அப்படி தெய்வம் தமிழில் என்ன பேசியது என்று என்றைக்காவது கேட்டதுண்டா ? அலட்சியமே நம்மை அழிக்கும் முதல் எதிரி.

ஆங்கில கலப்பை நீக்கிப் பேச நாம் என்ன முயற்சி செய்யப் போகிறோம் ? நம் மன்னர்களாகிய அமைச்சர்கள் என்ன முயற்சி செய்யப்போகிறார்கள் ? பேசுவதில் பலனில்லை. அவற்றை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆங்கிலக் கலப்பு நீக்கி பேச முயற்சி செய்ய வேண்டும். பல ஆங்கில வார்தைதகளுக்குத் தமிழ் வார்த்தைகள் தேட வேண்டும். அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். பழக பழக சில மாதங்களில் ஆங்கிலம் நீக்கி கட்டாயமாக நாம் பேச இயலும். சித்தரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டிலும், அலுவலகத்திலும், நட்பு வட்டங்களிலும், உறவு வட்டங்களிலும் ஆங்கிலம் கலவாத தமிழ் பேச முயற்சி செய்யுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்கு மறவாமல் நல்ல தமிழ் பேச எழுத பயிற்சி கொடுங்கள். நீங்கள் வீட்டில் அவர்களோடு நல்ல தமிழில் பேசினாலே, அது அவர்களுக்குச் சிறந்த பயிற்சி. அதை விட வேறு பயிற்சி தேவையில்லை.

இதோ அபாய எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Please rate this

மகாசிவராத்திரி முழு இரவு ஜெபம் செய்ய தயாராகியாச்சா ? விடுமுறை கோரிக்கை No ratings yet.

மகாசிவராத்திரி முழு இரவு ஜெபம் செய்ய தயாராகியாச்சா ? விடுமுறை கோரிக்கை

பூமி சுற்றி வருவதில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் புனிதமான ஒரு இரவு என்றால், அது மகாசிவராத்திரி தான். இந்த மகாசிவராத்திர முழுவதும் சிவனை சிந்தையில் வைத்து சிவனோடு மிக எளிதாக ஐக்கியமாகும் ஒரு ஈடு இணையற்ற அற்புதமான காலமாகும்.  இந்த மகாசிவராத்திரியை கொண்டாட, ஈசா யோகா மையம் சார்பில் முழு இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருவின் வழிகாட்டுதலோடு தியானம் செய்தல், தெய்வீகம் பரவக்கூடிய இசை, இறைவனை நினைந்தும், இறைவனின் கருணையை நினைந்தும் ஏற்படும் ஆனந்தம் மற்றும் நடனம், குருவின் உபதேசம், பயிற்சி பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் என்று இறைவனின் கருணை மழையில் நனைய நிகழ்ச்சி திட்டங்களோடு காத்திருக்கிறது ஈசா யோகா மையம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மகாசிவராத்திரிக்கான விழா நிகழ்ச்சிகளை உறுதி செய்து காத்திருக்கிறது. மாலை இரவு முழுவதும் வரும் கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெறுகிறது. மகாசிவராத்திரியை வீட்டில் இருந்து முழுவதுமாக கழிப்பதை விட, வீட்டில் சிறிது நேரம் பூசை செய்து விட்டு, சிவாலயங்கள் சென்று முழுநேரமும் அங்கு நம் நண்பர்கள், உறவினர்கள், சிவனடியார்கள், அங்கு நடக்கும் சொற்பொழிவுகள், தோத்திரங்கள், வழிபாடுகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு கழிப்பதே மிகவும் சிறந்ததாகும்.

மகாசிவாத்திரி அன்று விரதம் இருப்பது எப்படி ? சிவ வழிபாடு செய்வது எப்படி ?

இங்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள் நேரலையில் வெப்கேஸ்ட் (Webcast) இல் கலந்து கொண்டு வீட்டில் இருந்த படியே இணைந்து அவர்களோடு சிவ சிந்தனையில் திளைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரியின் மகிமை சிறப்புகள் என்ன ?

பண்டிகைகளிலேயே சிறப்பான பண்டிகையாக நாம் தீபாவளி கொண்டாடுகிறோம். ஆனால், ஆன்மீகத்தில் சற்று உள்ளே எட்டிப் பார்த்தவர்கள், மகாசிவராத்திரியே மிகவும் முக்கியமான பண்டிகையாக கருதுகின்றனர். எல்லா பண்டிகைகளும் திருவிழாக்களும் நமக்கு சிறப்பு தான் என்றாலும், மகாசிவராத்திரி மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஏன் என்றால், இது நம் உயிரான ஆன்மாவை இறைவனோடு கலக்க வைக்கத் தரும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு வாழ்கையில் வேறு என்ன இருக்கிறது ?

மகாசிவராத்திரி அன்று காலை முதலே விரதம் துவங்கி அன்று சிவாலயங்கள் சென்று வழிபட்டு முழு இரவு தூக்கமின்றி வழிபாடு செய்வதால், அடுத்த நாள் காலையில் நன்றாக தூக்கம் வரும். களைப்பாகவும் இருக்கும். குறிப்பாக அடுத்த நாள் வேலை நாளாக இருந்தால், வேலை கூட சிறிது பாதிக்கும். இந்த மிகச் சிறந்த சிவராத்திரியானதை கொண்டாட நமக்கு விடுமுறை அவசியம். மகாசிவராத்திரிக்கு விடுமுறை வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறுது. மகாசிவராத்திரியின் மகிமையை இன்னும் அனைத்து மக்களும் உணரவில்லை. அதை உணர்ந்துவிட்டால், அனைவரும் விடுமுறை கோருவர். இதை உணர்ந்து தமிழக அரசு மகாசிவராத்திரிக்கு விடுமுறை அளிக்க முன் வர வேண்டும்.

Please rate this

மகாசிவராத்திரி வழிபாடு ஏன் மிகவும் சிறப்பானது ? 5/5 (1)

மகாசிவராத்திரி வழிபாடு ஏன் மிகவும் சிறப்பானது?

சைவ சமயத்தவரின் மிகுந்து போற்றும் திருநாள் மகாசிவராத்தியாகும். அந்த மகாசிவராத்திரி எப்போது வருகிறது, அதன் சிறப்பு யாது என்பதைக் காண்போம்.

மகா சிவராத்திரி எப்போது வருகிறது ?

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தேய்பிறை சதுர்த்தசி (அதாவது பௌர்ணமியிலிருந்து 14 ஆவது நாள்) அன்று இரவு சிவராத்திரி ஆகும். அதாவது இதை மாத சிவராத்திரி என்பர். மகா சிவராத்திரி என்பது மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவாகும்.

மகா சிவராத்திரியின் சிறப்பு யாது ?

ஊழிக் காலம் என்பது பல்வேறு உலகங்களும் சிவபெருமானிடத்தே ஒடுங்கும் காலமாகும். பேரூழிக்காலம் என்பது, சிவபிரானைத் தவிர, மற்ற அனைத்துமே எம்பெருமானிடம் ஒடுங்கும் நிலையாகும். அவ்வாறு ஒரு முறை ஒடுங்கியிருந்த போது, மீண்டும் இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து உயிர்களைக் காத்து அருளுமாறு கருணை கொண்டு, சிவபிரானின் சக்தி வடிவான தேவியானவள் சிவபிரானை நோக்கி இடைவிடாது தவம் செய்தாள். அதனை ஏற்ற சிவபிரான், மீண்டும் உலகங்களை உண்டாகச் செய்து உயிர்களைக் காத்து அருளினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உமையவள் எம்பெருமானை ஓர் முழு இரவும் மனதில் தியானித்துப் போற்றிய நாளே மகாசிவராத்திரியாகும்.

மகாசிவராத்திரி அன்று பல்வேறு காலங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக பதிவிடப்பட்டிருக்கிறது. மற்றொரு யுகத்தில் அடிமுடி தேடிய வரலாறு நிகழ்ந்த போது, இறைவன் ஒளிப்பிளம்பாய் அண்ணாமலையாராய் தோன்றி அருளியது மகாசிவராத்திரி அன்று தான். பிரம்மனும் திருமாலும் அறியாமையினால், தாமே பெரியவர் என்று கர்வங் கொண்டு தமக்குள் வாதிட்டுக் கொண்டனர். அவர்களின் அறியாமையைப் போக்க எண்ணிய சிவபெருமானார் அவர்கள் முன்பு நெடும் ஒளிப்பிளம்பாகத் தோன்றி, அவர்களில் யார் ஒருவர் தனது கால் அடியையோ அல்லது தலை முடியையோ காண்பவரே வென்றவர் என்று சொல்ல, திருமால் பன்றி உருக்கொண்டு பூமியைத் துளைத்து இறைவனின் திருவடியைத் தேடிச் செல்லலானார். பிரம்மனோ, அன்னப்பறவை உருக்கொண்டு, இறைவனின் திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார். பல யுகங்கள் கடந்தும் இருவராலும் அடியையோ முடியையோ காண முடியாத நிலை தோன்றவே, சிவபெருமானின் தலையிலிருந்து வந்த தாழம்பூ மலரிடம் தான் இறைவனின் முடியைப் பார்த்ததாக பொய்ச்சாட்சி சொல்லக் கேட்க, அம்மலரும் பொய் சாட்சி சொல்லி, பிரம்மனுக்கும் தாழம்பூ மலருக்கும் இப்பூவுலகில் கோவில் மற்றும் வழிபாடு கிடையாது என்று சாபம் பெற்றனர். இவ்வாறு திருவண்ணாமலையில் அனைவரும் காண, ஒளிப்பிளம்பாய் நின்ற சிவபெருமான் தோன்றியது மகாசிவராத்திரி அன்றாகும்.

மற்றொரு காலத்தில், ஒரு காலத்தில் ஒரு குரங்கானது வில்வ மரத்தின் மீது அமர்ந்து இரவு முழுவதும் வில்வ இலைகளைப் பறித்துக் கீழே எறிந்தது. அம்மரத்தின் அடியின் கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. வில்வ இலைகள் எல்லாம் இலிங்கத்தின் மீது அர்ச்சனையாக விழுந்தது. எதேச்சையாக நிகழ்ந்தாலும், அகமகிழ்ந்த சிவபிரான் அந்த குரங்கிற்கு காட்சி கொடுத்து அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்குமாறு அருளிச் செய்தார். இவை அத்தனையும் எதிர்பார்த்திராத அந்த குரங்கானது, இறைவனிடம், தான் சக்கரவர்த்தியாக பிறக்கும் போது, தனது முகத்தை குரங்காகவே இருக்குமாறு அருளிச் செய்யுமாறு கேட்டது. இதைக் கேட்டு, தன் பழைய பிறப்புக்களையும் நிலையையும் மறவாதிருக்க குரங்கு அவ்வாறு கேட்டதையுணர்ந்த சிவபிரான் சிரித்துக் கொண்டு அவ்வாறே அருளிச் செய்தார். அந்தக் குரங்கே அடுத்த பிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறந்து சிறப்புற்றது.

இத்தகைய சிறப்பு மிகுந்த மகாசிவராத்திரி அன்று நாமும் சிவ வழிபாடு செய்து பலன் பெறுவோம்.

Please rate this

மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்படி ? விரதம் எப்படி இருப்பது ? No ratings yet.

மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்படி ? விரதம் எப்படி இருப்பது ?

மகா சிவராத்திரி அன்று கோவில்களில் எவ்வாறு வழிபாடு நடக்கிறது ?

மகா சிவராத்திரி இரவை நான்கு காலமாக பிரித்து ஒவ்வொரு காலமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஒவ்வொரு காலமும் எந்த திருவுருவத்திற்க்கு எந்த அபிஷேக அலங்காரப் பொருட்கள் வைத்து வழிபட வேண்டும் என்ற தகவல்கள் இங்கே பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?

சிவராத்திரி முதல் நாளன்று விரதத்தைத் துவக்க வேண்டும். அன்று முழுவதும் ஒரு வேளை உணவு உண்ணலாம். அன்று முழுவதும் சுகபோகங்களைத் தவிர்த்தும், சினிமா/டிவி பார்ப்ப்தைத் தவிர்த்தும் நம் சிந்தனையில் சிவத்தை நிறுத்தி சிவனோடு ஒன்றியும் சிவ மந்திரங்கள், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறைகளை ஓதியும் வழிபாடு செய்ய வேண்டும். விரதம் மேற்கொள்ளும் போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சில கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும் போது தான் எளிதாக வசப்படும். நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காகத் தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனத்தை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூசைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மகா சிவராத்திரி அன்று நாம் எவ்வாறு வழிபடலாம் ?

சில காலம் முன்பு, சிவராத்திரி அன்று, இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும் என்பதற்க்காக வீடுகளிலும் பொது இடங்களிலும் டிவிக்களில் சினிமா பார்ப்பதும், தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளும் அரங்கேறின. இறைவனை சிந்தையில் நினையாது செய்யும் எந்த ஒரு காரியத்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. விரதம் இருப்பதே, நாம் தினமும் வழக்கமாக செய்யும் செயல்களைத் தவிர்த்து, உணவின்மையால் உடல் சிறிது தளர்ந்து, அந்தத் தளர்வின் காரணமாக, மனது அங்கும் இங்கும் எங்கும் அலையாமல், ஓரிடத்தே நிலை நிறுத்தப்பெறும் நிலையை எய்துவதால், அம் மனத்தை சிவபெருமானிடத்து சமர்ப்பித்து, அவனோடு இரண்டரக் கலந்து நிற்பதேயாகும்.

ஆகவே, மகா சிவராத்திரி அன்று காலை தொடங்கி, மறுநாள் காலை வரை விரதம் இருந்தும், திருக்கோவில்களிலும், இல்லங்களிலும் வழிபாடு செய்தும், திருமுறைகள் மற்றும் குறிப்பாக திருக்கேதீச்சரப் பதிகங்கள், திருவண்ணாமலைப் பதிகங்கள் ஆகியவற்றைக் கோவில்களிலும் இல்லங்களிலும் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். இயன்ற வரை, உங்களுக்கு அருகில் உள்ள கோவில்களிலோ, சிவாலயங்களிலோ சென்று அங்கே சிந்தையை இறைவனிடத்தில் செலுத்தி வழிபாடு செய்யுங்கள். சிவராத்திரி அன்று சிவாலய தரிசனம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

சிவராத்திரி வழிபாட்டின் பலன்கள் யாது ?

சிவராத்திரி வழிபாட்டின் காரணமாக, உங்களுக்குத் தற்போது இருக்கும் கவலைகளும், வர இருக்கும் கவலைகளும் வலுவிழந்து நீங்கும். நீங்கள் முன்னெடுத்த காரியங்கள் வெற்றி பெறும். சிவாயநம என்று நம் சிந்தனையில் நிலைத்திருந்தால், வேறு அபாயம் நம்மை ஒரு போதும் நெருங்காது. எண்ணும் இடங்கள் எல்லாம் செல்லத்துடிக்கும் மனமானது மிகவும் இலகுவாக நம் கட்டுக்குள் வரும். இதனால், துன்பம் தரும் செயல்களில் வீழ்ந்திடாது, நன்மை தரும் செயல்களில் மட்டுமே நிலைத்திருந்து நமக்கு நன்மையே வந்து சேரும். இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களை வலுவிழக்கச் செய்து, நமக்கு நன்மையே அருளி, நம் தீவினைகளையும் சுட்டெரித்து, நமக்கு முக்தியும் தந்தருள்வார் சிவபெருமான்.

 

Please rate this

சிவபெருமானுக்கு ஓர் இருக்கையோடு காசி மகாகல் எக்ஸ்பிரஸை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி 5/5 (6)

சிவபெருமானுக்கு ஓர் இருக்கையோடு காசி மகாகல் எக்ஸ்பிரஸை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதன் முதலில் சிவபெருமானுக்கு ஓர் இருக்கை அமைப்பு

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயிலை நேற்று ஞாயிறன்று பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் காசியிலிருந்து துவக்கி வைத்தார்கள். இந்த ரயிலானது இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று ஜோதிர்லிங்க சிவாலயங்களை இணைத்துச் செல்வதாகும்.

இந்த ரயிலில் உயர்தர சைவ உணவு வழங்கும் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ள உணவறை உள்ளது. மேலும் நல்ல படுக்கை வசதி, நல்ல பராமரிப்பு வசதி மற்றும் பயண காப்புத்திட்டம் என்று பயணம் இனிமையாக அமைய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த ரயிலானது இந்தூர் அருகிலுள்ள ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க தலம், உஜ்ஜயினி மாகாளேஸ்வரர் திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகிய மூன்று ஜோதிர்லிங்க தலங்களையும் இணைத்துச் செல்லும்.

இந்த ரயிலில் சிவபெருமானுக்கு என்று தனியாக ஒரு இருக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு ரயிலில் இறைவனான சிவபெருமானுக்கு ஒரு இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இருக்கையின் மீது கோவில் படம் வரையப்பட்டுள்ளது. யாரும் அறியாமல் அந்த இருக்கையில் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, என்று வடக்கு ரயில்வே செய்தியாளர் திரு தீபக்குமார் தெரிவித்தார்.

மெல்லிய தெய்வீக பாடல்களுடன், ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பாதுகாவலர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சைவ உணவு மட்டும் தான் வழங்கப்படுகிறது. மேலும், ரயில் முழுவதும் 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்க்கும் மூன்று முறை வாரணாசியிலிருந்து இந்தூர் வரை செல்கிறது.

Please rate this

இறைவனை அறியாத கிராமங்களை எப்படி விழிப்படையச் செய்வோம்? No ratings yet.

இறைவனை அறியாத கிராமங்களை எப்படி விழிப்படையச் செய்வோம்?

கடந்த சில பத்தாண்டுகள் நமக்கு மிகவும் சவாலாக இருந்தது. நம் சமய உணர்வு மொழி உணர்வு ஆகியவற்றை மழுங்கச் செய்து நம் மொழி சமயங்களுக்கு நமக்கே தெரியாமல் மிகுந்த பெருந்த சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிப் பாடங்களில் தேவாரமும் திருவாசகமும் படித்து வந்தோம். சமய பாடங்கள் என்றே ஒரு தனி பாட அமைப்பு இருந்தது. அனைவரும் படித்து வந்தோம். பின்னர் மெல்ல மெல்ல நம் சமயங்கள் பற்றிய செய்திகளை பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறு கோவில் இருந்தது. அதில் வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகமும் வழிபாடும் நடந்தது. அனைத்து மாணவர்களும் அதில் பங்கு பெற வேண்டும். இவை அத்தனையும் திராவிடர்கள் என்று தங்களை கூறிக் கொண்ட அரசு கொண்டவர்கள் நீக்கி விட்டனர். நம் சமய ஞானத்தை சிறு வயதிலேயே மழுங்கடித்து விட்டனர். சமய உணர்வு இல்லாத பிணமாக நம்மை அலைய விட்டு விட்டனர். இன்று நாம் திருநீறு பூசுவதற்க்கே வெட்கப்படுகிறோம், அஞ்சுகிறோம். நம் நாட்டிலேயே நாம் நம் மொழி, சமய உணர்வின்றி பிணமாக நடமாடுகிறோம். இதை விட ஒரு இழிவான நிலைக்கு யாரும் செல்ல முடியாது. அத்தகைய இழிவான நிலைக்கு நம்மைத் திராவிட அரசுகள் தள்ளி விட்டன. இது அரசியல் பதிவு அல்ல, நமக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லும் பதிவு.

தமிழகத்தைச் சேர்த்து இன்று இந்தியாவில் எத்தனையோ கிராமங்களில் இதை பிணங்களை நடமாட விட்டு விட்டார்கள். இதனாலேயே, பாதுகாப்பு வேலி இல்லாத நம் கிராமங்களுக்குள் அந்நிய மதத்தினர் மெல்ல மெல்ல ஊடுறுவிச் சென்று, நம் குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுத்து அவர்களை முதலில் கவர்ந்தும், அவர்கள் சார்ந்த பள்ளிக்கூடங்களை எழுப்பியும் மெல்ல மெல்ல அவர்களின் மதத்தைப் புகுத்தி இன்று பெருமளவில் நம்மவர்களை மதம் மாற்றம் செய்து பெரிய கூட்டமாக உட்கார்ந்து விட்டார்கள். மேலும் தமிழகம் முழுவதையுமே அவர்கள் மதத்திற்க்கு மாற்றுவோம் என்று சவால் விடுகிறார்கள்.

அந்நியர்கள் நம் நாட்டை விட்டு ஓடிப்போய், நம் பாரதம் சுதந்திரம் பெற்ற பின் 70 ஆண்டுகளில் எத்தனை பெரிய இழப்பை நாம் சந்தித்து விட்டோம் ? அந்நியர்களின் ஆட்சிக் காலத்தில் கூட நாம் இத்தனை பெரிய இழப்புகளைச் சந்திக்கவில்லை. நம் பண்பாடு, மொழி, கோவில்கள், சமயம் என்று நமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பின் அளவு அளவிட முடியாதது.

இன்று நம் கிராமங்கள் அனைத்திலும் நம் மொழி மற்றும் சமய விழிப்புணர்வு இல்லாத அப்பாவி மக்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவர் கையிலும் கைபேசி இருந்தாலும், எத்தனை பொய்ச் செய்திகள் ? அந்த செய்திகளை அனுப்பும் அத்தனை ஊடகங்களும் அந்நியர்கள் விட்டுச் சென்ற மீதமுள்ளவர்களின் பிடியில் இருக்கிறது. இது நம் மொழி, பண்பாடு சமயம் ஆகியவற்றின் பிடிப்பை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், காலகட்டத்தில் தான் இந்துக்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம்.

இனி என்ன செய்யப் போகிறோம் ?

ஒவ்வோரு இந்துவும் உங்கள் ஊரில் இருக்கும் இந்து அமைப்புகளோடு இணைய வேண்டும். அமைப்புகள் இல்லையென்றால், உங்கள் ஊரில் உள்ள கோவில்களுக்கு வரும் அன்பர்கள் இணைந்து ஒரு சபை போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். உங்கள் குழு மாதம் ஒரு முறை அல்லது இரு முறை, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள கோவில்களிலும் ஊர் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்ய வேண்டும்.

இன்று நம் சமயங்களுக்கு நிறைய சேனல்கள், செய்திகள், குழுக்கள் வந்துவிட்டன. ஆகவே, நம் சமயத்தை நன்கு நாம் முதலில் அறிவோம். நம் குழுக்களில் இருக்கும் அனைவரும் அறிவோம். பின்னர் நாம் செல்லும் கிராமங்களில் அறிவுறுத்துவோம். ஒவ்வொரு இந்துவும் களத்தில் இறங்கி களப்பணி செய்யாமல் நம் மொழி சமயங்களை நாம் காப்பாற்ற இயலாது.

 

 

Please rate this

மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார் 5/5 (1)

யானை ஏறா மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார்

யானை ஏறா மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார்

கோச்செங்கட்சோழ நாயனார் குருபூசை: மாசி சதயம்

கோவில்களின் அமைப்புகள் ஏழு வகைப்படும். அதில் ஒன்று தான் மாடக்கோவில். பெருங்கோவில் என்றும் அழைக்கப்படும். இது யானைகள் ஏற இயலாத வண்ணம் குறுகிய படிக்கட்டுகளுடன் பூமி மட்டத்திற்க்கு மேலே அமைக்கப்படுவதே மாடக் கோவிலாகும்.

திருஆனைக்கா கோவில் தல வரலாறு அனைவரும் அறிந்திருந்தாலும், அறியாவதவர்களுக்காக ஒரு சிறிய முன்னுரை. சிவபூத கணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபத்தினாலே ஒருவர் சிலந்தியாகவும் மற்றொருவர் யானையாகவும் பிறந்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர். திருச்சி அருகே திருஆனைக்கா ஊரில், வெண்நாவல் மரத்தின் அடியிலே மறைவிலிருந்து வெளிப்பட்ட சிவலிங்கத்தை இருவரும் பூசை செய்து வந்தனர். யானையானது தினமும் சிவலிங்கத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தது. சிலந்தியோ, மரத்தின் சருகுகள் இறைவன் திருமேனி மீது விழாத வண்ணம் இறைவருக்கு மேலே வலை பின்னியது. இதையும் தூசி என்று எண்ணி யானையானது தினமும் அந்த வலையை அகற்றி வழிபட்டது. சிலந்தியும் தளராமல் தினமும் வலை பின்னியது.

பொறுமை இழந்த சிலந்தி ஒரு நாள் யானையின் துதிக்கையின் உள்ளே நுழைந்து தன்னால் இயன்ற அளவு கடித்து வைக்க, இதை எதிர்பாராத யானை, தன் துதிக்கையைக் கீழே அடித்து அடித்து திணறியது. இதன் முடிவில் இரண்டும் உயிரிழந்தன. கயிலாயத்தை அடைந்த இரண்டும் சிவபெருமானை தியானித்து வந்தன.

சுபதேவன் என்ற ஒரு சோழ மன்னன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாமையால், தனது மனைவி கமலவதியுடன் சிதம்பரம் சென்று ஆடல்வல்லானை வழிபாடு செய்து வந்தார். இறைவரின் திருவருளால் புத்திர பாக்கியம் பெற, இந்தப் பிள்ளை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் மூன்று உலகையும் அரசாள்வான் என்று சொல்ல, கமலவதியோ, தன்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள் என்று உத்தரவிட ஒரு நாழிகை கழித்துப் பிறந்தார் சிலந்தியாக இருந்த சிவகணம். இதனால், இவருடைய கண்கள் சிவந்து இருக்க, என் கோச்செங்கண்ணானோ என்று சொல்லிக்கொண்டே கமலவதி இறந்துவிட்டாள். சுபதேவன் தன் புதல்வனை வளர்த்து முடிசூட்டிப் பின்னர் சிவபதமும் அடைந்தார்.

கோச்செங்கட்சோழனோ, இறைவனாருடைய திருவருளினாலும், பூர்வ பிறப்பின் வாசனையாலும், சைவ நெறி தழைத்தோங்க பல சிவாலயங்களைக் கட்டுவிக்கத் துவங்கினான். அவை யானை ஏறாத வண்ணம் குறுகிய படிக்கட்டுகளை உடையதான மாடக்கோவில்களாகக் கட்டுவித்தான்.

ஒன்றல்ல இரண்டல்ல, 70க்கும் மேற்பட்ட மாடக்கோவில்களைக் கட்டுவித்தார் கோச்செங்கட்சோழனார். இன்றைய காலகட்டத்தில் நம்மால் கற்பனையிலும் காண இயலாத இத்தகைய உயர்ந்த சிறப்பு மிக்க மாடக்கோவில்கள் சிவபெருமானின் கருணையினாலே கட்டப்பட்டு இன்றும் நம் கைகளில் தொட்டு வணங்கக் கூடிய விலைமதிப்பற்ற புதையலாக நம்மிடையே உள்ளது. சிவபெருமானின் கருணையையும், கோட்செங்கட்சோழ நாயனாரின் கருணையையும் என்னவென்று சொல்வது ? எத்தனை பெரிய பேறு பெற்றோம் நாம் ? விலைமதிப்பற்ற திருவருளால் நமக்குக் கிட்டிய இந்தக் கோவில்களைக் கட்டிக் காப்பதே நமது தலையாய கடமையன்றோ ?

பின்னர் தில்லையை அடைந்து ஆடல்நாயகனைத் தரிசித்து, அங்கு தில்லைவாழ் அந்தணர்களுக்கு மாளிகைகள் கட்டுவித்துக் கொடுத்தும், பல்வேறு சிவதொண்டுகள் செய்தும், சிவபெருமான் திருவடியை அடைந்தார்.

மாடக் கோவில்கள் இரண்டு, மூன்று, ஐந்து அல்லது ஒன்பது நிலைகளாக கட்டப்படுகின்றன. இரண்டு நிலை கோவில் அமைப்பானது, முதலில் தரைத்தளமும், பின்னர் தூண்களும் சுவர்களும் எழுப்பப்பட்டு, முதல் தளம் அமைக்கப்படுகிறது. பின்னர், சுவரும் இரண்டாவது தளமும் அமைக்கப்பட்டு அதன் மேலே கழுத்து, கூரை, கலசம் ஆகியன நிறுவப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் உள்ள நிலைகளுக்கு, அத்தகைய சுவரும் தளங்களும் அமைக்கப்படுகிறது.

திருச்சி அருகில் திருவானைக்கா கோவில், திருப்பெருவேளூர் அபிமுக்தீஸ்வரர் கோவில், திருக்குடவாயில் திருக்கோனேசுவரர் திருக்கோவில், திருவைகல் மாடக்கோவில், திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோவில், திருக்கைச்சினம் திருக்கைச்சினநாதேசுவரர் திருக்கோவில், அம்பர் மாகாளேஸ்வரர் திருக்கோவில், ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில் என்று எழுபதுக்கும் மேற்பட்ட கோவில்களில் சிவபிரானார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வாழ்க்கையில் ஒரு முறையானும் இந்த கோவில்களுக்குச் சென்று அதன் கட்டமைப்புகளைக் கண்டும், இறைவனை முறையாக வழிபட்டும் திருவருள் பெற்றுத் திரும்புவோம். இப்போது இல்லையேல், எப்போதும் இல்லை. ஆகவே உடனே திட்டமிட்டு இக்கோவில்களுக்குச் சென்று வருவோம். 

 

Please rate this

தெப்பல் திருவிழா சென்னையில் ஓர் கிரிவலம் அரசன்கழனியில் 5/5 (1)

தெப்பல் திருவிழா சென்னையில் ஓர் கிரிவலம் அரசன்கழனியில்

சென்னையில் ஓர் கிரிவலம் என்றாலே அரசன்கழனி ஔடதசித்தர் மலை அருகில் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயம் தான் நினைவுக்கு வரும். இத் திருக்கோவிலில் இருந்து ஒவ்வொரு மாதமும் நிறைமதி நாள் தோறும் மாலை 5 மணிக்கு சில ஆயிரக்கணக்கானோர் இணைந்து தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளைத் தலையில் ஏந்தியும், சிவ வாத்தியம் இசைக்க ஔடதசித்தர் மலையைக் கிரிவலம் வரும் நிகழ்வு நடைெபற்று வருகிறது.

மலைவலம்

கடந்த தை மாதம் நடைபெற்ற நிறைமதி மலைவலத்தின் போது மாலை 5 மணிக்கே திரளான மக்கள் அரசன்கழனியில் குடி கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரரை வணங்கி வலம் வந்து மலைவலம் செல்வதற்க்காக காத்திருந்தனர்.  மலைவலம் துவங்கிய பின்னர், கயிலாய வாத்தியங்கள் முழங்க, சிவ பக்தர்கள் மிகவும் பக்தியுடனும் ஆர்வத்துடனும் வலம் வந்தனர். மலைவலத்தின் போது கிரிவலப் பாதையில் உள்ள விநாயகர் மற்றும் முருகர் ஆலயங்களிலும் தரிசனம் செய்து தங்கள் மலைவலத்தைத் தொடர்ந்தனர். மலையின் கிழக்குத் திசைக்கு வந்த போது தீபம் ஏற்றப்பட்டு, மலையின் மேலே குடிகொண்டிருக்கும் ஈசுவரனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது.

தெப்பல் திருவிழா

மலைவலம் முடிந்த பின்னர், முதன் முறையாகத் தெப்பல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த தெப்பல் திருவிழாவைக் காண, மலைவலம் வந்த பக்தர்களும், ஊர் மக்களும் திரளாக குளத்தைச் சுற்றித் திரண்டிருந்தனர். கல்யாணபசுபதீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர்,  தெப்பலில் எழுந்தருளிய இறைவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அப்போது தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவ பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.

ஏக இறைவனாம் பிறப்பு இறப்பு அற்ற சிவபெருமான் விடைக் கொடிகள் பறக்க, பக்தர்கள் படை சூழ, வாத்தியங்க முழங்க, திருமுறைகள் ஓத, திருக்குளத்தில் எழுந்தருளி குளத்தைச் சுற்றி வலம் வந்தார். இந்த கண்கொள்ளாக் காட்சியை  பல்லாயிரக் கணக்கானோர் கண்டு களித்து ஆனந்தம் அடைந்தனர். குளங்களின் அனைத்து பக்கங்களிலும் பக்தர்கள் குழுமியிருந்து இந்த விழாவினைக் கண்டு களித்தனர். பின்னர், பெண்கள் திரளாக வந்து குளத்தில் நீரில் விளக்கை ஏற்றினர். நூற்றுக்கணக்கான விளக்குகள் மிகவும் அழகான தீப ஒளியை ஒளிர்ந்து கொண்டு நீரில் ஆடிக் கொண்டே சென்றது காண்போருக்கு மிகவும் பேரானந்தத்தைக் கொடுத்து சொல்ல இயலாத புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

சிவபெருமானின் கொடையும் நன்றி உரைத்தலும்

சிவபெருமானின் திருக்கருணையினாலே, அவனது அருளே இயற்கை வளங்களாக நமக்குக் கொடையளித்துள்ளான். ஆகவே, அவற்றைப் பாதுகாப்பது மட்டுமின்றி அவற்றை இறைவன் திருவுவமாகவே பாவித்து பூசை செய்வது இறைவனே நமக்குக் காட்டிய மிக உயர்ந்த தத்துவமாகும். இத்தகைய வழிபாட்டு முறையினை நம் முன்னோர்கள் இடையராது கடைப்பிடித்தமையால் எவ்வித குறையுமின்றி நல்ல உணவு, நீர், காற்று என்று அத்தனை வளங்களும் வாய்க்கப் பெற்று சிறப்பாக வாழ்ந்தனர். நாம் மீண்டும் சிறப்பான வாழ்வு வாழ இறைவனின் கொடையை மறவாது, அவனுக்கு நன்றி சொல்லும் விதமாக திருவிழாக்களை இடையறாது கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

மலைவலம் மற்றும் தெப்பல் திருவிழா ஏற்பாட்டுக் குழு

இந்த மலைவலத்தையும் தெப்பல் திருவிழாவையும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர், மலைவல ஏற்பாட்டுக் குழுவினர். கோவில் பணிகளில் துவங்கி, சாலைகளில் பக்தர்களை மிகவும் பத்திரமாக அழைத்துச் சென்று திருப்பி அழைத்து வரும் வரை, குழுவினர் மிகுந்த சிரத்தையோடும் ஆர்வத்தோடும், ஆத்மார்த்த பங்களிப்பு செய்கின்றனர். அக்குழுவினருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அந்த திருவிழாவில் இருந்து இங்கே சில காட்சிகள்.

தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

திருச்சிற்றம்பலம்.

 

 

 

Please rate this

காரி நாயனார் வரலாறு உணர்த்தும் வாழ்வியல் குறிப்புகள் 4.67/5 (3)

காரி நாயனார் வரலாறு உணர்த்தும் வாழ்வியல் குறிப்புகள்

காரி நாயனார் குருபூசை: மாசி பூராடம்

திருக்கடவூரிலே அந்தணர் குலத்தில் அவதரித்து சிவனின் பால் அன்பு பூண்டு திருத்தொண்டு புரிந்தவர் காரி நாயனர். காரி நாயனாரின் வரலாறு மிக சில வரிகளிலேயே படித்து விடலாம். சுருக்கமாகக் கூறினால், காரி நாயனார் தமிழின் மீது மிகுந்த அன்பு பூண்டு நல்ல தமிழ் வளமை பெற்று, வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து, நன்றாகச் சொல் விளங்கிப் பொருள் மறைய காரிகோவை என்ற நூலை இயற்றினார். இது ஒரு கோவைப் பாட்டாகும். வண் தமிழ் என்பது தமிழின் பல வளமையான பகுதிகளை நன்றாக அறிந்துணர்ந்து பயன்படுத்துவதாகும்.

காரிகோவை நூலை மூவேந்தர்களிடமும் சென்று அவர்கள் மகிழும்படி எடுத்துக் கூறி, அம்மன்னர்களிடம் இருந்து பல்வேறு திரவியங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு, அவற்றை வைத்து பல சிவாலயங்களைக் கட்டுவித்தும், பிற சிவனடியார்களுக்கு உதவி செய்தும் வாழ்ந்து வந்தார். இறுதியில், இறைவனுடைய திருவருளினாலே, இந்த உடலோடு வடகயிலை அடையும் பாக்கியமும் பெற்றார்.

உலகியலில் உழன்று கொண்டு இறைவனை நினையாது சுற்றித் திரியும் ஆன்மாக்களை மிக வன்மையாகவே சாடுபவர் நம் திருநாவுக்கரசர் பெருமான். இறைவன் தன்னை இவ்வுலகில் விரும்புவோர்க்கு உணர்த்த, பல்வேறு வடிவங்களாகவும், திருவுருவங்களாகவும் வந்தும், விடைக்கொடி, திருநீறு, உருத்திராக்கம் என்று பல்வேறு கருவிகளை அருளியும், கோவில்களையும், இந்த உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நெறிகளை உபதேசஞ் செய்தும்,  அந்த நெறிகளில் நின்று உணர்த்தியும், பல வேதங்கள் ஆகமங்கள் உபதேசஞ் செய்தாலும், எவற்றையுமே கவனிக்காமல், தம் ஞானப் பொறிகளை முடக்கித் திரிபவர்களை, உங்கள் மனம் ஏன் இறைவனிடத்தில் ஈடுபடவில்லை என்று வினவுவார் நாவுக்கரசர்.

அறம் பொருள் இன்பம் வீடு என்று நான்கு வேதங்களும் ஆகமங்கள் அருளியும், அந்த நெறிகளின் படி வாழ்ந்த எண்ணற்றவர்களில் ஒரு சிலரை நமக்கா நாயன்மார்களாகத் தொகுத்துக் கொடுத்து, வாழ்கை என்றால் இவ்வாறு தான் வாழ வேண்டும் என்றும் இறைவனார் காட்டிக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு நாயன்மார் வரலாறும் நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அப்படியே எடுத்துக் காட்டுகின்றன.

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

திருத்தொண்டத்தொகை – சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

தெய்வம் பேசிய மொழியாம் தெய்வத் தமிழை நாம் அனைவரும் குற்றமற கற்க வேண்டும். ஆங்கிலத்தோடும் பிற மொழி கலப்போடும் பேசுவதையும் பயன்படுத்துவதையும் விட வேண்டும். அதற்கான முயற்சியை ஆரம்பித்து விட்டால், அதுவே தானாக நிறைவடைந்து விடும். இன்றைய சூழலில் காரிகோவை போன்ற நூலை எல்லோரும் எழுத இயலாது. ஆனால், அதற்கு முதல்படியாக நாம் அனைவரும் தூய தமிழில் எழுதவும் பேசவும் கற்பது இன்றியமையாதது. அதன் பின், தமிழின் மிக ஆழமான வளங்களையும் நம் செய்யுள்களையும் படித்துணர்ந்து அனுபவிக்கலாம். அந்த அனுபவத்தைப் பிறருக்கு பகிர்வதன் மூலம் அவர்களையும் தமிழ் கற்கத் தூண்டலாம்.

திருக்கோவில் அமைக்கும் பணி, மதிப்பு மிக்க பழங்கால சிவாலயங்களை சீர் திருத்தவும், உழவாரப் பணி செய்யவும், அவற்றை உரிய முறையில் பராமரிப்பதும் நம் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இன்றைய சூழலில் பழைய கோவில்களைப் போல ஒளி பொருந்திய ஆற்றல் பொருந்திய கோவில்களைக் கட்டுவிப்பது மிகவும் கடினமானதாகும். ஆனால், நாமோ, அளவற்ற பொக்கிஷமான பழந்திருக்கோவில்களைக் கண்டும் காணாததுமாகச் செல்கிறோம். பெருஞ் செல்வர்களும் அடியார் திருக்கூட்டங்களும் அவரவர் ஊரிலும் அருகிலுள்ள கோவில்களையும் உரிமை எடுத்து அவற்றைப் பராமரிக்கும் செயல்களில் இறங்க வேண்டும். உழவாரப் பணியின் மகிமையும், சிவாலயப் பணிகளின் மகிமையும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. இனி எத்தனை பிறவி எடுப்போம், எப்போது நமக்கு சிவாலய பணி செய்யும் பாக்கியம் கிட்டும் என்றெல்லாம் தெரியாது. இந்த பிறவியில் எத்தனை பணி செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து விட வேண்டும்.

சிவனடியார்களின் கஷ்டத்தைத் தனது கஷ்டமாக எண்ணி அவர்கட்கு உதவி செய்திடல் வேண்டும்.  வெறும் பொருள் உதவி மட்டுமன்று, பல வகைகளில் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யலாம். நீங்கள் வேலை கொடுப்பவராயின் சிவனடியார்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஆலயங்களில் சிவனடியார்களின் பசிப்பிணியைப் போக்கலாம். இவ்வாறு எண்ணற்ற வகைகளில் அடியார்களுக்கு உதவலாம்.

இவையெல்லாம் செய்வதற்க்கு முன்னர் வாழ்வியல் நெறியை கடைப்பிடிக்க வேண்டும். வாழ்வியல் நெறி உரைக்கும் ஒழுக்கம் அறிய வேண்டும். எத்தனை புண்ணியங்கள் செய்தும் அடிப்படை ஒழுக்கம் இல்லையேல், கிணற்று நீரை இறைத்து இறைத்து ஓட்டைப் பானையில் ஊற்றியவாறு வீணாகிப் போகும்.

சிவபிரானை எப்பொழுதுஞ் சிந்தையில் வைத்து சிவப் பணிகளை செய்பவர்கள் உயர்ந்த நிலையை எய்துவர். உலகியல் வாழ்வில் எப்படி இருந்தாலும், சிவன் பால் அன்பு பூண்டு சிவப்பணிகளைச் செய்யும் போது உயர் நிலையை அடைகிறோம். சிவபிரானின் கருணைக்கும் அன்பிற்க்கும் ஆட்படுகிறோம். அவ்வகையிலே, மனம் போல உடலோடு கயிலை செல்ல வேண்டுமாயின் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும் ?

காரி நாயனாரின் வரலாறு உணர்த்தும் எண்ணற்ற உயர் செயல்களில் ஒரு சில குறிப்புகளை அறிந்தோம்.  காரி நாயனாரின் திருவடித் தாமரைகளை வணங்கி மகிழ்ந்து அவர் வழியில் செல்வோம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மாபாதகத்தீரே.. புண்ணியங்கள் எப்போது செய்வீர் ? 5/5 (1)

மாபாதகத்தீரே.. புண்ணியங்கள் எப்போது செய்வீர் ?

இன்றைய உலகியலில் நாம் அறிந்தோ அறியாமலோ மகா பாதகங்கள் செய்வது மிக எளிதாகிப் போய்விட்டது. மனிதன் தன் அறிவு என்னும் பேரொளி விளங்கும் கோவிலை விட்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறான். இது விஞ்ஞான உலகம் என்கிறார்கள். விஞ்ஞானம் இத்தகைய மனிதர்களைக் கொடுக்கவா பிறந்தது ?

மரத்தை வெட்டுகிறான். ஆடு மாடுகளின் தோலை உரித்து எடுக்கிறான். விலங்குகளின் சதைகளைப் பிய்த்துத் தின்பதற்க்காகவே பண்ணை பண்ணையாய் உயிர்களின் சுதந்திரத்தைப் பறித்து அத்தனை பாதகங்களைச் செய்கிறான். சிறிய கூண்டுகளில் பல கோழிகளை அடைத்து அவற்றிற்க்கு ஊசி போட்டு உடலைப் பெருக்கச் செய்கிறான். மகா பாதகனும் செய்ய அஞ்சும் செயல்களை மனிதன் இன்று சர்வ சாதாரணமாகச் செய்து வருகிறான். இவனுக்குப் பெயர் பண்ணைக்காரன் அல்லது விவசாயியாம்.

கடலையாவது விட்டு வைத்தானா ? மீன்களின் மெலிதான நாக்குகளில் கூர்மையான ஊசியைக் குத்தியதும் அல்லாமல், அவற்றைத் தரதர வென்று அதோடு இழுத்தும் வருகிறான். கொதிக்கும் எண்ணையில் உயிரோடு போட்டு வடை சுடுகிறான். விலங்குகளைக் கொன்று பதமிடுவதற்க்காகவே பல்வேறு விஞ்ஞான கொலைகாரக் கருவிகளைப் படைத்துள்ளான். ஒரு விலங்கைக் கூட விட்டு வைக்க வில்லை. பல விலங்கினங்கள் இந்த உலகில் இருந்து நிரந்தரமாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

பொய் சொல்வதற்க்குப் பயப்படுவதில்லை. கேட்டால், நான் அரிச்சந்திரனாக இருக்க முடியாது என்று ஒரு காரணம் வேறு. இன்று எந்த ஊடகங்கள் உண்மை சொல்கின்றன, எது பொய் சொல்கிறது என்று கணிக்கவே முடியாத நிலைக்குச் சென்று விட்டன. அரசியலில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும் பொய்கள் ஊடுருவிவிட்டன.

போதை வஸ்துக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சுய மரியாதை என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகள் மது அருந்தி வலம் வரும் வீடியோக்களும் வந்து விட்டன. சுய மரியாதை இயக்கம் என்ற பெயரில் ஒழுக்கத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள் இன்று தைரியமாக பல பாதகச் செயல்களை அரங்கேற்றி வருகின்றன. ஒழுக்கம் என்பது நாம் அனைவரும் நல்ல சமுதாயமாக இன்பமாக வாழ வகுத்த கட்டுப்பாடுகள் என்பதை யாரும் இக்காலக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதேயில்லை. கல்வியின் நோக்கம் எங்கோ திசை மாறிச் சென்று விட்டது. கல்வி என்ற பெயரில் கலன்களில் அச்சடிக்கப்படும் களிமண்ணாக குழந்தைகளை அமுக்கப்படுகின்றனர்.

சிந்தித்துப் பார்க்க இயலாத உறவுகள் எல்லாம் இங்கு நடக்கிறது. ஊடகங்களைத் திறந்தால், இதன் பட்டியலை வாசிக்கவே இவர்களுக்கு நேரம் போதவில்லை. இயற்கை வளங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆறுகள், மலைகள், காடுகள் ஆகியவற்றின் சீவன்கள் அறுக்கப்படுகன்றன. அநியாயம், அட்டூழியம், எல்லாவற்றிலும் ஊழல் என்று அனைத்தும் தாண்டவமாடுகின்றன. இவர்களுக்கும் ஓர் அரசன் இருக்கிறான். பல மந்திரிகள் இருக்கிறார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பாதகங்கள் வெகு சில. இங்கே நடந்து கொண்டிருக்கும், சொல்லவே வாய் கூசும் பாதகங்கள் இன்னும் பலப்பல. கள் அருந்துதல், பொய் சொல்லுதல், களவு செய்தல், கொலை செய்தல், குரு நிந்தனை செய்தல் ஆகிய ஐந்தும் மகா பாவங்களாக நம் சாத்திரங்கள் சொல்கின்றன. மேலும், பிற மாதர்களை இச்சித்தல், கோபம், கடுஞ்சொல் உயபோகித்தல், பொறாமை, பிறர் பொருளை அபகரித்தலும், அபகரிக்க எண்ணுதலும், மூர்க்கம், வஞ்சகம் செய்தல், ஒருவர் நமக்குச் செய்த உதவியை நன்றி மறத்தல், உயிர்களின் மேல் இரக்கம் இல்லாமை, நட்பைப் பிரித்தல் ஆகியவையும் மகா பாதகங்களாகும்.

இத்தனை பாதகங்களுக்கு மத்தியிலும் இவை அத்தனையிலும் சிக்காமல், இல்லற தர்மத்தோடும், பய பக்தியோடும் இறைவனை நோக்கிப் பயணிப்போரும் பலர் உளர். இந்த பாதகச் செயல்களை முதலில் பாவம் என்று உணர்ந்து அவற்றைச் செய்யாது தவிர்ப்பது தான் முதலில் செய்ய வேண்டிய ஒன்றாகும். பின்னர், முன்னர் செய்த பாதகங்களுக்கு வினை அறுக்க வேண்டும். நாம் செய்த அத்தனை பாதகங்களுக்கும் வினை அறுத்தே தீர வேண்டும். மேலும் பாதகங்கள் செய்யாமல் தடுக்கவும், செய்த பாதகங்களுக்கு வினைகளைக் குறைத்துக் கொடுக்கவும் இறைவன் அருளியது தான் உருத்திராக்கம், திருநீறு மற்றும் ஐந்தெழுத்து மந்திரங்களும். இந்த கருவிகளைப் பயன்படுத்தி, இனிமேல் மகா பாதகங்கள் செய்யாமல் தப்பித்து, செய்த பாவங்களையும் அறுத்து நாம் உய்வடைவோம். அபாயம் அகல நாம் சிவாயநம என்று சொல்லுவோம்.

பிற உயிர்களை மதிக்க வேண்டும். பிற உயிர்களின் துன்பத்தைத் தன்னுடைய துன்பம் போல் கருத வேண்டும். ஞானிகள் அனைவருமே, பிற உயிர்களை நேசித்து அவர்களின் துன்பத்தைத் தன்னுடையதாக கருதுபவர்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
.

ஒழுக்கம் எல்லோருக்கும் சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரை விட மேலானதாகக் கருதப்படும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

பிற உயிர்களைக் கொன்று அதன் சதையைப் பிய்த்துத் தின்னமால் புலால் மறுப்பவனை, அனைத்து உயிர்களும் தொழும்.

மகாபாதகங்களைச் செய்யாமல் அடிப்படை ஒழுக்கத்தோடு வாழ்வதை நம் சமய நூல்களும் வேத நூல்களும் வலியுறுத்திக் கூறுகின்றன. இவற்றின் அடிப்படையை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நம் தலையாய கடமையாகும்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தமிழும் ஆரியமும் 5/5 (2)

தமிழும் ஆரியமும் – ஐயா, திரு கோமல் கா. சேகர் அவர்கள்

ஓம்
சிவ சிவ !
===
தமிழும் ஆரியமும் .
=======
முதலில் சிவத்தை அடைய வேண்டும்; அல்லது அவரது அன்பைப் பெற்றுத் தீதகன்று நல் வாழ்வினை இப் பிறவியிலேயே பெற வேண்டும் என விழைவோர்  சாதி, குல, இன, மொழி, ஏழை, செல்வந்தன், வலியவன் எளியவன் என்ற பாகுபாட்டு மனப்பாங்குகளில் இருந்து, உடைத்துக் கொண்டு வெளி வரவேண்டும் !

ஒரு அன்பர் தமிழின் தொன்மை பற்றிக் கடுமையாக உழைத்துக் கால ஆராய்ச்சியெல்லாம் செய்து,  நேரத்தை வீணடித்து பதிவிட்டிருந்தார் . அந்தக் கால எல்லைகள்நம்பகத் தன்மையுடையன அல்ல !  இறைவன் எப்போது உலகத்தைப் படைத்தாரோ,  அன்றே நம் செந்தமிழும், ஆரியமும் தோற்றிவிக்கப்பட்டுவிட்டன என அறிக ! எல்லா மொழிகளும் இறைவனன்றிப் படைக்கப்பட்டன அல்ல ! இறைவன் விரும்பி செவி சாய்க்கும் மொழிகள் செந்தமிழும்  ஆரியமும் ! ஆரியம் எந்தப் பகுதிக்கோ ,எந்த இனத்துக்கோ சொந்தம் என ஒதுக்கி , அதன் மேல் சைவர்களுக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுத்தல் அறிவுடைமையல்ல ! எனக்கு ஆரியம் தெரியாது ! திருமுறைகள் , சாத்திரங்களைக் கற்ற அளவில் சுமார் ஆயிரத்துக்கும் கீழ் ஆரியக் கலைச் சொற் பதங்களுக்கு மட்டுமே பொருள் அறிவேன் ! திருமுறைகளையும் , தமிழ் வழியில் சைவ சாத்திரங்களையும் கற்று ,சிந்தித்துத் தெளிந்து, உணர்ந்து ,இறைவன் மீது அன்பு பூண்டாலே போதும் என்ற கொள்கையே என் கொள்கை !

ஆரியமும் வழிபடும் மொழியே ! அதை வெறுக்கக் காரணம் என்ன ?

அதை ஏன் சில குறிப்பிட்டக் குல சாதியினரிடம் சேர்த்து அடையாளப் படுத்தி ,நம் உரிமையை இழக்க வேண்டும் ? இத்தகைய நிலை நம் ஆச்சாரியர்கள் கொண்ட கொள்கைக்கு , மாறானது ! இப்படிப் பட்டப் பொருந்தா எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் பலர் இறையருளை இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு விடுவர் ! திருமுறைகளிலும் சிறிதளவு , ஆரிய சொற்பதங்கள் கலந்தே உள்ளன ! சைவ சாத்திரங்களிலும் பெருமளவு ஆரியம் கலந்தே உள்ளது ! நம் ஆச்சாரியார்கள் எவரும் ஆரியம் கற்றால் தான் இறைவனை அடைய முடியும் என நம்மை ஆற்றுப் படுத்த வில்லையே ! ஏனெனில் அது இறைவனது உள்ளக் கிடைக்கை இல்லை ! அவர்கள் தம்மைத் தமிழோடு அடையாளப் படுத்தி அக மகிழ்பவர்கள் ! ஆனால் வட சொல்லையும் மதிப்பவர்கள்.! ஏனெனில் அதுவும் இறைவனுக்கு ஏற்புடைய
மொழி என்பதால் !

இதுதான் உண்மை நிலை !
இதை மறைத்து அறியா மக்களை இருளில் தள்ளி ஒருக் கூட்டம் தம் வாழ்வை வளப்படுத்தி வருவதே உண்மை !  இதைப் படிக்கும் எவரும் அறியாக் கருத்தை நான் இங்குக் கூறவில்லை ! நமது ஞானாசிரியர்கள் செந்தமிழும், வட மொழியும் சம அளவில் இறைவனுக்கு ஏற்புடைய மொழியே என அருளிய மெய்த் திரு வாக்குகளை இங்குப் பதிவிடுகிறேன் !

படித்து மனத்திருத்தி , சிந்தித்துத் தெளிக !
திருஞான சம்பந்தப் பெருமான் அருளியவை ~
‘” தமிழ் சொலும் வட சொலும்
தாள் நிழல் சேர “~ 01.77.04

‘”தென் சொல் விஞ்சமர் வட சொல் திசை மொழி எழில் நரம்பு எடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூர்””
~02.73.05

“ஆரியத்தொடு செந்தமிழ்ப்
பயன் அறிகிலா அந்தகர் “”
03.39.04

திருநாவுக்கரசு பெருமான் அருளியவை !
“”ஆரியம் தமிழோடு இசையானவன்” ”~05.18-03

‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் “‘~ 06-23.05

“முத் தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் “~06-23-09

“”செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை ‘”~06-46-10

“வட மொழியும் தென்தமிழும்
மறைகள் நான்கும் ஆனவன் காண் “”~06-87-01

சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது
“அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் விரவிய வேத ஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப ”( கயிலைக்கு ஏகும் போது
கேட்ட மொழிகள் )07-100-08

திருமூலர் அருளியவை

“ஆரியமும் தமிழும் உடனே
சொலிக் காரிகையார்க்குக்
கருணை செய்தானே ” திருமந்திரம் / ஆகமச் சிறப்பு -08

“தமிழ்ச் சொல் வட சொல் எனும் இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே ‘” ௸ ஆகமச் சிறப்பு -09
“”என்னை நன்றாக இறைவன்
படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே ”
~௸ பாயிரம் 20
சிவ பெருமானே தமிழ் ; தமிழன் / சிவ பெருமானே
ஆரியம் ; ஆரியன் / சிவ பெருமானே நான் மறைகளும்
ஆகமங்களும் / சிவ பெருமானே சைவத் திருமுறைகளும் ,
சைவத் தமிழ்
சாத்திரங்களும் / ஆரியமும்
தமிழும் சிவ பெருமானின் இரு கண்களுக்கு ஒப்பானவை ! இரு மொழிகளுமே சிவ பரம் பொருளை உணர்த்த வல்லவைகளே ! இது நம் அருளானர்கள் வாக்குகள் ! மாதவம் செய்த தென் திசையில் பிறந்த நாம் ,சைவத் திருமுறைகளையும் ,சாத்திர புராண நூல்களையும் ஐயம் திரிபுஅறக் கற்றாலே போதும் ! நம் பெருமானை எளிதில் எய்தி விடலாம்.  பிற மொழியைத் தாழ்த்தி நம் செந்தமிழை உயர்த்த வேண்டிய அவசியமில்லை ! மக்களே ஆலய பூசைக்கு வட மொழியை ஏற்கும் போது நமக்கு என்ன ?  எத்தனை பேர் தமிழில் அருச்சனை செய்யக் கோருகிறோம் ?  தமிழ் மொழியின் தொன்மைக்கு ஏன் நம்பத் தகா ஆதாரங்களை எல்லாம் நாட வேண்டும். ? சேக்கிழார் வழி இறைவனார் அருளிய இப் பாடலை உற்று நோக்குக !

~ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய /
ஞான முதல் நான்கும் அலர் நல் திருமந்திர மாலை / பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்று ஆகப் பரம் பொருளாம் / ஏன எயிறு அணிந்தாரை “ஒன்றவன்தான் ” என எடுத்து ~~திருத் தொண்டர் புராணம் / திரு மூலநாயனார் புராணம் |~ பாடல் எண் 26

இப் புவியில் 3000 ஆண்டுகள் வாழ்ந்து ,ஆண்டுக்கு ஒன்றாக
ஒரு பாடல் வீதம் திருமூலர் அருளியதாக உறுதி செய்யப் பட்டுள்ளது. திருமூலர் இப் புவியில் இறுதியாக 1700 ஆண்டுகளூக்கு முன் வாழ்ந்ததாக் கணிக்கிறோம் !

“சிவ சிவ என்கிலர் தீவினையாளர்” என்பது போன்ற மிக எளிமையானப் பாடல்களை இலக்கணத்தோடு ஒத்து  இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் பாடியிருக்கிறார் எனின் ,அந்த அளவுக்கு செம்மை மொழியாக ஆக ,அதற்கு முன் எத்தனை காலத்துக்கு முன் நம் மொழி தோன்றி இருக்க முடியும் ! கால எல்லையை எவரும் அறுதியிட்டுச் சிந்தித்தனரா ? சேரமான் பெருமாள் நாயனார் தமிழ் மொழியில் தம் முன் பாடியத் திருக்கயிலை ஞான உலாவைப் பெருமான் செவி மடுத்து இன்புற வில்லையா ?
திருக்கயிலையே தமிழும் ஆரியமும் வழங்கும் புனிதத் தலம் எனபதை சிந்திக்க வேண்டாமா ?  திருமூலர், தான் , தம் வரலாறு/ பாயிரம் பாடல் 15 -ல் “சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் “, என தாம் இவற்றை உணர்ந்ததைக் குறிப்பிடுகிறார் !  இவர் நந்தியிடம் கற்ற காலம் என்ன ? நந்திக்குத் தமிழை கற்பித்தது எப்போது ? ஆகவே உலகத் தோற்றத்தின் போதே ,சுத்த மாயைத் தலங்களில் வாக்குகள் எழுந்த போதே தமிழும் , ஆரியமும் இறைவனால் வகுக்கப் பட்டது என அறிக ! இறைவனால் அருளப் பட்டதாலேயே தமிழ் திருமுறைகளாக வெளிப்பட்டு இவற்றிலேயே இறைவன் அட்ட மூர்த்தியாக விளங்கி நிற்றல் என்றப் பயனால் ,உணர்க !

ஆகவே தமிழ் இறை மொழி என ஓர்க !
ஆரியமும் இறைவனே பொருளாக நிற்கும் வேத ,ஆகமங்களைத் தாங்கி நிற்றலால் நம் ஆச்சாரியார்கள் அதனை சமமான இறை மொழியாக  மதித்தமையை ஓர்க ! ஆகவே மொழி பேதச் சிறுமையிலிருந்து வெளி வருக ! முதலில் தற்கால சமுதாயம் இறை மொழியான  நம் செந்தமிழை முற்றும் கற்றிருக்கிறோமா எனத் தன் ஆய்வு செய்வோம் !
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்பது தற்பெருமை பேசியதல்ல !

அசுத்த மாயையிலிருந்து பிரபஞ்சம் தோன்றும் முன் சுத்த மாயையிலிருந்து இறைவனால் தோற்றிவிக்கப் பட்ட இனிய மொழி நம் தமிழ் மொழி ! அதைப் பயின்று வாழ்ந்த தொன்மை உடையோர் நம் முன்னோர் !
உலகில் அனுபவிக்கும் இன்பங்களில் , தமிழ் மொழியை முற்றும் உணர்ந்து அனுபவிப்பதை விட ஒப்பது ஏதும் இல்லை ! இப் பெரும் பேற்றை இழந்து நிற்கும் , இக் காலத்தவர் உணர வேண்டும் !
~ கோமல் கா சேகர் / 9791232555 /25.02 17/மீள் பதிவு 23-01-20

Please rate this

இறந்தவர் இல்லத்தில் தேவாரம் திருவாசகம் பாடலாமா ? 5/5 (6)

இறந்தவர் இல்லத்தில் தேவாரம் திருவாசகம் பாடலாமா ?

ஓம்
சிவசிவ
========
புனித நூல் !
=============
சிவமே விளங்கும் புனித நூல் ; பொருள் சிவமே !
ஐயா, இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்கவேண்டும் என பதிவு செய்திருக்கிறீர்களே ? தயவு செய்து இது எதனால் என்றும் எந்த அருளாளர் இப்படி தெரிவித்துள்ளார் என தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன்..
ௐௐௐௐௐ
சிவ சிவ :
===== =====

தவறு ! தவறு ! தவறு !
===== ===== =====

இறந்தவர்கள் இல்லத்தில் அடியார்கள் சென்று திருவாசகம் தேவாரப் பதிகங்கள் பாடுகின்றனர். இது சரியா ? தவறா ?
××××× ××××× ×××××
இது அன்பர் ஒருவர் தனிப்பட்ட முறையில் படிக்கலாம் எனக் கருத்திட்டவரிடம் வினவிய வினா !  இதை விடத் திருமுறைகளை இழிவு படுத்த எவராலும் இயலாது !

இந்தக் கொடிய வழக்கம் தென் மாவட்டச் சைவர்கள் இல்லங்களில் எப்படியோ , எப்போதோ தொடங்கி , பரவலாக நடை முறைக்கு வந்து விட்டது ! திருமுறைகளில் பற்றும் பயிற்சியும் உள்ள ஒரு சிவனடியார் , இறப்புக்கு முன் நினைவு தவறும் முன்பாக , அவர் செவியில் ஏறுமாறு திரு முறைகளைப் பாடுதல் தவறில்லை !
அதைக் கேட்பவர் சிவ சிந்தையே நிறைவாகிட , இறை நினைவுடன் மட்டும் உடலை நீங்குதல் , உயர் பதம் அடைவதை விளைவிக்கும் .

பல ஆலயங்களுக்குத் தல புராணங்களை வகுத்தளித்து அருந் தொண்டாற்றிய ,
சிவ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் நினைவாற்றல் நீங்கு முன் ,அவரது சீடர்
சிவ. உ. வே . சுவாமி நாத ஐயர் அவர்கள் திருவாசகம் ஓதிக் கொண்டிருக்க , கேட்டுக் கொண்டே , கண்களின் இருபுறமும் நீர் வழிய ,அவர் உயிர் நீத்தது வரலாறு ! உயிர் நீங்கிய பிறகு ,தொடர்ந்து பாடவில்லை ! உயிர் நீங்கிய பின் பாடுதல் வேதத்தை அவமதிப்பதாகும் !
திருமுறைகளின் பெருமைகளை அறியாதார் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள் ! ஆலய வழிபாடே அறியாத , திருமுறைகளையே அறியாத , பெரிய தனவந்தர்கள் இறந்த வீடுகளிலும் , பொருள் பேசி திருவாசகம் ஓதுவதில் போய் நின்றுள்ளது இன்றைய அவல நிலை !

இதற்காக ,
இறைவனாரால் அருளாளர்கள் மீது மேலோங்கி நின்று , அருளப் படவில்லை இந்த மெய்ஞ் ஞானப் பாடல்கள் ! பல்வேறு படி நிலைகளில் உள்ள மக்களும் பயின்று பயன் கொள்ளும் நோக்குடனும் , உயிர்களைப் படி முறையில் வளர்த்தெடுத்து, சிவத்தை நோக்கிச் செலுத்திடவும் வகை செய்யும் பனுவல்கள் இவை ! ; ஞான பாதம் !
வாழ்வியல் சுப ,அசுப காரியங்களுக்காகப் படைக்கப் பட்டவை அல்ல !

ஏன் படிக்கக் கூடாது ?
தீட்டாவது ஒன்றாவது ? என்பர் பிழைப்பாளர்கள் !எப்படித் தெளிவிப்பீர்கள் ?
நல்ல வினா !

இறந்தவர் வாரிசு ஒருவர் ,உடனே திருவாசகத்தை எடுத்துக் கொண்டு ,
சிவாலயத்துக்குள் புகுந்து ,இறைவன் திருமுன் , இறந்தவர் சிவ பதம் அடைய வேண்டும் என்று திருவாசகம் படிக்கத் துணிவாரா ? எது தடுக்கும் ? கடுமையான வினாக்களாக உளவே ? பித்தம் உறைந்து போன சித்தத்தவரை தெளிவிக்க , இது போன்றக் கடுங் கசப்பு மருந்து கொடுத்தால்தான் தெளியும் ! திருமுறைகளின் ஒவ்வொரு பாடலிலும் சிவமே வரி வடிவாக உறைந்திருக்கிறார் ! ஓதும் போது ஒலி வடிவில் வெளிப்படுகிறார் ! பொருளறிந்து உருகி ஓதின் , இறையாற்றல் ஓதுபவரின் ஆன்மாவைப் பக்குவப் படுத்தும் ! துன்ப நீக்கத்துக்கும் ,இன்ப ஆக்கத்துக்கும் வகை செய்யும் !

திங்களூர் , திருமருகல் ஆகிய தலங்களில் இறந்தவரை எழுப்பப் பாடப் பட்ட நிகழ்வுகள் நடந்ததே ?

அந்த சூழல்கள் வேறு !
அவர்கள் இறந்திருப்பினும் , விதிப்படி , இவர்களைக் கருவியாக வைத்து ,உயிர்பிக்கப் பட முன்னை விதியுடையோர்.  எழுப்பிய அருளாளர்கள் வழி இறைவனாரே நிகழ்த்திய அருள் திருவிளையாடல்கள் அவை ! எழுப்பிடக் கருவியாக நின்றோர் ,நாம் பொறி புலன்களைப் பயன்படுத்துதல் போல் செயல் படத்தாமல் , பதி கரணமாக நின்று , அதாவது அவர்கள் உயிரறிவு இறையறிவில் அடங்கிட , சிவம் ஒன்றே அவர்களது உருவில் மேலோங்கி நின்று நிகழ்த்திய நிகழ்வுகள் அவை ! பொருள் விழைவாளர்களுக்கு இது விளங்காது ! இது சிவ ஞானப் புகலுடையோருக்கே விளங்கும் !  இறந்த உடலாக அங்கு எஞ்சி இருப்பது பஞ்ச பூதக் கலவையான சட நிலையில் உள்ள உடல் மட்டுமே என அறிக ! சுவர் பயன் பெறட்டும் என அதன் முன் நின்று ஓதுவதை ஒப்பதே இது ! இறந்தவருக்கு எந்தப் பயனும் விளையாது என அறிக !
தூய்மையற்ற இடம் என்பதையும் அன்பர்கள் கருத்தில் கொள்க !

25000 / = கட்டணம் பேசி ,திருமுறைகள் ஓதி ,கரும காரியம் செய்யப் பட்ட நிகழ்வு ஒன்றை , திரு நெல் வேலிப் பயணத்தின் போது அறிவிக்கப் பட்டு அதிர்ந்தேன் !
திரு முறைகளில் பெருமைகளை உள்ளவாறு உணர்ந்தோர் இவ்வாறு செய்யத் துணியார் ! இது வரை எவரும் இதைப் பற்றி எல்லாம் எவரும் வாய் திறக்கக் கூட இல்லையே !
துணிவு இல்லாததே ஒரே காரணம் ! தாங்கள் ?
இறைவனையே உள்ளத்தில் தாங்கி ,திருவருளே உணர்த்தக் கருவியாக நின்று பதிவு செய்கிறேன் !
~சிவோஹம் ~
~கோமல் கா சேகர் /9791232555/ 060418.
சிவ சிவ :
திருச்சிற்றம்பலம்.
கோமல் /260120-(74/20)

Please rate this

விதியை வெல்வது எப்படி ? இந்த பிறவியில் இது தான் அனுபவிப்பாய் என்று விதித்த பின், அதை வெல்ல முடியுமா? 4.6/5 (15)

விதியை வெல்வது எப்படி ? விதியை வெல்லும் திருமுறை பதிகங்கள்.

கருவாகி உருவாகி குழந்தையாய் குமரி குமரனாய் வாலிபனாய் இல்லத்து அரசனாய் பக்குமுற்று பெரியோனாய் நாம் திருவாகிச் செல்லும் முன்னர் தான், நாம் சந்திக்கும் இன்னல்கள் எத்தனை எத்தனை ? எத்தனை விதமான பிரச்சனைகளை நாம் வாழ் நாள் முழுவதும் துரத்திச் செல்கிறோம் ? வாழ்நாள் முழுவதும் நாம் பிரச்சனைகளைே துரத்திக் கொண்டிருந்தால், நம்மைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சிந்திப்பது எப்போது ?

அற்பமான இவ்வுலக இன்ப துன்பங்களைத் துரத்தவா நாம் பிறந்து வந்துள்ளோம் ? அதிசயமான அற்புதமான மனித பிறவியை நாம் அற்பமான பொருளில் வீணாக்கலாமா ? நம்மையும் இறைவனையும் உணர வேண்டுமானால், நாம் நம் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நாம் நிம்மதியான வாழ்கையும் இன்பமான வாழ்கையும் வாழ ஆரம்பித்தால் தான், நாம் இறைவனைப் பற்றி சிந்திப்போம். வழிபாடுகளில் உழன்று இறையனுபவமான பேரின்பத்தை அனுபவிக்க முடியும்.

அவ்வாறாயின், முதல் படியாக, நாம் இவ்வுலகத் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நம் வினைகள் நம்மைத் துரத்தி வந்து துன்பங்கள் கொடுக்கும். முதலில் புதிய வினைகள் செய்யாமல் இருக்க சபதம் ஏற்க வேண்டும். பின்னர், பழைய வினைகளைக் கழிக்க வேண்டும். பழைய வினைகள் நம்மை வாட்டி வதைக்கும். ஊழ் வந்து நம்மைத் துரத்தும். அதிலிருந்து விடுபட்டால் தான் நாம் இறை சிந்தனையில் திளைத்து சிவ புண்ணியங்களைச் சேர்க்க முடியும்.

அப்படி இவ்வுலத் துன்பங்களிலிருந்து விடுபட ஏதாவது வழி அல்லது கருவி இருக்கிறதா அல்லது மந்திரம் இருக்கிறதா ? இருக்கிறது. அது தான் பன்னிரு திருமுறைப் பதிகங்கள். இவை அனைத்தும் மந்திரங்கள். நாம் திருமுறை ஓதும் ஒலியானது நம் துன்பங்களைப் போக்கும் வலிமையுடையது. அருமருந்தானது. நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் சந்திக்கும் துன்பங்களுக்கு ஒவ்வொரு மருந்து உள்ளது. அந்த மருந்துகளின் பட்டியல் தான் பலன் தரும் திருமுறைப் பதிகங்களாகும்.

இந்த பதிகங்களை உள்ளன்போடு நம்பிக்கையோடு இறைவனின் திருமுன் பாடி வந்தால், அந்த துன்பங்கள் காணாமல் போகும். இது நம் குருமார்களின் வாக்கு. இது வேத வாக்கு. இது இறைவனின் திருவாக்கு. இவ்வாறு நம் துன்பங்களை எளிதாகக் கடக்கும் வழியைக் கற்றுக் கொண்டு விட்டால், நாம் நம் கணிசமான நேரத்தை இறை வழிபாட்டில் செலுத்தி சிவ புண்ணியங்களைச் சேர்க்கலாம் அல்லவா ? இப்பிறவியில் வரும் துன்பத்தை வெல்லும் ரகசியம் அறிந்தால் தானே, அடுத்து பிறப்பு இறப்பு என்னும் மா துக்கமாகிய பெரும் துன்பக் கடலை கடக்கும் வழியைத் தேடிச் செல்வோம் ?

ஆகவே, இவ்வுலகில் இப்பிறப்பில் நமக்கு வரும் துன்பங்களைப் போக்கவும், எளிதாக கடக்கவும் ஓத வேண்டிய பதிகங்களின் பட்டியல் இங்கே உள்ளன. இதை அனைவரும் அறிந்து படித்து ஓதி துன்பங்களிலிருந்து விடுபட்டு சிவபிரானின் வழிபாடுகளில் உங்கள் காலத்தைச் செலவிடுங்கள்.

இந்த பதிகங்கள் அனைத்தும் YouTube இல் பார்த்து படித்தும் கூடவே பாடியும் ஓதலாம். இந்த பட்டியில் உள்ள அனைத்து பதிகங்களைையும் காண:

விதியை வெல்வது எப்படி ? YouTube Playlist

விதியை வெல்வது எப்படி பதிகங்களின் பட்டியல்

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

மார்கழி வீதிஉலா – உயிர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டல் No ratings yet.

மார்கழி வீதிஉலா – உயிர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டல்

தேவர் உலகில் மார்கழி மாதம் ஒரு பிரம்ம முகூர்த்த காலம் என்பார் பெரியோர். உயிர்களுக்கு மிகவும் உன்னதமான மாதமாகத் திகழ்கிறது மார்கழி மாதம். அதிகாலை எழுந்து  சுத்தமான பிராணவாயு நிரம்பியுள்ள காற்றை சுவாசிப்பதால் நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி, நம் ஆரோக்கியம் வலுப்பெற்று, நம் ஆயுளும் கூடும் என்பது இதன் பின்னால் இருக்கும் விஞ்ஞானமாக பெரியோர் கூறுவர். இந்த உன்னதமான மாதத்தை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து இவ்வுலகையும் நம்மையும் படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக பெருமை மிகுந்த மார்கழியாக கொண்டாடுவது மரபு. இந்த மாதம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், அது மிகுந்த பெருமை மிகுந்த பீடுடைய மார்கழியானது. இதனால், இந்த மாதத்தில் நம் இல்லங்களில் வரும் நிகழ்வுகளை தை மாதத்திற்க்கு தள்ளி வைத்து இம்மாதம் முழுவதுமாக இறை உணர்வில் திளைத்திருப்பது நம் மரபாகும்.

போர்வையை இழுத்துப் போர்த்தித் தூங்கத் தூண்டும் சூழல் போலவே, உயிர்களை இந்த உலகியலில் இருக்கும் சிற்றின்பத்தில் ஆழ்த்தி திளைத்திருக்கச் செய்யும், ஆணவம் என்ற மலம். அதிலிருந்து விடுபட்டால் தான், நாம் நம்மை உணர்ந்து இறைவனை உணர்ந்து அவனை வழிபட்டு கொண்டாடி ஆடிப்பாடி மகிழ்ந்து பேரின்பத்தை அடைய இயலும்.

இரவு பகல் என்பது பூமிக்கும் மற்ற கோள்களுக்கு மட்டும் தானே. எல்லா நொடிப்பொழுதும் ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கின்ற சிவபெருமானுக்கு ஏது ஓய்வு ? அவன் சலிப்படையாதவன், சோர்வடையாதவன். ஆகவே, திருப்பள்ளியெழுச்சி என்பது ஆணவ மலத்தில் ஆழ்ந்து தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, ஆணவத்திலிருந்து விடுதலை கொடுத்து இறைவனை நோக்கி நெறிப்படுத்துவதேயாகும். ஆகவே,

மார்கழி என்றாலே இறை விழிப்புணர்ச்சி மாதம்.

திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடி இறைவனை தூக்கத்திலிருந்து எழுப்புவது போல, நம் உயிர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவதே பள்ளி எழுச்சியாகும். எனவே, சிவபெருமானின் பெருமைகளை உணராத மக்கள் எண்ணற்றோர். அவனை அறியாமலும், அவனுடைய தன்மைகளை உணராமலும், அவன் நமக்குச் செய்யும் உதவிகளைக் காணாமலும் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் கடமையாகும்.

அவ்வகையிலே, சென்னை பள்ளிக்கரணையிலே, மார்கழி 20 ஞாயிறன்று, காலை 5 மணிக்கு மல்லிகேசுவரர் நகர் அருள்மிகு மல்லிகேசுவரி உடனமர் மல்லிகேசுவரர் திருக்கோவிலில் இருந்து அருள்மிகு சாந்தநாயகி உடனமர் ஆதிபுரீசுவரர் திருக்கோவில் வரை, அருள்மிகு சிவகாமியம்மை உடனாய ஆனந்த நடராசர் உடன், மணிவாசகரும் இணைந்து, கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறைகள் ஏந்தி முன்னூறுக்கும் மேற்பட்ட சிவ அன்பர்களுடன் வீதிவலம் நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள் இங்கே.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

Please rate this

சிவாலயங்கள் அறிவோம். சிவாலயங்கள் செல்வோம். No ratings yet.

சிவாலயங்கள் அறிவோம். சிவாலயங்கள் செல்வோம்.

ஆறுகளையும் நீர் நிலைகளையும் மையமாகக் கொண்டே அன்றைய ஊர்கள் அமைந்தன. ஊர்களின் மைய பகுதியில் சிவாலயம் இருக்கும். அதாவது, சிவாலயத்தைச் சுற்றித் தான் ஊரே வடிவமைக்கப் பட்டிருக்கும். ஊரின் பெயரே அவ்வூரின் சிறப்பு மிக்க பெயரான சிவபெருமானின் திருநாமமாகத் தான் இருக்கும்.  ஆகையாலே, ஊரின் பெயரைச் சொன்னாலே, சிவபெருமானின் மந்திரத்தை ஓதியதற்க்கும் சமம். சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமானின் பாடல்களில் ஊர்களின் பெயர்களைத் தொகுத்தே பாடல்களைக் காணலாம். ஆறாம் திருமுறையில், முழுப் பாடலுமே திருத்தலங்களின் பெயர்களைத் தொடுத்தே திருத்தல தாண்டகம் என்று பதிகமாக பாடியுள்ளார். அந்த பாடல் இங்கே:

ஆறாம் திருமுறை. திருநாவுக்கரசர் அருளிய திருத்தல திருத்தாண்டகம்

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிருறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம்
கல்லில் திகழ் சீரார் காளத்தியும் கயிலாய நாதனையே காணலாமே.

ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானமும் கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப் பேருங் கயிலாய நாதனையே காணலாமே.

இடைமருது ஈங்கோ இராமேச்சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேரூர்
சடைமுடி சாலைக்குடி தக்கரூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டைகோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே.

எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பை யங்கோட்டூர் இறையாய் சேரி
அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடு தண்டுரை அழுந்தூர் ஆறை
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளுங் கயிலாய நாதனையே காணலாமே.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
வெண்ணை அருட்டுரை தண்பெண்ணாடகம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பாலையுங் கயிலாய நாதனையே காணலாமே.

வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப் பெரும்
பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக் காரோணத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைகாட்டுள்ளும்
மஞ்சார் பொதியின் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீசுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே.

திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம் ஐயாறசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டங் கருகாவூருங் கயிலாய நாதனையே காணலாமே.

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் உற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூருங் கயிலாய நாதனையே காணலாமே.

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலி நெய்த்தானத்தோ டெத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணலாமே.

திருச்சிற்றம்பலம்.

ஆகவே, சிவபெருமான் குடிகொண்டு அருள் புரியும் தலங்களின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தாலே, சிவபுண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

திருத்தலங்கள் சென்று வழிபடுவீர்

தேவார பாடல் பெற்ற தலங்கள், இன்று வரை நமக்குத் தெரிந்த 276 தலங்களில் சிவபெருமான் பல்வேறு திருநாமங்களோடு, அடியவர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார். திருவாசகத் தலங்கள், மலைகளின் மேலே உள்ள தலங்கள் என்று எண்ணற்ற தலங்களில் பெருமான் குடிகொண்டு அருள் பாலித்து வருகிறார். நாம் செய்திருக்கும் புண்ணியங்களைப் பொறுத்து நாம் இந்த தலங்களுக்கெல்லாம் சென்று வழிபட பெருமான் அருள் புரிவார். இந்த தலங்களை அறிந்து, இந்த தலங்களைப் பற்றி தகவல்களை எண்ணியும், சிவபெருமானையும் எண்ணிக் கொண்டிருந்தால், அவர் நிச்சயம் அந்தந்த கோவிலுக்கு உங்களை அழைப்பார். அருள் தருவார்.

தேவார பாடல் பெற்ற தலங்களை அறிந்து கொள்ள கீழேயுள்ள வலைதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.shivatemples.com

இந்த தலங்களையெல்லாம் கூகுள் வரைபடத்திலேயே காண:

https://shaivam.org/temples-special/thevara-paadal-petra-thiruthalangal

இந்த திருத்தலங்களை இணைத்து மிக இனிமையான கேட்க கேட்க திகட்டாமல், நம்முள் உள்ளே சென்று திருத்தலங்களை விதைக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. இதைக் கேட்க கேட்க, மனனமாகி, நமக்கு பல்வேறு தலங்களை நம் மனதில் நிற்கச் செய்து அங்கே இருக்கும் பெருமானிடம் விண்ணப்பம் கேட்டு அங்கே சென்று அவரைத் தரிசிக்கும் பாக்கியமும் சித்திக்கும். ஆகவே, இந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மங்காமல் திருநீறு பூசி மகிழ்வோம். எங்கும் எப்போதும் திருநீறு பூசியே இருப்போம். No ratings yet.

மங்காமல் திருநீறு பூசி மகிழ்வோம்

திருநீறு இறைவன் திருமேனியில் உறைகின்ற உயர்ந்த பொருள். அதை இறைவனிடமிருந்து நாம் அவனுடைய பிரசாதமாக வாங்கி நாம் அதை அணிந்து கொள்கிறோம். எத்தனை உயர்ந்த பிரசாதம் ? அதனால் தான், அதை கீழே சிந்தி விடாமல் வாங்கி நம் நெற்றியில் முழுதுமாக அணிய வேண்டும் என்று நம் குருமார்கள் கூறுகிறார்கள்.

திருநீற்றின் பெருமையை திருஞானசம்பந்தப் பெருமான் மந்திரமாவது நீறு பாடலில் உரைத்திருப்பதை நாம் அறிவோம். திருநீற்றினால் ஆகாதது என்ன இருக்கிறது ?

காலம் காலமாக சைவ சமயத்தோடு இணைந்து வாழ்ந்து வந்த நம் நாடு, தற்போது, உலகமய தாக்கலின் காரணமாகவும் அந்நிய மதங்களின் ஊடுருவல் காரணமாகவும், உலகில் எங்கும் இல்லாத ஒரு புதிய மதசார்பின்மை என்ற வழியில் தடம் மாறிச் செல்கிறது. திருநீறு பூசுவதை பழமையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அவர்கள் யாருக்கும் திருநீற்றின் பெருமையும், சிவபெருமானின் கருணையும் எள்ளளவு கூட தெரியாது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்த நாம் தான் அவர்கட்கும் புரியுமாறு எடுத்துச் செல்ல வேண்டும். ஆகையால், திருநீறு இறைவன் பிரசாதம் என்பது மட்டுமின்றி அதை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் நாம் எப்போதும் திருநீறு அணிந்தே இருப்பது மிக அவசியம். திருநீற்றினை அலுவலகங்களிலும், பள்ளி கல்விக்கூடங்களிலும் அணியுங்கள். இது நம் அடிப்படை உரிமை மட்டுமின்றி அது நிறைந்த நன்மைகளை நமக்கு அளிக்கும். ஆகவே, மங்காமல் திருநீறு எப்போதும் பூசி மகிழ்வோம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம் நம் திருக்கோவில்களில் தினமும் ஓதுவது மரபாகும். எவை ஐந்து? 4.46/5 (24)

ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம் நம் திருக்கோவில்களில் தினமும் ஓதுவது மரபாகும். எவை ஐந்து?

குரு வணக்கம், விநாயகர் துதி, முருகர் துதி, அம்பாள் துதி, பன்னிரு திருமுறைகள், வாழ்த்து என்று வரிசையாக இறைவன் முன்னர் பாடுவது மரபு. இருப்பினும் நேரம் சுருக்கமாக இருக்கும் காலத்தில், ஐம்பெரும் புராணம் எனும் பஞ்ச புராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடுவது சைவ மரபு. அவ்வாறாக, இறைவன் திருமுன் நின்று கொண்டு பஞ்ச புராண பாடல்களைப் பாடுங்கள். நீங்கள் உங்கள் சொந்த குரலிலே பாடுவதை இறைவன் ஒரு குழந்தை பாடுவதைப் போல ரசித்துக் கேட்பான். அதற்கான இரு தொகுப்புகள் இங்கே.

அச்சிட்டு, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் ஒரு பக்க பதிவாக PDF பதிவு இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

பஞ்ச புராணம் தொகுப்பு ௧

பஞ்ச புராணம் தொகுப்பு ௨

பஞ்ச புராணம் தொகுதி ௧

நால்வர் துதி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே

தேவராம்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

திருவாசகம்

வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுவதும் தருவோய் நீ,

வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

திருவிசைப்பா

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே

திருப்பல்லாண்டு

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in

பஞ்ச புராணம் தொகுதி ௨

குரு மரபு வாழ்த்து

கயிலாய பரம்பரையில் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடூழி தழைக மாதோ.

விநாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

தேவராம்

திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும் திருவெண்நீறு அணியாத திரு இல் ஊரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினோடு பலதளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்சங்கர் ஊதா ஊரும் விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவைஎல்லாம் ஊர் அல்ல அடவி காடே.

திருவாசகம்

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்கு
ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்து ஆடும் நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக் கூடு நீக்கிஎனைப் போற்றி பொய்யெலாம்
வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்து அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே

திருவிசைப்பா

அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண்டிசைக் கனகம்

பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர் பணைமுலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.

திருப்பல்லாண்டு

குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in

Please rate this

பணத்தின் பின்னே ஒரு பயணம்… 4.67/5 (3)

பணத்தின் பின்னே ஒரு பயணம்…

பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை

என்பது வள்ளுவர் பெருமான் வாக்கு. பொருள் இல்லாமல் இன்று வாழ இயலாது. குடிக்கும் தண்ணீர் கூட பணம் கொடுத்து பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆனால், எவ்வளவு பணம் தேவை ? இங்கு தான் யாருக்கும் தெளிவு ஏற்படுவதில்லை. பணத்தை ஈட்ட முயற்சி செய்யும் போது, பணம் வர வர, நமக்கு குஷியாகவும் இன்பமாகவும் இருக்கும். அவ்வாறு பணத்தின் மீது ஆசை வைத்து அதன் பின்னால் செல்ல ஆரம்பித்து விட்டால், மெல்ல மெல்ல அது நம்முடைய எசமானனாகவும், நாம் அதற்கு அடிமையாகவும் மாறி விடுவோம்.

மனமானது ஆசைப் பட்டுக் கொண்டே இருக்கும். அதனின் ஆசையை அளவுகோலால் அளக்க இயலாது. பணம் வர வர ஆசையும் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில், நாம் ஆசைப் படும் பணம் கிடைக்காது. அப்போது தான், நாம் வித்தியாசமாக நடந்து கொள்வோம். கோபம், இயலாமை, போன்ற உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும். எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறம், நியாயம், மனிதாபிமானம் ஆகியவற்றை இழக்கத் தயாராகிவிடுவோம். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற நிலைக்கு அது நம்மைத் தள்ளி விடும். பலர் இந்த ஆரம்ப நிலையிலேயே அதை உணர்ந்து கொண்டு திருந்தி வாழ்வர். ஆனால், தொடர்ந்து பணத்தின் பின்னால் செல்பவர்கள், பல ஆண்டுகள் பாடுபட்டு கட்டிய தவம், புகழ், நற்பெயர் எனும் கோட்டைகள் அனைத்தும் ஒரே விநாடியில் நிலை குலைந்து, தகர்ந்து சுக்கு நூறாகிப் போகும். அதள பாதாளத்தில் விழுந்து விட்டதை உணர்வார்கள். நற்பெயரும் தவமும் ஒரு முறை இழந்து விட்டால், மீண்டும் இந்த பிறவியிலேயே அதை மீண்டும் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினம்.

 

ஆகவே, பணத்தின் பின்னால் சென்றால், அது நம்மைப் பாழுங்குழியில் தள்ளி விடும் என்பது கண்கூடாக காணும் உண்மை. மனிதனுக்கு 3 வேளை நல்ல உணவும், நல்ல தண்ணீரும், தூங்க நல்ல இடமும், உடுக்க நல் உடையும் இருந்தாலே போதும். அதற்கு மேல் அவனுக்குத் தேவையானது அனைத்தும் ஆடம்பரம் தான். ஆகவே, பணத்தை எது வரை பின்தொடர வேண்டும் என்பதை அறிந்து அது வரை மட்டுமே செல்ல வேண்டும். அதுவே உங்கள் வாழ்வை இனிதாக வைக்கும். அதிக பணம், நம் சிந்தனைகளை சிதறச் செய்வது மட்டுமின்றி, நம் செயல்பாடுகளையும் நம் வாழ்வின் நேரத்தையும் வீண் அலைச்சல்களில் அலைக்கழிக்கும். இப்பிறவியில் இவ்வுலகிலிருந்து பாவ புண்ணியங்களை மட்டுமே நாம் எடுத்துச் செல்ல முடியும். வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியாது.

தேவைக்கு அதிமாக இருக்கும் பணத்தை வைத்து புண்ணிய காரியங்கள் செய்யுங்கள். அன்னதானம், சிவாலய பணிக்கு உதவுதல், கோவில்களில் விளக்கிடுதல், பூசைக்கு வழியில்லாத கோவில்களுக்கு உதவுதல், கோ சாலைக்கு உதவுதல் போன்ற நற்பணிகள் செய்யுங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே 5/5 (1)

காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

எளிமையான சொற்களை மாலையாகக் கோர்த்து, உணர்வுகளை அப்படியே மிகுந்த வாசனையோடு கூடிய மணம் கமழ வைத்து, ஆழ்ந்த ஞானத்தையும் இடையே பொதித்து, படிப்பவரின் உணர்வுகளைத் தூண்டி சிவத்தை நோக்கி பாட, ஆட வைக்கும் திறமை தேனினும் இனிய திருவாசகத்திற்கு உரித்தாகும். அத்தகைய சுவையோடு ஞானமும் கலந்த திருவாசகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமானால் அதற்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை.

திருக்கழுக்குன்றத்திலே அடியார்களின் முன்னிலையிலேயே மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார் சிவபெருமானார். அந்த திருக்கழுக்குன்ற பதிகத்தை சற்றே சிந்தித்து பார்த்தால், உள்ளம் உருகும், சிவபெருமானிடம் இலயிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

 

Please rate this

சைவ சமயம் அடிப்படை தெரியுமா? அப்படின்னா இந்த கேள்விகளை முயன்று பாருங்கள். 5/5 (2)

சைவ சமயம் அடிப்படை தெரியுமா? அப்படின்னா இந்த கேள்விகளை முயன்று பாருங்கள்.

சைவ சமயம் என்பது பெருங்கடல் என்பது யாவரும் அறிந்த ஒன்று. அவற்றில் அடிப்படை செய்திகளையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது நமக்கு நாமே சுயபரிசோதனை செய்வது மிக நன்று. அவ்வகையிலே, சுயபரிசோதனை செய்து கொள்ள ஒரு முப்பது கேள்விகள் கொண்ட தேர்வு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள்.

மொத்தம் மூன்று தேர்வுகள். முதல் தேர்வு 30 மதிப்பெண்கள். இரண்டாவது 30 மதிப்பெண்கள். மூன்றாவது 40 மதிப்பெண்கள். மொத்தம் 100 மதிப்பெண்கள். சில கேள்விகள் கடினமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விடைகளை நீங்கள் தேடுவதன் மூலம் அப்பகுதி சமயத்தையும் அறிய வேண்டும் என்ற நோக்கோடு சில கடினமான கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

சைவ சமயம் அடிப்படை அறிதல் தேர்வு  (50 கேள்விகள்)

தேர்வு ௧ ஒன்றுக்குச் செல்க  (30 கேள்விகள்)

தேர்வு ௨ இரண்டுக்குச் செல்க  (30 கேள்விகள்)

தேர்வு ௩ மூன்றுக்குச் செல்க   (எளிமையான 40 கேள்விகள்)

சைவ சமய அடிப்படை என்ற தேர்வில் பெரும்பாலான கேள்விகளுக்கு கீழ்காணும் காணொளியில் பதில் இருக்கிறது. சைவ சமய அடிப்படையை அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு ஒன்றரை மணி நேரம் செலவு செய்து இந்த அடிப்படையை அனைவரும் குற்றமில்லாமல் தெரிந்து கொள்ளுவோம்.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

நம் தமிழ் எண்கள் அறிவோம், பயன்படுத்துவோம் 4.33/5 (3)

நம் தமிழ் எண்கள் அறிவோம், பயன்படுத்துவோம்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

என்பார் ஔவையார்.

குறள் 392:.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமான் வாக்கு. அத்தகைய கண்கள் போன்ற நம்முடைய தமிழ் எண்களை நாம் இன்று பயன்படுத்துகிறோமா ? முதலில் அந்த எண் வடிவங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோமா ?  உலகின் மூத்த மொழி என்ற பெருமை உடைய நம் தமிழ் மொழியின் எண்களை நாமே பயன்படுத்தாவிட்டால், அமெரிக்கர்களும் உருஷ்யர்களுமா பயன்படுத்துவார்கள் ?  இந்த கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்கே கேட்டுக் கொண்டு, அதற்கான நம் கடமைகளை உணர்ந்து செய்ய வேண்டும். ஆகவே, தமிழ் எண்களின் உருவங்களை அறிந்து கொண்டு, அதை எளிதாக மனனம் செய்வதற்குரிய வழிகளைப் பின்பற்றி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், நம் எண்களுக்கு உயிர் வந்து விடும். இந்த முயற்சியை நம்மிலிருந்தே தொடங்குவோம். அதற்கான கருவி தான் இந்த காணொளியும், படங்களும்.

இந்த காணொளியில் பயன்படுத்தப்பட்ட படங்கள். எளிதாக கற்பதற்க்கும், பயிற்சி பெற்று பயன்படுத்துவதற்க்கும்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

காலத்தை வென்ற நூல்கள் என்பது எத்தனை காலமானாலும் என்றும் பொருந்தி இருப்பதாகும். பன்னிரு திருமுறைகளின் பெருமை 4/5 (2)

காலத்தை வென்ற நூல்கள் – பன்னிரு திருமுறைகளின் பெருமை

காலத்தை வென்ற நூல்கள் என்றால் என்ன ?

நூல் செய்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒரே ஒரு எழுத்தைக் கூட மாற்றாமல் அப்படியே அந்த நூலின் பொருள் எக்காலத்தும் பொருந்துமாறு இருப்பது தான் காலத்தை வென்ற நூல்களாகும். இது போல காலத்தை வென்ற நூல்களை செய்வது எப்படி சாத்தியம் ? விஞ்ஞானம் நேற்று செய்த பொருள் இன்று புதிய வடிவம் (version) கொண்டு புதுப்பிக்கப்பட்டு (update) இவ்வுலகில் இருந்தே காணாமல் போய்விடுகிறது. ஆனால், பல ஆயிரம் காலங்கள் கடந்தும் ஒரு நூல் நிலைத்து நின்று, தற்காலத்திற்கும் இனி வரும் காலத்திற்கும் பொருந்துமாறு இருப்பது எத்தனை பெரிய அதிசயம், ஆச்சரியம் என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
 
இன்றைய உலகில் இத்தனை பெரிய நூல்கள் செய்வது சாத்தியமா என்றால், என்ன பதில் கொடுப்போம் என்று எண்ணிப் பாருங்கள். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நூல்கள் நிற்கிறது என்றால், அவை உண்மைப் பொருளைச் சொன்னால் மட்டுமே நிற்பது சாத்தியம். உண்மையல்லாதவை அழிந்து போகும். அத்தகைய நூலையோ பொருளையோ மனிதர்கள் செய்வது சாத்தியமா என்ற கேள்விக்கும் நாம் என்ன பதில் கூறுவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அத்தகைய நூல்கள் இறைவன் திருவருளினால் மட்டுமே செய்ய இயலும் என்பது இப்போது தெளிவாகும்.
 
வேகமாக மாறி வரும் இந்த விஞ்ஞான உலகிலும் காலத்தை வென்ற நூல்கள் இங்கு இருக்கிறதா என்று நாம் ஆராய்ந்தால் நமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட நூல்கள் இன்றும் அதன் தன்மை மாறால், உண்மைப் பொருள் மாறாமல் நிலைத்து நின்றால், அது அதிசயம் அல்லவோ ? அப்படி பல நூல்கள் உலகிலேயே இந்தியா என்னும் நாட்டின் தென்கோடியில் தமிழகம் என்ற பகுதியிலே உலகின் முதன்மொழியாக இன்றும் வழக்கில் இருக்கும் தமிழ் என்ற மொழியிலே உள்ளது என்றால் நமக்கு இன்ப அதிர்ச்சி தானே. உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் பல காலத்தை வென்ற நூல்கள் இல்லவே இல்லை. உலகிலேயே தமிழ் நாட்டிலே, தமிழ் மொழியிலே மட்டும் தான் இருக்கிறது.  எனக்கு அந்த நூல்களைக் காண மிகவும் இப்போது ஆவலாக இருக்கிறது.
 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவநாயனாரால் செய்யப்பட்ட திருக்குறள், பன்னிரு திருமுறை நூல்கள், இலக்கிய நூல்கள் என்று பல காலத்தை வென்ற நூல்கள் தமிழ் மொழியிலே உள்ளது. அத்தகைய நூற்களில் தலை சிறந்தது திருக்குறளும் பன்னிரு திருமுறை மற்றும் சித்தாந்த சாத்திர நூல்களும், இன்னும் பிற சைவ மரபு நூல்களுமாகும். நம் நூல்களின் பெருமை நமக்கே ஏனோ தெரிவதில்லை. அதை பாராட்டும் எண்ணமும் ஏனோ நமக்கே இருப்பதில்லை. அத்தகைய காலத்தை வென்ற நூல்களை நாம் எவ்வாறு போற்ற வேண்டும் ? எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ? அதை முதலில் நன்கு படித்து உள்வாங்கி உணர வேண்டும்.  அதற்கு சிறந்த ஞானாசிரியர்களின் துணையைப் பெற வேண்டும். திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் சைவத் திருமுறை நேர்முக வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இத்தகைய பெரிய சிவபெருமானின் அருளைப் பெற்றவர் இவ்வுலகில் எத்தனை பேர் ?
 
இந்த நூல்கள் சில ஆயிரம் ஆண்டு காலத்தின் முன்னர் தான் தோன்றியதா என்ற கேள்வியை எழுப்பினால்… நூல் வடிவமாக சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தான் தோன்றியது. ஆனால், சொல் வடிவில் குருவின் உபதேசமாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதற்கு முன்னரும் இருந்துள்ளன ? இதை ஆராய்ந்து துல்லியமான பதிலைக் கூறத்தக்கவர் இங்கு எவரேனும் உளரோ ?
 
இந்த நூல்களில் உள்ள பதிகங்கள் செய்த அற்புதங்கள் எத்தனை எத்தனை ?  இந்த அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்தனவா என்று வியந்து கேட்பவர்கள் ஏனோ, சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளி பிழைத்துக் கொண்டதை இக்கால மருத்துவர்கள் Its a medical miracle என்பதை மட்டும் அதே வினாவை எழுப்பாமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.  நமக்குத் தெரியவில்லை என்ற காரணத்தினால் மட்டும், அந்த அற்புதங்கள் இன்றும் நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. இந்த அற்புதங்கள் நடந்ததற்க்கு சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன.  இந்த உலகைச் சுற்றி இன்னும் நிறைய சூக்குமங்கள் இருக்கின்றன, அதுவும் மனிதனின் அறிவிற்கும் கவனத்திற்க்கும் எட்டாமல் இன்னும் நிறைய இருக்கிறன்றன என்பதை உணர இயலும்.
 
முதலை உண்ட பாலகனை மூன்று ஆண்டுகள் கழித்து அதே வளர்ச்சியோடு மீண்டும் பெற்றது எத்தனை பெரிய அதிசயம் ?  ஆற்றில் விட்டதை குளத்தில் பெற்றது, செங்கல் தங்கக் கட்டியாக மாறியது, காவிரி ஆறு பிரிந்து வழிவிட்டது, இந்த பூத உடலோடு திருக்கயிலாயத்திற்கு வெள்ளை யானையின் மீது ஏறிச் சென்றது, கொலை செய்ய ஏவப்பட்ட மதம் பிடித்த யானை வணங்கி வலம் வந்தது, கல்லைக் கட்டி கடலில் போட்டும் கல் தெப்பமாக மிதந்து கரையேறி அதற்கு சான்றாக இன்றும் இருக்கும் கரையேரவிட்ட குப்பம் என்ற பகுதியும், கொடிய நஞ்சை பாலில் கலந்து உண்டும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிரோடு இருந்ததும், பாடல் பாடி இறைவனிடம் படிக்காசு பெற்றதும், கயிலையில் உள்ள ஏரியில் மூழ்கி, திருவையாற்றின் குளத்தில் எழுவதும், இறந்து போன இளைஞரையும், பூம்பாவையையும் உயிருடன் எழுப்பியதும் (மாண்டவரை மீட்டது), பதிகம் பாடி நோய்களை நீக்கி மனித குலத்தை மீட்பதும், அடேங்கப்பா எத்தனை எத்தனை அற்புதங்கள்.  எல்லாம் இறைவன் திருவருளினால் நம் அருளாளர்கள் செய்த அற்புதங்கள்.
 
எத்தனை பெரிய சிறப்புகள் இந்த நூல்களுக்கு இருக்கின்றன ? அவற்றையெல்லாம் அறிவதற்கு நமக்கு ஏனோ இன்று நேரமே இருப்பதில்லை. சுதந்திரம் பெற்ற பின் சில பத்தாண்டுகளில் விஞ்ஞானத்தைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று நம் பல்லாயிரம் ஆண்டு கால சிறப்புகளை இழிவுபடுத்தி நம்மிடம் உள்ள மாணிக்கத்தை நாமே தூக்கி எறிய வைத்த இழி செயல்கள் எத்தனை எத்தனை ? இன்னும் நாம் விழித்துக் கொண்டு, நம் பெருமைகளை உணர்ந்து, அவற்றை மற்றவர்களுக்கும் உலகிற்கும் அறிய செய்யும் செயல்களை நாம் செய்யவில்லை என்றால், இந்த ஞான பூமி நம்மை மன்னிக்காது.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே சமய விழிப்புணர்வு திருமுறை வீதி உலா No ratings yet.

கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே சமய விழிப்புணர்வு திருமுறை வீதி உலா

நாம் வாழும் வாழ்வை இன்பமாக வாழுமாறு செதுக்குவது நெறிகள்.  உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இன்பமான வாழ்வைத் தரக் கூடியது ஒப்பற்ற நெறியாகும். அந்த ஒப்பற்ற நெறியை குற்றமில்லாமல் பெற வேண்டுமானால், அது இறைவன் ஒருவனால் மட்டுமே அருள முடியும். அவ்வாறாக குற்றமற்ற உயர்ந்த ஒப்பற்ற நெறியை இறைவனாகிய சிவபெருமான் நமக்கு உபதேசங்கள் மூலம் அருளப் பட்டது தான் சைவ சமய நெறி. அத்தகைய நெறியை ஒவ்வொருவரும் முதலில் அறிந்துணர வேண்டும். பின்னர், அதைத் தத்தம் வாழ்வில் முயற்சி செய்ய வேண்டும். பின்னர், அந்த நெறியே நம் வழி என்று தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அந்த ஒப்பற்ற நெறியை அனைத்து மக்களுக்கும் அறியச் செய்வது நம் தலையாய கடமையாகும்.

அவ்வண்ணமே, வீதிகள் தோறும் சென்று நம் தமிழ் வேத நூலாம் பின்னிரு திருமுறை என்பதை அறிவிக்கும் வண்ணமும், அந்த திருமுறையே நாம் வாழ பின்பற்ற தகுதியுடைய நெறியாகும் என்று எடுத்து உரைக்கும் வண்ணமும், திருமுறை வீதிஉலா உதவுகிறது. அத்தகைய திருமுறை வீதி உலா, நம் சென்னையின் தெற்கு கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே அமைந்துள்ள திருநீலகண்டேசுவரர் திருக்கோவிலில் விகாரி ஆனி 15 (௧௫) ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், சென்னை பள்ளிக்கரணை திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தினரும் கலந்து கொண்டனர். அதிலிருந்து சில காட்சிகள்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

 

Please rate this

திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில் No ratings yet.

திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில்

இறைவனால் நமக்கு அருளப்பட்ட ஞான ரத்தினமாகிய திருமுறை மற்றும் சைவ சமயத்தை உலகெங்கும் மக்களின் நன்மைக்காக எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாட்டில் அறத்தை நிலை நாட்டி மாமழை பெய்து மக்களை இன்பமாக வாழச் செய்யும் வழியாகும். அவ்வழியே, சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் (TNHB) அமைந்துள்ள அண்ணாமலையார் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்திலும் அதை ஒட்டியுள்ள விநாயகர் ஆலத்தில் குடமுழுக்கு 48 நாள் நிறைவு விழாவிலும் ஆனி 1 முழுமதி நாளன்று, சைவ சமயம் மற்றும் திருமுறை விழிப்புணர்வு வீதிஉலா நடத்தப்பெற்றது.

கயிலாய வாத்தியம் முழங்க திருமுறை வீதிஉலாவும், சைவ சமயம் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளும் அந்த கோவிலைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அறிவோம் சைவ சமயம் என்று நூலும் அந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு கொடுக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

 

Please rate this

சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் No ratings yet.

சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும்

கோடை விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்த வந்த குழந்தைகள், தீந்தமிழ் மற்றும் தெய்வீக திருமுறைகளைக் கற்றதுடன், சண்டிகேசுவரர் மேடை நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் குறுகிய காலத்தில் பயிற்சி செய்து நிறைவு விழா அன்று நிகழ்த்தினர்.

சண்டிகேசுவரர் நாயனார் மேடை நாடகம்

இந்த நாடகத்தின் காட்சி வசனம், நம் வலைதளத்தின் பதிவிறக்கம் பகுதியில் உள்ளது.

வில்லுப்பாட்டில் சைவ சமய விழிப்புணர்வு எவ்வாறு கொண்டு வரலாம் என்ற கேள்விக்கு விடையாக உருவாகியது இந்த சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டு. குழந்தைகளின் அருமையான முயற்சி பாராட்டத்தக்கது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

ஐந்தே நிமிடத்தில் சைவ சமயத்தின் அறிமுகம் 4.67/5 (3)

ஐந்தே நிமிடத்தில் சைவ சமயத்தின் அறிமுகம்

இன்றைய விஞ்ஞான காலம் மிகவும் விரைந்து செல்லும் தன்மையுடையது. பல்வேறு ஊடகங்களின் வாயிலாக கற்பதிலிருந்து, செயல்களைச் செய்து முடிக்கும் வரை பல்வேறு கருவிகளின் துணைகளோடு விரைந்து செய்கிறான் மனிதன். அத்தகைய மனப்போக்கு கொண்ட நம் புதிய தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலே, ஐந்தே நிமிடத்தில் பல்வேறு சைவ சமயக் கருத்துக்களை எடுத்துரைக்கும் காணொளிகளும் ஒலிப்பேழைகளும் நிறைய வர வேண்டும். சிறிது சிறிதாக நம் சமயத்தை ஒவ்வொருவரும் அறிந்துணர்ந்து, போற்றத்தக்க நம் சிவபிரானின் பெருமைகளை உணர்ந்து அவனை எப்போதும் துதித்து ஏத்த வேண்டும். அந்த வகையிலே, சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளை ஐந்தே நிமிடத்தில் எடுத்துரைக்கும் ஒரு முயற்சியே இந்த காணொளி.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

Please rate this

கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா No ratings yet.

கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா

சென்ற மே 26 ஆம் தேதி, திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் நடத்திய சிறுவர்களுக்கான கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு நிறைவு விழா மற்றும் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக பள்ளிக்கரணை MTK மகாலில் நடைபெற்றது.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த அனைத்து அடியார்களும் மிகுந்த ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சிக்கு தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி முதலில் அம்மையப்பர் வழிபாட்டுடன் துவங்கியது.

சிவதிரு கோதண்டராமன் ஐயா அவர்கள் விழாவிற்கு வருகை தந்திருந்த சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மற்றும், தேவர்கள், பூதகணங்கள் என்று அனைவரையும் வரவேற்றும், கோடை விடுமுறை வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பட்டம் பெறும் சாதனையாளர்கள் என்று அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்கள்.

பின்னர், கோடை விடுமுறை சிறப்பு தமிழ் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சண்டிகேசுவரர் நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வில்லுப்பாட்டும் நடைபெற்றது.

மேலே, சிவபிரான் சண்டிகேசுவரருக்கு கொன்றை மாலை அணிவித்து தொண்டர்களின் தலைவன் என்றும் சண்டிகேசுவர பட்டமும் அருளும் காட்சி.

பின்னர் சிறப்பு சொற்பொழிவாக, மயிலாடுதுறை சிவதிரு தீபன்ராஜ் அவர்கள் ஆளாவது எப்படியோ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சிவதிரு சரவணன் ஐயா, தொண்டை மண்டல அடியார்கள் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர், திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறினார் சிவதிரு மீனாகுமார் அவர்கள். பின்னர், தென் சென்னை பகுதியிலும் மற்ற பிற பகுதிகளிலும் தன்னலமற்ற சிறப்பாக சிவபணி செய்த பல ஆயிரக்கணக்கானவர்களில் 28 பேரை தேர்ந்தெடுத்து சிறப்பு பட்டமளிப்பு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. அவர்கள் மேன் மேலும் சிறந்த சிவப்பணியாற்ற பெருமான் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கப்பட்டது.

பின்னர் கோடை சிறப்பு தமிழ் வகுப்பில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பஞ்சபுராணம் மற்றும் வாழ்த்து பாடலோடு விழா இனிதே நிறைவுற்றது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு) சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை No ratings yet.

ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு)

சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை

எண் குணங்களை உடைய சிவபெருமானுக்கு உயிர்களாகிய நாம் எப்படி ஆளாவது ? அடிமையாவது ? அவனுக்கு என்ன பணி செய்வது ?

திருநீறு அணிந்தால் போதுமா ?

உருத்திராக்கம் அணிந்தால் போதுமா ?

பஞ்சாக்கர மந்திரம் சொன்னால் போதுமா ?

கோவில் சென்று வழிபட்டால் போதுமா ?

இவையெல்லாம் செய்து கொண்டு, பொய் பேசுதல், உயிர்க்கொலை செய்தல்,  ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாமா ?

என்ன செய்தால் சிவபிரான் திருவடிகளை நாம் அடைய முடியும் ?

ஆளாவது எப்படியோ ?

மயிலாடுதுறை சிவதீபன்ராஜ் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் கோடை சிறப்பு தமிழ் பயிற்சியின் நிறைவு விழா ஆகியவற்றின் போது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf 5/5 (4)

அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf

நம்முடைய குழந்தைப் பருவத்தில் நம் பெற்றோர்கள் நமக்கு எவ்வளவு தூரம் நம் சமயத்தை நமக்குக் காட்டுகின்றனரோ, அத்தனை தூரத்திலிருந்து நம் ஆன்மீக பயணமானது துவங்குகிறது. அவ்வகையிலே, நாம் நம் வாழ்வில் பயணித்த தூரத்தையும் அனுபவத்தையும் நம் குழந்தைகளுக்குக் காட்டி வளர்ப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.  அவ்வகையிலே, சைவ சமயம் பற்றிய அடிப்படை நுட்பம் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும் என்ற வகையிலே அந்த அடிப்படை நுட்பத்தை அனைவருக்கும் சென்றடையும் வண்ணம் சிறு சிறு துளிகளாக சேர்க்கும் முயற்சியில் இந்த அறிவோம் சைவ சமயம் என்ற புத்தகமும் ஒரு அங்கமாக சேர்த்துள்ளோம்.

நாம் யார், நம் இறைவன் யார், நம் கடமைகள் என்ன என்பதை அறியாமலேயே நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் கோவிலுக்கு சென்று தங்களுக்கு வேண்டியவற்றை இறைவனிடம் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சைவத்தின் ஞான ஒளி பெற்று நம் பிறப்பு இறப்பில்லாத சிவபிரானை என்னென்றும் ஏத்தும் வண்ணம் ஆகும் முயற்சியில் இந்த புத்தகமும் ஓர் அங்கமாகத் திகழ எண்ணம் கொண்டு இங்கு அதன் அச்சிடக்கூடிய PDF வடிவம் பகிரப்படுகிறது. இது அனைவருக்கும் பயன் பெறும் வகையில் அமையும் என்று நம்புகிறோம். இது நம் வலைதளத்தினஅ பதிவிறக்கம் பகுதியிலும் சுட்டப்பட்டுள்ளது.

அறிவோம் சைவ சமயம்  –  PDF

https://drive.google.com/open?id=1IRzrkHEyYMoXsOutU_MSoGLr82LmCw4g

குழந்தைகளுக்கான சிறுவர் நாடம் – சண்டிகேசுவரர் நாடகத்தின் வசனத்தினையும் இங்கே பதிவேற்றியுள்ளோம்.

சண்டிகேசுவரர் சிறுவர் நாடகம் – PDF

https://drive.google.com/open?id=10nddS3thvI81X7za-rUYBbyTDkq6i1fu

உலகின் வீதிகள் தோறும் சைவ பாட சாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கோடை விடுமுறைல தமிழ் திருமுறை சொல்லிக்கொடுங்க No ratings yet.

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு தமிழ் திருமுறை சொல்லிக் கொடுங்க

உலகின் ஆன்மீக ஒளியாக, பல்லாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது நம் பாரத பூமி. இந்த பூமியில் தடுக்கி விழுந்தால் ஞானப் புதையலைப் பெறலாம். ஒவ்வொரு கோவிலும் ஞானப்புதையல். ஒவ்வொரு இல்லமும் ஞானப் புதையல். ஒவ்வொரு மலையும், நதியும், காற்றும் ஆகாயமும் ஞானப் புதையலாக நமக்கு பாடம் சொல்லித் தரும் குருவாக அமைந்துள்ளது. அத்தகைய புண்ணிய பூமியில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்?

கடந்த பல நூற்றாண்டுகளால் நாம் இழக்கப் பெற்ற ஞானத்தையும், இறை உணர்வையும் தற்போது மீட்டு பேரின்பமாக இவ்வுலகில் வாழும் முறையை அறிந்து கொண்டு, நம் தலைவனாகிய ஈசனை உணர்ந்து தொழுது ஏத்தி வணங்கி வாழ வேண்டும். தனி மனித ஒழுக்கம், குடும்ப ஒழுக்கும், பொது ஒழுக்கம் என்று எங்கும் ஒழுக்கம் நிறைந்த பூமியை நாம்  மீண்டும் படைத்திட வேண்டும். ஒழுக்கம் இன்பமான வாழ்விற்கு மிகவும் உறுதுணையாக நிற்பது. ஒழுக்கம் இல்லாத வாழ்வும், ஒழுக்கமில்லாத எந்த அமைப்பும், வெளியிலிருந்து யாரும் கெடுக்காமலேயே கெட்டுப் போகும்.

தனிமனித சுதந்திரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. தனி மனித சுதந்திரம் முழுக்க முழுக்க இருக்கும் ஒருவனே, தான் இன்பமாக வாழும் பொருட்டும், தன் குடும்பம் இன்பமாக வாழும் பொருட்டும், தன் தெரு, ஊர், நாட்டு மக்களும் இன்பமாக வாழும் பொருட்டும் தனக்குத் தானே சில விதிகளை விரும்பி கடைப்பிடிப்பதே ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க சிறிது சிரமம் தேவைப்பட்டாலும், அதனால் வரக்கூடிய நன்மைகள் பலப்பல. அந்த ஒழுக்கம் இல்லாவிட்டால், தனி மனிதனின் வாழ்வும், ஊரும், நாடும் கெட்டுப்போகும் என்பது வரலாற்றில் பல்லாயிரம் முறை நாம் கண்ட உண்மையாகும்.  இதை வலியுறுத்தவே,  தெய்வப்புலவர் வள்ளுவர் பெருமானும்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்றார். அத்தகைய இன்றியமையாத வாழ்வின் இருதயமாக இருக்கக்கூடிய ஒழுக்கத்தையும், வாழ்வில் நன்றாக இன்பமாக வாழும் முறையையும் ஏனோ இன்றைய கல்வி முறை புறக்கணித்துவிட்டு விஞ்ஞானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. இந்த நிலையிலிருந்து விலகி, நம் கல்வி, இன்பமாக வாழவும், எத்தகைய சூழலை கையாளவும், புதிய புதிய கருவிகள் கண்டுபிடிப்பதையும், விஞ்ஞானத்தோடு சேர்த்து மெய்ஞானத்தையும் புகட்ட வேண்டும். அன்று தான் அதற்கு அடுத்த தலைமுறைகள் இன்பமாக இனிமையாக வாழ இயலும்.

அதுவரை, அந்த பொறுப்பு பெற்றோர்களின் கைகளில் தஞ்சம் புகுந்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும், தன் பிள்ளைக்கு இனிமையாக வாழும் வழிகளையும், நாம் யார், நம் மொழி என்ன, நம் சமயம் என்ன, நம் வரலாறு என்ன, நம் புராணங்கள் என்ன, நம் குருமார்களும் நமக்கு வழிகாட்டிகளும் யார் என்ற இன்றியமையாத செய்திகளையும் ஊட்டும் பொறுப்பு உடையவர்களாக இருக்கின்றனர்.

அவ்வகையிலே, கோடை விடுமுறையில், குழந்தைகளுக்கு இனிய விளையாட்டுகளோடு சேர்த்து, இந்த முக்கியமான கடமையை நிறைவேற்றுவது சிறப்பானதாகும். அதற்கு ஏற்றவாறு, அந்தந்த ஊரிலிருக்கும் சிறு அமைப்புகளும், சிவனடியார், முருகன் அடியார் திருக்கூட்டங்களும், அடுக்கக கூட்டமைப்புகளும் சேர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.

தமிழ் மொழியின் அடிப்படை, இலக்கணம், ஆத்திசூடி, திருக்குறள் போன்ற அற நூல்கள், பன்னிரு திருமுறை, பதினெட்டு புராணங்கள், நாயன்மார்கள் வரலாறு, பக்திப் பாடல்கள், விளையாட்டு, நம் பழங்கால இசைக்கருவிகளை இயக்குவது, விடுகதைகள் என்று பல்சுவையோடு சேர்த்து அவர்களுக்கு நம் சமயம் மற்றும் தமிழ் மொழியின் அடிப்படைகளை ஊட்டினால், அவை அவர்களிடம் ஆழமாக பதிந்துவிடும். நீங்களும் இத்தகைய வகுப்புகளை உங்கள் ஊரில் நடத்தலாமே ?

 

பள்ளிக்கரணையில் இத்தகைய வகுப்பு வரும் ஏப்ரல் 15 லிருந்து மே 25 வரை நடைபெறும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்,

பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

தமிழ் ஞானப்பரவல் – தமிழ் வேதம் திருமுறைகளை இல்லங்களுக்கு கொடுப்போம் No ratings yet.

தமிழ் ஞானப்பரவல் 

தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதுவதற்கு ஊக்குவிக்கும் வண்ணமும், சைவ நெறிமுறைகளை அழுந்தி கடைப்பிடிக்கவும், திருமுறை தொகுப்பு புத்தகங்கள், நாயன்மார்கள் வரலாறு போன்ற புத்தகங்களை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கும் ஒரு சிறு முயற்சி.

அவ்வகையிலே, விளம்பி ஆண்டு மாசி மாத முழுநிலவு நன்நாளிலே, சென்னையில் ஒரு கிரிவலம்  அரசன்கழனி அருள்மிகு பெரியநாயகி உடனுறை பசுபதீசுவரர் ஆலயத்தில் ஔடதசித்தர் மலையை மலைவலம் (கிரிவலம்) வந்த அன்பர்களுக்கு குலுக்கல் முறையில் கரு முதல் திரு வரை திருமுறை தொகுப்பு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

இந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்

 

Please rate this

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள் 4/5 (2)

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள்

கோவை சகோதரர்களாகிய சிவதிரு சுப்ரமணியம் ஓதுவார் மற்றும் சிவதிரு தண்டபாணி ஓதுவார் ஆகியோரது இனிமையான குரலில் கொங்கு நாட்டு திருத்தலங்களில் பாடப் பெற்ற திருமுறை மற்றும் திருப்புகழ் ஆகிய பதிகங்களுக்கு புதிய நிழல்அசைவு படத்தோடு கேட்டும், உணர்ந்தும் உருகி மகிழ இந்த காணொளி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டு கேட்டு உணர்ந்து உருகி மகிழுங்கள். திருச்சிற்றம்பலம்.

அனைத்து பாடல்களின் தொகுப்பு பட்டியல்

 

குறிப்பிட்ட சில பாடல்கள்

சுந்தரர் தேவாரம் மற்றுப் பற்றெனக்கின்றி

கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் சுந்தரர் தேவாரம்

திருநாவுக்கரசர் தேவாரம் சிட்டனை சிவனை செழுஞ் சோதியை

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும்  திருஞானசம்பந்தர் தேவாரம்

தொண்டெலாம் மலர் தூவி திருஞானசம்பந்தர் தேவாரம்

பெண்ணமர் மேனியானாரும் பிறைபுல்கு செஞ்சடையாரும் திருஞானசம்பந்தர் தேவாரம்

எரிக்குங் கதிர்வேய் சுந்தரமூர்த்தி தேவாரம்

எற்றான் மறக்கேன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்

பந்தார் விரன்மடவாள் திருஞானசம்பந்தர் தேவாரம்

அருணகிரிநாதர் திருப்புகழ்

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை

கொங்குநாடு திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம்

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

சைவ சமயமே சமயம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

பீடுடைய மார்கழி போற்றி – மாணவர்களுக்கான திருமுறை ஒப்புவித்தல் போட்டி 5/5 (1)

பீடுடைய மார்கழி போற்றி – மாணவர்களுக்கான திருமுறை ஒப்புவித்தல் போட்டி

திருச்சிற்றம்பலம்.

தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை நம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மார்கழி மாதத்தில் அனைவரும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிவபுராணம் ஆகிய பதிகங்களை முழுமையாக படித்து மனனமாக சொல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மாணவர்களுக்காக இந்த மூன்று பதிகங்களையும் படித்து ஒப்புவிக்கும் போட்டி கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

மிகவும் உன்னதமான மார்கழி மாதத்தை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து, இறைவனை அறியாமல் உலகியலில் உழன்று கொண்டிருக்கும் மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து எழுப்புவதே திருப்பள்ளியெழுச்சியாகும். அத்தகைய பெருமைமிகு மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடி சிவாலயங்களில் இறைவனை வழிபாடு செய்வது பல்லாயிரமாண்டு மரபு. அந்த திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியோடு சேர்த்து சிவபுராணமும் குழந்தைகள் இளவயதிலேயே கற்க வேண்டும் என்று நோக்கம் கொண்டு, *பீடுடைய மார்கழி போற்றி* என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பதிகம் ஒப்புவித்தல் போட்டி, பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் திருக்கோவிலில் 26-01-2019 அன்று மாலை 5 மணிக்கு திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. இதில் 5 வயது குழந்தைகள் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் வரை பலர் பங்கு பெற்று பரிசு பெற்றனர். இந்த போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிக்கரணை மாணவர்களும் பங்கு கொண்டு, கலைநிகழ்ச்சிகளும் நடத்தி சிறப்பித்தனர். நம் இயற்கையோடு இயைந்த பண்டைய கால சிறப்பான வாழ்க்கை முறையை நாமும் கடைப்பிடித்தால் நோயின்றி நலமாக நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது திண்ணம்.

இது போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து சிவனடியார்களும் தங்களது சிவாலயங்களிலும் மடங்களிலும் நடத்தி நம் குழந்தைகளுக்கு பன்னிரு திருமுறையையும் அதன் பெருமைகளையும் நிலைநிறுத்துவது மிக மிக அவசரமான அவசியமானதாகும். ஆகவே, இது போன்ற போட்டிகளும், நிகழ்ச்சிகளும் தொடர்ந்து இடைவிடாது அடிக்கடி நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் சென்னை பள்ளிக்கரணையில் 4/5 (2)

திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் சென்னை பள்ளிக்கரணையில் ஆரம்பம்.

சிவமயம்

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் போற்றி!

நம் பள்ளிக்கரணையில் திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் ஆரம்பம் 2019-2020

நமது நீண்ட கால விண்ணப்பத்திற்கு அருள் கொடுக்கும் வண்ணம் அருள்மிகு ஆதிபுரீசுவரர் நமக்கெல்லாம் அருள் செய்து கரும்பினும் இனிய தித்திப்பான செய்தியை வழங்குகிறார். நம் பள்ளிக்கரணையில் 2019-2020 தொகுப்பிற்கான திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் துவங்க திருவருள் கூட்டியுள்ளது.

திருக்கயிலாய பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற இவ்வாதீனம் சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் கிபி பதினான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது. சித்தர் சிவப்பிரகாசர் அருள் நமச்சிவாயரிடம் தீட்சை பெற்றவர். அருள் நமச்சிவாயர், சந்தான குரவராகிய உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர்.

பிறப்பு இறப்பில்லாத சிவபெருமானார் நம் முன்னோர்கள் அருளாளர்கள் வழியாக, நமக்கெல்லாம் தானே வந்து அருள் செய்த தமிழ் வேதமாம் சைவ பன்னிரு திருமுறைகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் திருவாவடுதுறை ஆதீனம் உலகமெங்கும் நூற்றுக்கணக்கான சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அதிலொரு புதிய மையமாக நம் பள்ளிக்கரணையில் நம் ஆதிபுரீசுவரர் திருவருளோடு, நம் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்ட அடியார்களால் அமைக்கப்பெற்று நடத்தப்படும்.

ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் (முதல் ஞாயிறு காலை 9:30 முதல் 1 மணி வரை, மதிய உணவுடன்) இந்த வகுப்பு நம் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில் நடைபெறும். திருமுறை பற்றிய வரலாறு, பதிகங்களை எப்படி பண்ணோடு பாட வேண்டும், பதிகங்களின் வரலாறு என்று இசை ஆசிரியர் ஒருவராலும், விளக்கவுரை ஆசிரியர் ஒருவராலும் விளக்கப்பெறும். 2019-2020 வகுப்புக்கான பாடத்திட்டம் (syllabus) வகுக்கப்பட்டு, அதற்குரிய பதிகங்களும், விளக்கவுரையும் புத்தகங்களாக இதில் இணையும் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இசை ஆசிரியரும், விளக்கவுரை ஆசிரியர் அவர்களும், சைவ இசை மற்றும் சாத்திர தோத்திரங்களில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பமாகவும் இவ்வகுப்பில் சேரலாம்.

நம் சமயங்களின் அடிப்படை செய்திகளை அறிய, ஆழ்ந்த சமய நுட்பங்களை உணர, ஆராய்ச்சிகள் செய்ய, இறைவனை அறிந்து உணர்ந்து போற்றியும் ஏத்தியும், சிவ புண்ணிய செயல்களிலும் ஈடுபடுவதை விட நமக்கு வேறு என்ன இறைவனால் அருளப்பெற முடியும் ? ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி இந்த வகுப்பில் இணையுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வகுப்பிற்கு அமைப்பாளராக, நம் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் சிவதிரு கோதண்டராமன் ஐயா அவர்கள் இருந்து நடத்தி கொடுக்க இசைந்துள்ளார்கள். இந்த வகுப்பில் இணையவும், இந்த வகுப்பு பற்றிய மேலும் விபரங்களுக்கு அவரை அணுக 9840194190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இனிய செய்தியை குடும்பத்தார் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரோடு உடனே பகிர்ந்து கொண்டு நீங்கள் குடும்பமாக இந்த வகுப்பில் இணையுங்கள்.

சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலபாக்கம், சந்தோசபுரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், அரசன்கழனி, சோழிங்கநல்லூர், சு.குளத்தூர் இவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அன்பர்கள் இணையுங்கள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.
பள்ளிக்கரணை, சென்னை.

 

Please rate this

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம் No ratings yet.

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம்

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் என்பது என் வாழ்விலேயே அடியேன் சிந்தித்துக் கூட பார்த்திராத ஒரு மாபெரும் நிகழ்வாகும். தன்னிறைவற்ற விஞ்ஞான அறிவும், மேற்கத்திய மோகமும் நம் தேசத்தை மெல்ல மெல்ல கடந்த அறுபது எழுபது ஆண்டுகளில்பற்றிக் கொள்ள, நம் பல்லாயிரம் ஆண்டுகளின் திரட்சியான மெய்ஞானமும், அந்த ஞானம் வழிகாட்டிய நம் வாழ்வு முறையும், சமயமும், சாத்திரங்களும், மாபெரும் ஒளி பொருந்திய சூரியனை மேகங்கள் சற்றே மறைப்பது போல மறைத்துவிட்டன. அந்த நிழலை சாதகமாக பயன்படுத்தியும், நம் பாரத தேச மக்களின் அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டும், அந்நிய பரசமயங்கள் தங்களின் சிறகுகளை வேகமாக பரப்பி வருகின்றன. இறைவன் திருவருளால், நம் குருமார்கள் நமக்கு அருளிச் சென்ற நம் சமய ஞானத்தையும், இறைவனை அடையும் வழிகளையும் நாம் வேகமாக நம் மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பணியாற்றி பரவும் சூழலில் இருக்கின்றோம்.

இத்தகு சூழலில், நம் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவாசகம் திருமுறைகளுக்கே உரிய ஆழ்ந்த ஞானம், மெய்யுணர்வு, எளிமையாக பாடும் தன்மை என்று பல சிறப்புகளுடன் கூடியதை, நம் மக்களுக்கு பரவச் செய்வது என்பது மிகப்பெரிய திருவருள் கூடிய செயலாகும்.  அதுவும் எளிய தொடர்பு வசதியில்லாத நம் கிராமங்கள் அத்தனையும் சிந்தித்து பாருங்கள். அத்தகு மேம்பட்ட திருப்பணியில் முக்கிய பெரும் பங்களிப்பு செய்தவர் நம் திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் ஐயா என்றால், அது மிகையாகாது. அவர்கள் முற்றோதல் செய்தலைத் தொடர்ந்து, அவர்களது திருக்கழுக்குன்ற இல்லத்தில் தொடர்ந்து 108 நாட்கள் திருவாசகம் முற்றோதல் நிகழச் செய்யும் நிகழ்வு தற்போது நிறைவு பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரும் சைவ மடம், மடாதிபதிகள் பல்வேறு துணையோடு செய்யும் செயற்கரிய செயலை ஐயா நம் சமய மேம்பாட்டிற்காக செய்கிறார்கள் என்றால், அது சிவபிரானின் சித்தமே ஆகும்.

அந்த 108 நாட்கள் திருவாசகம் முற்றோதலில் ஒரு நாளாக, சென்னை பள்ளிக்கரணை அடியார்கள் இணைந்து 97 ஆவது நாளில் ஐயாவின் திருக்கழுக்குன்றம் சிவசிவ இல்லத்தில் ஓதினர். திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் கைலாய வாத்திய இசையோடு மிகவும் சிறப்பாக முற்றோதல் இறைவன் திருவருளால் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கோமல் கா. சேகர் ஐயாவும் இணைந்தது மிகவும் சிறப்பானது.

இந்த முற்றோதல் நிகழ்வு முழுமையடைந்து அதன் குறிக்கோளை அடையும் என்பது பிறப்பு இறப்பற்ற பெருங்கருணையாளின் திருவருள்.

திருச்சிற்றம்பலம்.

இந்த நிகழ்வு பற்றி கோமல் கா சேகர் ஐயாவின் பதிவு:

ஓம்
சிவ சிவ:
=====
மீண்டும் திருவாசக உலா !
=====. =====
19-12-18 திருக் கழுக் குன்றம் ஐயா இல்லத்தில் பள்ளிக் கரணை முற்றோதல் குழுவினரால் திரு வாசகம் ஓதப்பட்டது !
ஐயா அவர்கள் சுமார் 15- திருப் பதிகங்களை இறையாற்றல் வெளிப்படும் வண்ணம் உணர்ச்சி பொங்கப் பாடி , எல்லோரையும் மறந்தும் அயல் நினைவிற்கு இடமின்றி ஈர்த்து மகிழ்வித்தார் !
குழு அன்பர்கள் கிட்டத்தட்ட திருவாசகத்தையே மனப் பாடம் செய்திருந்தது அவர்கள் இசைத்து ஓதும் முறையில் உணர முடிந்தது!
குழுவில் உள்ள மகளிர்கள் சிற்ப்பாக ஆடிப் பாடியும் மகிழ்வித்தனர்.
108- நாள் முற்றோதல் 01-01-19 அன்று நிறைவெய்துகிறது !
திருவாசகத்தை மேலும் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துச் சென்று அனைத்து இன் மக்களையெல்லாம்
சிவத்துக்கே ஆட்படுத்திட சிவ. தாமோதரன் ஐயா அவர்கள் ,எதிர் நிற்கும் தொடர் 10-ஆண்டுகளுக்குச் ஆற்ற வேண்டியப் பணிகள் குறித்து விவாதித்தோம்.
இனி ஆங்காங்கே முற்றோதல் செய்ய விழைவோர் ஐயா அவர்களைத் தொடர்பு கொள்க !
படங்கள் :~~ 19-12-18 முற்றோதல் நிகழ்வின் போது சிவ தாமோதரன் ஐயா அவர்களுடன் ,சிவ பழனி இராஜம்மாள் அம்மா மற்றும் கோமல் கா சேகர்.
திருச்சிற்றம்பலம்.

அந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

Please rate this

திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு No ratings yet.

திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு

சென்னை, மேடவாக்கம் அருகில் உள்ள ஊர் பெரும்பாக்கம். அங்கே, சைவத்தின் மேன்மைகளை எடுத்து இயம்பும் பொருட்டும், ஆதியும் அந்தமும் இல்லாத சைவ சமயத்தினை அனைவரும் தெரிந்து, வாழ்வில் கடைப்பிடித்து போற்றி உய்வடையும் பொருட்டும் பெரும்பாக்கம் இந்திரா நகரில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் அவர்களின் திருவடிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. இது கார்த்திகை மாதம் 9 ஆம் நாள், நவம்பர் 25 ஞாயிறன்று நடைபெற்றது.

கயிலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமிக்கு அபிடேகம் செய்யப்பட்டது. பின்னர் பன்னிரு திருமுறை ஓதப்பட்டது. பன்னிரு திருமுறை நூல்களை சென்னியில் வைத்து வீதிஉலாவாக அடியார்கள் புடை சூழ, வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது.  அடியார்களுக்கு காலை அன்னம்பாலிப்பு செய்யப்பட்டது. அதிலிருந்து சில காட்சிகள் கீழே.