நாயன்மார்களின் நட்சத்திரமும் குருபூசையும் 4.7/5 (10)

நாயன்மார்களின் குருபூசை நட்சத்திரம்

திருச்சிற்றம்பலம்.

தாமாக அறியும் திறன் இன்றி, அறிவிக்க அறியும் திறனை உடைய நமக்கு, ஒவ்வொன்றையும் குருவாக ஒருவர் அறிவிக்க, அதைக் கற்று அறிகிறோம். அவ்வகையிலே, இறைவனை அறியவும் அவனின் திருவருளைப் பெறவும் நமக்கு வழி காட்டுபவர்களாய் இருப்பவர்கள் நம் குருமார்கள். சீடனுடைய அறியாமையை நீக்கி, இறைவனிடம் இட்டுச் செல்ல வல்லவரே குருவாவர். துன்பமின்றி வாழவும் இறைவன் திருவருள் பெற்று பேரின்பவீடு பெறவும் நமக்கு வழிகாட்டியார் இருப்போர் 63 நாயன்மார்கள். அத்தகையோரை நாம் கொண்டாட வேண்டாமா ? பூசை செய்ய வேண்டாமா ?
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
 
என்பது தெய்வப் புலவர் வாக்கு. நமக்கு இறைவனையும் அவனை அடையும் வழியையும் காட்டும் குருவிற்கு நாம் நன்றி சொல்ல மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  இறைவன் திருக்காட்சி கொடுத்து நாயன்மார்கள் முக்தி அடைந்த தினத்தை நாம் நாயன்மார் குருபூசையாக வணங்குகிறோம். நாயன்மார்களின் குருபூசை செய்வது நம் தொன்று தொட்டு செய்து வரும் மரபாகும். இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் நாயன்மார்களின் குருபூசை நிகழ்ந்து வருகிறது. குருவருளைப் பெற்றால், திருவருளை எளிதில் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு.

63 நாயன்மார்கள் முக்தியடைந்த நட்சத்திர நாளை நாம் அவர்களது குருபூசையாக வணங்கி வருகிறோம். எத்தனையோ உலகங்கள் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாமல் தவித்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்தையும் இடத்தையும் மிக மிகத் துல்லியமாக அளக்கும் அளவைகளையும் வைத்து மிகவும் முன்னோடியான நாகரீகமாகத் திகழ்ந்தார்கள். ஆகையாலேயே, நாம் இன்றும் நம் நாயன்மார்களின் துல்லியமான முக்திநாளை கொண்டாடி குருபூசை செய்ய வேண்டும்.

சிவாயநம.

Please rate this