கம்போடியாவில் இராசேந்திர சோழருக்கு திருவுருவச்சிலை அமைத்து, திருக்குறளைப் பள்ளிப்பாடத்தில் இணைக்கவும் திட்டம்
அங்கோர் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம் ஆகிய இரண்டும் கம்போடிய நாட்டின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகம் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் ஆகியவை இணைந்து கம்போடியா நாட்டில் சியம் ரியாப் நகரில், இராசேந்திர சோழர் மற்றும் கமேர் மன்னன் முதலாம் சூரியவர்மன் திருவுருவச் சிலை அமைக்கவும், திருக்குறளை கமேர் மொழியில் மொழி பெயர்த்து பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. வரும் மே மாதம் 2022 இல் இந்த இரண்டு மன்னர்களின் நட்புறவைக் கொண்டாடி மகிழும் வண்ணம் இது திருக்குறள் மாநாடாகவும் நிகழவிருக்கிறது.
முதல் முறையாக, தமிழ் மொழியின் சங்க இலக்கியத்தின் முக்கிய நூலான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை கமேர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யவும் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உலகம் எங்கிலும் இருந்து 25,000 தமிழர்கள் கம்போடியா வர உள்ளனர். இந்த நிகழ்வு இந்தியா மற்றும் கம்போடிய நாட்டின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவி செய்யும்.
கம்போடிய நாட்டின் கலை மற்றும் பண்பாடு அமைச்சகத்தில் பணிபுரியும் மோன் சாப்கீப் மற்றும் ப்ரோம் கமேரா ஆகியோர் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்க்கு வருகை புரிந்து, காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் வைகுண்டநாதர் கோவில், தஞ்சைப் பெரியகோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் மாமல்லபுரம் குகைக்கோவில் ஆகிய கோவில்களுக்குச் சென்று பார்வையிட்டனர். இந்தியாவில் நடைபெற்ற பல்லவர் ஆட்சிக்கும், கம்போடியாவில் நடைபெற்ற கமேர் ஆட்சிக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்புகளுக்கான பல ஆதாரங்களை நேரடியாகக் கண்டனர். இந்த வரலாற்றுச் சின்னங்களைக் கண்ட இவர்கள், ஆறாம் நூற்றாண்டில் கம்போடியாவை ஆண்ட கமேர் அரசன் மகேந்திரவர்மன் இந்தியாவில் உள்ள பல்லவ பேரரசைச் சேர்ந்தவர் என்பதில் உறுதி மேற்கொண்டனர்.