சம்பந்தர் தேவாரம்
இலம்பையங்கோட்டூர் திருப்பதிகம்
[1/76/1,11 – 29/06/18]
சிவதீபன் -📱9585756797
குறிப்பு: தேவலோக மங்கையாம் “அரம்பை வழிபட்டதால் அரம்பையங் கோட்டூர் எனப்பட்டு பின்னாளில் இலம்பைய்கோட்டூர் என்றழைக்கப் பெற்றது”
இது ஒரு தொண்டைநாட்டு தலம், திருவள்ளூர் மாவட்டம் கூவம் என்னும் திருவிற்கோலத்தில் இருந்து தென்மேற்கே 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது, திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம், அல்லது சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் இருப்பு பாதையில் கடம்பத்தூரில் இறங்கி பேரம்பாக்கம் சென்றும் செல்லலாம்
முப்புர சம்ஹாரத்தின் பொருட்டு சுவாமி தேரில் ஆரோஹணித்து செல்கையில் அவரது கொன்றைமாலை விழுந்த இடத்தில் உண்டான சுயம்பு லிங்கமே இத்தலத்து மூலமூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தேவர்களுக்கு உதவ சென்றமையால் இவருக்கு தெய்வநாதீஸ்வரர் என்றும் அரம்பை வழிபட்டதால் அரம்பேஸ்வரர் என்றும் பெயர்களாம், இத்தல அம்பிகை கோடேந்து முலையம்மை என்ற திருநாமத்துடன் விளங்குகிறார்
பிள்ளைப் பெருமானார் இத்திலத்திற்கு எழுந்தருளியது பற்றி ஒரு செவிவழிச் செய்தியும் இங்கு நிலவுகிறது, “எனதுரை தனதுரையாக” என்ற பெருமானது புகழ்பெற்ற வாக்கியம் இத்தலப் பதிகத்தில்தான் பாடல்தோறும் இடம்பெற்றுள்ளது
பெருமானார் பாடல்களில் வைப்பு தலங்களை குறிப்பது அரிது என்றாலும் இப்பதிகத்தில் முதல் பாடலிலேயே பருப்பதம் கயிலாயம் நெய்த்தானம் துருத்தி உள்ளிட்ட தலங்களை குறிப்பது எண்ணி மகிழத்தக்க ஒன்றாம்
பண்: குறிஞ்சி
பாடல்
மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.
கந்தனைமலிகனை கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ ரிசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.
பொருள்
கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந் தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?
மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.
தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂