சிலந்தி அரசனான வரலாறு
திருச்சியில் உள்ள தலம் திருவானைக்கா. இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரஞ் செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம். இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கனாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம்தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.
இங்கு முன்னர் ஜம்பு முனிவர் பூசை செய்த லிங்கத்துக்கு மேலே அங்கிருந்த சிலந்தி தினமும் விதானம் போல வலை பின்னி அதையே தன் வழிபாடாகச் செய்து வந்தது. அங்கு ஓர் யானையும் தினமும் நீரினால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. யானையின் நித்திய வழிபாடு சிலந்தி பின்னிய வலையைத் தினமும் சிதைத்தது. இதனால் ஆற்றாது கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையில் துதிக்கையினுள் புகுந்து கடிந்துவிட்டது. வலி தாங்காத யானையும் துதிக்கையை அடித்து மோதி இறந்தது. அதனுள் இருந்த சிலந்தியும் மாண்டது. இச் சிலந்தியே அடுத்த பிறப்பில் சோழ இராஜ குடும்பத்தில் பிறந்தது.
இவன் தாய் இவனைப் பிரசவிக்கும்போது சோதிடர்கள் காலம் கணித்து இன்னும் சில நாழிகை காலம் தாழ்த்திப் பிறந்தால் இவன் சக்கரவர்த்தியாக உலகாள்வான் என்று கூறினர். இதனால் பிரசவத்தை இயற்கைக்கு மாறாக தள்ளிப்போடுவதற்கு தாய் சம்மதித்தாள். அவளை தலைகீழாக்க் கட்டித் தூக்குமாறு பணித்தாள். இதனால் பிரசவமும் தாமதமாகி ஆண் குழ்ந்தை பிறந்தது. காலந் தாழ்த்திப் பிறந்ததனால் அவன் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன. இன்றைய மருத்துவத்தில் காலந்தாழ்த்திப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் இச் செங்கண்ணை Sub-conjunctival haemorrhage என்று கூறுகின்றனர். இவ்வாறு சிவந்த கண்ணுடன் பிறந்த காரணத்தால் இக் குழந்தைக்கு கோச் செங்கணான் என்று பெயரிட்டனர். சமஸ்கிருதத்தில் இவனை ‘ரெக்தாக்ஷ சோல‘ என்று அழைப்பர். தாயும் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு இறந்துவிட்டாள். இவனே பின்னால் கோச்செங்கட் சோழன் என்ற பெயருடன் அரசாட்சியேறி சோழ நாட்டை ஆண்ட மன்னன். இவன் எழுபது கோவில்களைக் கட்டியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அத்தனை கோவில்களும் யானை ஏற முடியாத கட்டட அமைப்புடன் கட்டப்பட்டவை. இந்த கட்டட அமைப்புக் கோவில்களை மாடக்கோவில்கள் என்று அழைப்பர். இவன் விஷ்ணு ஆலயங்களும் கூட அமைத்துள்ளான். வைணவ ஆழ்வார்களினால் பாடப்பட்ட ஒரேயொரு சைவ நாயன்மார் இந்த கோச்செங்கட் சோழனே.
பெரியாழ்வார், நாச்சியார் கோயில் (திரு நறையூர்) பெருமாளைப் பாடும்போது எழுபது சிவாலயங்கள் எழுப்பிய சோழனால் கட்டப்பட்ட ஆலயம் என்று சிறப்பித்துப் பாடுகின்றார். இவ்வாறு பல வேறு வகையான கோவில் கட்டட அமைப்புகளைப் பற்றி பின்வரும் அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலும் கூறுகின்றது.
பெருங் கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்(டு) ஏத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே
அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.