திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் சென்னை பள்ளிக்கரணையில் ஆரம்பம்.
சிவமயம்
அருள்மிகு சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் போற்றி!
நம் பள்ளிக்கரணையில் திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் ஆரம்பம் 2019-2020
நமது நீண்ட கால விண்ணப்பத்திற்கு அருள் கொடுக்கும் வண்ணம் அருள்மிகு ஆதிபுரீசுவரர் நமக்கெல்லாம் அருள் செய்து கரும்பினும் இனிய தித்திப்பான செய்தியை வழங்குகிறார். நம் பள்ளிக்கரணையில் 2019-2020 தொகுப்பிற்கான திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் துவங்க திருவருள் கூட்டியுள்ளது.
திருக்கயிலாய பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற இவ்வாதீனம் சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் கிபி பதினான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது. சித்தர் சிவப்பிரகாசர் அருள் நமச்சிவாயரிடம் தீட்சை பெற்றவர். அருள் நமச்சிவாயர், சந்தான குரவராகிய உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர்.
பிறப்பு இறப்பில்லாத சிவபெருமானார் நம் முன்னோர்கள் அருளாளர்கள் வழியாக, நமக்கெல்லாம் தானே வந்து அருள் செய்த தமிழ் வேதமாம் சைவ பன்னிரு திருமுறைகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் திருவாவடுதுறை ஆதீனம் உலகமெங்கும் நூற்றுக்கணக்கான சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அதிலொரு புதிய மையமாக நம் பள்ளிக்கரணையில் நம் ஆதிபுரீசுவரர் திருவருளோடு, நம் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்ட அடியார்களால் அமைக்கப்பெற்று நடத்தப்படும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் (முதல் ஞாயிறு காலை 9:30 முதல் 1 மணி வரை, மதிய உணவுடன்) இந்த வகுப்பு நம் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில் நடைபெறும். திருமுறை பற்றிய வரலாறு, பதிகங்களை எப்படி பண்ணோடு பாட வேண்டும், பதிகங்களின் வரலாறு என்று இசை ஆசிரியர் ஒருவராலும், விளக்கவுரை ஆசிரியர் ஒருவராலும் விளக்கப்பெறும். 2019-2020 வகுப்புக்கான பாடத்திட்டம் (syllabus) வகுக்கப்பட்டு, அதற்குரிய பதிகங்களும், விளக்கவுரையும் புத்தகங்களாக இதில் இணையும் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இசை ஆசிரியரும், விளக்கவுரை ஆசிரியர் அவர்களும், சைவ இசை மற்றும் சாத்திர தோத்திரங்களில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பமாகவும் இவ்வகுப்பில் சேரலாம்.
நம் சமயங்களின் அடிப்படை செய்திகளை அறிய, ஆழ்ந்த சமய நுட்பங்களை உணர, ஆராய்ச்சிகள் செய்ய, இறைவனை அறிந்து உணர்ந்து போற்றியும் ஏத்தியும், சிவ புண்ணிய செயல்களிலும் ஈடுபடுவதை விட நமக்கு வேறு என்ன இறைவனால் அருளப்பெற முடியும் ? ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி இந்த வகுப்பில் இணையுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த வகுப்பிற்கு அமைப்பாளராக, நம் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் சிவதிரு கோதண்டராமன் ஐயா அவர்கள் இருந்து நடத்தி கொடுக்க இசைந்துள்ளார்கள். இந்த வகுப்பில் இணையவும், இந்த வகுப்பு பற்றிய மேலும் விபரங்களுக்கு அவரை அணுக 9840194190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இந்த இனிய செய்தியை குடும்பத்தார் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரோடு உடனே பகிர்ந்து கொண்டு நீங்கள் குடும்பமாக இந்த வகுப்பில் இணையுங்கள்.
சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலபாக்கம், சந்தோசபுரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், அரசன்கழனி, சோழிங்கநல்லூர், சு.குளத்தூர் இவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அன்பர்கள் இணையுங்கள்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.
பள்ளிக்கரணை, சென்னை.