மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்படி ? விரதம் எப்படி இருப்பது ? No ratings yet.

மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்படி ? விரதம் எப்படி இருப்பது ?

மகா சிவராத்திரி அன்று கோவில்களில் எவ்வாறு வழிபாடு நடக்கிறது ?

மகா சிவராத்திரி இரவை நான்கு காலமாக பிரித்து ஒவ்வொரு காலமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஒவ்வொரு காலமும் எந்த திருவுருவத்திற்க்கு எந்த அபிஷேக அலங்காரப் பொருட்கள் வைத்து வழிபட வேண்டும் என்ற தகவல்கள் இங்கே பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?

சிவராத்திரி முதல் நாளன்று விரதத்தைத் துவக்க வேண்டும். அன்று முழுவதும் ஒரு வேளை உணவு உண்ணலாம். அன்று முழுவதும் சுகபோகங்களைத் தவிர்த்தும், சினிமா/டிவி பார்ப்ப்தைத் தவிர்த்தும் நம் சிந்தனையில் சிவத்தை நிறுத்தி சிவனோடு ஒன்றியும் சிவ மந்திரங்கள், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறைகளை ஓதியும் வழிபாடு செய்ய வேண்டும். விரதம் மேற்கொள்ளும் போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சில கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும் போது தான் எளிதாக வசப்படும். நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காகத் தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனத்தை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூசைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மகா சிவராத்திரி அன்று நாம் எவ்வாறு வழிபடலாம் ?

சில காலம் முன்பு, சிவராத்திரி அன்று, இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும் என்பதற்க்காக வீடுகளிலும் பொது இடங்களிலும் டிவிக்களில் சினிமா பார்ப்பதும், தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளும் அரங்கேறின. இறைவனை சிந்தையில் நினையாது செய்யும் எந்த ஒரு காரியத்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. விரதம் இருப்பதே, நாம் தினமும் வழக்கமாக செய்யும் செயல்களைத் தவிர்த்து, உணவின்மையால் உடல் சிறிது தளர்ந்து, அந்தத் தளர்வின் காரணமாக, மனது அங்கும் இங்கும் எங்கும் அலையாமல், ஓரிடத்தே நிலை நிறுத்தப்பெறும் நிலையை எய்துவதால், அம் மனத்தை சிவபெருமானிடத்து சமர்ப்பித்து, அவனோடு இரண்டரக் கலந்து நிற்பதேயாகும்.

ஆகவே, மகா சிவராத்திரி அன்று காலை தொடங்கி, மறுநாள் காலை வரை விரதம் இருந்தும், திருக்கோவில்களிலும், இல்லங்களிலும் வழிபாடு செய்தும், திருமுறைகள் மற்றும் குறிப்பாக திருக்கேதீச்சரப் பதிகங்கள், திருவண்ணாமலைப் பதிகங்கள் ஆகியவற்றைக் கோவில்களிலும் இல்லங்களிலும் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். இயன்ற வரை, உங்களுக்கு அருகில் உள்ள கோவில்களிலோ, சிவாலயங்களிலோ சென்று அங்கே சிந்தையை இறைவனிடத்தில் செலுத்தி வழிபாடு செய்யுங்கள். சிவராத்திரி அன்று சிவாலய தரிசனம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

சிவராத்திரி வழிபாட்டின் பலன்கள் யாது ?

சிவராத்திரி வழிபாட்டின் காரணமாக, உங்களுக்குத் தற்போது இருக்கும் கவலைகளும், வர இருக்கும் கவலைகளும் வலுவிழந்து நீங்கும். நீங்கள் முன்னெடுத்த காரியங்கள் வெற்றி பெறும். சிவாயநம என்று நம் சிந்தனையில் நிலைத்திருந்தால், வேறு அபாயம் நம்மை ஒரு போதும் நெருங்காது. எண்ணும் இடங்கள் எல்லாம் செல்லத்துடிக்கும் மனமானது மிகவும் இலகுவாக நம் கட்டுக்குள் வரும். இதனால், துன்பம் தரும் செயல்களில் வீழ்ந்திடாது, நன்மை தரும் செயல்களில் மட்டுமே நிலைத்திருந்து நமக்கு நன்மையே வந்து சேரும். இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களை வலுவிழக்கச் செய்து, நமக்கு நன்மையே அருளி, நம் தீவினைகளையும் சுட்டெரித்து, நமக்கு முக்தியும் தந்தருள்வார் சிவபெருமான்.

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *