மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார் 5/5 (1)

யானை ஏறா மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார்

யானை ஏறா மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார்

கோச்செங்கட்சோழ நாயனார் குருபூசை: மாசி சதயம்

கோவில்களின் அமைப்புகள் ஏழு வகைப்படும். அதில் ஒன்று தான் மாடக்கோவில். பெருங்கோவில் என்றும் அழைக்கப்படும். இது யானைகள் ஏற இயலாத வண்ணம் குறுகிய படிக்கட்டுகளுடன் பூமி மட்டத்திற்க்கு மேலே அமைக்கப்படுவதே மாடக் கோவிலாகும்.

திருஆனைக்கா கோவில் தல வரலாறு அனைவரும் அறிந்திருந்தாலும், அறியாவதவர்களுக்காக ஒரு சிறிய முன்னுரை. சிவபூத கணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபத்தினாலே ஒருவர் சிலந்தியாகவும் மற்றொருவர் யானையாகவும் பிறந்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர். திருச்சி அருகே திருஆனைக்கா ஊரில், வெண்நாவல் மரத்தின் அடியிலே மறைவிலிருந்து வெளிப்பட்ட சிவலிங்கத்தை இருவரும் பூசை செய்து வந்தனர். யானையானது தினமும் சிவலிங்கத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தது. சிலந்தியோ, மரத்தின் சருகுகள் இறைவன் திருமேனி மீது விழாத வண்ணம் இறைவருக்கு மேலே வலை பின்னியது. இதையும் தூசி என்று எண்ணி யானையானது தினமும் அந்த வலையை அகற்றி வழிபட்டது. சிலந்தியும் தளராமல் தினமும் வலை பின்னியது.

பொறுமை இழந்த சிலந்தி ஒரு நாள் யானையின் துதிக்கையின் உள்ளே நுழைந்து தன்னால் இயன்ற அளவு கடித்து வைக்க, இதை எதிர்பாராத யானை, தன் துதிக்கையைக் கீழே அடித்து அடித்து திணறியது. இதன் முடிவில் இரண்டும் உயிரிழந்தன. கயிலாயத்தை அடைந்த இரண்டும் சிவபெருமானை தியானித்து வந்தன.

சுபதேவன் என்ற ஒரு சோழ மன்னன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாமையால், தனது மனைவி கமலவதியுடன் சிதம்பரம் சென்று ஆடல்வல்லானை வழிபாடு செய்து வந்தார். இறைவரின் திருவருளால் புத்திர பாக்கியம் பெற, இந்தப் பிள்ளை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் மூன்று உலகையும் அரசாள்வான் என்று சொல்ல, கமலவதியோ, தன்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள் என்று உத்தரவிட ஒரு நாழிகை கழித்துப் பிறந்தார் சிலந்தியாக இருந்த சிவகணம். இதனால், இவருடைய கண்கள் சிவந்து இருக்க, என் கோச்செங்கண்ணானோ என்று சொல்லிக்கொண்டே கமலவதி இறந்துவிட்டாள். சுபதேவன் தன் புதல்வனை வளர்த்து முடிசூட்டிப் பின்னர் சிவபதமும் அடைந்தார்.

கோச்செங்கட்சோழனோ, இறைவனாருடைய திருவருளினாலும், பூர்வ பிறப்பின் வாசனையாலும், சைவ நெறி தழைத்தோங்க பல சிவாலயங்களைக் கட்டுவிக்கத் துவங்கினான். அவை யானை ஏறாத வண்ணம் குறுகிய படிக்கட்டுகளை உடையதான மாடக்கோவில்களாகக் கட்டுவித்தான்.

ஒன்றல்ல இரண்டல்ல, 70க்கும் மேற்பட்ட மாடக்கோவில்களைக் கட்டுவித்தார் கோச்செங்கட்சோழனார். இன்றைய காலகட்டத்தில் நம்மால் கற்பனையிலும் காண இயலாத இத்தகைய உயர்ந்த சிறப்பு மிக்க மாடக்கோவில்கள் சிவபெருமானின் கருணையினாலே கட்டப்பட்டு இன்றும் நம் கைகளில் தொட்டு வணங்கக் கூடிய விலைமதிப்பற்ற புதையலாக நம்மிடையே உள்ளது. சிவபெருமானின் கருணையையும், கோட்செங்கட்சோழ நாயனாரின் கருணையையும் என்னவென்று சொல்வது ? எத்தனை பெரிய பேறு பெற்றோம் நாம் ? விலைமதிப்பற்ற திருவருளால் நமக்குக் கிட்டிய இந்தக் கோவில்களைக் கட்டிக் காப்பதே நமது தலையாய கடமையன்றோ ?

பின்னர் தில்லையை அடைந்து ஆடல்நாயகனைத் தரிசித்து, அங்கு தில்லைவாழ் அந்தணர்களுக்கு மாளிகைகள் கட்டுவித்துக் கொடுத்தும், பல்வேறு சிவதொண்டுகள் செய்தும், சிவபெருமான் திருவடியை அடைந்தார்.

மாடக் கோவில்கள் இரண்டு, மூன்று, ஐந்து அல்லது ஒன்பது நிலைகளாக கட்டப்படுகின்றன. இரண்டு நிலை கோவில் அமைப்பானது, முதலில் தரைத்தளமும், பின்னர் தூண்களும் சுவர்களும் எழுப்பப்பட்டு, முதல் தளம் அமைக்கப்படுகிறது. பின்னர், சுவரும் இரண்டாவது தளமும் அமைக்கப்பட்டு அதன் மேலே கழுத்து, கூரை, கலசம் ஆகியன நிறுவப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் உள்ள நிலைகளுக்கு, அத்தகைய சுவரும் தளங்களும் அமைக்கப்படுகிறது.

திருச்சி அருகில் திருவானைக்கா கோவில், திருப்பெருவேளூர் அபிமுக்தீஸ்வரர் கோவில், திருக்குடவாயில் திருக்கோனேசுவரர் திருக்கோவில், திருவைகல் மாடக்கோவில், திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோவில், திருக்கைச்சினம் திருக்கைச்சினநாதேசுவரர் திருக்கோவில், அம்பர் மாகாளேஸ்வரர் திருக்கோவில், ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில் என்று எழுபதுக்கும் மேற்பட்ட கோவில்களில் சிவபிரானார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வாழ்க்கையில் ஒரு முறையானும் இந்த கோவில்களுக்குச் சென்று அதன் கட்டமைப்புகளைக் கண்டும், இறைவனை முறையாக வழிபட்டும் திருவருள் பெற்றுத் திரும்புவோம். இப்போது இல்லையேல், எப்போதும் இல்லை. ஆகவே உடனே திட்டமிட்டு இக்கோவில்களுக்குச் சென்று வருவோம். 

 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *