மார்கழி வீதிஉலா – உயிர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டல்
தேவர் உலகில் மார்கழி மாதம் ஒரு பிரம்ம முகூர்த்த காலம் என்பார் பெரியோர். உயிர்களுக்கு மிகவும் உன்னதமான மாதமாகத் திகழ்கிறது மார்கழி மாதம். அதிகாலை எழுந்து சுத்தமான பிராணவாயு நிரம்பியுள்ள காற்றை சுவாசிப்பதால் நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி, நம் ஆரோக்கியம் வலுப்பெற்று, நம் ஆயுளும் கூடும் என்பது இதன் பின்னால் இருக்கும் விஞ்ஞானமாக பெரியோர் கூறுவர். இந்த உன்னதமான மாதத்தை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து இவ்வுலகையும் நம்மையும் படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக பெருமை மிகுந்த மார்கழியாக கொண்டாடுவது மரபு. இந்த மாதம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், அது மிகுந்த பெருமை மிகுந்த பீடுடைய மார்கழியானது. இதனால், இந்த மாதத்தில் நம் இல்லங்களில் வரும் நிகழ்வுகளை தை மாதத்திற்க்கு தள்ளி வைத்து இம்மாதம் முழுவதுமாக இறை உணர்வில் திளைத்திருப்பது நம் மரபாகும்.
போர்வையை இழுத்துப் போர்த்தித் தூங்கத் தூண்டும் சூழல் போலவே, உயிர்களை இந்த உலகியலில் இருக்கும் சிற்றின்பத்தில் ஆழ்த்தி திளைத்திருக்கச் செய்யும், ஆணவம் என்ற மலம். அதிலிருந்து விடுபட்டால் தான், நாம் நம்மை உணர்ந்து இறைவனை உணர்ந்து அவனை வழிபட்டு கொண்டாடி ஆடிப்பாடி மகிழ்ந்து பேரின்பத்தை அடைய இயலும்.
இரவு பகல் என்பது பூமிக்கும் மற்ற கோள்களுக்கு மட்டும் தானே. எல்லா நொடிப்பொழுதும் ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கின்ற சிவபெருமானுக்கு ஏது ஓய்வு ? அவன் சலிப்படையாதவன், சோர்வடையாதவன். ஆகவே, திருப்பள்ளியெழுச்சி என்பது ஆணவ மலத்தில் ஆழ்ந்து தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, ஆணவத்திலிருந்து விடுதலை கொடுத்து இறைவனை நோக்கி நெறிப்படுத்துவதேயாகும். ஆகவே,
மார்கழி என்றாலே இறை விழிப்புணர்ச்சி மாதம்.
திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடி இறைவனை தூக்கத்திலிருந்து எழுப்புவது போல, நம் உயிர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவதே பள்ளி எழுச்சியாகும். எனவே, சிவபெருமானின் பெருமைகளை உணராத மக்கள் எண்ணற்றோர். அவனை அறியாமலும், அவனுடைய தன்மைகளை உணராமலும், அவன் நமக்குச் செய்யும் உதவிகளைக் காணாமலும் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் கடமையாகும்.
அவ்வகையிலே, சென்னை பள்ளிக்கரணையிலே, மார்கழி 20 ஞாயிறன்று, காலை 5 மணிக்கு மல்லிகேசுவரர் நகர் அருள்மிகு மல்லிகேசுவரி உடனமர் மல்லிகேசுவரர் திருக்கோவிலில் இருந்து அருள்மிகு சாந்தநாயகி உடனமர் ஆதிபுரீசுவரர் திருக்கோவில் வரை, அருள்மிகு சிவகாமியம்மை உடனாய ஆனந்த நடராசர் உடன், மணிவாசகரும் இணைந்து, கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறைகள் ஏந்தி முன்னூறுக்கும் மேற்பட்ட சிவ அன்பர்களுடன் வீதிவலம் நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள் இங்கே.
உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.