அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை பௌர்ணமியில் கிரிவலம் வாருங்கள். No ratings yet.

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை சுற்றி கிரிவலம் வாருங்கள் !!!

அச்சிறுபாக்கம் – அச்சுமுறிப்பாக்கம் – சிவபெருமானின் எட்டு வீரட்ட செயல்களில் முப்புர அசுரர்களை அழிக்க இரதத்தில் செல்லும் போது, விநாயகர் அந்த இரதத்தின் அச்சினை முறித்த இடம் ஆதலால், இது அச்சுமுறிப்பாக்கம் என்று பெயர் பெற்றது என்பது வரலாறு.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி நம் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் யாரும், அவ்வழியில் அச்சிறுப்பாக்கத்தில் வரும் நம் வஜ்ரகிரி மலையை கண்ணால் காணாமல் செல்ல முடியாது. இந்த மலை அச்சிறுப்பாக்கத்தில் மேல்மருவத்தூரை அடுத்து அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ௧௫௰௰ (1500) ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவாலயம் உள்ளது. இங்கு உறையும் பெருமான் மரகதாம்பிகை உடனுறை பசுபதீசுவரர் என்று அன்போடு காலம் காலமாக அழைக்கப்பட்டு வருபவர்.  அச்சிறுபாக்கத்தில் அமையப் பெற்றுள்ள பாடல் பெற்ற தலமான ஆட்சீசுவரர் கோவிலுக்கு உட்பட்டது தான் மலை உச்சியில் உள்ள பசுபதீசுவரர் கோவிலும் என்கிறார்கள். மலையின் உச்சியில் உள்ள கோவிலை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று செங்குத்தான படிக்கட்டு. இன்னொன்று மலையின் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

இந்த மலையை சுற்றி பல்லாண்டு காலமாக மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சிறிதே தடைபட்ட இந்த மலைவலம், பிறப்பு இறப்பு அற்ற எல்லையில்லாத ஆற்றல் பொருந்திய உலகின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் திருவருளினாலும் அவர் விருப்பத்தினாலும் இப்போது மீண்டும் துவங்கியுள்ளது.  மொத்தம் ௧௪ (14 km) கி.மீ. தூரம் உள்ள இந்த மலையைச் சுற்றி வரும் பாதையில் முழுநிலவு (பௌர்ணமி) அன்று கிரிவலம் வரப்படுகிறது.

மலைவலம் துவங்கும் இடம்:  அச்சிறுபாக்கம் பசுபதீசுவரர் கோவில் மலையடிவாரம்.

எல்லையற்ற கருணையும், ஆற்றலையும் கொண்டு, இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, ஒடுக்கி, அருள் புரிந்து வரும் சிவபெருமான் உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த உலகில் படைத்து அருளி காத்து வருகிறான். அவ்வாறாக, சிவபெருமானே, மலையின் வடிவில் அமைந்து அருள் பாலிப்பதாக நம் சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு நாட்டின் அரசனுக்கு நாம் செய்யும் பணிகள் தான் எத்தனை எத்தனை ? அவனை வரவேற்று உபசரிக்கும் விதம் தான் எத்தனை எத்தனை ? இந்த ௨௨௪ (224) புவனங்களில் ஆயிரக்கணக்கான கோள்களையும் பரவெளியையும் படைத்து அருள் புரிந்து வரும் நம் ராஜாதி ராஜனான சிவபெருமானை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் ? எப்படி வணங்க வேண்டும் ? அவனை எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இந்த மலையிலும் அரிய வகை மூலிகைகளும் மரங்களும் உள்ளன. சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்திருந்த பூமியாக விளங்கியது இது. பெருமை மிக்க இந்த மலையில் மேவி அருள்பாலிக்கும் பசுபதீசுவரரை வணங்கியும் இந்த மலையை சிவபிரானாகவே எண்ணி மலைவலம் வருவதும் நாம் மிக்க புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். திருவண்ணாமலைக்கு இணையாக இந்த மலையும் திகழ்வதால், திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் அதே புண்ணியமும், சிறப்பும், அருளும் இந்த மலையை வலம் வருவதால் கிடைக்கப்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள், திருவண்ணாலை செல்வதோடு இந்த வஜ்ரகிரி மலையையும் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பைத் தரும். இந்த மலையை சீர் செய்யவும், வழிபாடுகள் சிறப்பாக அமையவும் பல உதவிகள் தேவைப்படுகிறது. இந்து உதவி அமைப்பினர் பல சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் அனைத்து இந்து அமைப்புகளும் கூட்டாக ஒன்று சேர்ந்து நம் பாரம்பரிய சொத்தான இந்த மலையை சீரமைத்து, கோவில்களையும் வழிபாடுகளையும் சிறப்பாக நடத்த இணைந்து செயல்பட வேண்டும்.  திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் அன்பர்கள் வஜ்ரகிரி மலைக்கும் கிரிவலம் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இணையற்ற ஒப்பற்ற பெருமானின் திருவருள் மீண்டும் நம் பூமியில் பட்டு ஆன்மீக ஒளிப்பெருக்கு ஏற்பட வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *