சமயகுரவர் துதி
சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய சமய குரவர் துதி. இது நால்வர் துதி என்றும் அழைக்கப்படும்.
சைவ சமயம் மற்றும் தமிழ் மொழியின் தொன்மையைப் பறை சாற்றும் எண்ணற்ற சான்றுகள் குமரிக் கண்டத்தில் இன்றும் இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. முதல் தமிழ் சங்கம், மற்றும் இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்றது குமரிக் கண்டத்தில். மூன்றாம் தமிழ் சங்கம் நடைபெற்றது இன்றைய திருஆலவாய் (மதுரை) இல். சங்க காலம் சைவ சமயத்தின் பொற்காலம். சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்றது. இது 2 முதல் 5 ஆம் நூற்றாண்டு காலமாகும். இந்த சமயத்தில் சைவம் மருவி, சிவ வழிபாடு குன்றியது. இது இருண்ட காலம் எனப்படும்.
அப்போதிருந்த மன்னர்கள் சமண சமயம் பௌத்த சமயம் ஆகியவற்றைத் தழுவியதால், மக்களும் அவர்களை பின்தொடர்ந்தனர். சமணர்களின் துறவறம் மக்களைக் கவர்ந்தது. சிவ ஆலயங்கள் வழிபாடுகள் இல்லாமல் குன்றியது. சமணர்கள் திருநீறு அணிபவர்களைக் கேவலமாக நடத்தினர். திருநீறு அணிந்த பூச்சாண்டிகளைப் பார்த்தாலே சிறைவாசம். இதற்கு கண்டுமுட்டு என்று பெயர். திருநீற்றை அணிந்தவரைப் பார்த்தேன் என்று ஒருவர் கூறியதை கேட்டவருக்கும் சிறை. இது கேட்டுமுட்டு என்று பெயர். இவ்வளவு கொடூரமான சமயத்தில், சைவ சமயத்தை மீட்டெடுக்க சிவபெருமானார் பெருங்கருணை கொண்டு அருளாளர்களை இங்கு அனுப்பி அருளிச் செய்தான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் மற்றும் பல நாயன்மார்கள் தோன்றி சைவ சமயத்தை மீட்டெடுத்து சிவ வழிபாட்டை இடையூறின்றி நடத்தினர். இவர்கள் நம் சமயத்தை மீட்டெடுத்ததால் இவர்களை சமயகுரவர் என்கிறோம்.
இந்த சமயகுரவர்களை துதித்து பின்னாளில் வந்த சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவம் எழுதிய பாடலை பண்ணிசை பாவலர் திரு தண்டபாணி அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.