உயிரின் நீள் பயணம்
ௐௐௐ
சிவ சிவ :
உயிரின் நீள் பயணம்
ஒவ்வொரு உயிரையும் , புல் பூண்டு ,விலங்குகள் எனப் பல்வேறு உடல்களில் புகுத்தி ,பல பிறவிகளை அளித்து ,மனிதப் பிறவியை அளிக்கப் பக்குவம் பெற்ற நிலையில் மனிதப் பிறவியை அளிக்கிறார் சிவனார் !
தொடர்ந்து மெல்ல மெல்லப் பக்குவப் படுத்தப் பல மனிதப் பிறவிகளையும் அளித்து ,அந்தந்த உயிர்களில் ஒன்றாய் ,உடனாய் ,
வேறாய் நின்று செயலாக்கம் செய்து வருகிறார்.
இந்தப் பிறவிகளில் உயிர்கள் ஈட்டும் நல் வினை தீ வினைகள் அவற்றின் தனித் தனி கணக்குகளில் ஏற்றப் படுகின்றன .
இந்த செயற் பாட்டின் தொடர்ச்சியாக , ஒரு உயிருக்கு மீண்டும் பிறப்பளிக்கும் முன் அது தன்னை நோக்கி எந்த அளவுக்குப் பயணப் பட்டிருக்கிறது என்றக் கணக்கீட்டின் அடிப்படையில் , மேலும் இன்பத் துன்பங்களில் உழலச் செய்து ,தன்னை நோக்கி வரச் செய்யும் கருணையோடு , அதற்கு ஆயுட் காலத்தை நிர்ணயம் செய்து ,அந்த ஆயுட் காலத்துக்குள் அது பண்பட வேண்டிய அளவுக்கு ,அந்த உயிர் ஈட்டியுள்ளப் புண்ணிய பாவங்களுக்கானக் கணக்கிலிருந்து ,
தேவையான அளவு மட்டும் நல் வினை தீ வினைகளை ஏற்றி , அந்த உயிரின் பக்குவ நிலைக்கு ஒத்த வினைகளுடைய இல்லத்தில் பிறக்கச் செய்கிறார்.
இது சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே அருட் சோதியான இறைவன் செய்யும் பின்னல் வேலையாகும்.
அதனாலேயே ஒரு சாதகப் படி ஒரு குடும்பத்தில் உள்ள ஏனையோர் விதிகளோடு தொடர்பு படுத்தி உயிர் வினைகளை ஊட்டி ஆட்டி வைக்கப் படுகிறது !
பல பிறவிகளில் உழலும் உயிர் உலகியல் நிலையாமையை உணர்ந்து ,சிவம் மட்டுமே இறை எனத் தெளிந்து ,அவரை நோக்கி உறுதியாகப் பயணிக்கத் தொடங்கி விட்டால் இப் பிறவியில் அதைப் பக்குவப் படுத்தி ஈர்க்க ஏற்றி அனுப் பட்ட தீ வினைகள் பயன் விளைவிக்காது அகலும்.
இதுவே உயிரின் பயண முறை .
ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும் .
முழு நீறணிக ; அஞ்செழுத்து ஓதுக ; ஆலய வழிபாடுகள் செய்க ; அடியார் திருக் கூடடங்களோடு இணைக ! ஆலயம் தொடர்புடையத் திருத் தொண்டுகள் செய்க ; பூசைகள் இயற்றுக !
ஞான நூல்களை ஓதுக ; கற்க ; விளக்கம் செய்யும் பெரியோர் சொல் கேட்க ; சிந்திக்க; தெளிக !
திருவுருவத்தை மனத்தில் கொணர்க ; திருவடியை மனத்தால் சிக்கென உரிமையுடன் பற்றுக !
சிவனார் கை கொடுத்துத் தூக்கி அணைத்துக் கொள்வார் !
சைவத் திருமுறைகள் ,சாத்திர புராணங்களைக் கற்ற அளவு நான் தெளிந்த நிலை இதுவே !
ஒருவரே இறை !
அவர் சிவ பரம் பொருளே !
-திருச் சிற்றம்பலம் –
~கோமல் கா சேகர் /9791232555/020818