எறிபத்தர் நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில 4.5/5 (4)

எறிபத்தர் நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில

பகுதி 1  எறிபத்தர் நாயனார் வரலாற்றுச் சுருக்கம்

பகுதி 2:

எறிபத்த நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில

1. தினமும் அதிகாலையில் குற்றம் இல்லாத, மலரும் தருவாயில் இருக்கும் பூக்களை மாலையாகத் தொடுத்து, இறைவனுக்குச் சாற்றிய பின்னர் தான், தாம் உணவு உண்பதையே வழக்கமாகக் கொண்டவர்கள் நம் சிவனடியார்கள். சிவகாமியாண்டாரும் இந்த வழக்கத்தைக் கொண்டவர் என்பதை இந்த வரலாறு காட்டுகிறது. வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் வரலாறு, முருக நாயனார் வரலாறு என்று பல வரலாறுகள் இதை நமக்கு உணர்த்துகின்றன. புறம் மற்றும் அகத்தூய்மையோடு மலர்களைப் பறிக்க வேண்டும் என்பது மிகத் தெளிவு. முகத்தைத் துணியினால் கட்டுவது அசுத்தக் காற்று பூக்களின் மீது படாமல் இருக்கவும், எதேச்சையாக இருமினாலோ, தும்மினாலோ, நம் எச்சில் நீர் இறைவனுக்குச் சாற்றுப்போகும் மலர்களில் பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். மலர் தானே, பறித்து மாலையாக்கி போட்டால் போச்சு என்று எளிதாக எடுத்துக் கொள்ளாமல், தாமே தம் நந்தவனங்களில் பறிந்து மாலை தொடுத்து அதை இறைவனுக்குச் சாற்றும் போது கிடைக்கும் பேரானந்தத்தை அனுபவித்தால் தான் புரியும். புறத்தூய்மை போலவே, அகத்தூய்மையும் முக்கியம். ஐந்தெழுத்து மந்திரம் சொல்லிக் கொண்டு பறித்தல் மிக உன்னதம்.

2. பட்டத்து யானையும் பாகர்களும் இறந்ததைக் கேள்வியுற்று, சிறு படையோடு வந்த மன்னன், அந்த இடத்தில் சிவனடியார் ஒருவர் நிற்பதைக் கண்டு, இவர் இதைச் செய்திருக்க மாட்டார் என்று மிக உறுதியுடன் இருந்தான். அடியார்கள் மீது தான் எத்தனை நம்பிக்கை?

3. எறிபத்தர் தான் இந்த யானையையும் பாகர்களையும் கொன்றார் என்ற செய்தி கேட்டு, அவரிடம் பேசுவதற்க்கு முனைந்த மன்னன், முதலில், தனது படைகளையும் மற்று அனைவரையும் நிறுத்தி விட்டு, தானும் முதலில் வலிமை வாய்ந்த குதிரையிலிருந்து கீழே குதித்தான். ஒரு சிவனடியாரை எவ்வாறு அணுக வேண்டும், அவரிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று நுட்பம் இதில் நிறைந்துள்ளது. தான் இந்த நாட்டிற்க்கே மன்னன் என்ற போதும், அவன் குதிரையிலேயே அருகில் சென்ற விசாரிக்கவில்லை. சிவ அடியாரைக் கண்டவுடன் முதலில் கீழே குதித்து பணிவோடு எறிபத்தரை நெருங்கி வணங்கினான். எத்தனை உயர்ந்த பண்பு? சிவனடியார்களிடத்து நாம் எவ்வாறு அணுக வேண்டும், அவர்களிடம் எவ்வாறு பணிவுடன் வணக்கம் செய்ய வேண்டும் என்ற மிக உயர்ந்த பண்பை இங்கு நுட்பமாக நோக்க வேண்டும்.

4. எறிபத்தர் தான் யானையையும் பாகர்களையும் கொன்றார் என்று உறுதிபடக் கேட்ட பின்னர், அவர் சிவனடியார் வேடம் தரித்திருந்தமையால், அந்த சிவனடியார் கண்டிப்பாக தவறு செய்திருக்க மாட்டார் என்று ஆயிரம் சதவிகிதம் உறுதி எடுத்துக் கொண்டான் மன்னன். யானை ஏதோ தவறு செய்யப் போய் தான் இந்த அடியார் யானையையும் பாகர்களையும் கொன்றிருக்க வேண்டும் என்று முழுமையாக முடிவு கொண்டான். சிறு சந்தேகம் கூட அவருக்கு வரவில்லை. அது பற்றி எந்தவித விசாரணையும் செய்யவில்லை. எத்தனை பெரிய பண்பு இது ? இதற்கு காரணம் என்ன என்று நாம் இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால், சிவனடியார் வேடம் தரிந்திருந்தவர்கள் அத்தகைய உயர்ந்த பண்புகளோடு வாழ்ந்து காட்டியிருந்தனர். அனைத்து சிவனடியார்களும் சிறிது குற்றமும் இல்லாமல் நெறியின் வழிப்படி வாழ்ந்தார்கள். உலகினர் யாவரும் போற்றும் படி பிழையின்றி வாழ்ந்தனர். இதுவே அதற்கான காரணம்.

5. எறிபத்தர் நிகழ்ந்ததைக் கூறக் கேட்ட மன்னர், சிவனடியார் வருந்தும் படி இந்த நிகழ்வு நிகழ்ந்து விட்டதே என்று மனம் வருந்துவது எத்தனை உயரிய புரிதலும், இறைவர் பால் அன்பும் இருக்க வேண்டும்? இப்படி நிகழ்ந்து விட்டதா, சரி, பரவாயில்லை. நீங்கள் கிளம்புங்கள் என்று அதை முடித்துவிடாமல், இந்த நிகழ்வுக்கு, மன்னராகிய தானும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதை நினைந்து, என்னையும் கொல்லுங்கள் என்று எறிபத்த நாயனாரிடம் கேட்பது, சாதாரண மனிதர்களால் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத சிந்தனையும் செயலும் ஆகும். சிவபெருமான் மீதும், சிவனடியார்கள் மீதும் எத்தனை அன்பு கொண்டிருந்தால், இறைவனின் திருவருள் நம்மை இப்படி சிந்திக்க வைக்கும்? (என் கண்களில் நீர் பெருகி வழிந்தோடுகிறது.) புகழ்த்துணையாரான இவரும் ஒரு நாயன்மார் அன்றோ?

6. தன்னிடம் வாளை நீட்டி தன்னைக் கொல்லச் சொல்லும் மன்னரிடம், தயங்கி, இன்னும் கொஞ்ச நேரம் விட்டால், மன்னர் தானே தம்மை மாய்த்துக் கொள்வார் என்று பயங்கொண்டு, அந்த வாளை வாங்கி, அவருக்கு முன்பு நாம் மாண்டு விட வேண்டும் என்று தன் கழுத்தை அறுப்பது எத்தகைய செயல்? இன்றைய போர்க்களத்தை சற்றே சிந்தித்துப் பாருங்கள். மனிதன் உயிருக்குப் பயந்து எப்படி ஓடி ஒளிகிறான்? நாயன்மார்கள் அனைவருமே தங்கள் உயிரைத் துச்சமென நினைத்தவர்கள். தங்களால் ஒரு துன்பமோ, ஒழுக்கக் கேடோ வரவிருந்தால், தங்கள் உயிரை உடனே மாய்த்துக் கொள்ளத் துணிந்துவிடுவார்கள்.

7. எறிபத்த நாயனார் செய்த சிவ தொண்டு யாது? சிவனடியார்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு ஆபத்துக் காலத்தில், உதவி செய்து, ஆபத்தை நீக்குவதும், அந்த ஆபத்தை விளைவித்தரை மழுவால் கொல்வதும் ஆகும். ஒருவரைக் கொன்றால், பிரம்மகத்தி தோஷம் வந்துவிடுமே என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஆபத்தை விளைவித்தவர் பிராமணராகவோ (இறை தொண்டு செய்பவர்), தபோதனராகவோ (தவம் உடைய முனிவர்கள்) இருந்தால், அவர்களைக் கொல்லாமல், பிற வழிகளால் அவர்களை வெல்ல வேண்டும். சிவதொண்டு செய்வர்களுக்கு தீங்கு செய்பவர்களைத் தடுக்கவில்லை என்றால், தொண்டு செய்பவர்கள் தொடர்ந்து அந்த தொண்டை செய்ய இயலாத நிலை ஏற்படும். இது சிவ தொண்டு செய்வதற்க்கான தடையாகும். இந்த தடையை எவ்வாறாயினும் நீக்க வேண்டும். இதனால் ஒருவரைக் கொல்ல நேரிடும் போது, அவர் செய்யும் கொலை தன்னுடைய சுயநலத்திற்க்கோ, தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்கோ செய்யப்படவில்லை. அது முழுக்க முழுக்க இறை பணி தடையில்லாமல் நடப்பதற்க்குச் செய்யப்படும் கொலையாகும். இந்த கொலை செய்வதால், சிவ தொண்டு தடைபடாமல் நடக்கும், வளரும். இதனால் இறுதியில் கிடைப்பது சிவபுண்ணியமே. ஆகவே, சிவபுண்ணியத்தின் பொருட்டு செய்யப்படும் கொலைக்கும் சிவபுண்ணியமே கிடைக்கும். இந்த உண்மையை எறிபத்த நாயனார் வரலாறு மட்டுமல்ல, சண்டிகேஸ்வரர் வரலாறு, கோட்புலி நாயனார் வரலாறு என்று பல வரலாறுகள் நமக்கும் உணர்த்துகின்றன. பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே என்பார் சேந்தனார். சிவ புண்ணியம் செய்வதற்க்கு உரிய தடையாக இருப்பவரை நீக்கா விட்டால், இதைப் பார்த்து இன்னும் நிறைய பேர் அந்த தடைகளைச் செய்ய முயல்வர். தடைகள் வளரும். ஆகவே, சிவ புண்ணியத்திற்க்கான தடைகளை நீக்குவதும் சிவ புண்ணியமே. கொலை களவு ஆகியன உலகத்தாரால் நீக்கப்பட்டாலும், அவை நன்மை பயக்கும் இடத்தில் அவை புண்ணியத்தைத் தருகின்றன. இதை நம் சாத்திர நூல்களும் உறுதி படுத்துகின்றன.

ஒலி/ஒளி வடிவத்தில்:

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *