காரி நாயனார் வரலாறு உணர்த்தும் வாழ்வியல் குறிப்புகள்
காரி நாயனார் குருபூசை: மாசி பூராடம்
திருக்கடவூரிலே அந்தணர் குலத்தில் அவதரித்து சிவனின் பால் அன்பு பூண்டு திருத்தொண்டு புரிந்தவர் காரி நாயனர். காரி நாயனாரின் வரலாறு மிக சில வரிகளிலேயே படித்து விடலாம். சுருக்கமாகக் கூறினால், காரி நாயனார் தமிழின் மீது மிகுந்த அன்பு பூண்டு நல்ல தமிழ் வளமை பெற்று, வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து, நன்றாகச் சொல் விளங்கிப் பொருள் மறைய காரிகோவை என்ற நூலை இயற்றினார். இது ஒரு கோவைப் பாட்டாகும். வண் தமிழ் என்பது தமிழின் பல வளமையான பகுதிகளை நன்றாக அறிந்துணர்ந்து பயன்படுத்துவதாகும்.
காரிகோவை நூலை மூவேந்தர்களிடமும் சென்று அவர்கள் மகிழும்படி எடுத்துக் கூறி, அம்மன்னர்களிடம் இருந்து பல்வேறு திரவியங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு, அவற்றை வைத்து பல சிவாலயங்களைக் கட்டுவித்தும், பிற சிவனடியார்களுக்கு உதவி செய்தும் வாழ்ந்து வந்தார். இறுதியில், இறைவனுடைய திருவருளினாலே, இந்த உடலோடு வடகயிலை அடையும் பாக்கியமும் பெற்றார்.
உலகியலில் உழன்று கொண்டு இறைவனை நினையாது சுற்றித் திரியும் ஆன்மாக்களை மிக வன்மையாகவே சாடுபவர் நம் திருநாவுக்கரசர் பெருமான். இறைவன் தன்னை இவ்வுலகில் விரும்புவோர்க்கு உணர்த்த, பல்வேறு வடிவங்களாகவும், திருவுருவங்களாகவும் வந்தும், விடைக்கொடி, திருநீறு, உருத்திராக்கம் என்று பல்வேறு கருவிகளை அருளியும், கோவில்களையும், இந்த உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நெறிகளை உபதேசஞ் செய்தும், அந்த நெறிகளில் நின்று உணர்த்தியும், பல வேதங்கள் ஆகமங்கள் உபதேசஞ் செய்தாலும், எவற்றையுமே கவனிக்காமல், தம் ஞானப் பொறிகளை முடக்கித் திரிபவர்களை, உங்கள் மனம் ஏன் இறைவனிடத்தில் ஈடுபடவில்லை என்று வினவுவார் நாவுக்கரசர்.
அறம் பொருள் இன்பம் வீடு என்று நான்கு வேதங்களும் ஆகமங்கள் அருளியும், அந்த நெறிகளின் படி வாழ்ந்த எண்ணற்றவர்களில் ஒரு சிலரை நமக்கா நாயன்மார்களாகத் தொகுத்துக் கொடுத்து, வாழ்கை என்றால் இவ்வாறு தான் வாழ வேண்டும் என்றும் இறைவனார் காட்டிக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு நாயன்மார் வரலாறும் நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அப்படியே எடுத்துக் காட்டுகின்றன.
கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
திருத்தொண்டத்தொகை – சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
தெய்வம் பேசிய மொழியாம் தெய்வத் தமிழை நாம் அனைவரும் குற்றமற கற்க வேண்டும். ஆங்கிலத்தோடும் பிற மொழி கலப்போடும் பேசுவதையும் பயன்படுத்துவதையும் விட வேண்டும். அதற்கான முயற்சியை ஆரம்பித்து விட்டால், அதுவே தானாக நிறைவடைந்து விடும். இன்றைய சூழலில் காரிகோவை போன்ற நூலை எல்லோரும் எழுத இயலாது. ஆனால், அதற்கு முதல்படியாக நாம் அனைவரும் தூய தமிழில் எழுதவும் பேசவும் கற்பது இன்றியமையாதது. அதன் பின், தமிழின் மிக ஆழமான வளங்களையும் நம் செய்யுள்களையும் படித்துணர்ந்து அனுபவிக்கலாம். அந்த அனுபவத்தைப் பிறருக்கு பகிர்வதன் மூலம் அவர்களையும் தமிழ் கற்கத் தூண்டலாம்.
திருக்கோவில் அமைக்கும் பணி, மதிப்பு மிக்க பழங்கால சிவாலயங்களை சீர் திருத்தவும், உழவாரப் பணி செய்யவும், அவற்றை உரிய முறையில் பராமரிப்பதும் நம் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இன்றைய சூழலில் பழைய கோவில்களைப் போல ஒளி பொருந்திய ஆற்றல் பொருந்திய கோவில்களைக் கட்டுவிப்பது மிகவும் கடினமானதாகும். ஆனால், நாமோ, அளவற்ற பொக்கிஷமான பழந்திருக்கோவில்களைக் கண்டும் காணாததுமாகச் செல்கிறோம். பெருஞ் செல்வர்களும் அடியார் திருக்கூட்டங்களும் அவரவர் ஊரிலும் அருகிலுள்ள கோவில்களையும் உரிமை எடுத்து அவற்றைப் பராமரிக்கும் செயல்களில் இறங்க வேண்டும். உழவாரப் பணியின் மகிமையும், சிவாலயப் பணிகளின் மகிமையும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. இனி எத்தனை பிறவி எடுப்போம், எப்போது நமக்கு சிவாலய பணி செய்யும் பாக்கியம் கிட்டும் என்றெல்லாம் தெரியாது. இந்த பிறவியில் எத்தனை பணி செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து விட வேண்டும்.
சிவனடியார்களின் கஷ்டத்தைத் தனது கஷ்டமாக எண்ணி அவர்கட்கு உதவி செய்திடல் வேண்டும். வெறும் பொருள் உதவி மட்டுமன்று, பல வகைகளில் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யலாம். நீங்கள் வேலை கொடுப்பவராயின் சிவனடியார்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஆலயங்களில் சிவனடியார்களின் பசிப்பிணியைப் போக்கலாம். இவ்வாறு எண்ணற்ற வகைகளில் அடியார்களுக்கு உதவலாம்.
இவையெல்லாம் செய்வதற்க்கு முன்னர் வாழ்வியல் நெறியை கடைப்பிடிக்க வேண்டும். வாழ்வியல் நெறி உரைக்கும் ஒழுக்கம் அறிய வேண்டும். எத்தனை புண்ணியங்கள் செய்தும் அடிப்படை ஒழுக்கம் இல்லையேல், கிணற்று நீரை இறைத்து இறைத்து ஓட்டைப் பானையில் ஊற்றியவாறு வீணாகிப் போகும்.
சிவபிரானை எப்பொழுதுஞ் சிந்தையில் வைத்து சிவப் பணிகளை செய்பவர்கள் உயர்ந்த நிலையை எய்துவர். உலகியல் வாழ்வில் எப்படி இருந்தாலும், சிவன் பால் அன்பு பூண்டு சிவப்பணிகளைச் செய்யும் போது உயர் நிலையை அடைகிறோம். சிவபிரானின் கருணைக்கும் அன்பிற்க்கும் ஆட்படுகிறோம். அவ்வகையிலே, மனம் போல உடலோடு கயிலை செல்ல வேண்டுமாயின் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும் ?
காரி நாயனாரின் வரலாறு உணர்த்தும் எண்ணற்ற உயர் செயல்களில் ஒரு சில குறிப்புகளை அறிந்தோம். காரி நாயனாரின் திருவடித் தாமரைகளை வணங்கி மகிழ்ந்து அவர் வழியில் செல்வோம்.
திருச்சிற்றம்பலம்.
நன்று நன்று நனிநன்று
ஓம் நமச்சிவாய
திருசிற்றம்பலம்