கோடை விடுமுறைல தமிழ் திருமுறை சொல்லிக்கொடுங்க No ratings yet.

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு தமிழ் திருமுறை சொல்லிக் கொடுங்க

உலகின் ஆன்மீக ஒளியாக, பல்லாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது நம் பாரத பூமி. இந்த பூமியில் தடுக்கி விழுந்தால் ஞானப் புதையலைப் பெறலாம். ஒவ்வொரு கோவிலும் ஞானப்புதையல். ஒவ்வொரு இல்லமும் ஞானப் புதையல். ஒவ்வொரு மலையும், நதியும், காற்றும் ஆகாயமும் ஞானப் புதையலாக நமக்கு பாடம் சொல்லித் தரும் குருவாக அமைந்துள்ளது. அத்தகைய புண்ணிய பூமியில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்?

கடந்த பல நூற்றாண்டுகளால் நாம் இழக்கப் பெற்ற ஞானத்தையும், இறை உணர்வையும் தற்போது மீட்டு பேரின்பமாக இவ்வுலகில் வாழும் முறையை அறிந்து கொண்டு, நம் தலைவனாகிய ஈசனை உணர்ந்து தொழுது ஏத்தி வணங்கி வாழ வேண்டும். தனி மனித ஒழுக்கம், குடும்ப ஒழுக்கும், பொது ஒழுக்கம் என்று எங்கும் ஒழுக்கம் நிறைந்த பூமியை நாம்  மீண்டும் படைத்திட வேண்டும். ஒழுக்கம் இன்பமான வாழ்விற்கு மிகவும் உறுதுணையாக நிற்பது. ஒழுக்கம் இல்லாத வாழ்வும், ஒழுக்கமில்லாத எந்த அமைப்பும், வெளியிலிருந்து யாரும் கெடுக்காமலேயே கெட்டுப் போகும்.

தனிமனித சுதந்திரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. தனி மனித சுதந்திரம் முழுக்க முழுக்க இருக்கும் ஒருவனே, தான் இன்பமாக வாழும் பொருட்டும், தன் குடும்பம் இன்பமாக வாழும் பொருட்டும், தன் தெரு, ஊர், நாட்டு மக்களும் இன்பமாக வாழும் பொருட்டும் தனக்குத் தானே சில விதிகளை விரும்பி கடைப்பிடிப்பதே ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க சிறிது சிரமம் தேவைப்பட்டாலும், அதனால் வரக்கூடிய நன்மைகள் பலப்பல. அந்த ஒழுக்கம் இல்லாவிட்டால், தனி மனிதனின் வாழ்வும், ஊரும், நாடும் கெட்டுப்போகும் என்பது வரலாற்றில் பல்லாயிரம் முறை நாம் கண்ட உண்மையாகும்.  இதை வலியுறுத்தவே,  தெய்வப்புலவர் வள்ளுவர் பெருமானும்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்றார். அத்தகைய இன்றியமையாத வாழ்வின் இருதயமாக இருக்கக்கூடிய ஒழுக்கத்தையும், வாழ்வில் நன்றாக இன்பமாக வாழும் முறையையும் ஏனோ இன்றைய கல்வி முறை புறக்கணித்துவிட்டு விஞ்ஞானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. இந்த நிலையிலிருந்து விலகி, நம் கல்வி, இன்பமாக வாழவும், எத்தகைய சூழலை கையாளவும், புதிய புதிய கருவிகள் கண்டுபிடிப்பதையும், விஞ்ஞானத்தோடு சேர்த்து மெய்ஞானத்தையும் புகட்ட வேண்டும். அன்று தான் அதற்கு அடுத்த தலைமுறைகள் இன்பமாக இனிமையாக வாழ இயலும்.

அதுவரை, அந்த பொறுப்பு பெற்றோர்களின் கைகளில் தஞ்சம் புகுந்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும், தன் பிள்ளைக்கு இனிமையாக வாழும் வழிகளையும், நாம் யார், நம் மொழி என்ன, நம் சமயம் என்ன, நம் வரலாறு என்ன, நம் புராணங்கள் என்ன, நம் குருமார்களும் நமக்கு வழிகாட்டிகளும் யார் என்ற இன்றியமையாத செய்திகளையும் ஊட்டும் பொறுப்பு உடையவர்களாக இருக்கின்றனர்.

அவ்வகையிலே, கோடை விடுமுறையில், குழந்தைகளுக்கு இனிய விளையாட்டுகளோடு சேர்த்து, இந்த முக்கியமான கடமையை நிறைவேற்றுவது சிறப்பானதாகும். அதற்கு ஏற்றவாறு, அந்தந்த ஊரிலிருக்கும் சிறு அமைப்புகளும், சிவனடியார், முருகன் அடியார் திருக்கூட்டங்களும், அடுக்கக கூட்டமைப்புகளும் சேர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.

தமிழ் மொழியின் அடிப்படை, இலக்கணம், ஆத்திசூடி, திருக்குறள் போன்ற அற நூல்கள், பன்னிரு திருமுறை, பதினெட்டு புராணங்கள், நாயன்மார்கள் வரலாறு, பக்திப் பாடல்கள், விளையாட்டு, நம் பழங்கால இசைக்கருவிகளை இயக்குவது, விடுகதைகள் என்று பல்சுவையோடு சேர்த்து அவர்களுக்கு நம் சமயம் மற்றும் தமிழ் மொழியின் அடிப்படைகளை ஊட்டினால், அவை அவர்களிடம் ஆழமாக பதிந்துவிடும். நீங்களும் இத்தகைய வகுப்புகளை உங்கள் ஊரில் நடத்தலாமே ?

 

பள்ளிக்கரணையில் இத்தகைய வகுப்பு வரும் ஏப்ரல் 15 லிருந்து மே 25 வரை நடைபெறும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்,

பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *