திருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை 5/5 (1)

திருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை

பதிவாசிரியர்: சிவதீபன்.
 
திருநாகைக்காரோணம் திருவிருத்தம்
 
குறிப்பு: நாகராசன் வழிபட்டமையால் “நாகை” என்றும் புண்டரீக முனிவரின் காயத்தை தம்மேல் ஆரோகணித்த பெருமான் உறைவதால் காயாரோகணம் என்றும் அழைக்கபபெற்று “நாகைக்காரோணம் எனப்படுகிறது
 
பரதவர்களும் வியாபாரிகளும் நிறைந்து வாழ்ந்த நெய்தல் நகரமாம் இது “பட்டினம்” ஆதலின் “நாகைப்பட்டினம்” என்று தற்காலத்தே வழங்கப்பெறுகிறது, “காரோணம்” என்ற பெயரில் ஆலயம் அழைக்கப்பெறுகிறது
 
“விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்த நாயனார் வாழ்ந்திருந்த பதியாம்” இதற்கு மூவர் தேவாரப்பாடல்களும் உண்டு
 
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வியலுக்கு தேவையான பொருட்கள் யாவையும் இத்தலத்தில் இறைவனிடம் வேண்டிப்பெறுகிறார்
 
ஒன்பது பாடல்களால் நிறைவடைந்துள்ள அப்பரடிகளது விருத்த செய்யுள்கள் இவை
 
பாடல்
 
வடிவுடை மாமலை மங்கை பங்கா கங்கை வார்சடையாய்
கடிகமழ்சோலை சுலவு கடனாகைக் காரோணனே
பிடிமதவாரணம் பேணுந் துரகநிற்கப் பெரிய இடிகுரல் வெள்ளெருது ஏறும் இதென்னைகொல் எம்மிறையே.
 
கருந்தடங் கண்ணியுந் தானுங் கடனாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன்று எடுக்கலுற்றான்
பெருந்தலை பத்து மிருபது தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.
 
பொருள்
 
அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர் வதன் காரணம் என்ன ?
 
கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .
 
 
கோயில் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: அப்பர் பெருமான் பாடியருளிய திருப்பதிகங்களில் “குறுந்தொகை” என்ற செய்யுளமைப்பில் அமைந்துள்ள பதிகங்கள் யாவும் ஐந்தாம் திருமுறையாக தொகுக்கப் பெற்றுள்ளது
 
அற்புதமான அறக்கருத்துக்களை எளிமையாக எடுத்தோதும் இத்திருமுறையில் சரியாக நூறு திருப்பதிகங்கள் உள்ளன
 
வேண்டினவெல்லாம் வழங்கு தில்லை மூதூரின் எல்லை பணிந்த எழுந்து மேனிலை மாடம் கைதொழுத அப்பர்பெருமான் கனகப்பொது எதிர் கண்ணுற்று கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிட்டு இருந்த காலத்தில் “அருட்பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம்பாலிக்கும் என்னும் திருக்குறுந்தொகைகள் பாடி திருவுழவாரம் செய்து பெருகுபேர் இன்பம் உற்றனர்
 
அன்னம் – சோறு – முத்தி, முத்திவழங்கும் தில்லை சிற்றம்பலம் என்பது நுதலிய பொருள் என்றாலும், “மண்ணுயிர்கள் யாவும் பசிநோயில் வாடாது நாளும் படியளக்கும் தில்லை சிற்றம்பலம்” என்றும் பொருள் கொள்வர் சான்றோர் இதனைக்காட்டவே “தென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலத்து தெற்கு கோபுரத்தில் அன்னக்கொடியாம் காவிக்கொடி எப்போதும் பட்டொளி வீசிப்பறக்கிறது”
 
மகேசுர பூசையின் போது சீரடியார் பெருமக்கள் பாடிப்பரவும் பைந்தமிழ் மாலையும் இதுவேயாம்
 
பாடல்
 
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
 
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.
 
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
 
பொருள்
 
பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும் . இத்தகைய திருச்சிற்றம்பலத்தை , மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு , பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னு
 
அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி , கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின்
 
அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ ( இடுகாட்டில் ) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின்
 
 
கோயில் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: திருவேட்களம், திரக்கழிப்பாலை விரும்பித் தொழுத கலைவாய்மை காவலராம் “அப்பர் தம்பிரானார்” நீடு திருப்புியூரை நினைந்து வழிகொண்டு விரைந்தனர்
 
“நினைப்பவர் மனம் கோயில் கொள்ளும் அம்பலத்து நிருத்தனாரை திணைத்தனை போதும் மறந்துய்வனோ!?” என்று மனக்கோயில் வழிபாட்டை சிறப்பித்து பாடிய பதிகம் இது
 
பாடல்
 
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ.
 
தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ.
 
கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்டமாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்டனைப் பொழுதும் மறந்துய்வனோ.
 
பொருள்
 
பனைபோன்ற கையையும் , மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன் ; தன்னை நினைப்பவர் மனத்தைக் கோயிலாக் கொண்டவன் ; வேடம் அனைத்துமாம் அம்பலக்கூத்தன் . இத்தகைய சிற்றம்பலக் கூத்தனைத் தினையளவுப் பொழுதும் மறந்து வாழ்வேனோ !
 
அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயனை , பேரின்ப வடிவினனை , சிவலோக நாயகனை , ஞான உருவினனை , உலகத்தோற்றத்தின் முன் அதற்கு மூலமாய் முன்னின்ற ஒருவனை , அருச்சுனனுக்கு வேடனாய்த்தோன்றியும் , பாசுபதமீந்தும் அருள்செய்த சிற்றம்பலத்துக் கூத்தப்பிரானைக் கொடியேனாகிய யான் மறந்து வாழ்வேனோ ? மறவேன்
 
தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பையும் , கையின்கண் பிரமகபாலத்தையும் மான்கன்றையும் உடையவனும் , சர்வசங்கார நிலையில் விரும்பி எரிவீசி ஆடுவோனும் ஆய சிட்டர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ ?
 
 
திருநெல்வாயில் அரத்துறை திருக்குறுந்தொகை
 
குறிப்பு: பெண்ணாகடத்திற்குத் தென்மேற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. விருத்தாசலத்திலிருந்து தொழுதூர் செல்லும் பேருந்துகளில் ஏறிக் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கித் தெற்கே 1 கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. அரத்துறை என்பது ஆலயத்தின் பெயர், நெல்வாயில் என்பது ஊர்பெயராம்
 
திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் இவைகளை அருளிய தலம் மூவர் பாடலும் பெற்றதாம்
 
 சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்குறள் கருத்துக்களையும், அடிகளையும் இவ்வூர் ஏழாம் திருப்பாடலில் எடுத்து ஆளுகின்றார். இத்தலத்துக்குத் திருஞான சம்பந்தப் பெருமான் பதிகம் ஒன்று, அப்பரடிகள் பதிகம் ஒன்று, நம்பியார் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
 
இது அப்பர்பெருமான் பாடிய குறுந்தொகையாம்
 
பாடல்
 
கடவுளைக் கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலுளானை ஒப்பார் இலாதவெம்
அடலுளானை அரத்துறை மேவிய
சுடருளானைக் கண்டீர்நாந் தொழுவதே.
 
கலையொப்பானைக் கற்றார்க்கோர் அமுதினை
மலையொப்பானை மணிமுடி ஊன்றிய
அலையொப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானைக் கண்டீர்நாந் தொழுவதே.
 
பொருள்
 
நாம் தொழுவது கடவுளும், பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த, அருட்டிருமேனியுடையவனும், ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே.
 
நாம் தொழுவது கலையும், கற்றார்க்கமுதும், மலையும் போல்வானும், மலையெடுக்கலுற்ற இராவணனை மணிமுடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும், அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே.
 
 
திருப்பாசூர் குறுந்தொகை
 
குறிப்பு: பாசு என்றால் மூங்கில், மூங்கில் காடுகள் நிறைந்து இருந்தமையால் பாசூர் எனப்பட்டது, தொண்டைநாட்டு நலங்களுள் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் கடம்பத்தூர் அருகே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
 
இத்தல இறைவர் மூங்கில் காட்டிலிருந்து முளைத்த சுயம்பு மூர்த்தி, தீண்டாதிருமேனியர், அம்பிகையால் வழிபாடு செய்யப்பெற்றவர்
 
இத்தலத்தை பிள்ளை பெருமானாரும் அப்பர் பெருமானாரும் பாடிப்பரவியுள்ளனர், ஆனைக்காவில் வழிபட்ட சிலந்தி யானை பற்றிய செய்திகள் இவ்வூர் தாண்டகத்தில் வருவது எண்ணி மகிழத்தக்கது
 
இங்கு அப்பர் பெருமான் பாடிய குறுந்தொகையில் இருந்து ஒரு அழகிய பாடல் இது
 
பாடல்
 
வேதம் ஓதிவந்து இல்புகுந்தார் அவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி ஒன்றறியார் நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூர் அடிகளே.
 
பொருள்
 
பாதி வெண்பிறை அணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர், வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார் ; காதில் வெண்குழை வைத்த கபாலியார் ; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார்.
 
சற்குருநாத ஓதுவார் குரலில் கேட்டின்புறுங்கள்
 
 
திருவானைக்கா குறுந்தொகை0
 
குறிப்பு: “அப்பர் சுவாமிகள், மண்ணுயிர்கள் உய்யும் பொருட்டு சிவஞானபோதத்தை தேவாரத்தமிழாக விரித்தனர்”
 
அப்படி வேதம் தமிழாக விரிக்கையில் “மெய்யறிவு சிவமே” என்று உணராமல் உலகியலில் ஈடுபட்டுவரும் மக்களை கடுமையாக சாடி அழைத்து உபதேசம் செய்தல் அப்பரடிகளின் பண்பு
 
அவ்வகையில் உலகியலில் கண்ணெதிரே தோன்றுபவை நிகழ்பவை மட்டுமே உண்மை என்று கருதி, வினைக்கொள்கையையும் கடவுளையும் மறுத்து பொய்யறிவு பேசும் “நாத்திகக் கூட்டத்திற்கு சரியான உதாரணம் தந்து இடித்துரைக்கிறார்” சுவாமிகள் இப்பாடலில்
 
பாடல்
 
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன்று இன்றியே தன்னடைந்தார்க்கு எலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.
 
பொருள்
 
உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர் களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.
 
மயிலை ஓதுவார் பாடுகிறார் கேட்டின்புறுங்கள்
 
 
 
திருக்கோழம்பம் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள மங்கைநல்லூர் என்னும் ஊரில் இருந்து மேற்கே செல்லும் “கோமல் ரோடு” என்னும் சாலையில் 15கிமீ சென்றால் எஸ்புதூர் என்ற ஊர் வரும் அங்கிருந்து “திருக்கொழம்பியூர்” என்று கேட்டால் 1கிமீ தொலைவில் கிராமத்திற்குள் இருக்கும் கோயிலை அடையலாம்
 
திருவாவடுதுறை தலத்தில் இருந்தும் எளிதாக இத்தலத்தை அடையலாம், இங்கிருந்து தெற்கே 4 கிமீ செல்லவேண்டும், மயிலாடுதுறையில் இருந்து தனிவாகனம் அமைத்து கொண்டு செல்வது உத்தமம்
 
அம்பிகை பசுஉருவில் வழிபட்ட தலம் இது, பசுவின் குளம்படிபட்டு இறைத்திருமேனி வெளிப்பட்டமையால் *கோழம்பம்* எனப்பட்டதாம்
 
திருமால், அயன் உள்ளிட்டோருடன் சந்தன் என்ற வித்யாதரன் குயிலுருவில் வழிபட்ட தலமாகும்
 
அப்பரடிகளும் பிள்ளைப் பெருமானாரும்  பதிகம்பாடியுள்ளனர்
 
பாடல்
 
கயிலை நன்மலை ஆளுங் கபாலியை
மயிலி யல்மலை மாதின் மணாளனைக்
குயில் பயில்பொழிற் கோழம்பம் மேயவென்
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே
 
பொருள்
 
திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது.
 
கேட்டின்புறுங்கள்
 
திருநீலக்குடி திருக்குறுந்தொகை
 
குறிப்பு: தென்னலக்குடி என்று தற்காலத்தே அழைக்கப்பெறும் இத்தலம், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள “ஆடுதுறை” என்னும் இடத்தில் இருந்து தெற்கே 3கிமீ தொலைவில் அமைந்துள்ளது
 
வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் உள்ளிட்டோர் வழிபட்ட பதியாம் இதற்கு *தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்,பிரம தீர்த்தம், க்ஷீரகுண்டம்* என்னும் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன
 
இத்தலத்தில் உள்ள பலாமரம் காய்க்கும் வேளையில் சுவாமிக்கு பலாச்சுளைகள் நிவேதனம் ஆகும், இது தீராநோய்களை தீர்க்கும் மருந்தாம், ஒருவேளை பலாப்பழத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் வெளியில் எடுத்து வந்துவிட்டால் பழம் எந்தநிலையில் இருந்தாலும் உள்ளே வண்டரித்து உண்ணத்தகாத ஒன்றாகிவிடும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது
 
இத்தல இறைவர் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ள அதிசய மூர்த்தியாவார், திலதைலம் என்னும் நல்லெண்ணெய் கொண்டு அபிசேகித்தால் எத்தனை குடம் தைலமாயினும் இலிங்க பாணத்தால் உறிஞ்சப்பட்டு விடுவது எங்கும் காணாத அதிசயமாம்
 
இத்தலத்து பதிகத்தில் நீலக்குடி அரனார் நாமம் நவிற்றுவோர் பெறும் பயன்கள் யாவை என்று விளக்கும் அப்பரடிகள், “அமணர்கள் தம்மை கல்லினோடு பூட்டி கடலில் இட்டபோது உதவியது நீலக்குடியரன் நாமம் என்று பதிவு செய்யும் பாடல் இது
 
பாடல்
 
கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே.
 
பொருள்
 
கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக – நூக்கிவிட , என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன் .
 
தவறாமல் கேட்டின்புறுங்கள்
 
 
சிவதீபன்
📱9585756797
 

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *