பணத்தின் பின்னே ஒரு பயணம்…
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
என்பது வள்ளுவர் பெருமான் வாக்கு. பொருள் இல்லாமல் இன்று வாழ இயலாது. குடிக்கும் தண்ணீர் கூட பணம் கொடுத்து பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆனால், எவ்வளவு பணம் தேவை ? இங்கு தான் யாருக்கும் தெளிவு ஏற்படுவதில்லை. பணத்தை ஈட்ட முயற்சி செய்யும் போது, பணம் வர வர, நமக்கு குஷியாகவும் இன்பமாகவும் இருக்கும். அவ்வாறு பணத்தின் மீது ஆசை வைத்து அதன் பின்னால் செல்ல ஆரம்பித்து விட்டால், மெல்ல மெல்ல அது நம்முடைய எசமானனாகவும், நாம் அதற்கு அடிமையாகவும் மாறி விடுவோம்.
மனமானது ஆசைப் பட்டுக் கொண்டே இருக்கும். அதனின் ஆசையை அளவுகோலால் அளக்க இயலாது. பணம் வர வர ஆசையும் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில், நாம் ஆசைப் படும் பணம் கிடைக்காது. அப்போது தான், நாம் வித்தியாசமாக நடந்து கொள்வோம். கோபம், இயலாமை, போன்ற உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும். எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறம், நியாயம், மனிதாபிமானம் ஆகியவற்றை இழக்கத் தயாராகிவிடுவோம். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற நிலைக்கு அது நம்மைத் தள்ளி விடும். பலர் இந்த ஆரம்ப நிலையிலேயே அதை உணர்ந்து கொண்டு திருந்தி வாழ்வர். ஆனால், தொடர்ந்து பணத்தின் பின்னால் செல்பவர்கள், பல ஆண்டுகள் பாடுபட்டு கட்டிய தவம், புகழ், நற்பெயர் எனும் கோட்டைகள் அனைத்தும் ஒரே விநாடியில் நிலை குலைந்து, தகர்ந்து சுக்கு நூறாகிப் போகும். அதள பாதாளத்தில் விழுந்து விட்டதை உணர்வார்கள். நற்பெயரும் தவமும் ஒரு முறை இழந்து விட்டால், மீண்டும் இந்த பிறவியிலேயே அதை மீண்டும் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினம்.
ஆகவே, பணத்தின் பின்னால் சென்றால், அது நம்மைப் பாழுங்குழியில் தள்ளி விடும் என்பது கண்கூடாக காணும் உண்மை. மனிதனுக்கு 3 வேளை நல்ல உணவும், நல்ல தண்ணீரும், தூங்க நல்ல இடமும், உடுக்க நல் உடையும் இருந்தாலே போதும். அதற்கு மேல் அவனுக்குத் தேவையானது அனைத்தும் ஆடம்பரம் தான். ஆகவே, பணத்தை எது வரை பின்தொடர வேண்டும் என்பதை அறிந்து அது வரை மட்டுமே செல்ல வேண்டும். அதுவே உங்கள் வாழ்வை இனிதாக வைக்கும். அதிக பணம், நம் சிந்தனைகளை சிதறச் செய்வது மட்டுமின்றி, நம் செயல்பாடுகளையும் நம் வாழ்வின் நேரத்தையும் வீண் அலைச்சல்களில் அலைக்கழிக்கும். இப்பிறவியில் இவ்வுலகிலிருந்து பாவ புண்ணியங்களை மட்டுமே நாம் எடுத்துச் செல்ல முடியும். வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியாது.
தேவைக்கு அதிமாக இருக்கும் பணத்தை வைத்து புண்ணிய காரியங்கள் செய்யுங்கள். அன்னதானம், சிவாலய பணிக்கு உதவுதல், கோவில்களில் விளக்கிடுதல், பூசைக்கு வழியில்லாத கோவில்களுக்கு உதவுதல், கோ சாலைக்கு உதவுதல் போன்ற நற்பணிகள் செய்யுங்கள்.
திருச்சிற்றம்பலம்.