மகாசிவராத்திரி வழிபாடு ஏன் மிகவும் சிறப்பானது?
சைவ சமயத்தவரின் மிகுந்து போற்றும் திருநாள் மகாசிவராத்தியாகும். அந்த மகாசிவராத்திரி எப்போது வருகிறது, அதன் சிறப்பு யாது என்பதைக் காண்போம்.
மகா சிவராத்திரி எப்போது வருகிறது ?
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தேய்பிறை சதுர்த்தசி (அதாவது பௌர்ணமியிலிருந்து 14 ஆவது நாள்) அன்று இரவு சிவராத்திரி ஆகும். அதாவது இதை மாத சிவராத்திரி என்பர். மகா சிவராத்திரி என்பது மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவாகும்.
மகா சிவராத்திரியின் சிறப்பு யாது ?
ஊழிக் காலம் என்பது பல்வேறு உலகங்களும் சிவபெருமானிடத்தே ஒடுங்கும் காலமாகும். பேரூழிக்காலம் என்பது, சிவபிரானைத் தவிர, மற்ற அனைத்துமே எம்பெருமானிடம் ஒடுங்கும் நிலையாகும். அவ்வாறு ஒரு முறை ஒடுங்கியிருந்த போது, மீண்டும் இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து உயிர்களைக் காத்து அருளுமாறு கருணை கொண்டு, சிவபிரானின் சக்தி வடிவான தேவியானவள் சிவபிரானை நோக்கி இடைவிடாது தவம் செய்தாள். அதனை ஏற்ற சிவபிரான், மீண்டும் உலகங்களை உண்டாகச் செய்து உயிர்களைக் காத்து அருளினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உமையவள் எம்பெருமானை ஓர் முழு இரவும் மனதில் தியானித்துப் போற்றிய நாளே மகாசிவராத்திரியாகும்.
மகாசிவராத்திரி அன்று பல்வேறு காலங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக பதிவிடப்பட்டிருக்கிறது. மற்றொரு யுகத்தில் அடிமுடி தேடிய வரலாறு நிகழ்ந்த போது, இறைவன் ஒளிப்பிளம்பாய் அண்ணாமலையாராய் தோன்றி அருளியது மகாசிவராத்திரி அன்று தான். பிரம்மனும் திருமாலும் அறியாமையினால், தாமே பெரியவர் என்று கர்வங் கொண்டு தமக்குள் வாதிட்டுக் கொண்டனர். அவர்களின் அறியாமையைப் போக்க எண்ணிய சிவபெருமானார் அவர்கள் முன்பு நெடும் ஒளிப்பிளம்பாகத் தோன்றி, அவர்களில் யார் ஒருவர் தனது கால் அடியையோ அல்லது தலை முடியையோ காண்பவரே வென்றவர் என்று சொல்ல, திருமால் பன்றி உருக்கொண்டு பூமியைத் துளைத்து இறைவனின் திருவடியைத் தேடிச் செல்லலானார். பிரம்மனோ, அன்னப்பறவை உருக்கொண்டு, இறைவனின் திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார். பல யுகங்கள் கடந்தும் இருவராலும் அடியையோ முடியையோ காண முடியாத நிலை தோன்றவே, சிவபெருமானின் தலையிலிருந்து வந்த தாழம்பூ மலரிடம் தான் இறைவனின் முடியைப் பார்த்ததாக பொய்ச்சாட்சி சொல்லக் கேட்க, அம்மலரும் பொய் சாட்சி சொல்லி, பிரம்மனுக்கும் தாழம்பூ மலருக்கும் இப்பூவுலகில் கோவில் மற்றும் வழிபாடு கிடையாது என்று சாபம் பெற்றனர். இவ்வாறு திருவண்ணாமலையில் அனைவரும் காண, ஒளிப்பிளம்பாய் நின்ற சிவபெருமான் தோன்றியது மகாசிவராத்திரி அன்றாகும்.
மற்றொரு காலத்தில், ஒரு காலத்தில் ஒரு குரங்கானது வில்வ மரத்தின் மீது அமர்ந்து இரவு முழுவதும் வில்வ இலைகளைப் பறித்துக் கீழே எறிந்தது. அம்மரத்தின் அடியின் கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. வில்வ இலைகள் எல்லாம் இலிங்கத்தின் மீது அர்ச்சனையாக விழுந்தது. எதேச்சையாக நிகழ்ந்தாலும், அகமகிழ்ந்த சிவபிரான் அந்த குரங்கிற்கு காட்சி கொடுத்து அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்குமாறு அருளிச் செய்தார். இவை அத்தனையும் எதிர்பார்த்திராத அந்த குரங்கானது, இறைவனிடம், தான் சக்கரவர்த்தியாக பிறக்கும் போது, தனது முகத்தை குரங்காகவே இருக்குமாறு அருளிச் செய்யுமாறு கேட்டது. இதைக் கேட்டு, தன் பழைய பிறப்புக்களையும் நிலையையும் மறவாதிருக்க குரங்கு அவ்வாறு கேட்டதையுணர்ந்த சிவபிரான் சிரித்துக் கொண்டு அவ்வாறே அருளிச் செய்தார். அந்தக் குரங்கே அடுத்த பிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறந்து சிறப்புற்றது.
இத்தகைய சிறப்பு மிகுந்த மகாசிவராத்திரி அன்று நாமும் சிவ வழிபாடு செய்து பலன் பெறுவோம்.