மாபாதகத்தீரே.. புண்ணியங்கள் எப்போது செய்வீர் ? 5/5 (1)

மாபாதகத்தீரே.. புண்ணியங்கள் எப்போது செய்வீர் ?

இன்றைய உலகியலில் நாம் அறிந்தோ அறியாமலோ மகா பாதகங்கள் செய்வது மிக எளிதாகிப் போய்விட்டது. மனிதன் தன் அறிவு என்னும் பேரொளி விளங்கும் கோவிலை விட்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறான். இது விஞ்ஞான உலகம் என்கிறார்கள். விஞ்ஞானம் இத்தகைய மனிதர்களைக் கொடுக்கவா பிறந்தது ?

மரத்தை வெட்டுகிறான். ஆடு மாடுகளின் தோலை உரித்து எடுக்கிறான். விலங்குகளின் சதைகளைப் பிய்த்துத் தின்பதற்க்காகவே பண்ணை பண்ணையாய் உயிர்களின் சுதந்திரத்தைப் பறித்து அத்தனை பாதகங்களைச் செய்கிறான். சிறிய கூண்டுகளில் பல கோழிகளை அடைத்து அவற்றிற்க்கு ஊசி போட்டு உடலைப் பெருக்கச் செய்கிறான். மகா பாதகனும் செய்ய அஞ்சும் செயல்களை மனிதன் இன்று சர்வ சாதாரணமாகச் செய்து வருகிறான். இவனுக்குப் பெயர் பண்ணைக்காரன் அல்லது விவசாயியாம்.

கடலையாவது விட்டு வைத்தானா ? மீன்களின் மெலிதான நாக்குகளில் கூர்மையான ஊசியைக் குத்தியதும் அல்லாமல், அவற்றைத் தரதர வென்று அதோடு இழுத்தும் வருகிறான். கொதிக்கும் எண்ணையில் உயிரோடு போட்டு வடை சுடுகிறான். விலங்குகளைக் கொன்று பதமிடுவதற்க்காகவே பல்வேறு விஞ்ஞான கொலைகாரக் கருவிகளைப் படைத்துள்ளான். ஒரு விலங்கைக் கூட விட்டு வைக்க வில்லை. பல விலங்கினங்கள் இந்த உலகில் இருந்து நிரந்தரமாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

பொய் சொல்வதற்க்குப் பயப்படுவதில்லை. கேட்டால், நான் அரிச்சந்திரனாக இருக்க முடியாது என்று ஒரு காரணம் வேறு. இன்று எந்த ஊடகங்கள் உண்மை சொல்கின்றன, எது பொய் சொல்கிறது என்று கணிக்கவே முடியாத நிலைக்குச் சென்று விட்டன. அரசியலில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும் பொய்கள் ஊடுருவிவிட்டன.

போதை வஸ்துக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சுய மரியாதை என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகள் மது அருந்தி வலம் வரும் வீடியோக்களும் வந்து விட்டன. சுய மரியாதை இயக்கம் என்ற பெயரில் ஒழுக்கத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள் இன்று தைரியமாக பல பாதகச் செயல்களை அரங்கேற்றி வருகின்றன. ஒழுக்கம் என்பது நாம் அனைவரும் நல்ல சமுதாயமாக இன்பமாக வாழ வகுத்த கட்டுப்பாடுகள் என்பதை யாரும் இக்காலக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதேயில்லை. கல்வியின் நோக்கம் எங்கோ திசை மாறிச் சென்று விட்டது. கல்வி என்ற பெயரில் கலன்களில் அச்சடிக்கப்படும் களிமண்ணாக குழந்தைகளை அமுக்கப்படுகின்றனர்.

சிந்தித்துப் பார்க்க இயலாத உறவுகள் எல்லாம் இங்கு நடக்கிறது. ஊடகங்களைத் திறந்தால், இதன் பட்டியலை வாசிக்கவே இவர்களுக்கு நேரம் போதவில்லை. இயற்கை வளங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆறுகள், மலைகள், காடுகள் ஆகியவற்றின் சீவன்கள் அறுக்கப்படுகன்றன. அநியாயம், அட்டூழியம், எல்லாவற்றிலும் ஊழல் என்று அனைத்தும் தாண்டவமாடுகின்றன. இவர்களுக்கும் ஓர் அரசன் இருக்கிறான். பல மந்திரிகள் இருக்கிறார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பாதகங்கள் வெகு சில. இங்கே நடந்து கொண்டிருக்கும், சொல்லவே வாய் கூசும் பாதகங்கள் இன்னும் பலப்பல. கள் அருந்துதல், பொய் சொல்லுதல், களவு செய்தல், கொலை செய்தல், குரு நிந்தனை செய்தல் ஆகிய ஐந்தும் மகா பாவங்களாக நம் சாத்திரங்கள் சொல்கின்றன. மேலும், பிற மாதர்களை இச்சித்தல், கோபம், கடுஞ்சொல் உயபோகித்தல், பொறாமை, பிறர் பொருளை அபகரித்தலும், அபகரிக்க எண்ணுதலும், மூர்க்கம், வஞ்சகம் செய்தல், ஒருவர் நமக்குச் செய்த உதவியை நன்றி மறத்தல், உயிர்களின் மேல் இரக்கம் இல்லாமை, நட்பைப் பிரித்தல் ஆகியவையும் மகா பாதகங்களாகும்.

இத்தனை பாதகங்களுக்கு மத்தியிலும் இவை அத்தனையிலும் சிக்காமல், இல்லற தர்மத்தோடும், பய பக்தியோடும் இறைவனை நோக்கிப் பயணிப்போரும் பலர் உளர். இந்த பாதகச் செயல்களை முதலில் பாவம் என்று உணர்ந்து அவற்றைச் செய்யாது தவிர்ப்பது தான் முதலில் செய்ய வேண்டிய ஒன்றாகும். பின்னர், முன்னர் செய்த பாதகங்களுக்கு வினை அறுக்க வேண்டும். நாம் செய்த அத்தனை பாதகங்களுக்கும் வினை அறுத்தே தீர வேண்டும். மேலும் பாதகங்கள் செய்யாமல் தடுக்கவும், செய்த பாதகங்களுக்கு வினைகளைக் குறைத்துக் கொடுக்கவும் இறைவன் அருளியது தான் உருத்திராக்கம், திருநீறு மற்றும் ஐந்தெழுத்து மந்திரங்களும். இந்த கருவிகளைப் பயன்படுத்தி, இனிமேல் மகா பாதகங்கள் செய்யாமல் தப்பித்து, செய்த பாவங்களையும் அறுத்து நாம் உய்வடைவோம். அபாயம் அகல நாம் சிவாயநம என்று சொல்லுவோம்.

பிற உயிர்களை மதிக்க வேண்டும். பிற உயிர்களின் துன்பத்தைத் தன்னுடைய துன்பம் போல் கருத வேண்டும். ஞானிகள் அனைவருமே, பிற உயிர்களை நேசித்து அவர்களின் துன்பத்தைத் தன்னுடையதாக கருதுபவர்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
.

ஒழுக்கம் எல்லோருக்கும் சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரை விட மேலானதாகக் கருதப்படும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

பிற உயிர்களைக் கொன்று அதன் சதையைப் பிய்த்துத் தின்னமால் புலால் மறுப்பவனை, அனைத்து உயிர்களும் தொழும்.

மகாபாதகங்களைச் செய்யாமல் அடிப்படை ஒழுக்கத்தோடு வாழ்வதை நம் சமய நூல்களும் வேத நூல்களும் வலியுறுத்திக் கூறுகின்றன. இவற்றின் அடிப்படையை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நம் தலையாய கடமையாகும்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *