அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா? 4.75/5 (4)

அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா?

நாம் பிறந்து முதலில் உலகியலை நன்கு பழகுகின்றோம். அது தான் நம் உடம்பை வளர்க்கவும், வயிற்றுப் பசியைப் போக்க நல்ல வேலையையும் கொடுக்கிறது. பின்னர், நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் பக்திப் பாடல்களைக் கேட்கிறோம், பாடுகிறோம். நம் தேவைகளை தேவாலயம் சென்று முறையிடுகிறோம். இறைவன் இருக்கிறார் என்பதை நம் பெற்றோரும், நண்பர்களும் கூறுவதால், அதை நம்புகிறோம். அவர்கள் செய்யச் சொல்வதை அப்படியே செய்கிறோம். நமக்கு இறைவன் திருவுருவத்தையும் அவனுக்கு செய்யும் பூசைகளையும் மிகவும் பிடித்து விடுகிறது. இறைவனை நேசிக்க ஆரம்பிக்கிறோம்.

இன்னும் நம் அறிவு முதிர்வு அடையும் போது, இறைவனைப் பற்றியும் இந்த பிரபஞ்சம் பற்றியும் நாமே ஆராய்ச்சி செய்கிறோம். பெரியோர்களும் ஞானிகளும் பேசுவதைக் கேட்டு அறிகிறோம். இறைவன் இல்லாமல் இங்கு ஓர் அசைவும் அசையாது என்ற உண்மையை நாமே நம் ஆய்வின் மூலமாக அனுபவப்பூர்வமாக உணர்கிறோம். அப்போது தான் இறைவன் இருப்பதையும், அவன் எப்படியெல்லாம் இருக்கிறான், எப்படியெல்லாம் பக்தருக்கு அருள் புரிகிறான் என்பதையெல்லாம் நாமே நேரடியாக உணர ஆரம்பிக்கிறோம். நம் மனதிலே அடுக்கடுக்கான கேள்விகள். அனைத்திற்க்கும் பதில் நாடி கிடைத்தும் விடுகிறது. இறைவன் மீது அன்பு பெருகுகிறது. நமக்கும் அவனுக்கு உள்ள தொடர்பே நிரந்தரம், மற்று எல்லாம் சில காலமே என்பதை உணர்ந்து, இறைவனுக்கு அடியவனாக நம்மைக் கருதி, சிவப் பணிகளைச் செய்கிறோம்.

இன்னும் சிலருக்கோ சிறுவயதிலிருந்து அதிதீவிர அன்பும் பக்தியும் வந்து விடுகிறது. ஒவ்வொருவருக்கும் எப்போது பக்தி வரும், அன்பு பெருகும் என்று நாமறியோம். இறைவனே அறிவார். அனைத்திற்க்கும் அடிப்படையாக இருப்பது, இறைவனை உணர்வதும், அவன் மீது அன்பு பெருகுதலும் தான். இறைவனை உணர்ந்து நம்மை முழுமையாக இறைவனிடம் கொடுத்து விடுவதைத் தான் இறைவன் ஆட்கொண்டுவிட்டார் என்கிறோம். நம் குருமார்கள் சொல்லிய நெறிகளின் படி வாழ்கிறோம். அவ்வாறாக, நமக்கும் இறைவனுக்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துகிறோம். நம் அடிப்படை உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு நாம் நம் சமுதாயத்தைச் சார்ந்து வாழ்கிறோம். அந்த சமுதாயமே நமக்குக் கோவில் கட்டியுள்ளது, தேர் கட்டமைத்துள்ளது, குளத்தை சீர் படுத்தி வைத்திருக்கிறது. ஆங்கே, இறைவனுக்கு அடியார்கள் எண்ணற்றவர்கள் இருக்கின்றார்கள். நல்ஞானம் அருளும் குருமார்களும் இருக்கிறார்கள்.

அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து அடியார்களை வணங்குகிறோம். நமக்கு வழிகாட்டும் நெறியைக் கடைப்பிடித்து வாழ்கிறோம். அவ்வாறு வாழ்பவர்களின் இலக்கணமாக பத்தைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது அக இலக்கணம் பத்து. புற இலக்கணம் பத்து. இதைத் திருமுறைகளும் பிற நூல்களும் சொல்கின்றன.

பத்து கொலாம் அடியார் செய்கை தானே – திருமுறை 4:18:10

பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் – திருமுறை 6:15:2

அடியார்களின் புற இலக்கணம் பத்து. அதாவது புறத்தே காணுமாறு அமையும் இலக்கணம் பத்து. இவற்றை உபதேச காண்டம் என்ற நூல் தெளிவுபடுத்தியுள்ளது.

1) திருநீறும் கண்டிகையும் அணிதல்
2) பெரியோரை வணங்குதல்
3) சிவனைப் புகழ்ந்து பாடுதல்
4) சிவநாமங்களை உச்சரித்தல்
5) சிவபூசை செய்தல்
6) சிவபுண்ணியங்களை செய்தல்
7) சிவபுராணங்களை கேட்டல்
8) சிவாலய வழிபாடு செய்தல்
9) சிவனடியாரிடத்தன்றி உண்ணாமை
10) சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல்

அக இலக்கணம் என்பது அடியார்களின் மனத்துள்ளேயும் உணர்வுள்ளும் ஏற்படும் மாற்றங்களாகும். சிவபெருமானது புகழைக் கேட்குங்கால்,

1) மிடறு விம்மல் (மிடறு-கழுத்து)
2) நாத்தழுதழுத்தல்
3) இதழ் துடித்தல்
4) உடல் குலுங்கல்
5) மயிர் சிலிர்த்தல்
6) வியர்த்தல்
7) சொல்லெழாமை
8) கண்ணீர் அரும்புதல்
9) வாய்விட்டழுதல்
10) மெய்மறத்தல்

என்பனவாகும். சிவபெருமானைப் பற்றி நினைக்கும் போதும், கேட்கும் போதும், தரிசனஞ் செய்யும் போதும், இவை தானாக நிகழும்.

அடியார்கள் அனைவரும் பத்தர்களே. பத்தர் என்ற சொல்லும் அடியார் என்ற சொல்லும் மாறி மாறி திருமுறைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இறைவனை உணரும் தொடக்க நிலையில் இருப்பவரை பக்தர் என்றும் இன்னும் ஆழச் சென்று சிவபெருமான் மீது அன்பு பெருக்கி, நெறியோடு வாழ்பவர் அடியார் என்று தோன்றினாலும், அனைத்தும் சிவன் பால் அன்பே. ஆகவே, நான் பக்தரா, அடியாரா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், நாயன்மார்களின் வரலாறுகளைத் தொடர்ந்து படித்தும், திருமுறைகளை தினம் ஓதியும், சிவ புண்ணிய செயல்களில் ஈடுபாடு கொண்டு செய்தும் வந்தால், அதுவே, இறைவன் திருவருளை நமக்கும் காட்டும்.

Please rate this

2 thoughts on “அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *