எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிகள் சூழ்ந்து நின்று அலற, சிறு பிள்ளையார் திருவருளால் வெற்றி கொண்டார்.
நீங்கள் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று சாலையில் தோன்றிய தீவிரவாதிகள் உங்கள் வாகனத்தை வழிமறித்து உங்களையும் உங்களோடு வந்த ஒரு பத்து பேரையும், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கோ மலையில் ஏறி இறங்கி காடுகளைத் தாண்டி ஏதோ ஒரு பெரிய குகை போன்ற இடத்தில் சுற்றிலும் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் காவல் இருக்க, உங்களை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். மிகப் பெரிய அறையில் சுற்றிலும் எங்கும் தீவிரவாதிகள் சூழ்ந்து இருக்க, உங்கள் அனைவரையும் அங்கே, கைகளைக் கட்டி அறையின் ஒரு பகுதியில் நிற்க வைக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராக கோஷம் இடுகிறார்கள். உங்களை அடிக்க வேண்டும் என்று ஒருவன் கத்த, இன்னொருவன் வெட்டுங்கள் என்று கத்த, இன்னும் ஒருவன் ஆயுதத்தை எடுத்து உங்களை நோக்கி இவர்களைக் கொல்லுங்கள் என்று உங்களை நோக்கிப் பாய்ந்து ஓடி வருகிறான். உங்களுக்கு எப்படி இருக்கும் ?
ஓடி வந்தவனை இருவர் பிடித்துக் கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் அறையில் முழு அமைதி. இன்னொரு கதவு திறக்கப்பட, அதிலிருந்து கோரமாக ஒருவன் வருகிறான். அவனைப் பின்தொடர்ந்து இன்னும் நாலைந்து கோரமானவர்கள் வருகிறார்கள். அநேகமாக, அவன் தான் இந்த கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும். அவன் வந்தவுடன் அறையின் நடுவில் இருக்கும் பெரிய இருக்கையில் அமர, அவனைப் போற்றும் வகையில் அனைவரும் ஒன்று போல கோஷமிடுகிறார்கள். அந்த சத்தமே மரண ஓலமாக நமக்குக் கேட்கிறது. அந்த தலைவன் உங்களைப் பார்த்து கோபமாக ஏதேதோ சொல்கிறான். அவன் பேசும் மொழி உங்களுக்குப் புரியவில்லை. ஆனால், உங்களை திட்டுகிறான், கோபமாக கொக்கறிக்கிறான் என்று மட்டும் புரிகிறது. அடுத்து என்ன செய்வார்களோ தெரியவில்லை. இன்று இந்த குகையில் இருந்து நீங்கள் உயிருடன் திரும்பிச் செல்ல வாய்ப்பே இல்லை. மரணத்தின் விளிம்பில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்களை எப்படிக் கொல்வார்கள் என்றே தெரியவில்லை. மனது உடல் அனைத்தும் நடுங்குகிறது. இறைவா என்று மனம் இறைவனை வேண்டுகிறது. உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை அப்படியே பதிவு செய்து கொள்ளுங்கள்.
இது ஒரு கற்பனையான சித்திரம் என்றாலும், இவ்வாறு நிகழக்கூடிய வாய்ப்புகள் இன்று உள்ளது. இதை விட கொடூரமான நிகழ்வுகள் எல்லாம் இன்றைய உலகில் நிகழ்ந்து வருவதை நாம் நம் கண்கூடாகவே செய்திகளில் காண்கிறோம். அமர்நாத் யாத்திரை சென்று இவ்வாறு மாட்டிக் கொள்ளாமல், நீங்களே, இந்த தீவிரவாதிகளை நல்வழியில் திருத்தும் ஒரு நல்ல உயரிய எண்ணம் பொருட்டு, உங்கள் உயிரையும் துச்சம் என நினைந்து நீங்களே தீவிரவாதிகளின் கூடாரத்தைத் தேடிச் செல்வீர்களா ? அவ்வளவு தைரியமும் வலிமையும் உங்களுக்கு இருக்கிறதா ?
நிற்க.
இந்த கற்பனையான நிகழ்வுக்கும் இனி நாம் பார்க்கப் போகும் வரலாற்று நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நிகழ்வானது பிறருக்கு நடக்கும் போது, அது நமக்கெல்லாம் படிக்கக்கூடிய கதையாகவும், அதே நிகழ்வு நமக்கே நடக்கும் போது அந்த உணர்வுகளின் ஊடே நாமே நீந்திச் செல்லும் போது ஏற்படும் உணர்வுகளும் விளைவுகளையும் நாமே அனுபவிப்பது வேறு விதமாக இருக்கும். உணர்வுப்பூர்வமாக நாம் வரலாற்றைப் பார்க்கும் போது தான் அதன் உண்மை நமக்கு நன்றாகப் புரியும். அந்த உணர்வுகளை எடுத்துக் காட்டவே மேலே கற்பனையான ஒரு நிகழ்வை உங்கள் சிந்தனையை தட்டி எழுப்ப, இன்றைய உலகியலில் நடப்பது போன்ற நிகழ்வை எடுத்துக் காட்டியுள்ளேன். மற்ற படி மேலேயுள்ள நிகழ்வுக்கும் நம் வரலாறுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
வளம் மிகுந்திருந்த நம் செல்வங்களைக் கவர்வதற்க்கு வேறு இடங்களில் இருந்த படையெடுத்து வந்தவர்கள் தங்கள் மொழி பண்பாடு சமயம் ஆகியவற்றை நம் மீது திணித்தனர். அவ்வாறு செய்யத் துணிந்தவர்கள் முதலில் நாட்டின் அரசனை அணுகி அவனுக்கு தங்கள் போதனைகளை போதித்து அவனை தமது சமயத்திற்க்கு மாற்றுவர். உலகிலேயே மிக உயரிய பண்பான, வந்தார் யாவரையும் இன் முகத்துடன் வரவேற்று, விருந்தோம்பி, அவர்களை வாழ வைக்கும் உயரிய பண்பை நாம் பெற்றிருந்ததால், அனைவரும் நம் ஊருக்குள் எளிதாக பிரவேசம் செய்தனர். மன்னரைச் சந்தித்தனர், தங்கள் சமயம் மாற்றினர். இவ்வாறு பாண்டிய நாடு சமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சிவ வழிபாடு குன்றியது. சிவாலயங்கள் வழிபாடு இன்றி இருளாகக் கிடந்தன.
மன்னன் சமண குருமார்களின் பேச்சைக் கேட்டு யாவும் செய்வார். ஆனால், அவனது மனைவியோ, சோழ நாட்டு இளவரசி. அவளும் அமைச்சர் ஒருவரும் தான் இன்னும் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். சமண குருமார்களின் வழிகாட்டுதல் படி, கண்டுமுட்டு கேட்டுமுட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. திருநீறு பூசியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இத்தகைய சூழலில் தான், அரசியின் விண்ணப்பம் கேட்டு, சைவ சிறுவர் ஒருவர் தன் அடியார் கூட்டத்தோடு மதுரை வந்தார். சிறுவர் என்றால், சாதாரண சிறுவர் அல்ல. மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதே, உமையவளே நேரில் வந்து தந்த ஞானப்பாலை உண்டு சிவஞானம் பெற்றவர். சமணர்களின் கோட்டையான மதுரைக்கு வந்தார். சமணர்களால் அவர் தங்கியிருந்த மடம் தீ வைத்து சூறையாடப்படுகிறது. அவரது தெய்வ வாக்கால், மன்னருக்கு வெப்பு நோய் ஏற்படுகிறது. அந்நோயை சமணர்களால் தீர்க்க இயலவில்லை. அரசியின் யோசனைப் படி, அந்த சிறுவர் இந்த வெப்பு நோயைத் தீர்க்க அரண்மனை வருகிறார்.
சுற்றிலும் சமணர்கள். அவர்கள் தங்கள் சமய கொள்கைகளை உரக்கச் சொல்கின்றனர். இந்த சிறுவருக்கு எதிராக கூச்சலிடுகின்றனர். இவருக்கு துணையாக இங்கு இருப்பவர் அரசியாரும் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் தான். மற்று யாவரும் இவரது வருகையை விரும்பாதவர்கள். இவரை எப்படியாவது இங்கிருந்து அகற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த சூழலை தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணத்தில் விரித்துரைப்பதைக் காண்போம்.
பாண்டிய மன்னன் சமணனாக இருப்பினும், தன் மனைவியை சைவராக இருந்து தன் சமய கடைமைகளை ஆற்ற அனுமதி தந்த பெரியோன். சிறு பிள்ளை செம்பொன் நிறத்தில் ஒளி வீசும் மணிப் பீடத்தில் எழுந்து அருளினார். பிள்ளையார், அரசியாருடைய அன்பிற்க்குரியவர். வேற்று சமயத்தவர் ஒருவர் சமணர்களின் கோட்டையான தலைநகர் திருஆலவாய் மதுரை மாநகரிலேயே நுழைந்து, அதுவும் மன்னனிம் அரண்மனைக்குள்ளேயே வந்து ஒளிவீசும் பீடத்தில் அமர்ந்திருந்தால், யாருக்குத் தான் பொறாமை வராது? அத்தனை பொறாமையிலே, இந்த காட்சியைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல், அச்சம் கொண்டு, அந்த அச்சத்தை மறைத்து துள்ளி எழுவது போல வந்து தங்கள் கண்கள் சிவக்க பலவாறு கூறினார்கள்.
காலை எழும் சூரியன் அழகிய கதிர்களோடு மிகவும் ஒளி பொருந்தி இருக்கும். அத்தகைய சூரியனின் ஒளியை கரு முகில்கள் மறைத்து விட முடியுமா ? அவ்வாறு சூரியனை மறைக்க முயலும் கருமுகில் போல பிள்ளையாரைச் சூழ்ந்து மறைக்க முயன்றனர் அமணர்கள். தங்கள் புனித நூலான ஆருகத நூலில் இருக்கும் வசனங்களைப் பிள்ளையார் முன் எடுத்துக் கூறி தங்களை தலைகளை அசைத்துக் குரைத்தார்கள்.
மொத்தமாகத் திரண்டு எழுந்து தன்னை நோக்கிக் குரைத்த சமணர்களை மிகவும் பொறுமையுடன் கேட்ட பிள்ளையார், உங்கள் நூல் கூறும் பொருள்களின் முடிவை உள்ளபடியே கூறுங்கள் என்று சொன்னார். உடனே, பலரும் எழுந்து துள்ளிக் குதித்துக் கொண்டு பிள்ளையாரைச் சுற்றி நின்று கொண்டு தங்கள் நூலின் வசனங்களை ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் அலறிக் கதறினர். சிறு பிள்ளையை கருத்த மேனியுடைய கொடிய சமணர்கள் சூழ்ந்து கொண்டு கத்துவதை எந்த தாய் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாள் ? தாயுள்ளம் கொண்டு மங்கையர்க்கு அரசியார், அதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல், உடனே எழுந்து மன்னரை நோக்கி, மன்னா, இனிய அருள் பெற்ற இந்த பிள்ளையாரோ சிறுவர். ஆனால், சமணர்களாகிய இவர்கள் எண்ணற்றவர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். முதலில் பிள்ளையார் உங்கள் வெப்பு நோயின் மயக்கம் நீங்குமாறு அருள் செய்வார். பின்னர், இந்த அமணர்கள் வாது செய்ய வல்லவராக இருந்தால், பின்னர் வாது செய்யட்டும் என்று கூறினார். பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமான், பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் (திருவருள் பெற்று ஆட்கொள்ளப்பட்ட பின்னர் நின்றசீர் நெடுமாற நாயனார்), மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறை நாயனார் ஆகிய நால்வரும் நம் அறுபத்து மூவர்களுள் உள்ளவர்கள் என்பது நமக்குத் தெரிந்த விடயம்.
எத்தகைய காலத்திலும், நம் சமய உண்மைகளை நன்கு அறிந்து குற்றமறக் கற்றும், பழங்குருக்களிடம் உபதேசம் பெற்றும், குருவருளோடு திருவருள் பெற்றும், அந்த உண்மைகளைத் தைரியமாக எவரிடத்திலும் எங்கும் எந்த சூழலிலும் எடுத்துக் கூறும் வல்லமை மற்றும் இறையருள் பெற்றோர் வேண்டும். உலகமயமாக்கல் காரணமாக, உலகம் எங்கும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அஞ்ஞான மதங்கள் இன்று நம்மைச் சூழ்ந்துள்ள வேளையில், ஒளி பொருந்திய சூரியனாக திருவருள் பெற்றோரை நமக்கு இறைவன் அருள வேண்டும், அவர்களை நம் காலத்தில் நாமும் காண வேண்டும் என்பதே அன்புடையோர்களின் எண்ணமாக இருக்கிறது.
திருச்சிற்றம்பலம்.