எம்பிரான் திருஞானசம்பந்த மூா்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம். 5/5 (1)

சிவாயநம.

திருச்சிற்றம்பலம்.

📚 எம்பிரான் திருஞானசம்பந்த மூா்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்.

📕 மூன்றாம் திருமுறை

📖 67.திருப்பிரமபுரம்.

🎼 பண் : சாதாரி.

🎼 பாடல் எண் : 10

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா

ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்

கீழிசைகொண் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்

காழியசில் காழிசெய வேழுலகி லூழிவளர் காழிநகரே.

🔴 பொழிப்புரை :

பாழியில் தங்கும் , யானையை ஒத்த சமணர்களும் , கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள் . ஏழிசையும் , யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும் , மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய இந்திரனும் , மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று , தன் குற்றம் நீங்குமாறு அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல் சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும் பெருமையுடைய காழிநகராகும் .

🔵 குறிப்புரை :

பாழி உறை – பாழியில் தங்கும் , வேழம் நிகர் – யானையை யொத்த , பாழ் அமணர் – பாழ்த்த அமணர்களும் . சூழும் – கூட்டமாக உள்ள , உடல் ஆளர் – உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் , உணரா – உணராத , ஏழின் இசை – ஏழு சுரங்களையுடைய , யாழின்மொழி – யாழ் போற் பேசுகின்ற , ஏழையவள் – பெண்ணாகிய அம்பிகையுடன் , வாழும் இறை – வாழ்பவராகிய சிவபெருமான் , தாழும் – தங்கும் , ( இடம் ஆம் ) கீழ் ( உலகில் ) கீழ் உலகில் , சூழ் – சூழ்ந்த அரசு – அரசர்களும் , இசைகொள் – புகழ்கொண்ட , மேல் உலகில் மேல் உலகத்தில் , வாழ் – வாழ்கின்ற , அரசு – அரசனாகிய இந்திரனும் ; வாழ – ( காளியின் துன்புறுத் தலினின்று ) வாழும் பொருட்டு ( நடனம் ஆடுதலில் ) அரனுக்கு சிவபெருமானுக்கு , ஆழிய – ஆழ்ந்த , தோற்ற , சில்காழி – சிலகோவைகளையுடைய மேகலாபரணம் அணிந்தவளாகிய அக்காளி , செய – தன் குற்றம் நீங்கும்படி வந்துபோற்ற , அருள் பெற்ற செயல் ஏழுலகில் – சப்த லோகங்களிலும் , ஊழி – பல ஊழி காலமாக , வளர் – பெருகும் காழிநகர் .

🔥 சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.

அடியேன்.

📖 சிவ.விஜயகுமாா்.

Please rate this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *