ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம் நம் திருக்கோவில்களில் தினமும் ஓதுவது மரபாகும். எவை ஐந்து?
குரு வணக்கம், விநாயகர் துதி, முருகர் துதி, அம்பாள் துதி, பன்னிரு திருமுறைகள், வாழ்த்து என்று வரிசையாக இறைவன் முன்னர் பாடுவது மரபு. இருப்பினும் நேரம் சுருக்கமாக இருக்கும் காலத்தில், ஐம்பெரும் புராணம் எனும் பஞ்ச புராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடுவது சைவ மரபு. அவ்வாறாக, இறைவன் திருமுன் நின்று கொண்டு பஞ்ச புராண பாடல்களைப் பாடுங்கள். நீங்கள் உங்கள் சொந்த குரலிலே பாடுவதை இறைவன் ஒரு குழந்தை பாடுவதைப் போல ரசித்துக் கேட்பான். அதற்கான இரு தொகுப்புகள் இங்கே.
அச்சிட்டு, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் ஒரு பக்க பதிவாக PDF பதிவு இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
பஞ்ச புராணம் தொகுதி ௧
நால்வர் துதி
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே
தேவராம்
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
திருவாசகம்
வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
திருவிசைப்பா
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே
திருப்பல்லாண்டு
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in
பஞ்ச புராணம் தொகுதி ௨
குரு மரபு வாழ்த்து
கயிலாய பரம்பரையில் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடூழி தழைக மாதோ.
விநாயகர் துதி
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
தேவராம்
திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும் திருவெண்நீறு அணியாத திரு இல் ஊரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினோடு பலதளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்சங்கர் ஊதா ஊரும் விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவைஎல்லாம் ஊர் அல்ல அடவி காடே.
திருவாசகம்
பாட வேண்டும்நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்கு
ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்து ஆடும் நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக் கூடு நீக்கிஎனைப் போற்றி பொய்யெலாம்
வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்து அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே
திருவிசைப்பா
அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர் பணைமுலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.
திருப்பல்லாண்டு
குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்
உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in