பொருள் உணர்ந்து பாடல்கள் படிக்க முதலில் தமிழ் சொற்களின் பொருளை அறிவோம். திருமுறை பதிகங்களில் வரும் தமிழ் சொற்களின் பொருள்
ஆங்கில சொற்களைத் தவிர்த்து தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் நம் தமிழ் பேச்சை வலுவடையச் செய்யலாம். திருமுறைகள் திருப்புகழ் படித்தாலே நன்றாக ஆங்கிலம் கலவாத தமிழில் பேசலாம். திருமுறைகளில் உள்ள சில சொற்கள் தற்போது வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அவை எல்லாம் அருமையான சொற்கள். திருமுறை பதிகங்களை நன்றாக புரிந்து பொருள் உணர்ந்து படிக்க, முதலில், அவற்றை சீர் பிரித்து சொற்களுக்கு உரிய பொருளை உணர்ந்து படிக்க வேண்டும். அதற்கு உதவியாக இருக்கும் வண்ணம் சில பதிகங்களில் வரும் சொற்களுக்குரிய பொருளை இங்கே காண்போம். தொடர்ந்து திருமுறை படியுங்கள். தமிழ் புலமையும் திருமுறை திருவருளும் வளரும். ஆங்கிலம் கலவாமலும் பேச இயலும்.
எட்டாம் திருமுறை திருவாசகத்தின் முதல் பதிகம் சிவபுராணத்தில் வரும் சில சொற்களுக்குரிய பொருள்.
சொல் | பொருள் |
சிவபுராணம் | |
தாள் | திருவடி – இறைவன் திருவடியை குறிக்கும். |
கழல் | பாதம், திருவடி – இறைவன் திருவடி |
கோகழி | திருப்பெருந்துறை |
குருமணிதன் | குருவாகிய மாணிக்கம் |
ஆகமம் | 28 ஆகமங்கள் |
ஏகன் | ஒருவன் |
பிஞ்ஞகன் | 1. கங்கை, பிறை, மலர்கள், விரிசடை என்று தலைக்கோலம் உடையவன். 2.பிஞ்சாகிய அணுவிலும் உறைபவன். பிஞ்சு + அகன். பிரபஞ்சத்திற்கு மூலமான அணுவிலும் சிறிய பொருளிலும் இருப்பவன். இது சிவனையே குறிக்கும். |
சேயோன் | சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன். குறிஞ்சி கடவுளார் சேயோன். இது சிவனை குறிக்கும். |
கோன் | அரசன் |
சீரார் பெருந்துறை | திருப்பெருந்துறை |
தேசன் | ஒளிமயமானவன், பெரியோன் |
கண்ணுதலான் | நெற்றிக் கண்ணை உடையவன். (சிவன்) |
நுதல் | நெற்றி |
மிக்காய் | கொண்டுள்ள(வன்) |
விருகம் | மிருகம் |
வீடுபேறு | மறுபிறவி இல்லாத மோட்ச நிலை. |
விடை | காளை சிவனின் வாகனம் நந்தி |
விடைப்பாகன் | காளை வாகனமுடைய சிவன் |
நேயம் | அன்பு |
நிமலன் | அழுக்கற்றவன், குற்றமற்றவன் |
சீர் | செல்வம், நன்மை, அழகு, பெருமை, புகழ், இயல்பு. |
இயமானன் | யாகம் செய்விப்பவன் |
பெம்மான் | பெருமான், சிவன் |
கன்னல் | கரும்பு |
தேற்றனே | தெளிவானவனே |
குரம்பை | உடல் |
அடுத்து சொற்றுணை வேதியன் என்ற திருநாவுக்கரசர் பெருமான் பாடலில் வரும் சில சொற்கள்.
சொற்றுணை வேதியன் பதிக பாடல் | |
அருங்கலம் | கலம் – மண்பாண்டம், பொருள். அரிய கலம். அணிகலன். பெருமை மிக்கது, சிறப்பானது. |
கோ | அரசன் |
கோட்டமில்லது | குற்றமில்லாது – செங்கோல் வளையாமல் ஆட்சி செலுத்துதல். |
அழல் | நெருப்பு, தீக்கொழுந்து |
நண்ணி | நெருங்கி, அணுகி |
இரந்து | கெஞ்சி பெறுதல், தயவுடன் வேண்டல் |
ஆறங்கம் | வேதாங்கம் ஆறு – சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம். அரசர்க்குரிய – படை குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு உறுப்பு. |
சலமிலன் | சலம் – குற்றம், கோட்டம். சலமிலன் குற்றமற்றவன் |
வீடினார் உலகினில் | உலக பற்றை விட்டவர் |
விழுமிய | செழித்த, வளமான, உயர்ந்த |
இல்லக விளக்கது | வீட்டில் இருக்கும் புற விளக்கு. இல்+அக விளக்கு – இவ்வுடம்பினுள் இருக்கும் அக விளக்கு நமசிவாய, உள்ளத்து இருளைப் போக்கும். |
மாப்பிணை | மான் குட்டியை கையில் ஏந்திய பெருமான் |
அடுத்து சுந்தரர் பெருமான் அருளிய பித்தா பிறைசூடி பாடலில் சில சொற்கள்
பித்தா பிறை சூடி பெருமானே பாடல் | |
எத்தான் | என்ன ஆனாலும் |
வேயார் | மூங்கில் காடு |
பெற்றம் | விடை, காளை |
யாதன் | அறிவில்லாதவன் |
தாதார் | பூக்களின் மகரந்தம் |
அழல் | நெருப்பு, தீக்கொழுந்து |
மறையுடையாய் தோலுடையாய் திருஞானசம்பந்தரின் பதிகம்
மறையுடையாய் தோலுடையாய் பதிகம் | |
வார்சடை | நீண்ட சடை |
மேயவனே | உறைபவனே |
கனைத்தெழுந்த | அதிர வைத்து எழுந்த, முழங்கிய |
நிமலா | குற்றமற்ற, தூயவன் |
வவ்வேல் | வல் + வேல். வல் – சீக்கிரம். வவ்வேல் – சீக்கிரம் எடுக்காதே |
அடல் | வலிமையோடு, வீரியமிக்க |
மலைபுரிந்த மன்னவன் | பார்வதியின் தந்தை பர்வதராஜனாகிய இமயமலை ஆண்ட அரசன்; இமவான் |
அவிர்சடை | ஒளிவீசும் சடை, மின்னும் |
பாங்கினல்லார் | நல்ல பாங்கை உடையவர், நல்ல குணமுடையவர் |
படிமம் | தவவேடம் |
தூங்கி | மனம் ஒன்றி |
விருத்தன் | முதியவர் |
கருத்தனாகி | முழு முதற் கடவுளாகி |
அருத்தன் | பொருளானவன் |
நிருத்தம் | நடனம் |
நிருத்தர் | நடனமாடுபவர், நடிப்பவர் |
கீதர் | பாடுபவர் |
மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெண்கனையால் | அரி, எரி, காற்று மூன்றையும் கூட்டிய கொடிய அம்பினால். |
அருவரை | மலை |
வேழம் | யானை |
கேழல் | ஆண் பன்றி |
துஞ்சல் | தூக்கம், இறப்பு (தன்னை மறந்த நிலை) |
சேடர் | சேணியர் என்னும் செட்டி இனத்தவர். பண்புடையோர் |
மறுகு | குறுந்தெரு |
பனுவன் | நூல் |
மந்திரமாவது நீறு என்று திருநீற்றின் பெருமையினை சொல்லும் ஞானசம்பந்தர் தேவாரம்.
மந்திரமாவது நீறு பதிக பாடல் | |
போதம் | ஞானம், அறிவு. |
புனல் | ஆறு, நீர். |
புன்மை | சிறுமை, இழிவு. |
தக்கோர் | தகுதி வாய்ந்தவர், அறிஞர். |
கவின் | அழகு. |
சேணம் | பொறுப்பான இடம். |
புகலி | சொல், கூறு. |
பூசுரன் | பிராமணன். |
குண்டிகை | கமண்டலம், குடுக்கை. |
சாக்கியர் | சூரிய குல சத்திரியர் வம்சத்தை சேர்ந்தவர்கள். |
இடரினும் தளரினும் எனத் துவங்கும் திருஞானசம்பந்தர் தேவார பாடல்.
இடரினும் தளரினும் பதிக பாடல் – காந்தார பஞ்சமம் | |
இடரினும் | துன்பம். துன்பம் வந்த போதும். |
தளரினும் | தளர்ச்சி. தளர்ந்த போதும், மூப்பு வந்த போதும் |
கழல் | திருவடி |
மிடறு | கழுத்து |
தாழ் இளம் தடம் புனல் | தாழ் – தங்குகின்ற. தடம் புனல் – பரவிய புனல் – கங்கை |
சென்னி | தலை. தலையின் மேல் பகுதி |
போழ் | தகடு போன்ற மெலிந்த |
இளமதி | சடையில் இருக்கும் மெல்லிய பிறை |
கனல்எரி அனல்புல்கு கையவனே | கனன்று எரியும் அனலை கையில் ஏந்தியவனே |
அரற்றுதல் | ஒலித்தல், ஓசை எழுப்புதல், – இங்கு தொழுதல் என்ற பொருளில் வருகிறது. |
கைம்மல்கு | மல்கு – அதிகமாதல், நிறைதல். மேருமலையை கையில் ஏந்தி |
வரிசிலை | கட்டமைந்த வில்லை உடைய |
கணை | அம்பு |
கையது வீழினும் | கையில் இருக்கும் பொருட்கள் யாவும் வீழ்ந்து வருந்தும் காலத்தும் |
கழிவுறினும் | கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும் |
கொய்யணி | கொய்து அணியப் பெறும் மலர் |
மையணி மிடறுடை | மை போன்ற கருநிற கழுத்து |
வெருவுதல் | அஞ்சுதல், பயம் வருதல் |
அரவு | பாம்பு – அரவு, அரவம். |
சந்த வெண்பொடி | நறுமணம் கமழும் திருநீறு |
விரவி | அணுகி |
ஒப்புடை ஒருவனை | அழகில் ஒப்பில்லாதவன் – மன்மதன் |
அழல் | தீக்கொழுந்து, நெருப்பு |
ஏருடை | சிறப்புடைய |
ஆரிடர் | அருமை + இடர். பொறுத்துக்கொள்ளக்கூடிய இடர் |
கடிகமழ் தாமரை மேல் அண்ணலும் | தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமன் |
இலைநுனை வேற்படை | இலை போன்ற நுனியுடைய திரிசூலம் |
திருச்சாழல் எனப்படும் மாணிக்கவாசகரின் திருவாசகம்.
திருச்சாழல் – தில்லையில் அருளியது | |
அரவம் | பாம்பு |
துன்னம்பெய் கோவணம் | கீளொடு பொருந்த தைத்த கோவணம். அதாவது கிழியாமல் தைத்த கோவணம். |
மன்னுகலை | மன்னுக – நிலைபெற்ற |
துன்னுபொருள் | பொருந்திய பொருளை உடைய |
சரடாத் | சரடு – கயிறு |
காயில் | சினம் கொண்டால் |
அயனை | பிரமன் |
அநங்கனை | மன்மதன் |
அந்தகனை | கூற்றுவன், எமன் |
வயனங்கண் | வசனம், சொல் |
நயனங்கள் | கண்கள் |
எச்சனையுந் | வேள்வித் தேவன் |
தக்கன் | தக்ஷன் |
அலரவன் | திருமால் |
அழலுருவாய் | நெருப்புருவாய், சோதியாய் |
பிலமுகத்தே | பாதாளத்தில் |
குரை | ஒலி |
சதுர் | சாமர்த்தியம் |
திருமுறை பயில்வோம். தமிழில் பேசுவோம். திருவருள் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்.