கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா
சென்ற மே 26 ஆம் தேதி, திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் நடத்திய சிறுவர்களுக்கான கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு நிறைவு விழா மற்றும் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக பள்ளிக்கரணை MTK மகாலில் நடைபெற்றது.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த அனைத்து அடியார்களும் மிகுந்த ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சிக்கு தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சி முதலில் அம்மையப்பர் வழிபாட்டுடன் துவங்கியது.
சிவதிரு கோதண்டராமன் ஐயா அவர்கள் விழாவிற்கு வருகை தந்திருந்த சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மற்றும், தேவர்கள், பூதகணங்கள் என்று அனைவரையும் வரவேற்றும், கோடை விடுமுறை வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பட்டம் பெறும் சாதனையாளர்கள் என்று அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்கள்.
பின்னர், கோடை விடுமுறை சிறப்பு தமிழ் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சண்டிகேசுவரர் நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வில்லுப்பாட்டும் நடைபெற்றது.
மேலே, சிவபிரான் சண்டிகேசுவரருக்கு கொன்றை மாலை அணிவித்து தொண்டர்களின் தலைவன் என்றும் சண்டிகேசுவர பட்டமும் அருளும் காட்சி.
பின்னர் சிறப்பு சொற்பொழிவாக, மயிலாடுதுறை சிவதிரு தீபன்ராஜ் அவர்கள் ஆளாவது எப்படியோ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சிவதிரு சரவணன் ஐயா, தொண்டை மண்டல அடியார்கள் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர், திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறினார் சிவதிரு மீனாகுமார் அவர்கள். பின்னர், தென் சென்னை பகுதியிலும் மற்ற பிற பகுதிகளிலும் தன்னலமற்ற சிறப்பாக சிவபணி செய்த பல ஆயிரக்கணக்கானவர்களில் 28 பேரை தேர்ந்தெடுத்து சிறப்பு பட்டமளிப்பு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. அவர்கள் மேன் மேலும் சிறந்த சிவப்பணியாற்ற பெருமான் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கப்பட்டது.
பின்னர் கோடை சிறப்பு தமிழ் வகுப்பில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பஞ்சபுராணம் மற்றும் வாழ்த்து பாடலோடு விழா இனிதே நிறைவுற்றது.
உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.