சிவாலய தரிசன முறை
முதலும் முடிவும் இல்லாத சிவபெருமானார் புறத்தே திருக்கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளிலும், தமது மெய்யடியாருடைய திருவேடத்தை ஆதாரமாகக் கொண்டும் சிவவழிபாடு செய்பவர் வழிபாட்டை ஏற்றுக்கொண்டும் அருளுவார். நித்தமும் சிவாலயம் சென்று வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுதல் வாழ்வில் பேரின்பத்தைத் தரும். அத்தகைய சிவாலயத்தை தரிசனம் செய்யும் முறையாவது யாது ?
1. திருக்கோவில் திருக்குள தீர்த்தத்தில் நீராடி, உலர்ந்த சுத்தமான ஆடை தரித்து, விபூதி தரித்து செல்ல வேண்டும். சுவாமி அபிஷேக தீர்தத்ங்கள் கோவில் குளத்தை அடைந்து அதில் உடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் வளர்ந்து நம் உடலுக்கு நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரும். இதனால் திருக்கோவில் குளத்தில் நீராடல் வேண்டும்.
2. ஒரு பாத்திரத்திலே, தேங்காய், பழம், பாக்கு வெற்றிலை, மலர்கள் வைத்து இடுப்புக்கு மேலே உயர்த்தி ஏந்தி செல்ல வேண்டும். பொருள் இல்லாதவர் சிவாலயத்தை பெருக்கி வணங்க வேண்டும்.
3. கோபுரத்தை இரு கைகளாலும் சிரசில் வைத்து வணங்கி, பலிபீடத்தை அடைய வேண்டும்.
4. பலிபீடத்தில் அனைத்து கெட்ட எண்ணங்களையும் பலியிட்டு மனத்தை சுத்தமாக வைத்தல் வேண்டும். ஆடவர் அட்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்யவேண்டும். அட்டாங்க வணக்கம்: தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், பயங்களிரண்டுமாகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோயும்படி வணங்குதல். பஞ்சாங்க வணக்கம்: தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து உறுப்புகளும் நிலத்தில் தோயும் படி வணங்குதல். திரயாங்க வணக்கம்: சிரசில் இரு கைகளையும் குவித்தல். வணக்கம் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பன்னிரண்டு தரமாயினும் செய்ய வேண்டும். ஒரு தரம் இரு தரம் பண்ணுதல் குற்றம். நமஸ்காரம் செய்யும் போது மேற்கேயாயினும், தெற்கேயாயினும் கால் நீட்டல் வேண்டும்.
5. நமஸ்காரம் செய்துவிட்டு, சிவபெருமானை சிந்தையில் வைத்து பஞ்சாட்சர செபம் செய்து கொண்டே, இரு கைகளை இருதயத்தில் வைத்துக் கொண்டு, பூமியைப் பார்த்து கால்களை அடிமேல் அடி வைத்து வலம் வர வேண்டும். (வலம் – பிரதஷிணம்). 3, 5, 7, 9, 15 அல்லது 21 முறை வலம் வரல் வேண்டும். வலம் வரும் போது, பலிபீடத்தையும், இடபத்தையும் சேர்த்து வலம் வர வேண்டும்.
6. வலம் முடித்து, துவாரபாலகரையும், திருநந்திதேவரையும் வணங்கி, “பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்த அடையேன் உள்ளே புகுந்து சிவபெருமானைத் தரிசித்து பயன்பெறும்பொருட்டு அனுமதி செய்தருளும்” என்று வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
7. விநாயகர் சந்நிதி அடைந்து, கைகூப்பி தியானித்து, முட்டியாக பிடித்த இரு கைகளினால், நெற்றியிலே மும்முறை குட்டி, வலக்காதை இடக்கையாலும், இடக்காதை வலக்கையாலும் பிடித்து மும்முறை தாழ்ந்தெழுந்து தோத்திரம் செய்ய வேண்டும்.
8. இரு கைகளையும் சிரசிலே குவித்து சிவபெருமான் சந்நிதி அடைந்து, அவரை தரிசித்து, மனதிலே தியானித்து, மனங்கசிந்துருக உரோமம் சிலிர்ப்ப ஆனந்த அருவி சொரிய, பண்ணோடு தோத்திரங்களை சொல்லக் கடவர். உத்தமோத்தமமாகிய தோத்திரங்கள் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் என்னும் ஐந்துமாம்.
9. பூசகர் கொண்டு வில்வத்தினாலே அருச்சனை செய்து, சுத்திசெய்யப்பட்ட பழம் முதலியவற்றை நிவேதித்து கர்ப்பூராராத்திரிகம், பணிமாறப்பண்ணி, பூசகருக்கு இயன்ற தஷிணை கொடுக்க கடவர்.
10. பின்பு, சபாபதி, தஷிணாமூர்த்தி, சந்திரசேகரர், சுப்பிரமணியர் ஆகியோரையும், சமயகுரவர் நால்வரையும் தரிசித்து வணங்கி துதிக்கக்கடவர்.
11. பார்வதி தேவியாருடைய சந்நிதி அடைந்து , சிரசிலும், இருதயத்திலும் அஞ்சலி செய்து அருச்சனை செய்து, தோத்திரங்களை சொல்லக்கடவர்.
12. பின்பு, விபூதி பிரசாதம் வாங்கி தரித்துக் கொண்டு, சண்டேசுவரர் சன்னதியை அடைந்து தோத்திரம் செய்து, சிவதரிசன பலத்தை தரும் பொருட்டு பிரார்த்திக்க கடவர்.
13. பின்னர், நந்திதேவரை அடைந்து வணங்கி துதித்து, பலிபீடத்துக்கு இப்பால் மும்முறை நமஸ்கரித்து சிவபெருமானை தியானித்து, பஞ்சாட்சரத்தில் இயன்ற உருச் செபித்து எழுந்து வீட்டுக்குப் போகக்கடவர். .
ஆலயம் தொழுவது சாலவும் நன்று -ஔவையார்.
திருச்சிற்றம்பலம்.